திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருமுறைகளின்

06 சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 1

அப்பர் தேவாரத்தில்

இலக்கியப் பண்புகள்

செஞ்சொற்கொண்டல்

வித்துவான் சொ. சிங்காரவேலன் எம்.ஏ.,

தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி முதல்வர்

கலைநோக்கு:

உலகின் அழகைக் கண்டு வியந்து போற்றும் இயல்பு நம்மி டம் இல்லை; துன்பங்களைக் கண்டு நொந்து கவலைப்படும் இயல்பே நம்மிடம் கால்கொண்டிருக்கின்றது. ஆனால் அழகு கூத்தாடும் இயற்கைச் செல்வத்தை அறிந்து, உணர்ந்து பாராட்டிசைக்கும் பண்பு பாவலனிடத்தேயே உள்ளது. கவிஞன் உலகின் அழகுக் கூத்தைத் தன் சொற்களாற் காவிய மாக்குகின்றான். சொல்லோவியமாக்கி மகிழ்கின்றான். இதற்குக் காரணம் என்ன? கவிஞன் பெற்றிருக்கும் கவிதைக்காண் - கலைநோக் குத்தான் இதன் காரணமாகும். நம் பார்வை மேம்போக்காக நின்று விடுகின்றது. கவிஞன் அல்லது கலைஞன் பார்வை ஊடுருவிப் பாய்கின்றது. நம் நோக்கு புறத்தோற்றத்திலேயே நின்று வலியிழந்து விடுகின்றது. கவிஞன் அல்லது கலைஞன் நோக்கு அகத்தோற்றத்தில் ஆழ்ந்து அச்சிறப்பியல்புகளால் வலுப்பெற்று விடுகின்றது. இதனாலேயே பாட்டு, கவிஞனின் உயர் கருவியாகின்றது.

மற்றவர்க்குப் பாட்டை நுகர இயலுகின்றதே தவிர புனையும் ஆற்றல் இல்லை. இந்த நுட்பம் சிந்தித்தால் தான் விளங்குவதாகும். இந்த நுட்பம் இயற்கையின் அழகுக் கூத்தை மெய்ம்மறந்து சுவைத்துக் களிவெறி கொள்ளும் கலைஞர்களுக்குத் தனிச்சிறப்பாக உள்ளது.

கவிதையநுபவம் :

அழகை மட்டுமின்றி உலகத் துயரங்களையும் கவிஞன் காணாமல் இல்லை. அவற்றையும் படம் பிடித்துக்காட்ட அவன் தவற வில்லை. ஆனால் கவிதையில் அத்துன்பங்களை மிகவும் விரும்புகின் றோம் நாம். உலகியலில் துன்பங்களை வெறுத்தொதுக்கும் நம்மைக் கலைத் துறை அவலங்கள் கவர்ந்து விடுகின்றன. கலைத்துறைத் துன்பங்களைக் கண்டு கண்ணீர் விடுகின்றோம். ஆனால் இக்கண் ணீரை நாம் விரும்புகின்றோம்.

நுட்பமான உணர்ச்சிகளைத் தூண்டும் சொல்லாட்சி, கற்பனை அமைப்புடைய கவிதைகளை உருவாக்கி நம்மைத் தன்வயப்படுத்தி விடுகின்றான் கவிஞன். இவ்வாறு நம் உணர்ச்சியோடு ஒன்றுபடும் கவிதைச் செல்வத்தை நாம் வாழ்வில் இடையறாது சுவைத்தல் வேண்டும்.

உயர்ந்த கவிஞர்கள் கைம்மாறு கருதியா கவிதைகளை யாத்துள்ளார்கள்? தம் அநுபவத்தை எடுத்து கைம்மாறு வேண்டாக் கார்மழைபோல் பொழிந்து உள்ளார்கள். சுவைக்கும் உள்ளத்துடன் - இலக்கியப் பசியுடன் - அவர்களை அணுகுதல் ஒன்றே நாம் செய்ய வேண்டுவது. அணுகி விட்டால் நம்மை அவர்கள் ஆட்கொண்டு விடுகிறார்கள். வேறு உலகுக்கு - கவியுலகுக்கு அழைத்துச் சென்று பலப்பல காட்சிகளைக் காட்டிக் களிப்பிக்கின்றார்கள்.

உலகியல் மறந்து அவ்வின்பக்காட்சியில், காலம், இடம் முதலிய வேற்றுமைகளை யிழந்து கிடக்கின்றோம் நாம். ஆம், கவிதை அநுபவம் இதுவேயாகும்.

1"கவிஞனுடைய கண், விண்ணுக்கும் மண்ணுக்கும், மண் ணுக்கும் விண்ணுக்குமாகச் சுழல்கின்றது. சுழன்று நோக்கிக் கற்பனை வடிவங்களைப் படைக்கின்றது. அவ்விழுமியோனுடைய எழுதுகோ லால் அறியப்படாத பொருள்கள் வடிவம் பெறுவதுடன் உயிர்த் தன்மையும் எய்துகின்றன" என்று ஆங்கில நாடகப் பெருங்கவிஞராகிய சேக்ஸ்பியர் கூறும் பகுதி இங்கு ஒப்பிட்டு மகிழத்தக்கது.("The Poet's eye in a fine frency rolling, doth glance from heavens to earth, from earth to heaven, and as imagination bodies forth, the forms of things unknown, the Poet's pen turns them to shapes, and gives to airy nothing, a local habitation and a name." -Shakespere)

அருட்பாடல்களின் ஆற்றல்:

இத்தகு கவிஞர்களின் உறவு உள்ளத்தைத் திருத்தும் உயர்வு உடையது. உலகியற்றுன் பங்களினின்று உயர்ந்து பறவையை மேலே மேலே பறக்குமாறு செய்து எங்கும் - என்றும் இன்பமாய பெரும் பேற்றிற்கு உய்ப்பது. அதிலும் திருநாவுக்கரசு சுவாமிகளைப் போன்ற அருட் புல வர்கள் பாடல்கள் என்றால் கூறவா வேண்டும்! அருளே வடிவாகிய இறைவனை அகமுருகப்பாடி மகிழும் அருள் ஆசிரியர்கள் அவர்கள்.

அவர்களது அருங்கவிதைகள் பக்தியை விளைக்கும் பண்பு டைய பாடல்கள்; இசை தழுவிய எண்ணக் குவியல்கள், பண் கலந்த பாடல் தொகுப்புக்கள். இறைவனுடைய கருவியாக நின்று தாம் இயங்குகின்றோம் என்ற எண்ண அழுத்தம் உடைய அவ்வருட் செல்வர்களின் உணர்ச்சிப் பிழம்புகளாகிய கவிதைகள் நம் வாழ்வுக்கு நெறி காட்டும் வான்புகழ் கலங்கரை விளக்குகள் என்றே கூறலாம்.

அவர்கள் தம் வாழ்வில் என்ன கண்டார்கள், தம் வாழ்வில் பட்டறிந்த உண்மைகளால் என்ன உணர்வு பெற்றார்கள், அவ்வுணர் வினின்றும் அவர்கள் தெளிந்ததென்ன, நம்மனோர்க்கு அத்தெளிவி னால் அவர்கள் உரைக்கும் செய்திகள் யாவை என்பதற்கு அவர்களது இலக்கியமே சான்று பகரும். இவையனைத்தையும் காட்டுவதே இலக் கியப் பண்பு என்பர்.("Literature is a vital record of what men have seen in life, what they have experienced of it, what they have thought and felt about those aspects of it which have the most immediate and enduring interest for all of us. - W. H. Hudson)

அருட்செல்வர்:

திருநாவுக்கரசு சுவாமிகள் சிறந்த தோத்திரப்பாக்களை அருளிய ஞானாசிரியர்; அவ்வருட் செல்வரை இத்தகு இலக்கியப் பண்புகள் கனிந்த பனுவல்களை - பக்தி உணர்ச்சிப் பாடல்களை யாத்த ஓர் அருட்புலவராகவும் காணலாம். அவ்வருட் புலவருடைய பாக் களில் காணப்படும் இலக்கிய நலங்களைக் கண்டு, அத்தெய்வக் கவிஞரது பாக்களில் புலனாகும் அவருடைய திருவுள்ளத்தை அறிந்து, தெளிவுறுத்துவதே இச்சிற்றாராய்ச்சியின் நோக்கமாகும்.

பழுத்த அநுபவம் உடைய இப்பெரியார் பழுத்த தமிழ்ப் புலமை எய்தியிருந்த பண்பட்ட பாவலரும் ஆவர். ஆதலின் அவ்வா ராய்ச்சி இவ்வருட் புலவருடைய இனிய திருவாக்குகளை அடியாகக் கொண்டே இயங்குவதாகும்.

முருகியல் அமுதம்:

இலக்கியம் என்பது சொல், பொருள் ஆகிய அடிப்படையில் நயம் தோன்ற - கற்பனை விளங்க - உணர்த்தும் திறம் ஒளிர ஆசிரி யனுடைய அநுபவ வெளியீடாக இருப்பது.

ஆதலினாலேயே, ஆசிரியனுடைய அநுபவ இன்பத்தை இலக்கியத்தில் நாமும் அநுபவித்தின்புற முடிகின்றது.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருட் புலவராக விளங்கிய நல்லா சிரியராதலின் அவருடைய கனிந்த உளத்தின் முருகியல் அமுதம் தமிழ்க் கவிதையாக வெளிவந்தது. அப்பெருமானாரின் கவிதைகள் கல்மனத்தையும் கசிந்துருக்கும் திறன் உடையவை. உறுதியான சொற்களால் இயன்றவை. பொருட்சிறப்பு பொதுளிய அமைப்பு உடையவை.

அப்பர் அருளுருவம்:

இறைவன் திருவடிகளிலேயே பதித்த நெஞ்சுடைய இப்பெரு மானுடைய அருள் பழுத்த திருக்கோலத்தைச் சேக்கிழார் பின்வருமாறு சொல்லோவியமாக்கியுள்ளார்.

தூயவெண் ணீறு துதைந்தபொன் மேனியும் தாழ்வடமும்

நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்துருகிப்

பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல்

மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே

- தி.12 திருநாவு. புரா.140

இறைவன் `பொருள்சேர் புகழ்' விரிக்கும் செந்தமிழ் அமுதத் திருப்பாடலை ஓதிக் கொண்டேயிருக்கும் ஒட்பம் தோன்றப் `பதிகச் செஞ்சொல் மேய செவ்வாய்' என்றருளிய திறம் இனிது உணரத்தக்கது.

தொடையறாச் செவ்வாய்:

சிவஞான சுவாமிகளும் அப்பரடிகள் அழகுருவத்தைத் தமிழாற் சிறப்பித்துள்ளனர். அதனுள் `ஞானப்பாடல் தொடையறாச் செவ்வாய்' என்று இப்பெருமானாருடைய பாவன்மை தோன்றப் பாடியருளியுள்ளனர். அவ்வருந் தமிழ்ப்பாடல் பின்வருவதாகும்.

இடையறாப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும் உழவா ரத்திண்

படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும்

நடையறாப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன் ஞானப் பாடல்

தொடையறாச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும் துதித்து வாழ்வாம்.

(காஞ்சிப்புராணம். பா.13)

திருவாரூர்ப் புராணமுடையார்,

"சாலமிகு பாவமுது வேனில் வெம்மைத் தழலாற ஆகமநூற் றருமஞ்சான்ற

சீலநிறை சைவநெறி நிழல்பரப்பும் திருநாவுக்கரசு"

என்று புகழ்தல் இங்கு ஒப்பிட்டுணர்தற்குரியது.

"தேவரசு மனமகிழத் திருப்பதிகம் இசைத்தமிழிற்

சிறக்கப்பாடும் நாவரசு"

என்று புகழ்வர் சிவராத்திரி புராண ஆசிரியர்.

"மதுர மாந்திருத் தாண்டகச் செந்தமிழ்வகுத்த

சதுரன் நாவினுக் கரையன்"

என்று சிவரகசியம் பாடும்.

இவ்வாறு புகழப்பெறும் சிறப்பு உடைய அப்பரடிகள் அமுதத் தமிழ்வாக்கும், அப்பெருமானார் வகுத்தருளிய தமிழ்மரபும், இலக்கிய நுட்பங்களும் பிற மாண்புகளும் கருதிய சேக்கிழார் இவரைத் `தமிழ் மொழித் தலைவர்' (தி.12 திருஞா.புரா. 598) என்றே கூறிப் போற்றுவர்.

`இன்தமிழ்க்கு மன்னான வாகீசத் திருமுனி' (தி.12 திருநா. புரா. 147) `உடையவரசு உலகேத்தும் உழவாரப் படையாளி' (தி.12 தடுத்தாட்கொண்ட புரா.83) `வாக்கின் பெருவிறல் மன்னர்' (தி.12 திருஞா. புரா.269) என்றெல்லாம் சேக்கிழார் பாடும் பகுதிகளைக் காணலாம்.

பாவலர் - அப்பர்:

திருநாவுக்கரசு சுவாமிகளின் தேவாரப் பாக்களில் பெரிதும் ஈடுபட்ட பிற்காலப் பெரியார் ஒருவர் பாடும் பகுதியும் இங்குச் சிந்திக்க இனிக்கும். தண்ணிய தமிழ்க் கவிதைகளை சிவபிரான் திருவைந்தெழுத்துத் திருப்புகழோடு குழைத்துப் பாடிக் கடலில் மிதந்த தாண்டக வேந்தருடைய அருளாற்றல் அப்பெரியார்க்கு எண்ண எண்ண இன்பமளிக்கின்றது. கல்லும் உருகும் கவிபாடிய அப்ப ரடிகளைப் `பாவலர்' என்றே அழைக்கின்றார் அவர்.

"செற்றார் புரம்எரி செய்தவில் வீரன் திருப்பெயரே

பற்றா மறிவெண் டிரைக்கடல் நீந்திய பாவலனே"

ஆம்; சிவப்பிரகாச சுவாமிகளுடைய புகழுரை இது.

அப்பர் தேவாரப் பெயரமைப்பு:

அப்பரடிகள் தேவாரப் பாக்களின் பெயர்க் காரணத்தைப் பின்வருமாறு பாகுபாடு செய்யலாம். (பன்னிரு திருமுறை வரலாறு: க. வெள்ளைவாரணனார், பக். 563-564)

(1) பொருளமைப்பு: திருஅங்கமாலை, தசபுராணம், குறைந்த நேரிசை, காலபாசத் திருக்குறுந்தொகை, ஆதிபுராணத் திருக்குறுந் தொகை, இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை - முதலியன.

(2) பாடல்தோறும் பயின்ற சொற்பொருளமைப்பு: கொப் பளித்த திருநேரிசை, நினைந்த திருநேரிசை, ஆருயிர்த் திருவிருத்தம், சரக்கரைத் திருவிருத்தம், திருவடித் திருத்தாண்டகம், புக்க திருத் தாண்டகம் முதலியன.

(3) முதற்குறிப்பு: `சிவனெனும் ஓை\u2970?' என்ற பதிகம்.

(4) ஈற்றுத் தொடர்: பாவநாசத் திருப்பதிகம்.

(5) பொருட்டொகை: மனத்தொகை, சித்தத்தொகை, உள்ளத் தொகை, கே்ஷத்திரக்கோவை முதலியன.

(6) பாடல்களிற் பயின்ற ஈற்றுச் சொல்: மறக்கிற்பனே, தொழற் பாலதே எனுங் குறுந்தொகைகள்.

(7) சிறப்பு: நமச்சிவாயத் திருப்பதிகம்

(8) பொதுவகை: தனித்திருநேரிசை, தனித்திருக்குறுந் தொகை, தனித்திருத்தாண்டகம், பலவகைத் திருத்தாண்டகம்.

அப்பர் மேற்கொண்ட யாப்பு வகைகள்:

அப்பரடிகள் தமிழ்க் கவிதை யாப்பில் மேற்கொண்டுள்ள வகைகள் தமிழ் இலக்கணத்துடன் மாறுகொளாதவை; சந்த விருத்தங் களும், விருத்த வகைகளும், கலி விருத்தங்களும், கட்டளைக் கலித் துறைகளும் ஆகியவற்றுடன் தாண்டகம் என்ற வகையும் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.

தாண்டகம் என்ற பாட்டியல் வகையை அடிகள் கையாண்டு வெற்றி பெற்றுள்ளமையாலேயே `தாண்டகச் சதுரர்' என்ற சிறப்புப் பெயருக்குரியவரானார். (தி.12 குங்குலியக் கலையர், 32 )

விளங்குபெருந் திருமுன்றில் மேவுதிருப் பணிசெய்தே

உளங்கொள்திரு விருத்தங்கள் ஓங்குதிருக் குறுந்தொகைகள்

களங்கொள்திரு நேரிசைகள் பலபாடிக் கைதொழுது

வளங்கொள்திருப் பதியதனில் பலநாள்கள் வைகினார்

(தி.12 திருநா. புரா.337)

என வரும் சேக்கிழார் திருப்பாடலால் (1) விருத்தம் (2) குறுந்தொகை (3) திருநேரிசை (4) தாண்டகம் ஆகிய யாப்பு வகைகளை அடிகள் மேற்கொண்டார் என்பது விளங்கும்.

திருநேரிசை நேரிசைக் கொல்லி எனவும், திருவிருத்தம் விருத்தக் கொல்லி எனவும் கொல்லிப்பண்ணில் அடக்கப் பெறும். திருநேரிசை, `கூவிளம் புளிமா தேமா கூவிளம் புளிமா தேமா' எனவரும் கட்டளையடி உடைய செய்யுள் என்றும், அறுசீர்களால் இயன்ற இக்கடளையடியில் முதற்சீரும் நான்காம்சிரும் ஓரோவழிக் கருவிளம் ஆதலும், இரண்டாம் சீரும் ஐந்தாம் சீரும் ஒரோவழி தேமாவாதலும் உண்டு என்றும், மூன்றாம் சீரும் ஆறாம் சீரும் எப்பொழுதும் தேமாவாக நிற்பன என்றும் இந்த யாப்பமைதியை யாழ் நூல் (பக்.217) ஆசிரியர் விளக்குவர்.

திருவிருத்தம் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பமைதி உடையது. `அடியடிதோறும் ஐஞ்சீராகி, முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாது. கடையொரு சீரும் விளங்காயாகி, நேர் பதினாறு நிரை பதினேழு என்று, ஓதினர் கலித்துறை ஓரடிக்கு எழுத்தே' என்னும் இலக்கணப்படி அமைந்த பகுதி திருவிருத்தம்.

திருக்குறுந்தொகை, நாற்சீர், நாலடியாய் அடிதோறும் தேமா புளிமா என்பவற்றுள் ஒன்று முதல் சீராகவும், கருவிளம் கூவிளம் என்பவற்றுள் ஒன்று நான்காம் சீராகவும், இடையிரு சீர்கள் பெரும்பாலும் விளச்சீர்களாகவும், சிறுபான்மை மாச்சீர்களாகவும், அமைய வரும் செய்யுள் வகை. சிலப்பதிகார வேட்டுவ வரியில் இவ்வமைப்பை உடைய பாடல்கள் உள்ளன. ஆதலால் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலேயே இந்தயாப்பும் பெருகியிருந்த தென்பர். பிற்கால யாப்பிலக்கணப்படிக் கலிவிருத்தம் என்பர். (பன்னிரு திருமுறை வரலாறு: க. வெள்ளைவாரணனார், பக். 326)

தாண்டக விளக்கம்:

இவற்றுள் தாண்டகம் என்ற செய்யுள் வகையை அப்பரடிகள் மிகச்சிறப்பாக எடுத்தாண்டுள்ளார். ஆறாம் திருமுறை முழுதும் இத்தாண்டக யாப்பாலேயே விளங்குகின்றன. இத்தாண்டகம் வடமொழி இலக்கணம் பற்றிவந்த செய்யுள் என்றும் இது தமிழ் யாப்பே யாகும் என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு.

யாப்பருங்கல விருத்தி 2ம் சூத்திர விளக்கவுரையிலிருந்து (1) அளவியல் தாண்டகம் (2) அளவழித் தாண்டகம் என்ற இருவகைகள் அறியப்படும்.

பன்னிரு பாட்டியல் என்ற நூலிலிருந்தும் அதன் உரையி லிருந்தும் அறியப்படும் வகைகள் (1) குறுந்தாண்டகம் (2) நெடுந் தாண்டகம் என்ற இரண்டாம் ஒவ்வோரடியினும், `அறுசீரேனும்', `எண்சீரேனும்' வகையாக அமைத்து இயற்றப்பட்ட நான்கடிச் செய்யு ளால் ஆடவரையும் கடவுளரையும் புகழ்வது, தாண்டகம் என்பது பன்னிரு பாட்டியற் கருத்தாகும்.

இவற்றுள் அறுசீரடிப் பாக்களாலாயது குறுந்தாண்டகம்; எண் சீர்ப்பாக்களாலாயது நெடுந்தாண்டகம்.

"மூவிரண் டேனும் இருநான் கேனும்

சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர்

கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்

அறுசீர் குறியது நெடியதெண் சீராம்"

என்பது பன்னிருபாட்டியலார் கூற்று. (110)

"அறுசீர் எண்சீர் அடிநான் கொத்தங்

கிறுவது தாண்டகம் இருமுச் சீரடி

குறியது நெடிய திருநாற் சீரே"

என்பது பல்காயனார் வாக்கு.

"மங்கல மரபின் மானிடர் கடவுளர்

தம்புகழ் உரைப்பது தாண்டக வகையே"

"தாண்டகம் மானிடர் கடவுளர்க் குரித்தே"

என்பன மாபூதனார் நூற்பாக்கள்.

"அடிவரை நான்கும் எழுத்தெண்ணி

நேரடி வருவது தாண்டகம் ஆகும்"

என்பர் சீத்தலையார். இருபத்தேழெழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடி யினவாய் எழுத்தும், குருவும், லகுவும் ஒத்து வருவன அளவியல் தாண்டகம் எனவும், எழுத்தொவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழித் தாண்டகம் எனவும் பெயர் பெறும் என்பது யாப்பருங்கல் விருத்தி உரைகாரர் விளக்கம் ஆகும்.

அப்பரடிகள் அருளிய தாண்டகங்கள், ஒற்றும் குற்றியலுகர மும் நீக்கி எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட ஐவகை அடிகளுள் கழி நெடிலடிக்கு மேலெல்லையாகிய இருபதெழுத்தென்னும் அளவி னைக் கடந்து இருபத்தேழெழுத்திற்கு உட்பட்டு வருவனவாகும்.

ஆனால் யாப்பருங்கல விருத்தி கூறும் இலக்கணம் இதனின் வேறுபட்டது என்பது மேலே காட்டப்பட்டது. யாப்பருங்கல விருத்தி உரையின் கருத்துப்படி இந்தயாப்பு அமையவில்லை என்பது அறிந்துணரத்தக்கது.

எனவே, தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தை அடியொற்றி யமைந்த திருத்தாண்டகப் பாவும், வடமொழித் தண்டக யாப்பினை அடியொற்றிப் புதியன புனைந்த யாப்பருங்கல விருத்தி உதாரணச் செய்யுள்களும் இலக்கண வகையால் தம்முள் வேறுபட்டன என்று உணர்தல் வேண்டும். (பன்னிரு திருமுறை வரலாறு: க. வெள்ளைவாரணனார், பக். 330 காண்க. இப்பகுதியில் இவ்யாப்பு அமைதி விரிவை ஆசிரியர் அழகுற ஆராய்ந்து முடிவு போக்கியிருத்தல் அறிந்தின்புறத்தக்கதாகும்.)

தாண்டக வேந்தராகிய அப்பரடிகள் இந்த வகையை மிக அழகுபடுத்தி இதனை நயம்பெறக் கையாண்டு விளக்கம் புரிந்துள் ளார். கி. பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு முன் அடைந்திராத செல்வாக்கை இவ்வகை யாப்புலகிற் பெறுவதாயிற்று.

பின்வந்த திருமங்கையாழ்வாரும் இந்த யாப்பை மேற் கொண்டு காத்தனர்.

தாண்டவமாடும் சிவன்தாள் மலரின்பம் நுகர்ந்த அடிகள் அப்பெருமான் புகழ்பாட இதனை மேற்கொண்டது வியந்து போற்று தற்குரியதாகும். இப்போது கிடைத்துள்ள அப்பர் திருத்தாண்டகங்க ளின் தொகை தொளாயிரத்து எண்பத்தொன்று (981) ஆகும் என்பது இங்கு அறியத்தக்கது.

அகப்பொருட் பதிகங்களின் அமைப்பு :

தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக்கற்ற பண்பினர் அப்பரடிகள் ஆதலின், அப்பெரியார் அமுதவாக்குகளில் இலக்கிய ஒட்பங்களும் இணைந்து நிற்கக் காணலாம். அவற்றை இங்கு அறிந்து இன்புறுவோமாக. அகப்பொருள் தமிழ்க்குச் சிறப்பு. மற்ற எம் மொழிக்கும் இல்லாப் பெருஞ் சிறப்பாக அகப்பொருள் இலக்கணம் தமிழ்க்கு வாய்த்துள்ளது.

அகத்தே நிகழும் தன்மையதாய்ப் புறத்தார்க்கு உணர்த்து தற்கரியதாய் இருப்பது அகத்திணை, அவ்வகவொழுக்கம் பற்றிய சங்கப் பாடல்கள் மிக்க நுட்பமும் சீர்மையும் வாய்ந்தவை.

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய தொகை நூல்கள் முற்றும் இவ்வைந்திணை நெறி யளாவி வரும் இயல்புடையவை. தமிழ்ப் பாவலர் திலகம் போல் வாரும், நடையறாப் பெருந்துறவியாரும் ஆகிய திருநாவுக்கரசர் பெருந்தகையும் இறைவன் திருவருளில் தோய்ந்து நின்று புனையும் கவிகளில் இவ்வமைப்பு உடையனவாகப் பலவற்றைப் புனைந் துள்ளார். அவை இலக்கியச் சிறப்புடையனவாய் இலங்குகின்றன.

இப்பெருந்தகையார் திருவாக்கில் வரும் அகத்துறைப் பகுதிகள் கீழ்வரும் முறைப்படி அமையும் பெற்றியன.

திருமுறை பதிகம் பாடல்

4 12 1 - 10

4 97 1 - 10

5 29 1 - 10

5 40 1 - 10

5 45 1 - 10

5 53 1 - 12

6 9 1 - 10

6 13 1 - 10

5 7 6 - 8

5 46 1 - 5

5 64 0 - 6

5 66 0 - 9

5 88 4 - 9

6 25 0 - 7

6 35 3 -7

6 45 1 - 4 - 8

6 58 3 - 7 - 0

முழுப்பதிகங்களாக ஒன்பதும் ஏனைய பாடற்பகுதிகளும் அகத்துறை விளக்கமாக அமைந்து இவற்றுள் அழகு செய்கின்றன.

தலைவியின் காதல் நிலைகண்டு இரங்கிக்கூறும் தாய் அல்லது தோழியின் கூற்று, தலைவி கூற்று, ஆகிய இரண்டு துறைகளிலேயே இவ்வகைச் செய்திகள் அமைந்துள்ளன. இவை நயம் பொருந்தியனவாயும், காதல் உணர்வைக் கடவுள் உணர்வாக மாற்றித் தரும் மாண்பினவாயும் அமைந்துள்ளன.

தமிழின் மாட்டுத் தண்ணளி :

அப்பரடிகள் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கூர்ந்து ணர்ந்து, தேர்ந்த பழுத்த தமிழ்ப் புலவர் ஆதலின் இம்மொழிச் சிறப்பை இனிது உணர்ந்து அதனைப் பன்முறையும் எடுத்து ஓதுவதிற் பெருமை கொள்கின்றார்.

`பொருள் நீத்தம் கொளவீசிப் புலன் கொளுவ மனம் முகிழ்த்த சுருள்நீக்கி மலர்விக்கும் கலை' (தி.12 திருநாவு - 1290) பயின்றவர் எனவும், `சிந்தை மலர்ந்தெழும் உணர்வில் செழுங் கலையின் திறங்க ளெல்லாம், முந்து முறைமையிற் பயின்று முதிர அறிவு எதிரும் வகை. மைந்தனார் மறுஒழித்த இளம்பிறை போல் வளர்கின்றார்' (தி.12 திருநாவு - 1921) எனவும், `அங்கவரும் அமண் சமயத்தருங்கலை நூலான வெலாம், பொங்கும் உணர்வுறப் பயின்றே அந்நெறியிற் புலன்சிறப்ப' (தி.12 திருநாவு - 1309) எனவும், இப்பெருந் தகையாருடைய கலைப் பயிற்சியையும், ஆழ்ந்த புலமையையும் விளக்கிய சேக்கிழார் `உலகின்கண் ஒளிஉடைய வித்தகராய்' என்று முடிவு போக்கியுள்ளமை இங்கு அறியத்தக்கதாகும்.

இவ்வாறு பல கலைகளையும் நன்கு உணர்ந்த இப்பெருந் தகையார் தம் அருட்டிறத்தால் அக்கலைகளையும், அவற்றான் சிறந்து தோன்றும் தமிழையும் சிவபரம்பொருளாகக் கண்டு சிந்தை கனிந்து பாடுகின்றார். அவ்வமுதற்பாடற் பகுதிகள் கலைகளின் மாட்டும், தமிழின் மாட்டும் அடிகள் கொண்டிருந்த அயராவன்மை விளக்குவ தாகும்.

"இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்

எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய்"

(தி.6. ப.73 பா.9)

கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன்

செல்வ மல்கு திருக்கானூரீசனை

எல்லியும் பகலும் இசைவானவா

சொல்லிடீர் நுந் துயரங்கள் தீரவே.

(தி.5 ப.76 பா.6)

"மூலநோய் தீர்க்கும் வானவர்க்கு மேலா னான்காண்

முத்தமிழும் நான்மறையும் ஆனான்கண்டாய்"

(தி.6 ப.23 பா.9)

"வானவன்காண் வானவர்க்கு மேலானான்காண்

டமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்

ஆனவன்காண்"

(தி.6 ப.87பா.1)

"ஆரி யந்தமி ழோடிசை யானவன்

கூரி யகுணத் தார் குறி நின்றவன்"

(தி.5 ப.18 பா.3)

இவ்வாறு கூறும் அடிகள் சிவபிரானையே ஆரியன் என்றும் தமிழன் என்றும் கூறும் பகுதிகள் அழகுடையவை. தமிழ் ஆகிய மொழி பேசுவோனை - மொழிக்குரியவனைக் குறிக்கும் சீரிய இனப் பெயராகத் `தமிழன்' என்ற சொல் நிற்றல் அறிந்தின்புறத்தக்கது. இவ்வாறு `மொழி வழி இனம்' என்ற புது மரபினைத் தோற்றுவித்து அப்பரடிகளே முதன்முதல் - `தமிழன்' `ஆரியன்' என்ற பெயர்களை மொழிந்துள்ளார் என்பது அறிஞர் கருத்தாகும்.

"ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

அண்ணாமலையுறையெம் மண்ணல் கண்டாய்"

(தி.6 ப. 23 பா.5)

"செந்தமிழோ டாரியனைச் சீரி யானை"

(தி.6 ப.46 பா.10)

இன்று நாம் தமிழர் எனப் பெருமிதத்துடன் பேசுதற்கு அன்றே வித்திட்ட பெருமை அப்பரடிகட்கே உரியதென்பதை நாம் மறந்துவிடலாகாது. இதைப் பின்னும் ஒருமுறை சிந்திப்போம்.

தமிழ்ப் பண்களும் தாண்டகவேந்தரும்:

இலக்கியம் என்பது பண்ணோடு கூடிய கருத்து என்று கூறுவர் ஆதலின், பாடலுக்குப் பண் எத்துணை இன்றியமையாத தென்பது விளங்கும். எம்மொழியிலும் பாட்டுப் பண்ணொடு குழைந்தே விளங்கி இயங்குவதாகும். நம் தமிழ் நாட்டிலும் பழைய காலந்தொட்டை பண்ணும் வளர்ந்து வந்திருந்தால் நம் இலக்கி யங்களால் இனிது துணியப்படும்.

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐம்பெரும் பண்களைச் சங்க நூல்களிற் காணலாம். அப்பண்கள் பலவகைகளை உடையவாயிருந்தன. அவற்றை ஓதி வளர்த்து வந்த கலைஞர் குடும்பம் பாணர் என்ற பெயரால் நிலை பெற்றது. தோற்கருவிகள், துளைக் கருவிகள், நரம்புக்கருவிகள் என்ற மூவகைப்பட்ட இசைக் கருவிகளில் பண்வளர்த்தனர் பழந்தமிழர். பழந்தமிழ் மரபினை நன்கு உணர்ந்து தெளிந்த அடிகள் வாழ்ந்த காலம் கிறித்துவுக்குப் பின் 7 ஆம் நூற்றாண்டு என்பர்.

சமணர்கள் இசைத் தமிழை மறுத்தும் பழித்தும் பிரசாரம் செய்தமையின், மக்கள் இசையைப் புறக்கணித்து வந்த அக்காலத் தேயே தமிழ் இலக்கண இலக்கியப் பெரும்புலவராக விளங்கிய அடிகள் தெய்வத்திருவருளால் சைவம் பரப்ப முற்பட்டார். பண், இசை ஆகியவற்றில் இறைவன் வீற்று இருக்கின்றான் என்று கூறிய துடன், பழந்தமிழ்ப் பண்களிலேயே தம் கருத்தைத் தமிழ் கூறு நல்லுலகெங்கும் பரப்பத் தொடங்கினார்.

இவ்வாறே திருஞானசம்பந்த சுவாமிகளும் நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் திருத்தொண்டு புரிந்து சைவம் வளர்த்தார்.

இறைவைன் பண் பொருந்திய பாடல்களை விரும்பிக் கேட் கும் கருணை உடையவன் என்ற கருத்தை, தம் பண் கலந்த பாடல் களாலேயே எடுத்து விளக்கிய அப்பரடிகளின் புதுமைக் குரலைத் தமிழ்ப் பெருமக்கள் கேட்டனர்.

"பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை"

(தி.5 ப.18 பா.4)

"பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு

அண்ணித் தாகும் அமுது"

(தி.5 ப.44. பா.8)

"பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி"

(தி.6. ப.5. பா.2.)

என்றெல்லாம் பாடியருளினார்.

கொல்லி, காந்தாரம் பியந்தைக் காந்தாரம், சாதாரி, பழந்தக் கராகம், பழம்பஞ்சுரம், சீகாமரம், குறிஞ்சி, இந்தளம், காந்தாரபஞ்சமம் ஆகிய பத்துப் பண்களில் அமைந்த பதிகங்களையும், திருநேரிசை, திரு விருத்தம் முதலிய பதிகங்களையும் அடிகள் பாடியிருத்தல் காணலாம்.
பாட்டுக்கும் பண்ணுக்கும் பருந்துக்கும் நிழலுக்கும் உள்ள தொடர்பு இருத்தல் வேண்டும் என்பர் பழந்தமிழ் நூலோர். `பாட்டோடு இயையாத பண்ணினால் என்ன பயன்? கண்ணோட்டமில்லாத கண் போன்றது அது' என்று உரைப்பர் ஆசிரியர் திருவள்ளுவரும். அப்பரடிகளுடைய அமுதப்பாக்கள் இனிய பண்ணமைப்பிற்கு இனியவையாய் உள்ளமையை அன்பர்கள் நன்கு அறிவர். (அப்பரடிகள் அருளிய திருமுறைகளின் பண்களையும், அவற்றின் கட்டளை யாப்பு விகற்பங்களையும், பன்னிரு திருமுறை வரலாறு பக். 391-399 விரிவாகக் காணலாம். திருமுறைகண்ட புராணத்தில் வரும் கட்டளையடிக் குறிப்புகள் நன்கு பொருந்துமாறு இவிவாசிரியர் ஆராய்ந்து விளக்கியுள்ளமை பெரிதும் பாராட்டத் தக்கதாகும். )

இவ்வாறு தக்க பண்களுடன் விளங்கும் பழுத்த அநுபவப் பாடல்களாகிய இவற்றிற் காணப்பெறும் இலக்கிய அழகுகளை இனி ஒவ்வொன்றாக இங்குக் காண்போம். இவ்விலக்கிய அழகுகள், ஒன்பான் சுவையமைப்புடனும், கவிதைச் சீரியல்புகளுடனும் கலந்து திகழுமாற்றையும், பழந்தமிழ்ப் பாடல்களுடன் கருத்தொற்றுமை கொண்டு கவினுமாற்றையும் நுகர்ந்து மகிழ்வோம்.

உவமை நலம்:

உவமை, இலக்கியக் கலையெழில்களில் முதலிடம் பெறுவ தாகும். கவிதையில் உவமை கருத்து விளக்கம் செய்வதுடன், அழகும் தருகின்றது. உவமை யமைந்த கவிதை, அணிகலம் பூண்ட அரிவை யொருத் தியைப் போன்ற தென்பர்.

எல்லா அணிகளுக்கும் தாயாகும் பெருமையும், உவமைக் குண்டு. தொல்காப்பியரும் இவ்வுவமையணி யொன்றையே விரிவாக ஆராய்ந்து தம் நூலில் அமைத்துள்ளார். வேறுபடவந்த உவமத்தோற்றம் என மற்றவற்றைத் தழுவி அவை உவம விகற்பங் களே என விளக்கியுள்ளார். அருட்புலவர்கள் அருள் வாக்குக்களிலும் சீரிய உவமைகள் பலவற்றை நுகர்ந்து மகிழ்கின்றோம். அப்பரடிகள் தேவார அருளிச் செயல்களிலும் பலவகைப் பட்ட உவமைகளைக் காணலாகும். வினை, பயன், மெய், உரு எனும் நான்கு வகைகளில் இவ்வுவமைகள் பெரும்பாலும் வினையுவமை யாகவே விளங்குகின்றன எனலாம்.

நீர்நிலை பற்றியது:

நீர்நிலையொன்றினைக் காவல் செய்து வருவோர் சிலர் உள்ளனர். அக்காவலைப் பொருட்படுத்தாமல், நீர்நிலைக்கரைக் கண் நின்றவர். அந்நீர்நிலையின் ஆழம் அறிய வினவ `நீரே இறங்கிக் கண்டு கொள்வீராக' என்று காவலர் கூறிவிட, இறங்கு துறையிலேயே மூழ்கித் தவிக்கும் மக்களை நமக்குக் காட்டுகின்றார், அடிகள்.

தாம் சைவசமயத்தை விட்டுச் சமண சமயம் புகுந்து இடர்ப் பட்டதை இப்பிறிதுமொழிதல் உவமையினால் அவர் விளக்குகின்றார். திலகவதியார் முதலியோருடைய அறிவுரைகளையெலாம் இகழ்ந்து பொருட்படுத்தாது. வேற்றுச் சமய நூல்களை ஆராய்ந்தறிந்து, சமண சமய உண்மைகளை ஆராய்ந்து கண்டுகொள் என்று சமண சமயத்தார் கூற, சமண சமயம் புகுந்து அதனை மேற்கொண்டு, மீளும் வகையின்றி இடர்ப்பட்டவர் அடிகள்.

இந்நிலையை விளக்கும் அடிகள், கூறாமற் கூறித் தம் துயரநிலைமையப் புலப்படுத்துகின்றார். ஆழப்பொருளை அகத்தே உடைய அப்பாடற் பகுதி பின் வருவதாகும் :

"காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால்

கரைநின்றவர் கண்டுகொ ளென்று சொல்லி

நீத்தாய கயம்புக நூக்கியிட

நிலைக்கொள்ளும் வழித்துறை ஒன்றறியேன்"

(தி.4 ப.1 பா.5)

கருதிய பொருளைத் தொகுத்து, அதனைக் கூறாது, ஒத்த பொருள் ஒன்றை, உரைப்பதை இவ்வணியாகக் கூறுவர் திருவள் ளுவர். நுனிக்கொம்பர் ஏறினார். பீலிபெய் சாகாடும் ஆகிய குறட் பாக்களில் கூறும் முறையை ஒட்டியவையாக இவ்வமைப்புக்களை நாம் காணலாம்.

எல்லாம் சிவம் எனல்:

எல்லாம் சிவமயமாகக் காணும் பெருந்தகை அப்பரடிகள். எப்பொருளைக் கண்டாலும் அதனூடு இறைவனைக் கண்டு ஏத்துவது இப்பண்பட்ட அருட் புலவரின் இயல்பு; இதனைத் திருவையாற்றுப் பதிகத்தில், காந்தாரப் பண்ணில் அமைத்து அருளியுள்ளார்.

சோலைகளும், பிற பூங்காக்களும் நிறைந்த திருவையாற் றில், பிடியும் களிறும், கோழியும், பெடையும், குயிலும் பெடையும், மயிலும் பெடையும், பகன்றில்களும், ஏனங்களும், நாரையும், மானும், கிளியும், நாகும், ஏறும் ஆகியவற்றைக் காண்கின்ற அடிகள் சிவமும் சத்தியுமாகவே இவற்றைக் கண்டு களிக்கின்றார். கவிதை இசைக் கின்றார்.

"கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறி யாதன கண்டேன்" (தி.6 ப.? பா.??) என்று இனிக்கப் பாடுகின்றார். ஆணும் பெண்ணு மாகிய அஃறிணை உயிர்களிலும், அம்மையப்பரை உவமை கொண்டு அருளிச் செய்வாராயின் இக்கனிந்த உள்ளத்தின் ஏற்றத்தை என்னென் பது. மெய்ப் பொருளாக விளங்கும் இறைவனை எல்லாமாகக் கண்டு ஏத்தும் பண்பாட்டில் தலைசிறந்து விளங்குகின்றார் தாண்டகவேந்தர்.

சைவத்தின் மாண்பும் புறச்சமயப் புன்மையும்:

இறைவன் திருவாரூரில் எழுந்தருளி அருள்வழங்கவும் தாம் அவனைத் தொழாது சமய சமயம் சார்ந்து இடருற்றமைக்குத் தக்க பழமொழிகள் பலவற்றை உவமை முகத்தான் எடுத்தாளும் திருப்பதிகம் (தி.4 ப.5) ஒன்றைக் காந்தாரப் பண்ணில் காண்கின்றோம்.

"கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும்

ஆரூரரைக்

கையினால் தொழாதொழிந்து கனியிருப்பக் காய்கவர்ந்த

கள்வனேனே"

"முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கைப்பின்

போனவாறே"

"அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க மறம்விலைக்குக்

கொண்டவாறே"

"பண்டெலாம் அறியாதே பனிநீராற் பாவைசெயப்

பாவித்தேனே"

"என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க்கு ஆதனாய்

அகப்பட்டேனே"

"எப்போதும் நினையாதே இருட்டறையில் மலடுகறந்து

எய்த்தவாறே"

"விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க மின்மினித்தீக்

காய்ந்தவாறே"

"பாவியேன் அறியாதே பாழூரிற் பயிக்கம்புக்கெய்த்தவாறே"

"தட்டானைச் சாராதே தவமிருக்க அவஞ்செய்து

தருக்கினேனே

"கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க இரும்புகடித்

தெய்த்தவாறே"

கனியிருப்பக் காய்கவர்தல், முயல்விட்டுக் காக்கைபின் செல் லல், அறமிருப்ப மறம் விலைக்குக் கொள்ளல், பனிநீராற் பாவை செய்ய முனைதல், ஏதன்போர்க்கு ஆதனாய் அகப்படல், இருட்டறையில் மலட்டுப் பசுவைக் கறந்து இளைத்தல், விளக்கிருக்க மின்மினித் தீயிற்குளிர் காய்தல், பாழூரிற் பிச்சை யெடுக்கச் செல்லல், தவம் இருக்க அவம் செய்து தருக்கல், கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தல் ஆகிய உவமைகள் அனைத்தும் சைவசமயம் விட்டுச் சமணசமயம் புக்கு மயங்கியமை குறித்த கழிவிரக்கத்தான் விளைந்த உவமைகள்.

கனி, முயல், அறம், விளக்கு, தவம், கரும்பு ஆகிய ஆறும் சைவத்தை விளக்கும் உவமைகளாக வந்துள்ளன. கனிந்து இனிக்கும் சுவை யநுபவம், முத்தி நோக்கி விரையும் செலவும், அறமே செழிக் கும் உயர்வும், அறிவின்மையை அறுக்கும் விளக்காம் விழுப்பமும், தவநெறியாகும் தாழ்வின்மையும், கரும்பென இனிக்கும் திறமும் உடையது சைவசமயம் என்பது இவ்வுவமைகளாற் பெறப்படும்.

திருவைந்தெழுத்துப் பற்றிய தெளிவு:

நமச்சிவாயப் பதிகத்தில் நலஞ்செறிந்த உவமைகள் பல நயம் பொருந்தித் திகழ்கின்றன. பூவினிற் சிறந்த தாமரை போலவும், அரன் அஞ்சாடுதலாற் சிறந்த ஆவினைப் போலவும், கோட்டமில்லாத கோவினைப் போலவும் நாவினுக்கு அருங்கலமாகச் சிறப்பது திருவைந்தெழுத்து (பா.2) என்கின்றார் அடிகள்.

விண்ணளவும் மிகுமாறு அடுக்கி வைக்கப்பட்ட விறகுக் குவியலிடையே, அழல் உண்ணப் புகுந்தால் ஒன்றும் எஞ்சாது. அது போல், உலகினில் பண்ணிய பாவத்தின் குவியலைத் திருவைந் தெழுத்தே நண்ணிநின்று அறுக்கும் (பா.3) என்னும் பகுதியும் மிக இனிய அறவுரைப் பகுதியாகும்.

விரதம் கொண்டார்க்கு அருங்கலம் திருநீறே ஆதல் போல வும், அந்தணர்களுக்கு அருமறையாறங்கங்கள் அருங்கலம் ஆதல் போலவும், சிவபிரானுக்குத் திங்கள் அருங்கம் ஆதல் போலவும் அடியார்களுக்குத் திருவைந்தெழுத்தே அருங்கலம் ஆகும் (பா.5) என்ற திருப்பாடற் கருத்துச் சீரிய உவமைகளைக் கொண்டுள்ளது.

அகத்திருளைக் கடியும் அகவிளக்கு என்றும், சொல்லின்கண் விளங்கும் சோதி விளக்கு என்றும், எண்ணில்லாத உயிர்களின் அகந்தோறும் ஒளிபெருக்கும் விளக்கு என்றும், அறிவிற்கு அறிவாய் விளங்கும் நல்லக விளக்கு என்றும் திருவைந்தெழுத்தை இனிய உவமைகளால் விளக்கும் திருப்பாடலும் (பா.8) இங்கு அறிதற் குரியதாகும்.

அறுகயிறூசல் அருமைப்பாடு:

கயிற்றிற் கட்டப்பட்ட ஊசலைத் தம் நிலைக்கு உவமையாக்கு கின்றார். பிறிதோரிடத்தில், நெஞ்சு ஒன்றுவிட்டு ஒன்று பற்றும் இயல் புடையது. சென்று பற்றுதலும் பற்றியதை விட்டு நீங்குதலும் அதன் இயல்புகள். தன்னிடத்தை விட்டுப் பிறிதொன்றைச் சேர்ந்து பற்றுவது `உறுகயிறூசல்.' மீண்டும் தன்னிலைக்கு ஆடிக்கொண்டே திரும்புவது `மறுகயிறூசல்'. இவ்வாறு ஆடிக் கொண்டிருக்கும் ஊசலை உடையவ னாகிய அடியேன், அவ்வூசல் அற்று நின்பாதமாகிய நிலத்தை அடைந்தேன் என்கின்றார் அடிகள்.

இவ்வழகிய திருப்பாடல் பன்முறை ஓதி ஓதி உணர்தற்குரிய தாகும். நாமும் அறுகயிறூசலாகி அவன்றாள் சேர்தல் வேண்டும் என்பதை இத்திருப்பாடல் உணர்த்துகின்றது. `ஊசல் கயிறற்றால் தாய் தரையேயாந்துணையான்' என்பது சிவஞானபோதம்.

உறுகயி றூசல்போல ஒன்றுவிட் டொன்றுபற்றி

மறுகயி றூசல்போல வந்துவந் துலவுநெஞ்சம்

பெறுகயி றூசல்போலப் பிறைபுல்கு சடையாய்பாகத்

தறுகயி றூசலானேன் அதிகைவீ ரட்டனீரே.

(தி.4ப. 26. பா.6)

துயரங்களுக்குத் தகும் உவமைகள்:

தாம் அடைந்து வருந்துதற்குக் காரணமான துயரங்களை எண்ணி எண்ணிக் களிகின்றார் அடிகள். மன்றத்தில் இருக்கும் புன்னை மரத்தினைப்போல் நான் ஆவேன் என்கின்றார். மன்றத்தில் இருக்கும் புன்னை ஊரார்க்குப் பொதுவானதாகும். இன்னார்க்கு உரியது என்றிருந்தால் மரத்திற்குத் துன்பமில்லை. பொதுவாயிருப் பதால்தான் துயரத்திற்கேதுவாகின்றது. இது போல் இறைவனுக்குரிய தனிமரமாக உயிர் இருந்தால் தான் ஐம்பொறிகளாகிய பிறரால் வரும் தொல்லையின்றி இருத்தல் முடியும் என்பது அடிகளார் திருவுள்ளமாதல் வேண்டும்.

"மன்றத்துப் புன்னைபோல மரம்படு துயரமெய்தி

ஒன்றினால் உணரமாட்டேன்."

(தி.5 ப.26 பா.8)

உப்பங்கழியில் தோணிபோல உழலுகின்றேன் என்றும் இவ் வருந்துயர் நிலையை விளக்குவர் அடிகளார்

"அழிவுடைத் தாயவாழ்க்கை ஐவரா லலைக்கப்பட்டுக்

கழியிடைத் தோணிபோன்றேன் கடவூர்வீ ரட்டனீரே."

(தி.4. ப. 31. பா.6)

தான் விரும்பியபடி எங்கும் உலவும் நிலையை கழியிடைத் தோணியிடம் காணவியலாது; கடலிடைத் தோணியாயின் அந் நிலை யைக் காணலாம். குறுகிய கழியின் இருகரைகளாலும் அலைக்கப் பட்டு அமிழாதும் மிதவாதும் துயருறும் தோணியை ஐம்பொறிகளால் அலைக்கப்படும் உயிர்க்கு ஒப்பிட்டுள்ள ஆழம் அறிந்தின்புறத்தக்கது.

மத்தினால் இடிபட்டுத் தயிர் சுற்றிச் சுழன்று உடைந்து உருவமும் கெடுமாறுபோல, சித்தத்துள் ஐவர் தீயவினை பலவும் செய்ய மறுகும் உள்ளத்தை ஒரு திருப்பாடலில் உரைக்கின்றார். இவ்வருளாளர்,

"சித்தத்துள் ஐவர்தீய செய்வினை பலவும்செய்ய

மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந்தானும்"

(தி.4. ப.52. பா.9)

இவ்வாறெல்லாம் ஒருபுறம் அலைக்கப்பட்டும், இறைவனை உள்குவார் உள்ளத்திற் குடியிருக்கம் உணர்வெனும் பெருமானை, உள்கிக் கொண்டிருக்கின்றார் இவ்வருளாசிரியர். இருதலையிலும் தீப் பற்றிக் கொண்டுள்ள கொள்ளியின்மேல் எறும்பைத் தமக்கு உவமை யுரைக்கின்றார். திருவாசகத்தும் முத்தொள்ளாயிரத்தும் இவ்வுவமை வருதல் இங்கறியத்தக்கது.

"எள்கினேன் எந்தைபெம்மான் இருதலை மின்னுகின்ற

கொள்ளிமேல் எறும்பென்னுள்ளம் எங்ஙனம் கூடுமாறே"

(தி.4. ப.75. பா.6)

சோற்றுருண்டையைக் கண்ட காக்கைகள் அதனைக் கூடி மொய்த்து உண்ணுவது போல, வல்வினைகள் மொய்த்து வருத்து வதனை உரைக்கின்றார்.

"மோத்தையைக் கண்டகாக்கை போலவல் வினைகள்

மொய்த்துஉன்

வார்த்தையைப் பேசவொட்டா மயக்கநான்

மயங்குகின்றேன்.

(தி.4.ப.75.பா.7)

இறைவன் அருள்:
இறைவனுடைய இன்னருள் தேனாறு பாய்வதுபோல் அடிகளார் உள்ளத்தில் `சிறைபெறாநீராய்'ப் பாய்கின்றது. களிவிஞ்சக் கவிதை யிசைக்கின்றார் தாண்டகவேந்தர்.

"நான்ஐ யாறுபுக் கேற்கவன் இன்னருள்

தேனை யாறு திறந்தாலே ஒக்குமே"

(தி.5ப.27.பா.9)

பண்ணில் ஓசைபோலும், பழத்தினில் சுவைபோலும், கண்ணில்மணி போலும் கலந்துள்ளான் இறைவன் என்று கனிகின்றார்.

"பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை....

கண்ணில் உண்மணி கச்சியே கம்பனே."

(தி.5. ப.27. பா.9)

திருவரிசிற்கரைப்புத்தூர் இறைவனைச் சிந்தைசெய்யச் செய்ய அவன் மிகச் சுவை பயக்கும் நிலையில் கரும்புச் சாற்றுச் சுவை யாய் அடிகளின் திருவாக்கில் முந்துகின்றான்.

"திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக்

கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும் காண்மினே."

(தி.5. ப.61. பா.5)

இறைவன் இணையடி நீழலை நீற்றறையில் காண்கின்றார் அடிகள். இணையடி நீழல் இன்பத்தினைக் கண்டும், கேட்டும், உண் டும், உற்றம், உயிர்த்தும் வெறி கொண்டிசைக்கின்றார். குற்றமற்ற வீணை யிசையும், மாலையில் தோன்றும் மதியின் நிலவும் வீசும் தென்றல் இனிமையும், இளவேனில் மாண்பும், வண்டொலிக்கும் தாமரைப் பொய்கையும் போன்றதென்று, திருவாய் பொலியப் பாடுகின்ற அத்திருப்பாடல் வருமாறு:

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்

மூசுவண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன்எந்தை இணையடி நீழலே.

(தி.5. ப.90. பா.1)

கோடி தீர்த்தங்கள் கலந்து குளித்து அவை ஆடினாலும் அரனுக்கு அன்பில்லையேல் பலனில்லை. ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தில் கொட்டி மூடிவைத்து போலும் அச்செயல், அரனுக்கு அன்பில்லையேல் தீர்த்தங்கள் ஆடினாலும் பலன் இல்லை என்பதைக்

`கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென், கொங்கு தண் குமரித்துறை ஆடிலென், ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென், எங்கு மீசன் எனாதவர்க் கில்லையே' என்று அருளும் அடிகள் இவ்விடத்துத் தெளிவாக உவமையின் மூலம் இதனை விளக்கி விட்டார்.

"ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி

மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே"

(தி.5. ப.99. பா.9)

எள்ளல் உவமை:
தேவதேவனாகிய சிவபிரான் ஞானத்தால் கண்டு தொழத்தன்னையருளும் தலைவன்; பாவகாரிகளாக உள்ளவர்களே அவனைப் பார்க்க அரியவன் என்றுரைப்பர்.

அவர்களுக்கு ஓர் அழகிய உவமை கூறுகின்றார் அடிகள். கிணற்றில் வாழும் ஆமை, கடலில் வாழும் ஆமையைச் சந்தித்து, `இக்கிணற்றினளவைவிடப் பெரியதா உன் கடல்' என்று கேட்பது போன்றது இது என்று உரைக்கின்றார். எள்ளி நகையாடுகின்றார்.

கூவ லாமை குரைகட லாமையைக்

கூவ லோடொக்கு மோகட லென்றல்போல்

பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்

தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.

(தி.5. ப.100. பா.5)

ஐம்பொறிகளால் அலைக்கப்பட்டுத் துன்புறும் தம் நிலைக்கு இவ்வாறே ஆமையை அணிபெற உவமை கூறும் பகுதியும் இவ்விடத்து அறிந்தின் புறத்தக்கது. உலைநீரில் இட்ட ஆமை சூடேறச் சூடேறத் திளைத்து நின்று இன்புற்றாடிப்பின் அழிந்தொழிவது போலத் தாம் வளைத்துநின்ற கள்வராகிய ஐவரால் தளைக்கப்பட்டு வருந்துவதாக உரைக்கின்றார்.

"உலையை ஏற்றித் தழல்எரி மடுத்த நீரில்

திளைத்துநின் றாடு கின்ற ஆமைபோல் தெளிவி லாதேன்."

(தி.4.ப.79.பா.6)

பிறபல உவமை நலங்கள்:

வெள்ளிக் குன்றம் போல்வது விடை (தி.6. ப.3. பா.2.) என்றும், தோன்றும் செஞ்ஞாயிறு போன்றது திருவடி (தி.6. ப.6. பா.4) என்றும், தண்ணீர் நிறைந்த ஏரி போன்று தண்ணளிச் செல்வம் உடைய கருணைக் கடலாய் உள்ளான் மறைக்காட்டுறையும் மணாளன் (தி.6. ப.23. பா.5) என்றும், ஆலைப்படு கரும்பின் சாறுபோல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத்தான்காண் (தி.6. ப.52. பா.2) என்றும், கருதியது முகக்கமாட்டாத தாம் காம்பிலா மூழை என்றும், பலபல நினைவு களைத் தாம் கொண்டொழுகுவது பாம்பின்வாய்த் தேரையின் நினைப் புப் போல்வது என்றும் (தி.4 ப.46. பா.1) பிற இடங்களில் வரும் உவமைகளும் இலக்கிய அழகு செறிந்தவை.

உவமனில்லி:

உவமைகள் பலவற்றால் இறைவனை எடுத்துப் போற்றும் அடிகள், இவ்வுவமைகள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு விளங்கு பவன் அவன் என்பதை, நன்கு உணர்ந்தவர். அந்தக் கருத்தமைய அடிகள் பாடியருளும் பகுதிகள் பல.

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி

மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்

ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்

ஓரூரன் அல்லன்ஓர் உவமன் இல்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்

அவனருளே கண்ணாகக் காணி னல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்

இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.

(தி.6. ப.97. பா.10)

தனக்குவமை இல்லாதன் என்று திருவள்ளுவர் கூறும் கருத் துரையை நன்கு தம் அநுபவத்தில் தெளிந்துள்ள அடிகள் இவ்வாறு கூறியருளுவது நன்கு சிந்தித்துத் தெளிதற்குரியதாகும்.

உருவக அமைப்பு நுட்பம்:

உவமைகளாற் கூற இயலாத அடிகள், உருவகத்தால் அழகு படுத்தும் உயர் கவிதைகள் பலவாகும். அவ்வுருவகங்கள் அனைத் தும் ஆழ்ந்த இலக்கிய நலம் அமைந்தவை உவமையின் செறிவே உருவகம் என்பர். (அ. ச. ஞானசம்பந்தன், இலக்கியக் கலை பக். 71-72)

பல திருப்பதிகங்களை இவ்வமைப்பில் அடிகள ருளியுள்ளார். (தி.6. ப.38. பா.15) முதலிய பதிகங்களைக் காணலாம்.

மெய்ம்மை யெனும் உழவினால் சிறந்து, விருப்பமெனும் வித்தை வித்தி, பொய்ம்மையாம் களையை நீக்கிப் பொறையெனும் நீர் பாய்ச்சித் தகவு எனும் வேலியிட்டுச் செம்மையுள் நின்றால் சிவகதி எனும் நல்விளைவு உண்டாகும் என்பது (தி.4. ப.76. பா.4) ஓர் அழகிய உருவகமாகும்.

காயக் கோயிலில் மனமே அடிமையாக, வாய்மையே தூய் மையாக மனமணி இலிங்கமாக, நேயமே நெய்யும் பாலுமாகச் செய் யும் அன்புப் பூசனையை (தி.4. ப.76. பா.4) அடிகள் அருள்வதும் ஓர் இனிய பகுதி ஆகும்.

துன்பக் கடலிடைத் தோணித்தொழில் பூண்ட தொண்டர் தம்மை இன்பக் கரைமுகந்து ஏற்றுந் திறத்தன ஐயாறன் அடித்தல் (தி.4. ப.92. பா.6) என்பதும் இவ்வருளாளர் அருள்வாக்கு.

பித்தராம் அடியார்க்கு முத்திகாட்டும் ஏணியாகவும், இடர்க் கடலுட் சுழிக்கப்பட்டு இளைப்போர்க்கு அக்கரைக்கே ஏறவாங்கும் தோணியாகவும், சுடர் பொற்காசின் ஆணியாகவும் உருவகம் செய் யும் (தி.6. ப.46. பா.4) அமைப்பு அழகுடையதாகும். இவ்வாறே தோணி யாகிய சோற்றுத் துறையர்க்கே பூணியாய்ப் பணிசெய் மட நெஞ்சமே என்றும் (தி.5. ப.33. பா.7) பாடியருள்வர். பத்தர் நெஞ்சுகள் தேனும் இன்னமுதுமாகவே தித்தித்திருப் பான் (தி.4. ப.29. பா.1) என்று இறைவனைப் பரவுகின்றார். வித்தினில் முளையர் (தி.4. ப.64. பா.9), கனியினும் கட்டிபட்ட கரும்பினும் பனி மலர்க் குழற்பாவை நல்லாரினும் தனிமுடிகவித்தாளும் அரசினும் இனியர் (தி.5 ப.14 பா.10), நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கெலாம் ஊற்றுத் தாண்டவர். (தி.5. ப.24. பா.3), மாலையெழுந்தமதி, காலை முளைத்தகதிர், (தி.6. ப.46. பா.3.), உருகும் மனத்து அடியவர்கட்கு ஊறும் தேன், உண்மை நின்ற பெருகுநிலைக் குரியாளர் அறிவு, மெய்த்தவத்தோர் துணை (தி.6. ப.84. பா.3), தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கம் (தி.6 ப.99 பா.2), என்றெல்லாம் உருவகம் செய்து இறைவனை ஏத்துவது அடிகள் இயல்பு.

உருவகம் செய்யுங்கால் அணிபெற அவற்றை எடுத்து விளக்குவதும், சிலவும் பலவுமாய் அடைமொழிகளால் எடுத்து மொழிவதும், உயர்கருத்தை அருளநுபவம் குழைத்துத் தொடுத்து இனிய கவிதையாக்கி, இனிய பண் கலந்து இறைவன் திருவடியிற் சாத்தி மகிழ்தலும், அடிகளார் அருளிச் செயல்களில் நாம் எங்கெங்கும் கண்டு களிகூரத்தக்க செய்திகளாகும்.

முடிவண்ணம் வான மின் வண்ணம், தம்மார மார்பின் பொடிவண்ணம், தம்புகழூர்தியின் வண்ணம், படிவண்ணம் பாற்கடல் வண்ணம், செஞ்ஞாயிறு அடிவண்ணம் ஆரூர் அரநெறியார்க்கே என (தி.4. ப.17. பா.9) வரும் அருள் உருவகத்தை மறக்கலுமாமோ?

உடல்நிலை உருவகங்கள்:

உடலை அடிகள் பலவாறாக விளக்கி, ஐம்பொறித் துயரங் களையும் பலவாறாக உருவகம் செய்து எள்ளுவர். பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகிவீழ மெய்யனாய் வாழ மாட்டேன் (தி.4. ப.26. பா.2), அஞ்சினால் அடர்க்கப்பட்டு இங்கு உழி தரும் ஆதனேன் (தி.4 ப.26. பா.5), கால் கொடுத்து இருகையேற்றிக் கழிநிரைத்து இறைச்சி மேய்ந்து, தோல்படுத்து உதிர நீரால் சுவரெடுத்து, இரண்டு வாசல் அமைத்து ஏழுசாலோகம் பண்ணி, மால்கொடுத்து ஆவி வைத்தார் (தி.4. ப.33. பா.4), பொந்தையைப் பொருளா எண் ணிப் பொருக்கெனக் காலம் போனேன் (தி.4. ப.41. பா.5)ஒரு முழம் உள்ள குட்டம், ஒன்பது துறை உடைத்தாய் அரைமுழம் அதன் அகலம், அதனின்வாழ் முதலை ஐந்து (தி.4. ப.44. பா.2), மனம் தோணி, மதிகோல், சினம் சரக்கு, பிறவி கடல், மதனெனும் பாறை தாக்க மறிந்து வீழ்கின்றது தோணி (தி.4. பா.46. பா.2), முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடுகுரம்பை அப்பர்போல் ஐவர்வந்து அது தருக, இது விடுக என்று ஒப்பவே நலியலுற்றால் உய்யுமாறு அறிய மாட்டேன் (தி.4. ப.54 பா.3), மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டளவுயரத் தூண்டி உய்வதோர் உபாயம் பற்றி உகக்கின்றேன். உகவா வண்ணம் ஐவரை அகத்தே வைத்தீர் (தி.4. ப.45. பா.9.), ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும் கழுகரிப்பதன் முன்னம் கழலடி தொழுக (தி.5. ப.31. பா.7), என்றெல்லாம் வரும் அருள்மொழி விளக்கங்கள் மறக்கவியலாத மாண்பும், பாடி மகிழ்வோர் நெஞ்சைப் பண்படுத்திக் கனிந்துருகு வித்து இறையொளிக்கு ஆட்படுத்தும் திறனும் உடையவை. சிறந்த உருவக அமைப்புடன் கூடிய செய்யுள்களாகவும் இவை திகழ்கின்றன.

உடம்பெனும் மனை யகத்து உள்ளமே தகளி யாக

மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி

இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்

கட்பமர் காளை தாதை கழலடி காண லாமே.

(தி.4. ப.75. பா.4)

என்பது அகவிளக்குப் பற்றி அடிகள் அருளும் அழகிய கவிதை.

அருளியற் கற்பனை:

கற்பனை நலம் கனிந்த அப்பரடிகள் கவிதைகள் என்றும் அழியாச் சிறப்புடையவை.

கற்பனை என்பது இலக்கிய அழகுகளில் தலைசிறந்து நிற்கின்றது. கற்பனை கலவாத கவிதை உயிரின்றி நிற்கும் உடல்போல் உள்ளது. அதற்கு இயக்கம் இல்லை. கற்பனை உயிரூட்டச் சக்தியாக நின்று கவிதையை உயிர்படைத்து இயக்குகின்றது.

சங்க காலக் கவிதைகள் முதல் அனைத்தும் கற்பனை நலம் செறிந்து விளங்குகின்றன. பழுத்த அருளியற் புலவரான அடிகள் கற்பனை செய்து தம் படைப்புத் திறத்தால் சிற்சில அரிய கவிதைகளை இனிக்கப் பாடுகின்றார்.

மேலைநாட்டுக் கவிஞர்கள் கற்பனையை இரு கூறாக்குவர். ஒன்று ஆக்கக் கற்பனை, மற்றது மீள்நினைவுக் கற்பனை.

இவற்றுள், ஆக்கக் கற்பனையே மிக விரிந்ததும் ஆழமான தும் ஆகும். பொருளைக் கண்டவுடன் அதன் புறத்தோற்றம் முதலிய வற்றில் ஈடுபடாமல் அதன் அகத்தை ஊடுருவி நோக்கியும், உட்க ருத்தை அறிந்தும் அவற்றின் பயனாகத் தோன்றுவது இந்தக் கற்பனை இம்மட்டோடு நில்லாமல் இக்கற்பனை ஆக்கல் தொழிலில் ஈடுபடு கிறது. அப்பொருளின் உண்மைத்தன்மை, இவ்வுலகில் அது நிலவுவ தற்குரிய காரணம். ஏனைய பொருள்களோடு இதற்குள்ள தொடர்பு முதலியவற்றை வரிசைப்படுத்திக் கவிஞன் கூறுகையிற்றான். அவ னது ஆக்கச் சக்தி வெளிப்படுகிறது என்பர். (அ. ச. ஞானசம்பந்தன், இலக்கியக் கலை பக். 71-72 )

சிதம்பரத்தில் ஆனந்தத் தாண்டவம் செய்யும் பெருமானைக் கோடிக்கணக்கான மக்கள் கண்டதுண்டு. எனினும், திருநாவுக்கரசர் என்ற ஒரு கலைஞர் மட்டுமே அக்கலையின் உயிரிப்புத் தன்மையை உணருகிறார். தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம் என்று வந்தாய் என்னும் எம்பெருமான்றன் திருக்குறிப்பே (தி.4 ப.81. பா.2) என்று அவர் பாடும்பொழுது பெருமானின் எடுத்த திருக்கை அவருடன் பேசியதை அறிய முடிகிறது. (அ. ச. ஞானசம்பந்தன், இலக்கியக் கலை பக். 76)

கற்பனையின் கடமை:

மனம் அல்லது ஆத்மாவின் சக்தியே கற்பனை. அது புலன் உணர்வு, ஞாபகம், உணர்ச்சி, பகுத்தறிவு என்ற அனைத்தினும் வேறுபட்டு உள்ளது. அது, இவற்றின் துணைக்கொண்டே செல்கிறது. அழகால் உலகம் விரிந்து வளர்கிற தென்றால் ஆக்குவது கற்பனையின் கடமையாம் என்பர்.(The energy of the mind or the soul - for it wields all physical activities - which is the agent of our world winning's and the procreator of our growing life, we term imagination. Through beauty the world grows, and it is the business of the imagination to create the beautiful.A Study of Poetry - B. Perry - p.67) இக்குறிப்பை அடிகள் திருவாக்கில் தெளிவு பெறக் காணலாம்.

அற்புதமான அழகு:
சிவபிரான் திருமுடியிற் பாம்பும், பிறையும் உள்ளன. அவர் கரத்தில் நகுதலையும் உள்ளது. அம்மையொரு பாகத்தில் உள்ளாள். இத்திருக்காட்சி அடிகள் உள்ளத்தே விரிகிறது. பாம்பைக் கண்டு அஞ்சுகின்றாளாம் அம்மை. அம்மையை, நீலமயிலோ என்று அப் பாம்பு ஐயுற்று அஞ்சுகின்றதாம். பிறையோ, அம்மையின் நுதலைக் கண்டு இவ்வழகு தனக்கில்லையே என்று எண்ணி ஏங்குகின்றதாம். கையிற் பிடித்த கபாலமோ இதனைக் கண்டு நகுகின்றதாம்.

ஆம்! இப்படித் தோன்றுகிறது. அடிகளின் கற்பனைக் கண் ணுக்கு அச்சம், ஐயம், ஏக்கம், நகை ஆகிய பண்புகளை இப்படிக் கண்டு காட்டுகின்றார். முரண்பட்ட இப்பண்புகளை இணைத்து அற்புதமான அழகை உருவாக்குகின்றார் அருளியற் புலவர். கவியின்பம் ததும்பும் இக் கற்பனைக் கருவூலம் பின்வருவதாகும்.

கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்

கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்

கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே

கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே.

(தி.4. ப.10. பா.8)

அச்சக் கற்பனை:

உலகெலாம் ஈன்று காத்தளிக்கும் அன்னை ஒரு பாம்பைக் கண்டு அஞ்சுவாள் என்பது அறிவுக் கண்ணுக்குப் பொருந்தாத காட்சி தான். ஆனால் கற்பனைக்கண்ணுக்கு, கலைக்கண்ணுக்கு, உணர்வுக் கண்ணுக்கு ஒத்த காட்சியாகவே அஃது உள்ளது. அடிகள் பாடும் அருங் கவிதையே இதுவும்:

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞைஎன்று

வேகத்தைத் தவிர, நாகம் வேழத்தின் உரிவை போர்த்துப்

பாகத்தின் நிமிர்தல்செய்யாத் திங்களை மின்னென் றஞ்சி

ஆகத்திற் கிடந்த நாகம் அடங்கும்ஆ ரூர னார்க்கே

(தி.4. ப.53. பா.2)

நாகம் திங்களை மின்னென்று கருதி அடங்கியொடுங்கும் என்றும் கூறு வது நயம் மிக்க பகுதியாகும்.

இறைவன் அருளாடல் பற்றி:

இறைவனுடைய திருவிளையாடலை எண்ணி எண்ணி மகிழ் கின்றார் அடிகள். அவற்றை அடிகள் இலக்கிய அழகுடன் எடுத்துரைக்கும் இனிய கவிதைகள் பல. அவற்றுட் சிலவற்றை இங்குக் காண்போம்.

வினவுவோர்போல ஏதோ வினவி நின்ற இறைவன், திடீர் என்று அடிகள் உள்ளத்திற் புகுந்து ஒளித்து கொண்டானாம். வினவி வந்தவனை, அடிகள் சுழன்று சுழன்று பக்கமெங்கும் தேடுகின்றனராம். கள்ளரோ? என்னையறியாது என் உள்ளத்தே புகுந்து கொண்டீர் எனக் கேட்கின்றாராம். அதற்கு இறைவன் மலர்ந்து சிரித்தபடியே நாம் வெள்ளரோம் (வஞ்சனை யில்லாதேம்) என்று கூறிக் கொண்டே வெளிப்பட்டுத் திருக்காட்சி வழங்கினாராம். இவ்வற்புதக் கற்ப னையை உடைய திருப்பாடல் இது.

வெள்ளநீர் சடைய னார்தாம் வினவுவார் போல வந்தென்

உள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான் புடைகள் போந்து

கள்ளரோ புகுந்தீர் என்னக் கலந்துதான் நோக்கி நக்கு

வெள்ளரோம் என்று நின்றார் விளங்கிளம் பிறைய னாரே.

(தி.4. ப.75. பா.9)

இவ்வாறு தம் உள்ளத்தே இறைவன் இருந்தாலும், மூச்சினோடு வெளியே வந்தாலும் தம்மால் அறியப்பட முடியாதபடிக் கள்ளத்தால் நிற்றலையும் அடிகள் கனிந்து பாடுகின்றார்.

"உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும்

கள்ளத்தே நிற்றியம்மா எங்ஙனம் காணுமாறே."

(தி.4. ப.76. பா.7)

என்னைவிட யாரும் எனக்கினியவர் என்றில்லை. என்னை விட எனக்கு இனியவன் ஒருவன் உள்ளான் என்று சுவைபெறக் கூறத் தொடங்கி, அவன் என்னுள்ளே நிற்பவன் என்று முடிக்கும் அழகுடைத் திருப்பாடல், இங்கு அறியத்தக்கது.

என்னி லாரும் எனக்கினி யாரில்லை

என்னி லும்மினி யானொரு வன் னுளன்

என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்

கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே.

(தி.5. ப.21. பா.1)

இவ்வாறு தம்முள்ளமே கோயிலாகப் புகுந்த இறைவன் புகுந்த சுவடும் தெரியவில்லை என்கின்றார் அடிகள். யாதும் சுவடு படாமல் ஐயாறடைந்த உத்தமரன்றோ அடிகள்! அவர் கயிலையி லிருந்து ஐயாறு புகுந்த சுவடு தெரியாமற் போனது போலவே இச் சுவடும் தெரியவில்லையாம்.

"என்மனமே ஒன்றிப்புக்கனன் போந்த சுவடில்லையே."

(தி.4. ப.81. பா.3)

என்று நயப்புறப் பாடுகின்றார்.

பிறவி வேண்டும்:

மனிதப் பிறவி வேண்டும் என்று அப்பரடிகள் கூறுவது கருத் துப் புரட்சிபோல் தோன்றும். வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை (குறள் 362) என்ற நெறி பிறழாத் தவவேந்தரா இவ்வாறு கூறுகின்றார் என்று தோன்றும்.
ஆனால், குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய், குமிண் சிரிப்பு, பனித்தசடை, பவளமேனி, பால்வெண்ணீறு, எடுத்த பாதம் ஆகியவற்றைக் காணப்பெற்றால் தான் மானிடப் பிறவி வேண்டுவது என்று விளக்கங் கூறுங்கால் அமைதியும் இன்பமும் கொள்கின்றோ மல்லவா? உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ளக்கிழியில் உருவெழுதி உருகி உரைக்கும் அப்பர் அடிகள் அருட்கவிதை
இது:

குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்

இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவுயும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.

(தி.4. ப.81. பா.4)

இத்திருப்பாடல் அழகிய சொல்லாட்சியும், அரும்பொருட் செறிவும், அடைமொழிச் சிறப்பும், கற்பனையிற் கண்டாலும் கனிவிக் கும் அருள்நலமும் உடைய அருட்பனுவல் திருவிருந்தாக உள்ள மையை தமிழ் அன்பர்களும் சமய அன்பர்களும் உணரலாம்.

திருவொற்றியூரர் திருமுடி:

திருவொற்றியூர்ப் பெருமானின்மேல் தேன்போலுந் திருப் பதிகம் ஒன்றை அடிகள் அருளியுள்ளார். அப்பெருமானுடைய திரு முடி, அடிகளுடைய கற்பனைப் பார்வையை எழுப்புகின்றது.

கொன்றை, வெண்டலை, கங்கை, அரவம், திங்கள் ஆகிய அனைத்தையும் அங்குக் காண்கின்றார். கொன்றை எந்த நிலத்தின் கருப்பொருள்? முல்லையென்பது நினைவுக்கு வருகின்றது. கபாலம் சுடுகாட்டை நினைவூட்டுகின்றது. கங்கை கலத்தற்கு இடமாகிய கடல் நினைவுக்கு வருவதும் இயல்பே. பாம்பு உறையும் இடமாகிய புற்றை நினையாமல் இருக்கவியலாது. திங்கள் ஒளிவிரிக்கும் விசும்பும் தோன்றுகின்றது. இவ்வாறு முல்லையாக (கொன்றையினால்), களர் நிலமாக (வெண்டலையினால்), கடலாக (கங்கையால்). புற்றாக (அரவத்தால்), வானமாக (திங்களால்) விளங்குகின்றதாம் பெருமான் திருமுடி.

இனிக்க இனிக்க எழுகின்றது இலக்கிய எழிலுடன் அருட் கவிதை.

அங்கட் கடுக்கைக்கு முல்லைப் புறவம் முறுவல் செய்யும்

பைங்கட் டலைக்குச் சுடலைக் களரி பருமணிசேர்

கங்கைக்கு வேலை அரவுக்குப் புற்று கலைநிரம்பாத்

திங்கட்கு வானம் திருவொற்றி யூரர் திருமுடியே.

(தி.4. ப.86. பா.10)

இவ்வாறு பாடும் அடிகள் நகைச் சுவையெழில் தவழ ஓர் விண்ணப்பம் செய்கின்றார்.

வங்க மலிகடல் நாகைக்கா ரோணத்தெம் வானவனே

எங்கள் பெருமானொர் விண்ணப்பம் உண்டது கேட்டருளீர்

கங்கை சடையுட் கரந்தாயக் கள்ளத்தை மெள்ளஉமை

நங்கை அறியிற்பொல் லாதுகண் டாய்எங்கள் நாயகனே.

(தி.4. ப.103. பா.8)

எவ்வளவு அழகாக அமைந்துள்ளது இத்திருப்பாடல் :

சடைமுடியில்:

இவ்வாறு கங்கையைச் சடையில் வைத்துள்ளமை உமையம் மைக்குத் தெரிந்தால் பொல்லாது என்று கூறுவது உலகியல் நலம் உரைக்கும் பகுதியாகவும் உள்ளது. தனக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொள்வதுடன் அவளைத் தனக்குத் தெரியா மல் ஒளித்துக்கொள்ளும் கணவனை அவன் மனைவி எப்படி உணர் வாள். என்ன நிகழும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும். அதனைப் பொல்லாது கண்டாய் என்ற இரு சொற்களில் விளக்கு கின்றார். இப்படியே ஒன்றற்கொன்று பகையாந்தன்மையுடைய பிறை யையும் பாம்பையும் சடையில் வைத்தமை குறித்தும் அடிகள் அரு ளும் நயப்பகுதி இனியதாகும்.

"பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம்

எய்தப் பெறின்இரங் காதுகண் டாய்நம் இறையவனே."

(தி.4. ப.106. பா.1)

திருவடிச் செம்மாப்பு:

திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனைத் தம்முள்ளே தேடிக் கண்டுகொண்ட அப்பரடிகள். தம் அரிய அருள் வாய்ப்பை எண்ணி எண்ணி இறுமாந்திருக்கும் தலைவர். செம்மாந்து நிற்கும் செந்தமிழ் நாவலர்.

"திருவடி தரித்துநிற்கத் திண்ணம் நாம் உய்ந்தவாறே."

(தி.4. ப.71. பா.10)

என்றும்,

திருவடி சுமந்து கொண்டு காண்கநான் திரியுமாறே.

(தி.4. ப.75. பா.10)

என்றும் பாடி மகிழ்பவர். உடலுயிர் வேறுபட்டால், இறைவன் திருவடிக் கீழ்த் தலைமறைவு வேண்டி, உருக்கமுடன் ஓதுகின்றார்.

இருகாற் குரம்பை இதுநா னுடைய திதுபிரிந்தால்

தருவாய் எனக்குன் திருவடிக் கீழொர் தலைமறைவே.

(தி.4. ப.113. பா.2)

தொழப்படுதலும் தொழுவித்தலும்:

தனக்குத் தொண்டு புரிவோர்க்கு இனிது விளங்கி அருளிப் பாடு புரியும் ஏந்தலாக உள்ள இறைவனை எண்ணுந்தொறும் கழிமகிழ் வெய்துகின்றார் இக்கவியரசர். தொண்டர்களைத் தேவர்களால் தொழுதற்கேற்ற சிறப்புடையவராக்குகின்றானாம். தன்னைத் தேவர் கள் தொழுதேத்தும்