06 முகவுரை

நன்று மாதரம் நாவினுக் கரசடி நளினம்வைத் துயினல்லால்

ஒன்று மாவது கண்டில முபாயமற் றுள்ளன வேண்டோமால்

என்று மாதியு மந்தமு மில்லதோ ரிகபரத் திடைப்பட்டுப்

பொன்று வார்புகும் சூழலிற் புகேம்புகிற் பொறியிலைம் புலனோடே.

- தி.11 நம்பியாண்டார் நம்பிகள்

திருமுறைகளுள் தேவாரத் திருமுறைகளே முதன்மை யானவை. அவற்றுள்ளும், ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் திருமுறைகளே ஒப்ப உயர்ந்தவை. இதனைச் சேக்கிழார், அவ்விரு பேராசிரியரை யுமே, சைவ சமயத்தின் இரு கண்கள் என அருளிச் செய்யும் முகத்தால் அருளினார். அவற்றுள் திருஞானசம்பந்தர் திருமுறை, உண்மைப் பொருள் களைக் கேட்பிக்கும் நிலையில் ஒரு சொல்லால் முடித்துக் கூறும் தொகை மொழியாயும், திருநாவுக்கரசர் திருமுறை, அவைகளைச் சிந்திப்பிக்கும் நிலையில் இனிது விளங்கத் தெரித்துக் கூறும் விரிமொழியாயும் அமைந்துள்ளன. அதுபற்றியே, சேக்கிழார், திருநாவுக்கரசரை, "அலகில் கலைத்துறை தழைப்ப அவதாரம் செய்தார்" என்று அருளினார். அதற்கேற்பத் திருநாவுக்கரசரது திருமுறைகளுள் எத்தனை விரிவான திருப்பதிகங்களைக் காண்கின்றோம்! `சிவனெனும் ஓசை', `இலிங்க புராணம்', `ஆதிபுராணம்', `நின்ற திருத்தாண்டகம்', `பாவ நாசத் திருப்பதிகம்', `பாவநாசத் திருக்குறுந்தொகை', `திரு அங்க மாலை', `திரு மறுமாற்றத் திருத்தாண்டகம்', `திருவடித் திருத்தாண் டகம்', `சித்தத் தொகை' முதலாக மற்றும் பலப்பல திருப்பதிகங்கள் ஒரு பொருளை எவ்வளவு தெளிவாக இனிது விளங்க விரித்துரைக் கின்றன! அதனால், பழம் பாடல்களாகிய வேதம், ஆகமம், உபநிடதம் என்பவற்றின் பொருள்கள் பலவும் நாவரசரது திருமுறைகளிலே இடம் பெற்றுத் திகழ்தல் காணப்படுகின்றது.

நாவரசர் திருமுறை மூன்றனுள்ளும் திருத்தாண்டகத் திருமுறையே, நீண்ட அடிகளாலாகிய பெரிய பாடல்களால் இயன்றிருந்த்தலின், மேற்கூறிய எல்லாத் தன்மைகளையும் நிரம்ப வுடையதாய் விளங்குகின்றது, திருத்தாண்டகம் ஏனைய ஆசிரியரது தேவாரத் திருமுறைகளில் இலாமையால், இத் திருமுறை தனிச் சிறப்புடையதொரு திருமுறையாகும்.

சேக்கிழாரும், ஏனைய ஆசிரியன்மார் அருளிச் செய்யாத திருத்தாண்டகத்தை அருளிச் செய்த சிறப்புப் பற்றி நாவுக்கரசரை, தாண்டகச் சதுரர் எனச் சிறப்பித்துப் போற்றினர். "காழித் தலைவராம் பிள்ளையாரும் தாண்டகச் சதுரராகும் அலர்புக ழரசும் கூட அங்கெழுந் தருள" என்பது அவ்வழகிய பகுதி. (தி.12 பெரிய புராணம் - குங்குலியக் கலயர் - 32)

இங்ஙனமாகவே, இத்திருமுறை மேற்கூறியவாறு விரிந்த பொருள்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது.

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை அங்ஙனம் பல பெயர்களாலும் போற்றிப் பரவும் போற்றித் திருத்தாண்டகங்கள்; அவனது திருவடியின் பெருமைகள் பலவற்றையும் தனித்தனிச் சிறு சிறு தொடர்களால் எடுத்தோதிப் புகழும் திருவடித் திருத்தாண்டகம்; அவனது திருவுருவின் நிலையை விளக்கும், தோன்றும் என்னும் முடி புடைய பல தொடர்களால் இயன்ற திருவுருத் திருத்தாண்டகம், ("வடி யேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்"); மற்றும், `தாமே', `போலும்', `கண்டாய்', `காண்', `நீயே' என்னும் முடிபுகளையுடைய எண்ணற்ற தொடர்களால் இறைவனது இயல்புகளை யெல்லாம் வகுத்து வகுத்துக் கூறும் திருத்தாண்டகங்கள்; அடையாளத் திருத்தாண்டகம்; "பெரும் பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே", "திருவீழி மிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே", "திருநாகேச் சரத்துளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே", "இறைவன் தன்னை ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே", "நீடுரானை நீதனேன் என்னேநான் நினையாவாறே", "ஆரூரில் அம்மாள் தன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே", "ஊன்கருவினுள் நின்ற சோதியானை உத்தனைப் பத்தர்மனம் குடிகொண்டானைத் தீங்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே", "புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே", "ஆவடு தண்டுறையுள் மேய அரனடியே அடி நாயேன் அடைந்துய்ந்தேனே", "தென்கூடல் திருவாலவாய்ச் சிவன டியே சிந்திக்கப் பெற்றேன் நானே", "தென்னெறும்பி யூர்மலைமேல் மாணிக்கத்தைச் செழுஞ் சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே", "பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே", "கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே", "கஞ்ச னூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே", "கீழ்வேளூராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே", "காளத்தியான் அவன் என் கண்ணு ளானே", "ஏகம்பன் காண் அவன் என் எண்ணத் தானே", "வலிவலத்தாள் காண் அவன் என் மனத்து ளானே", "திருப்புத்தூரில் திருத்தளியான் காண் அவன்என் சிந்தை யானே" என்றாற் போலும் முடிபுடைய திருத்தாண்டகங்கள்; எத்துணைப் பரந்து பட்டுப் பலவாய உறுதிப் பொருள்களைப் பசுமரத் தாணிபோல நம் உள்ளத்திற் பதிவிக்கின்றன! இவையெல்லாம் இத்திருமுறைக்கே உரிய சிறப்பியல்புகளாகும்.

திருமுறைகள் பன்னிரண்டனையும் பல சிறந்த குறிப்பு களுடன் முறையாக வெளிவரச் செய்து, அன்புடையார் பலரும் ஒரு வாறான பொருளுணர்ச்சியுடன் அவற்றை ஓதி உய்யச் செய்தல் வேண்டும் என்று திருவுளங்கொண்டு, இது காறும் ஐந்து திருமுறை களைத் தக்க புலவர்களைக் கொண்டு தக்க வகையில் செய்வித்தருளிய, திருத்தருமை ஆதீனம் 25ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், ஆறாந் திருமுறையாகிய இவ்வரிய பெரிய திருமுறைக்குக் குறிப் பெழுதும் தொண்டினை அடியேனுக்குப் பணித்தருளினார்கள்,

".... மெய்

உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண்

உழவாரப் படைகையி லுடையான்வைத் தனதமிழ்"

என (தி.11) நம்பியாண்டார் நம்பிகள் அருளியவாறு, நாவரசர், நாயகன் சேவடி தைவருஞ் சிந்தையும், நைந்துருகிப் பாய்வது போல் அன்பு நீர்பொழி கண்ணுமாய்ச் சிவாநுபூதியில் திளைத்து நின்ற திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களின் திருக்குறிப்பைத் தேவர் தாமும் அறிதல் அரிதெனின், ஒன்றுக்கும் பற்றாத சிறியேன்கொல்லோ அதனைத் தெரிந்துணர வல்லேன்! எனினும்,

"உலகின் மாயப் பிறவி யைத்தரும்

உணர்வி லாவப் பெரும யக்கினை

ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல

உபரி பாகப் பொருள்ப ரப்பிய"

(தி.11 நம்பியாண்டார் நம்பிகள்)

இத்திருமுறையின் பொருளை ஒருவாறு உணர்ந்து ஓதுமாறு செய் விக்க மகாசந்நிதானத்தில் எழுந்த, உலகுக்கு உதவியாம் அவ்வொரு பேரருளாணையை ஏற்கும் கடப்பாட்டினாலும், அவ்வருளாணை இத்திருமுறை உணர்விலே பொழுது கழியவும், அவ்வுணர்வில் தோன்றும் ஒன்றிரண்டு கருத்துக்களைக் கற்றல் கேட்டலுடைய பெரி யார்முன் வைத்து, கொண்டுங் கொடுத்தும் பயன் பெறுதற்கும் வாய்ப் புத் தருவதாகும் என்றும் எண்ணத்தினாலும் இதற்குச் சில குறிப்புகளை எழுதத் தொடங்கினேன்.

நாவுக்கரசரது திருமுறைகளின் இயற்கைப்படி திருத்தாண்ட கத் திருமுறையுள்ளும் சொற்களே சில பிறவியிடத்துப் பயின்றறி யாதன; பொருள்களும் அத்தகையன. கல்லலகு, கோடாலம், நகழ்தல், நமைப்புண்ணல் முதலியன அத்தகைய சொற்களாகும். அவற்றுள், `கல்லலகு' என்பது, திருக்கைலாய ஞானவுலாவிலும் வந்துள்ளது.

"பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோ டஞ்சாய்ப்

பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்

விரியாத குணமொருகால் நான்கே யென்பர்

விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்

தெரிவாய குணமஞ்சஞ் சமிதை யஞ்சும்

பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாகும்."

(தி.6 ப.16. பா.7)

புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்

பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டும்

கலையெட்டும் காப்பெட்டும் காட்சி யெட்டும்

கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்

நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்

நலஞ்சிறத்தார் மனத்தகத்து மலர்க ளெட்டும்

திகையெட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

(தி.6 ப.34 பா.9)

என்றாற் போலும் பகுதிகளின் பொருளையறிய யாதும் துணை செய்யவில்லை. இன்னோரன்ன இடங்கள் பொருள் காணுதற்கு அரியனவேயாம். அவ்விடங்களுக்கெல்லாம் இயன்ற வகையில் பொருள் காணப்பட்டது.

இவை பற்றியாக, வேறு எவை பற்றியாக, எவ்வாற்றானும், `இத்திருமுறையின் குறிப்பை யான் காண்பேன்' என்னும் முனைப்புச் சிறிதேனும் உடையேனாய் அடியேன் இதன்கண் புகுந்திலேன்; எல் லாவற்றையும், எல்லார்க்கும், வேண்டும் பொழுது ஏற்ற பெற்றியால் உள்நின்று உணர்த்தி வரும் சிவமுதற் பொருளின் திருவருள், சிறி யேன் உளத்திலும் நின்று சில உணர்த்தும் என்னும் உறுதி பற்றியே புகுந்தேன. அங்ஙனம் உணர்த்த உணர்ந்து குறித்த நல்லன உளவாயின் அவைகளை ஏற்று, உணர்வின்மையால் நேர்ந்த குறைகளை அறிஞர் உலகம் அன்பினாற் பொறுத்துத் திருத்திடும் என நம்புகின்றேன்.

இவ் அரிய பணியில் ஈடுபடும் வாய்ப்பு அடியேனுக்கு உண்டாகத் திருவுளம் பற்றியருளிய ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்களது பொன்னார் திருவடிகளுக்கு எனது மனமொழி மெய்களாலாகிய என்றும் மறவா நன்றியறிவோடு கூடிய பெரு வணக்கத்தினைச் செலுத்திக் கொள்ளுகின்றேன். அப்பர் திருமுறைகளில் முடிவான திருமுறையாகிய இவ் ஆறாந் திருமுறை, குறிப்புரையோடு மற்றும் பல சிறப்புக்களைப் பெற்றுத் திகழும் வண்ணம் அப்பர் தேவாரத்தில் இலக்கியப் பண்பு களை எழுதி உதவிய, தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி முதல்வர் செஞ்சொற் கொண்டல், வித்துவான் திரு.சொ. சிங்காரவேலன் எம்.ஏ, அவர்கட்கும், திருநாவுக்கரசு சுவாமிகள் வரலாறு எழுதி உதவிய, அக்கல்லூரிப் பேராசிரியர் திருநெறிச் செம்மல், வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கட்கும், அப்பர் திருமுறையில் குறிக்கப் பட்ட புராண வரலாற்றுக் குறிப்புக்களைக் கண்டு தொகுத்து விளக்கம் எழுதி உதவிய அக்கல்லூரிப் பேராசிரியர், சிரோமணி வித்துவான், திரு. வி. சபேசன் அவர்கட்கும், திருத்தலங்களின் கல்வெட்டு வரலாறுகளை எழுதியுதவிய திருவையாறு கல்வெட்டாராய்ச்சிக் கலைஞர் வித்துவான் திரு. வை. சுந்தரேச வாண்டையார் அவர்கட்கும் தனித்தனியே எனது உளங் கலந்த நன்றி என்றும் உரியது.

இவ் அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி உதவியத னோடு, இத்திருமுறையை அச்சிடுங்காலத்துப் பிழை திருத்தியும், பாட்டு முதற்குறிப்பு அகராதி, சொல்லதிகாரதிகளைத் தொகுத்துக் கொடுத்தும் பல்லாற்றான் உதவிய முதல் முப்பெரும் புலவர்கட்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவிக்கும் கடப்பாடுடையேன்.

ஏனைய திருமுறைகளைப் போலவே இதனையும் சீரிய முறையில் அச்சிட்டு உதவிய ஞானசம்பந்தம் அச்சகத்தார்க்கும் எனது நன்றி உரியது. எல்லாவற்றையும், முன்னின்று இனிது முடித்தருளும் திருவருளை, இடையறாது எண்ணி இறைஞ்சுகின்றேன்.

தருமை ஆதீன முதற்குரவர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்தர் குருபூஜை விழா மலராகிய இவ் ஆறாந் திருமுறை, நான்கு ஐந்தாந் திருமுறைகளுடன், திருவாமூர் திருநாவுக்கரசர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தன்று, திருவதிகையில் ஸ்ரீ வீரட்டானேசுவரர் திருவடி யிலும், திருவாமூரில் திருநாவுக்கரசர் திருவடியிலும் சாத்தி எடுக்கப் பெற்றது.

ஏனைய திருமுறைகளும் இங்ஙனம் இனிது வெளிவரல் வேண்டும் என்பது, ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமகா சந்நிதானம் அவர் களது திருவுள்ளம். அஃது இனிது நிறைவெய்தத் திருவருள் முன்னிற்கும் வண்ணம் அனைவரும் வேண்டுவோமாக.

வாழ்க திருமுறைகள்! வளர்க திருநெறி!

இங்ஙனம்,

ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணியவர்கள்

அருளாணைப்படி

தருமை ஆதீனம், அடியேன்

14.07.1963 சி. அருணவடிவேல்