குருபாதம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம்

26 ஆவது குருமகா சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய

சுவாமிகள்

வழங்கியருளிய

06 ஆசியுரை

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற

கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்

தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்

சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்

தாயானைத் தவமாய தன்னை யானைத்

தலையாய தேவாதி தேவர்க் கென்றும்

சேயானைத் தென்கூடல் திருஆ லவாய்ச்

சிவன்அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.- அப்பர் (தி. 6 ப.19 பா.8)

தமிழின் சிறப்பு:

உலகில் இன்று வழங்கிவரும் மொழிகள் தொள்ளாயிரத்திற்கும் மேல் உள்ளன என்பர் ஆய்வறிஞர்கள். அவற்றுள்ளும் தொன்மை வாய்ந்த மொழிகள் தமிழ், சமஸ்கிருதம், இபிரேயம், கிரேக்கம், இலத்தின் என்பனவாம். இவற்றுள்ளும் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உள்ள மொழி, தமிழ் மொழி ஒன்றே என்பது தமிழ் மக்கள் பெருமை கொள்ளத் தக்கதாம். மேலும் தமிழ்மொழி, பிறமொழிக் கலப்பின்றியும், துணையின்றியும் தானே தனித்தியங்கும் பேராற்றல் பெற்றுள்ளது. மொழி உலகமே முன்பின் கண்டறியாத காதல் கனிந்த அகப்பொருள் இலக்கணத்தையும் வீரம் விரவிய புறப்பொருள் இலக்கணத்தையும் தன்னிடத்தே கொண்டு திகழ்கிறது.

அகப்புறப் பாகுபாடு:

அகப்பொருளாயம் காதல் பற்றி நெறிப்படுத்தி உரைக்கும் பகுதி அகத்திணை என்றும், வீரம் பற்றி நெறிப்படுத்தி உரைக்கும் பகுதி புறத்திணை என்றும் பேசப்பெறும். திணை என்பது ஒழுக்கம். எனவே அகஒழுக்கம் என்பது இன்பம் பற்றியது. பிறருக்கு எடுத்துரைக்க இயலாதது. கணவன் மனைவியுடன் வாழும் குடும்பம் பற்றியது. புற ஒழுக்கம் என்பது பிறருக்கு எடுத்துரைக்கும் தன்மையது. அறம், பொருள் பற்றியது. மக்கட் சமுதாயம் அல்லது அரசு பற்றியது. இச்சிறப்போடு தமிழ்மொழி, இயல், இசை, நாடகம் என முத்திறப்பட்டு, முத்தமிழ் எனவும் போற்றப்பெறும் சிறப்பினது.

முத்தமிழ் விளக்கம்:
இச்செந்தமிழ் மொழியை முத்திறப்படுத்தறிவித்த மேதைமை தமிழர்கட்கே வாய்த்த தனிச்சிறப்பாகும். வேறு பல மொழிகளிலும் இம்முக்கூறு இருந்தபோதிலும் அதை நுண்ணிதின் உணர்ந்து வெளிப் படுத்தினார் இல்லை. இயல் என்பது உள்ளத்தே இயல்பாக எழும் எண்ணங்கள். அஃதாவது கருத்துக்கள். கருத்தே அறிவு எனப்படுகிறது. எனவே அறிவு இயற்றமிழ் எனப்படுகிறது. வரலாறு, பூகோளம், வானியல், தத்துவம் என அறிவு பலதிறப்படும் என்பதை நாம் நன்கு அறிவோம். இவ்வறிவிற்கெல்லாம் பிறப்பிடம் மனமே. எனவே மனமும், மனத்துள் நின்று எழும் எண்ணங்களாகிய கருத்துக்களும் இயற்றமிழ் எனப் பெறுகின்றன. எண்ணங்களாகிய கருத்துக்களுக்கு மனம் இருப்பிடமாக இருக்கிறதே தவிர தன்னிடம் தோன்றிய கருத்தைப் பிறருக்கு எடுத்துரைக்க இயலாதது. இதனால்தான், இயற்றமிழ், ஊமை எனப் பேசப்பெறுகிறது. இதுபோன்றே எல்லா உலகிற்கும் முதலாய் இருக்கின்ற ஓம் என்ற பிரணவம், ஊமை எழுத்து என்று சாத்திரம் பேசும். முதலாய் இருப்பதெல்லாம் மோனமாயிருப்பதே முறைமை போலும்.

பழந்தமிழ் இலக்கியங்களில் முத்தமிழ் என்று தமிழைக் குறிப்பிட்டவர் நம் அப்பர் அடிகளேயாவார். "மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய், முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்" (தி.6 ப.23 பா.9) (மூலநோய் - பிறவிநோய்) என்பது அவர்தம் அருள்வாக்கு. தமிழரைத் தமிழன் என்று பழம்பெரும் இலக்கியங் களில் சொல்லிய சிறப்பும் அப்பர் அடிகளையே சேரும். "ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையெம் அண்ணல் கண்டாய்" (தி.6 ப.23 பா.5) என்னும் திருமறைக்காட்டுத் திருத் தாண்டகப் பகுதி இதனை வலியுறுத்தும்.

திருநாவுக்கரசர் இயற்றமிழிலும், இசைத் தமிழிலும் பாடல்களை அருளியுள்ளார். திருஞானசம்பந்தர் தாம் பாடியருளிய மூன்று திரு முறைகளையும் பண் அமைப்பிலேயே இசைத் தமிழாகவே பாடியுள் ளார். மூன்று திருமுறைகளிலுமாகச் சம்பந்தர் 22 பண்கள் பொருந்தி வரப் பாடல்கள் பாடியுள்ளார். அதனால்தான் அவரைப் போற்றிய சுந்தரர், நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் (தி.7 ப.62 பா.8) என்று குறித்தார்.

இசைத்தமிழும் இயற்றமிழும்:

திருநாவுக்கரசர் அருளிய நான்காம் திருமுறைப் பதிகங்கள் அனைத்தும் பண் அமைப்புடையன. இசைத்தமிழ்ப் பாடல்களாகப் பத்துப் பண்கள் அத்திருமுறையில் காணப் பெறுகின்றன. ஐந்தாம் திருமுறை "குறுந்தொகை" என்னும் யாப்பு அமைப்பிலும், ஆறாம் திருமுறை "தாண்டகம்" என்னும் யாப்பு அமைப்பிலும் அமைந் துள்ளன. எனவே அப்பர் அருளிய நான்காம் திருமுறை "இசைத் தமிழ்" எனவும், ஐந்து, ஆறாம் திருமுறைகள் "இயற்றமிழ்" எனவும் குறித்து உணரலாம். இயற்றமிழாயினும் தொன்றுதொட்டு, ஐந்தாம் திருமுறை ரூபக தாளத்தில், நாதநாமக்கிரியா இராகத்திலும், மாயா மாளவ கௌள இராகத்திலும் பாடி வருகின்றனர். ஆறாந் திருமுறை யான திருத்தாண்டகத்தைச் சுத்தாங்கமாக அரிகாம்போதியில் பாடி வருகின்றனர்.

தாண்டக வேந்தர்:

தாண்டகம் என்னும் யாப்பு குறித்த இலக்கணம், பன்னிரு பாட்டியல், யாப்பருங்கலவிருத்தி என்னும் இலக்கண நூல்களில் விளங்கக் காணலாம். ஒவ்வொரு அடியிலும், அறுசீர் அல்லது எண்சீர் அமைய, ஆடவர் அல்லது கடவுளரை நான்கு அடியால் போற்றிப் பாடுவது தாண்டகத்தின் இலக்கணம். அவற்றுள் அறுசீர்களில் அமை வது குறுந்தாண்டகம். எண்சீரால் அமைவது நெடுந்தாண்டகம். இத னைப் பன்னிருபாட்டியல், "மூவிரண்டேனும் இருநான் கேனும், சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர், கடவுளர்ப் புகழ்வன தாண்டகம், அவற்றுள், அறுசீர் குறியது, நெடியது எண்சீராம்" என்று கூறுகிறது. தமிழிலக்கிய வரலாற்றில் முதன்முதல் தாண்டக யாப்பில் பாடல்களை அருளியவர் அப்பர் சுவாமிகளேயாவார். அதனால் அப்பரைத் "தாண்டகச் சதுரர்" என்று சேக்கிழார் சுவாமிகள் போற்று கின்றார். "தலைவராம் பிள்ளையாரும் தாண்டகச் சதுரராகும் அவர் புகழ் அரசும்கூட அங்கெழுத்து அருளக்கண்டு" (தி.12 - குங்.32) என்பது பெரியபுராணப் பாடல்பகுதி. இந்நிகழ்ச்சி திருக்கடவூரில் குங்குலியக் கலயர் திருமடத்தில் அப்பரும் சம்பந்தரும் எழுந் தருளியிருந்ததைக் குறிக்குமிடத்துச் சேக்கிழார் குறிப்பிட்டு உள்ளார். தாண்டக யாப்பிற்குத் தந்தையாக இலங்கும் அப்பர் அடிகளைப் பின்னே வந்த கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசரும், நால்வர் நான் மணிமாலையில் "தாண்டகவேந்த" என்று விளித்துப் போற்றுகிறார். "வெள்ளேறு உடையான் தனக்கு அன்புசெய் திருத்தாண்டக வேந்த" (பா.6) என்பது அவர்தம் அருள் வாக்கு.

ஆறாம்திருமுறை:

ஆறாம் திருமுறையில் 99 திருத்தாண்டகப் பதிகங்களும், 65 திருத்தலங்களும் இடம் பெற்றுள்ளன. ஆறாம் திருமுறையில் உள்ள திருப்பதிகங்கள் அனைத்தும் நெடுந்தாண்டக அமைப்பைச் சேர்ந்தன. சிவ சம்பந்தப்பட்டமையால் திருவைச் சேர்த்து, திருத்தாண்டகம் என்று வழங்கப் பெறுகிறது.

முன் ஏழும், பின் எட்டும் சிறப்புத் தலைப்புள்ளன:

முதலில் உள்ள ஏழு திருப்பதிகங்களில் முன் உள்ள "அரி யானை அந்தணர் தம் சிந்தையானை" (தி.6 ப.1 பா.1) என்ற பதிகமும், இரண்டாவதாகவுள்ள "மங்குல்மதி தவழும் மாடவீதி" (தி.6 ப.2 பா.1) என்ற பதிகமும் தில்லையில் அருளிச் செய்யப் பெற்றவை. இருப்பினும் இவ்விரு திருப்பதிகங்கட்கும் தலைப்பில் "அரியானை" என்பதில் "பெரிய திருத்தாண்டகம்" என்றும், "மங்குல்மதி" என்பதில் "புக்க திருத்தாண்டகம்" என்றும் பெரியோர் குறித்துள்ளனர்.

1. பெரிய திருத்தாண்டகம்:

பெரிய திருத்தாண்டகம் என்பதற்கு "நெடுந்தாண்டகம்" என்பதையே இப்பெயரிட்டுக் குறித்துள்ளார் என்று கொள்ளலாம். ஆறாம் திருமுறை முழுவதுமே நெடுந்தாண்டகமாகத்தான் அமைந் துள்ளது. மேலும் இப்பதிக முதல் பாடலில் "பெரியானை" என்றும் "பெரும்பற்றப் புலியூரானை" என்றும், பின்னர் பெருமானை, பெருந் தகையை, பெருந்துணையை, பெரும்பொருளை, பெரும்பயனை, பேரொளியை என்றும் குறிக்கப் பெறுதலால் இப்பெயர் பெற்றதெனக் கொள்ளலாம். மேலும் உலகம் அனைத்திற்கும் சிவபெருமானே பெரி யவன் ஆதலின் இங்ஙனம் குறிப்பிட்டுள்ளார் என்பதும் கொள்ளத்தகும்.

2. புக்க திருத்தாண்டகம்:

தில்லையில் பாடியருளிய இரண்டாம் திருப்பதிகம், "மங்குல் மதிதவழும்" என்பது இதைப் "புக்க திருத்தாண்டகம்" எனப் போற்றியுள்ளனர். இறைவன் மற்றைய தலங்களைக் காட்டிலும் இத்தலத்தில் சிறப்பாக விளங்குதல் பற்றியும், பாடல்தோறும் புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே என்றமையாலும் புக்க திருத்தாண்டகம் எனப் பெயர் பெற்றுள்ளது. மேலும் இறைநெறிக் கலைகள் அனைத் தும் அர்த்தயாமத்தில் தில்லையில் ஒடுங்குவதாகக் குறிப்பிடப்படுவ தாலும் இப்பெயர் பெற்றது எனலாம். புக்கது - புகுந்தது.

3. ஏழைத் திருத்தாண்டகம்:

மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஆகிய ஐந்து பதிகங்களும் திருவதிகையில் பாடப் பெற்றன. மூன்றாவதாக உள்ள "ஏழைத் திருத்தாண்டகம்" திருவதிகையில் பாடப் பெற்றது. ஏழை என்பது, செல்வமின்மை, வலிமை இன்மை, அறிவின்மை முதலியவற்றைக் குறிக்கும். இங்கு நாயனார் அறிவில் ஏழையாகவே தம்மைக் குறிப்பிட்டுள்ளார். நம்பர் அருளாமையினாலும், சமண சமயம் சார்ந்திருந்த போது அறிவுத் தெளிவின்றி இருந்தமையாலும், இருபிறப்பும் வெறுவியராய் இருந்தாராகிய சமயர் சொற்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே (தி.7 ப.3) என்று பதிகம் முழுவதும் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் குறிப்பிடலாலும் இத்திருப்பதிகம் இப்பெயர் பெற்றது. இரவும் பகலும் பிரியாது வணங்குவன். நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன். சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்பனவெல்லாம் அப்ப் சைவம் சார்ந்தபிறகே என்பது இப்பதிகத்தாலும் வலியுறுத்தப் பெறுதல் காணலாம்.

4. அடையாளத் திருத்தாண்டகம்:

நான்காவதாக "அடையாளத் திருத்தாண்டகம்" எல்லாப் பாடல்களிலும் இறைவனிடத்துள்ள சந்திரன், கங்கை, சடாமகுடம் முதலிய அடையாளங்களைப் பதிகம் முழுவதும் குறிப்பிட்டிருத் தலின் இப்பெயர் பெற்றுள்ளது.

5. போற்றித் திருத்தாண்டகம்:

ஐந்தாவது, பெருமாள் புகழைப் பல படியாகப் பதிகம் முழுவதும் போற்றி, போற்றி என்று பலமுறை அருளப் பெற்றிருத்தலின் "போற்றித் திருத்தாண்டகம்" எனப் பெயர் சூட்டியுள்ளார். இதில் 82 போற்றிகள் வருகின்றன1.

6. திருவடித் திருத்தாண்டகம்:

ஆறாவதாக, "திருவடித் திருத்தாண்டகம்" அமைந்துள்ளது. இறைவன் திருவடியே எல்லாவற்றையும் இயக்குகிறது என்ற குறிப்பில் அவன் திருவடிச் சிறப்பைப் பாடல்தோறும் பல படியாகக் குறிப்பிட்டிருத்தலின், இப்பெயர் பெற்றுள்ளது. பின்வந்துள்ள திருவடிப் புகழ்ச்சிகட்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது இத்தாண்டகப் பதிகமே என்பது குறிப்பிடத்தக்கது.

7. காப்புத் திருத்தாண்டகம்:

ஏழாவதாக, காப்புத் திருத்தாண்டகம் திருவதிகை வீரட்டம் முதலாக உள்ள தலங்கள் அனைத்தும் நமக்குக் காப்புக்களாக உள்ளன என்ற குறிப்பில் இதற்கு இப்பெயர் இட்டுள்ளனர்.
முன் ஏழில் முதல் இரண்டு தில்லையைப் பற்றியன. ஏனைய ஐந்தும் திருவதிகையைப் பற்றியன. மற்றைய திருத்தாண்டகப் பதிகங் கட்கு இதுபோன்ற சிறப்புப் பெயர் கொடுக்கப் பெறவில்லை. இவை முன் ஏழு திருப்பதிகங்களைப் பற்றியன. 70, 71, 93, 94, 95, 96, 97, 98 ஆகிய எட்டும் சிறப்புப் பெயர் பெற்ற, பின் எட்டுப் பதிகங்களாம்.

பின் எட்டும் பொதுப்பதிகங்கள்:

70ஆம் பதிகம்:

1. "கே்ஷத்திரக் கோவைத் திருத்தாண்டகம்:" திருக்கயிலா யமே சிவபெருமான் எழுந்தருளியுள்ள முதன்மைத் தலமாகும். பெருமான் அங்கிருந்தே எல்லாத் திருத்தலங்களிலும் ஒவ்வொரு காரணம் பற்றி எழுந்தருளியுள்ளார். ஆதலால், தில்லைச் சிற்றம்பலம் முதலாக எல்லாத் தலங்களிலும் கயிலாய நாதனையே காணலாம் என்று அருளியுள்ளார். தலங்கள் பலவாயினும் அங்கு எழுந்தருளி யுள்ள இறைவன் ஒருவனே. அவன் கயிலாயநாதனே என்று அருளி யுள்ளமை நன்கு அறியத்தக்கது. கடவுள் ஒருவரே என்பதைச் சைவம் இதனாலும் தெளிவுறுத்துவது காணலாம்.

71ஆம் பதிகம்:

2. "அடைவுத் திருத்தாண்டகம்:" பள்ளி என வருந்தலங்களை யும் வீரட்டானம், காடு, துறை, குடி, கோயில், ஊர் என வருந் தலங் களையும் ஒவ்வொரு பகுதியாக அடைவு செய்து பாடியிருத்தலின் இப்பதிகம் அடைவுத் திருத்தாண்டகம் எனப் போற்றப்படுகிறது. அடங்கல் - அடைவு என்பன ஒரு பொருட் சொற்களே.

93ஆம் பதிகம்:

3. "பல வகைத் திருத்தாண்டகம்:" பூந்துருத்தி, நெய்த்தானம், ஐயாறு, சோற்றுத்துறை, திருப்பழனம் முதலாய பல தலங்களின் பெயர்களைச் சொல்வீரானால் பழவினை போகும். துயர் நீங்கித் தூய நெறியில் சேரலாம். கொடுவினைகள் தீர்ந்து அரனைக் குறுகலாம், வீடாதவல்வினை வீட்டலாம் எனப் பல தலவழிபாட்டின் பலன் கூறலால் இப்பதிகம் பலவகைத் திருத்தாண்டகம் எனப் போற்றப் பெறுகிறது.

94ஆம் பதிகம்:

4 "நின்ற திருத்தாண்டகம்:" குறிகளும், அடையாளமும், கோயிலும், நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும் என்று அப்பர் ஐந்தாம் திருமுறையில் அருளியவாறு பெருமான் எப்படியெல்லாம் நின்று அருள் செய்கிறார் என்று அவர் நின்ற தன்மைகளைப் பலபடியாக இப்பதிகம் எடுத்துரைத்தலின் இப்பதிகம் நின்ற திருத்தாண்டகம் எனப் போற்றப் பெறுகிறது. "நெருநலையாய், இன்றாகி, நாளையாகிய, நிமிர் புன்சடை அடிகள் நின்ற வாறே" (தி.6 ப.94 பா.1) என்பது எடுத்துக்காட்டு.

95ஆம் பதிகம்:

5. "தனித்திருத்தாண்டகம்:" அப்பன் நீ, அம்மை நீ எனத் தொடங்குவது. சிவபெருமானின் முழுமுதல் தன்மையாகிய தனித் தன்மை பேசப் பெறுதலால் இப்பெயர் பெற்றது எனலாம்.

96ஆம் பதிகம்:

6. இதுவும் "தனித்திருத்தாண்டகம்:" அப்பர் அடிகள் எப்படி யெல்லாம் தன்னை இறைவன் ஆட்கொண்டான் என்ற தனித் தன்மை களை விளக்கிப் பாடுதலால் இதுவும் தனித்திருத்தாண்டகம் எனப் போற்றப் பெறுகிறது. சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே, சமண் தீர்த்து என்றன்னை ஆட்கொண்டாரே, உடல் உறுநோய் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே, வெந்துயரம் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே, இடர் உறுநோய் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே என்பன அப்பரின் வரலாறு கூறும் அகச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

97ஆம் பதிகம்:

7. "திருவினாத் திருத்தாண்டகம்:" அண்டம் கடந்த சுவடும் உண்டோ? என்பது போன்ற வினாக்களாகவே ஐந்து பாடல்கள் காணப்படுதலால் இப்பதிகம் இப்பெயர் பெற்றது. மற்ற ஆறு பாடல் களும் பெருமானின் பெருமைகளைக் கண்டேன் என்றே குறிப் பிட்டுள்ளார்.

98ஆம் பதிகம்:

8. "மறுமாற்றத் திருத்தாண்டகம்:" சமணத்தினின்றும் சைவம் சார்ந்த நாவுக்கரசரை, பல்லவ மன்னன் சமணர் துர்ப்போதனையால் தண்டிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஏவலரை அனுப்பி அழைத்தபோது, அவர்கட்கு மறுமொழியாக அருளியதே மறுமாற்றத் திருத்தாண்டகம். முடிமன்னனை எதிர்த்து மறுமொழி சொன்ன மாண்பை இப்பதிகத்துட் பரக்கக் காணலாம். மன்னன் முன்பு செல்லா மலேயே அப்பர் இருந்திருப்பார். ஏவலர்கள் மீது வைத்த கருணையால் அவர்கள் துன்புறா வண்ணம் மன்னன் எதிர் சென்றார். "நாமார்க்கும் குடியல்லோம்," "பாராண்டு பகடேறி வருவார் சொல்லும், பணி கேட்கக் கடவோமோ, பற்றற்றோமே, புண்ணியனை நண்ணிய புண் ணியத்துளோமே," "நாவலந் தீவகத்தினுக்கு நாதாரன காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவமல்லோம் கடுமையொடு களவற்றோமே," "கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும், குணமாகக் கொள்ளோம் எண்குணத்துளோமே" என்பன அவர் மறுமாற்றங்களாம். இவ்வெட் டுத் தலைப்புக்களும் பின் எட்டுப் பொதுப் பதிகத் தலைப்புகளில் காணப்படுவனவாம்.

இப்பதினைந்து பதிகங்களேயன்றி, "கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி" (தி.6 ப.32) என்னும் திருவாரூர்த் திருத்தாண்டகம், திருக்கயிலாயத் திருத்தாண்டகப் பதிகங்களாகிய "வேற்றாகி விண் ணாகி நின்றாய் போற்றி" (தி.6 ப.55) என்ற பதிகம்; "பொறையுடைய பூமி நீரானாய் போற்றி" (தி.6 ப.56) என்ற பதிகம், "பாட்டான நல்லதொடையாய் போற்றி" (தி.6 ப.57) என்ற பதிகம் என்பன போற்றித் திருத்தாண்டகம் என்ற தலைப்பில் அமைந்துள்ளன. ஆக 19 பதிகங்கள் சிறப்புத் தலைப்புடையனவாம்.

பிறந்த நாளும் பிறவாநாளும்:

பயனில்லாத சொல் பேசுபவனை மகன் என்று சொல்லாதே. மக்களில் பதர் என்று சொல்லுக என்கிறார் திருவள்ளுவர்.

பயனில்சொல் பாராட்டுவானை மகன் எனல்

மக்கட் பதடி எனல். - குறள், 196

இஃது உலகியல்.

தலைவனும் தலைவியும் சேர்ந்து இன்புறும் நாளே பயனுள்ள நாள். அல்லாத நாள் பயன் இல்லா நாள். பதர் போன்ற நாள் என்கிறார். குறுந்தொகைப் புலவர் பதடி வைகலார். இவர் இயற்பெயர் தெரியாமையால் பாடல் சிறப்பைக் கொண்டு இப்பெயரையே இவருக்கு இட்டனர் பெரியோர். இவர்தம் பாடற்பகுதி காண்க.

"எல்லாம் எவனோ பதடி வைகல்

.................

அரிவை தோளணைத் துஞ்சி

கழிந்த நாள் இவண் வாழுநாளே" - குறுந்தொகை 323

இஃது அகவியல்.

அருளியல் ஞானியாகிய அப்பரடிகளோ பேரின்பப் பொருளாகிய "பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே" (தி.6 ப.1 பா.1 - 10) அவனைப் பற்றிப் பேசும் நாளே பிறந்த நாள்; பயனுள்ள நாள்; நாட்களிலே உள்ளீடு உள்ள நாள்; மற்ற நாள் பிறவா நாள், பயனுள்ள நாள், நாட்களிலே உள்ளீடு உள்ள நாள். மற்ற நாள் பிறவா நாள்; உள்ளீடு இல்லாத பதர் போன்ற நாள் என்கிறார். "அரியானை அந்தணர் தம் சிந்தையானை" (தி.6 ப.1) எனத் தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே" (தி.6 ப.1 பா.1 - 10) என்பதையே மகுடமாக வைத்துப் பாடியுள்ளமை கண்டு தெளியத்தக்கது.

துறந்தோர் உள்ளப் பெரும் பயன்:

ஆசை நீத்தவர்க்கே வீடு தருபவன் இறைவன். பற்றற்றோர் சேர் பரம்பொருளைப் பற்றுற்றார் சேர இயலாது. இதனால்தான் ஞானசம்பந்தர் "அற்றவர்க்கு அற்ற சிவன்" (தி.3 ப.120 பா.2) என்றார். பற்றற்றவரே, இயல்பாகவே பற்றற்ற பரமனைச் சேரலாம் என்றார். பற்று அறுவதற்கே பரமேசுவரன் நமக்குப் பல பிறப்பைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான்.

இக்கருத்தையே அரியானை என்னும் பதிக ஐந்தாம் பாடலி லும், ஏழாம் பாடலிலும் குறிக்கின்றார். அருந்துணையை என்னும் ஐந் தாம் பாடலில், "மடவாரோடும் பொருந்தணை மேல்வரும் பயனைப் போக மாற்றிப் பொது நீக்கித் தனை நினையவல்லோர்க்கு என்றும் பெருந்துணையை" (தி.6 ப.1 பா.5) என்றருள்கிறார். வரும் பயனை என்னும் ஏழாம் பாடலில், "சுரும்பமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில், துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் யார்? அவர் உள் ளத்தில் பெரும்பயனாய்ப் பிரகாசிப்பவன் பெரும்பற்றப் புலியூர்ப் பிரான்" (தி.6 ப.1 பா.7) என்கிறார்.

இவ்விரு பாடல்களிலும், பெண்ணாசை துறந்தார்க்கே பெரு மான் வீடளிப்பான், பெரும்பயனாயிருப்பான். பெருந் துணையாயி ருப்பான் என்பது தெளிவாகிறது. எல்லா ஆசைகளும், மண்ணாசை, பெண்ணாசை, பொன் னாசை (பொருள்) என்ற மூன்றில் அடங்கும். இவற்றுள்ளும் மற்ற இரு ஆசைகளைக் கடந்தாலும் பெண்ணாசை கடத்தற்கரியது என்பத னால்தான். அதனைக் கடந்தவர்கட்குப் பெரும்பயனாய் உள்ளான் இறைவன் என்கிறார் அப்பா.

கண்ணால் காணும் இன்பம், காதால் கேட்கும் இன்பம், நாவால் சுவைக்கும் இன்பம், மூக்கால் முகரும் இன்பம், உடலால் உற்றறியும் ஊற்றின்பம். இவ்வைந்தும் சிற்றின்பமே. சிறுபொழுது இன்பம் பயப்பதால் சிற்றின்பம் என்றனர். இவ்வைம்புல இன்பமும் ஒரு காலத்து ஓரிடத்தே நிகழ்தல் பெண்ணிடத்தேயாகலின், பெண் இன்பத்தைத் தலைமை பற்றிச் சிற்றின்பம் என்று பேசி வருகின்றனர். "கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும், ஒண்தொடி கண்ணே உள" (குறள், 1101) என்பது வள்ளுவம், தலைமை பற்றிய முடிவான ஆசையைத் துறந்த பெரியோர்க்கே பெரும்பயனாகப் பெருமான் விளங்குகின்றான் என்பதை இப்பாடல் பகுதிகளால் விளக்கியுள்ளார். எனவே எந்த வகை ஆசையும் அற்றவர்க்கே வீடு பேறு உண்டாம் என்பதே இதனால் உணர்த்தப்படும் உண்மை என்பதைத் தெளிவோமாக.

ஆசை அறுவது நமது முயற்சியால் ஆகாது. இறைவன் அருளைத் துணையாகப் பற்றினால் அறும். அதற்குத் துணை செய்கி றார் தருமைக் குருமுதல்வர் குருஞானசம்பந்தர், அப்பாடலை நாளும் ஓதுவோம். நலம் பெறுவோம். அப்பாடல் வருமாறு:

வந்த பொருளாசை மண்ணாசை பெண்ணாசை

இந்தவகை ஆசையெல்லாம் என் மனதில் - வந்தும் இனிச்

சேராமல் வாழ நினைகண்டாய் தென்கூடல்

பேராத சொக்கநாதா! - சொக்கநாத வெண்பா

ஆரூரில் அந்திக் காப்பு:

நமது சிவாலயங்களில் ஆறு கால பூசை உண்டெனினும் அவற்றுள் அந்திக்கால பூசையே சிறப்புடையது. இப்பூசை திருவா ரூரில் சிறப்பாகப் போற்றப்படுகிறது. இதனை அப்பர், புக்க திருத் தாண்டகத்துள் ஒன்பதாம் பாடலில் குறித்துள்ளார். பொன்தீ மணிவிளக்கைப் பூதம் பற்றிவர புலியூர்ச் சிற்றம் பலம் எழுந்தருளும் பெருமான் மணியாரூரில் நின்று அந்தி வழிபாட்டை ஏற்றுச் செல்கிறார் என்று நயம்பட உரைத்துள்ளார். "மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப், பொன்தீ மணிவிளக்குப் பூதம் பற்றப், புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே" (தி.6 ப.2 பா.9)

தொழுதகை துன்பம் துடைப்பாய்:

தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் என்பது தொல் லோர் வாக்கு. "தொழுவாரவர் துயிராயின தீர்த்தல் உன தொழிலே" (தி.7 ப.1 பா.9) என்பது சுந்தரர் வாக்கு. "தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி" (தி.8 போற். வரி 131) என்பது மணிமொழி. இதனை அப்பரும், "தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி" (தி.6 ப.5. பா.8) எனத் திருவதிகைப் போற்றித் திருத்தாண்டகம் எட்டாம் பாடலில் குறிக்கின்றார். இதற்குப் பொருள் - தொழுதவர்கட்குக் காலம் கடந்து அருள் செய்வதில்லை. உடனே அருள் செய்கிறார் என் கிறார் அப்பர். தொழுதகையோடேயே, சற்றும் தாமதியாமல் துன்பத் தைத் துடைப்பான் பரமன் என்று அருள்கிறார். அதே பாடலில், "அஞ் சொலாள்பாகம் அமர்ந்தாய் போற்றி" (தி.6 ப.5 பா.8) என்கிறார். ஐந்தாம் திருமுறையில் மயிலாடுதுறைப் பதிகத்தில், "அஞ்சொலாள் உமைபங்கன் அருளிலே" (தி.5 ப.39 பா.4) என்ற பாடலில் அஞ் சொலாள் என்ற சொற்றொடர் இங்கும் வந்துள்ளமையால் அஞ்சலாள் என்பது சரியல்ல. அஞ்சொலாள் என்பதே சரியான பாடம் என்பது தெளிவாகிறது.

கொடுவினையார் என்றும் குறுகாவடி:

கொடிய வினைகளைச் செய்தவர்கள் இறைவழிபாட்டில் ஈடுபட மாட்டார்கள். அவர்களுடைய செயல் (வினை) கொடுமை யானது. ஆகலின் அவர்கள் அவ்வினைப் பயனை அநுபவித்து மெல் வினையான பிறகே பெருமான் பக்கலில் வருவது சாத்தியமாகும். என வேதான் கொடிய செயல்களைச் செய்தவர்கள் இறைவன் திருவடிக்கு வெகுதூரத்திலேயே இருப்பர். குறுகமாட்டார். குறுகவிடாது திருவ ருள். மெல்வினையாளர் தம் குறைகளை உணர்ந்து பெருமானை அடையின் அவர்களைத் துன்பக் கடலில் ஆழாமல் எடுத்துக் காப்பாற்றுவார். இதனையே அப்பர், "கொடுவினையார் என்றும் குறுகாஅடி, குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும் அடி" (தி.6 ப.6 பா.2) என்று அருளிச் செய்தார். குறைந்தடைந்தாரை நல்லவர்கள் என்று சொல்லலாம். நல்லவர்கள் தொழுதேத்தும் நாரையூரும் என்பது அப்பர் அருள்வாக்கன்றோ!

உரு இரண்டும் ஒவ்வா:

சிவபெருமான் சொரூப நிலையில் அருவும் (ஆகாயம்) அல்லனாய், உருவும் அல்லனாய், அருவுருவும் (சிவலிங்கம்) அல்லனாய் இருப்பவன். இதனை நம் குருஞானசம்பந்தர், "அருவும் உருவும் அருவுருவும் அல்லாப் பெரியவன்" என்கிறார். அப்பரம் பொருள் தடத்தநிலையில் (உயிர்கட்கு அருள் செய்யும் நிலையில்) உருவுகொண்டு அருள்பாலிக்கும்போது எல்லா உருவங்களிலும் அம்மை அப்பர், சிவசத்தி கலப்புடனேயே உருவம் கொள்வார். அவ்வுருவம் ஒன்றோடொன்று சிறிது வேறுபட்டே அவ்வுண்மையை திருவதிகைத் திருவடித் திருத்தாண்டகம் ஆறாம் பாடலில் அப்பர் தெரிவித்தருள்கின்றார். இறைவன் தனது இயல்பாய் சொரூபத்தில் உரு என்று உணரப்படாத அடி, உயிர்கட்கு அருளும் பொருட்டுத் தடத்த நிலையில் உருவம் கொள்ளும்போது, அம்மை அப்பராகிய உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல், சிறிது வேறுபாட்டுடன் இருக்கும் இயல்பின் என்கிறார். இன்று நமது உடம்பிலும் வலப்பக்கம் இடப்பக்கம் ஒவ்வாததாக, சிறிது வேறுபட்டதாக (உலக முழுவதும்) எல்லோருக்கும் இருப்பதை நாம் நன்கு உணரலாம், வலம் - சிவம், இடம் - சத்தி, மனித உடல் மட்டுமல்ல விலங்கினங்கள், தாவரங்கள் எல்லாமே சிவசத்தி சம்மேளனமாகத்தான் உள்ளன. எனவே எல்லாமே ஒன்றோடொன்று ஒவ்வாதனவாகவே உள்ளன. ஊன்றி நோக்குவோர் இத்தத்துவத்தை நன்கு உணரலாம். நம் உடலிலும் வலம் பெரிது. இடம் சிறிது. தாவரத்தில் ஓர் இலையை எடுத்துப் பார்த்தால் வலது பக்கம் பெரிதாய், வன்மையதாய் இருத்தலையும், இடது பக்கம் சிறிதாய் மென்மையாய் இருத்தலையும் காணலாம். அப்பாடல் பகுதி காண்க. "உரு இரண்டும் ஒன்றோடொன்று ஒவ்வா அடி, உரு என்று உணரப்படாத அடி" (தி.6 ப.6 பா.6) இறைவன் உருவம் கடந்தவர். இதுவே அவர் தம் இயற்கை நிலை.

மனத்தகத்தான்:

மனத்தகத்தான், தலைமேலான் வாக்கினுள்ளான் என்னும் தாண்டகம் மனம், மொழி, மெய் என்னும் முக்கரணங்களிலும் இறை வன் பிரிப்பின்றி இருந்து இயக்குகின்றான் என்பதை எடுத்துக் காட்டுகிறது. எல்லாப் பொருள்களிடத்தும் கலப்பினால் ஒன்றியிருந்து உதவும் இறைவனின் பெருங்கருணையை இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது. இதைப் போலவே, "வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற கருத்தானை" (தி.6 ப.19 ப.8) என்பதும் கலப்பினால் இறைவன் ஒன்றாயிருந்து அருள் செய்யும் சிறப்பை எடுத்து ஓதுகிறது. "தேவர்க்கென்றும் சேயான்" என்பது வேறாய் இருந்து அருள் செய் யும் தத்துவத்தை விளக்கி நிற்கிறது.

திருவடி என் தலைமேல் வைத்தார்:

அப்பருக்குத் தாம் சமணசமயம் சார்ந்ததனால் உண்டாய அருவருப்பு, திருநல்லூரில் பெருமான் திருவடி சூட்டியபிறகே நீங்கி யது. இதன் பிறகு அருவருப்பாய குறிப்புக் காணப் பெறவில்லை. ஊன்றி உணர்வோர் இக்கருத்தை நன்கறிவர். புறச்சமயம் சார்ந்தத னால் தமக்கு உண்டாய அருவருப்பைப் போக்கவே தில்லைத் திரு வீதியில் அங்கப்பிரதட்சணம் செய்தார். திருத்தூங்கானை மாடத்தில், "மின்னாரும் மூவிலைச்சூலம் என்மேல் பொறி" (தி.4 ப.109 பா.1) என வேண்டி, சூலக்குறியும் இடபக்குறியும் பெற்றார். திருச்சத்தி முற்றத்தில், "பூவார் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை" (தி.4 ப.96 பா.1) என வேண்டினார். அவ்வேண்டுகோளைப் பெருமான் திருநல் லூரில் நிறைவு செய்தருளினார். "இனமலர்கள் போதவிழ்ந்து மது வாய்ப்பில்கி நனைந்தனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே" (தி.6 ப.14 பா.1) என்பது அப்பர் அருள்வாக்கு. இப்பாடலின் முன்பகுதியே நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் என்பது. பெருமானின் பெருமையையும் தமது சிறுமையையும் நினைத்தால் மனம் இயல்பாகவே உருகத்தான் செய்யும். அவ்வநு பவம் அப்பருக்கு வாய்த்தது. அதனை அவர்தம் அருள்வாக்கு நமக் கும் புலப்படுத்துகிறது. நையவைத்தார் என்பதற்குத் துன்புற வைத்தார் என்றும், அதனால் மனப்பக்குவம் அடைந்த போது தீவினைகளை நீங்குமாறு செய்தார் பெருமான் என்றும் கொள்வர். ஆனால் இத் தொடருக்கு அருணைவடிவேலனார், மனம் மேலும் இளக வைத்தார் என்று கூறி, தற்போதம் கெட வைத்தார் என்பார்.

பத்தாம் அடியார்:

திருக்கருகாவூர்த் திருத்தாண்டகப் பதிகம், "குருகரம் வயிரமாம்" (தி.6 ப.15 பா.1) எனத் தொடங்குவது. முதல்பாடல் மூன்றாம் அடியில், "உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்" என்கிறார். நாவிற்குள் உடனாயிருந்து உதவும் தன்மையை இதில் புலப் படுத்துகிறார். இரண்டாம் பாடல் இரண்டாம் அடியில் "பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம்" என்கிறார். இதற்குப் பத்து இலக்க ணங்களையுடைய அடியார் என்பது பொருள். அவற்றுள் அக இலக்க ணம் பத்தையும் உபதேச காண்டம் கூறுகிறது. அவை 1. கண்டம் விம்மல், 2. நாத்தழுதழுத்தல், 3. நகைமுகம் காட்டல், 4. உடல் நடுங்கல், 5. மயிர்சிலிர்த்தல், 6. வியர்த்தல், 7. சொல்இன்மை, 8. வசம் அழிதல், 9. கண்ணீர் அரும்பல், 10. வாய்விட்டழைத்தல் என்பனவாம். புற இலக்கணம் பத்து. அவை விபூதியணிதல், உருத்திராக்கம் அணிதல் முத லியனவாம். ஏழாம் பாடல் முதலடியில், "ஆதிரை நாளானாம்" என இறைவனை அறிமுகப்படுத்துகிறார். ஒன்பதாம் பாடல் மூன்றாம் அடியில், "எட்டுருவ மூர்த்தியாம் எண்தோளானாம், என் உச்சிமேலானாம் எம்பிரானாம்" என்று அருளியுள்ளார். பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், உயிர் என்பன இறைவன் எழுந்தருளும் எட்டு உருவங்களாம். என் உச்சிமேலான் என்பது, தலைக்குமேல் 12 அங்குல அளவை துவாதசாந்தம் என்பர். அங்குதான் இறைவன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இதைப் பல இடங்களிலும் குறிக் கின்றார். "மனத்தகத்தான்" (தி.6 ப.8 பா.5) எனத் தொடங்கும் திருக் காளத்தித் திருத்தாண்டகத்தில் தலைமேலான் என்று குறித்திருப்பதும் இக்கருத்துப் பற்றியதே. எம்பிரான் என்பதற்கு நமக்குப் பிரியமான வன் என்பது பொருள். எனவே நமக்குப் பிரியமானவனே நமக்குத் தலைவனாகவும் இருப்பது தானே பொருத்தமானது. இதில் தலைவன் இலக்கணம் கூறுவதும் காண்க.

வேத சிவாகமங்கள்:

வேதசிவாகமங்கள் இறைவனால் அருளிச் செய்யப் பெற் றவை உலகியல் பொது தர்மங்களைப் போதிப்பது வேதம். ஆன்மிகச் சிறப்பியல்புகளை உபதேசிப்பது சிவாகமம். இறைவன் நூல், தந்திர கலை, மந்திர கலை, உபதேச கலை என மூன்றாய்த் திகழும்.

தந்திர கலை :

தந்திர கலை என்பது கர்ம காண்டம் எனப் பெறும். நாம் நாள்தோறும் செய்ய வேண்டிய நித்திய கர்மாநுட்டானங்களையும், ஏதேனும் பயன் கருதிச் செய்யப் பெறும் சிறப்புக் கர்மாக்களையும் இது தெரிவிப்பது.

மந்திர கலை:

மந்திர கலை என்பது உபாசனா காண்டம் எனவும் பேசப் பெறும். கர்மகாண்டத்தில் சொல்லப் பெற்ற கர்மாக்களை மேற் கொண்டு செய்யும் செயல்முறைகளை இது கூறுவது.

உபதேச கலை:

உபதேச கலை என்பது ஞானகாண்டம் எனவும் பேசப் பெறும். தலைவனாகிய இறைவனது இயல்புகளையும், அவனது அடிமை களாகிய உயிர்களின் இயல்புகளையும் அவனது உடைமைகளாகிய உலகு, உடல், மனம் முதலிய உருவங்களின் (தத்துவங்களின்) இயல்புகளையும் இது தெரித்துணர்த்துவது. தந்திர கலையாகிய கர்மகாண்டத்திலேயே மந்திரகலையாகிய உபாசனா காண்டத்தையும் அடக்கிக் கர்மகாண்டம் எனவும், உபதேச கலையை ஞானகாண்டம் எனவும் கூறுவர்.

மந்திரமும் தந்திரமும் ஆனார்:

மேற்கூறிய இருகாண்டத்துள், கர்மகாண்டத்தையே, "மந்திர மும் தந்திரமும் ஆனார் போலும்" (தி.6 ப.16 பா.1) எனத் திரு இடைமருதூர்த் திருத்தாண்டகம், சூலப்படையுடையார் என்ற பதிக முதல் பாடலில் குறிப்பிட்டாரேனும், உபதேச கலையாகிய ஞானகாண் டத்தையும் இதனுள் அடக்கிக்கூறும் கருத்தினரே அப்பரடிகள். இக்கருத்தைத் தருமை ஆதீனம் பத்தாவது குருமூர்த்திகளாகிய சிவஞான தேசிக சுவாமிகள், தாம் அருளிய தட்சிணாமூர்த்தி திருவருட்பாவில், "தந்திரகலை அறிவனோ, மந்திரகலை அறிவனோ, சாரும் உபதேச கலையில் தந்த கைலாச பாரம்பரியமாக வரு சம்ப்ரதாயம் அறிவனோ" என்பதனாலும், கர்மகாண்டம், ஞான காண்டம் என்னும் இரண்டையும் அறிவிப்பதே அப்பர் கருத்து என்பதைத் தெளியலாம்.

ஐவகையால் நினைவார்:

ஐவகையாவன, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலை இயற்றும் ஆற்றலைக் குறிக்கும். இவ்வைகை ஆற்றல் ஒருங்கு நிற்குமிடத்து ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து திருமுகங் களாய் நிற்கும். இவை பிரிந்து நிற்குமிடத்து மனோன்மனி உடனாய சதாசிவமாய். மகேஸ்வரி உடனாகிய மகேசுவரராய், உமை உடனா கிய உருத்திரராய், இலக்குமி உடனாகிய திருமாலாய், சரசுவதி உடனாகிய பிரமனாய் நின்றருள் செய்வர். ஈசானம் - மேல்நோக்கிய முகம். தத்புருஷம் - கிழக்கு முகம். அகோரம் - தெற்கு முகம், வாம தேவம் - வடக்கு முகம், சத்தியோசரதம் - மேற்கு முகம். இக் கருத்தையே திருப்பூவணப் பதிகமாகிய, "வடியேறு திரிசூலம்" (தி.6 ப.18 பா.1) எனத் தொடங்கும் திருத்தாண்டகப் பதிகம் மூன்றாம் பாடல் மூன்றாம் அடியில் ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும் என்று அருளியுள்ளார்.

வைகைத் திருக்கோட்டில் நின்ற திறம்:

இப்பதிகம், ஒன்பதாம் பாடல், இரண்டாம் மூன்றாம் அடிகளில், "மணியார் வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமும் - தோன்றும்" (தி.6 ப.18 பா.9) என்றருளியுள்ளார். இது திருவிளையாடற் புராணம், மண்சுமந்த படலத்தில் மதுரைப் பெருமான் வந்திக் காகக் கரையடைக்க வந்த வரலாற்றைக் குறிப்பதாகக் கொள்வர். இப்படியாயின் மணிவாசகர் காலம் முற்பட்டதாகிறது. இது சிந்தனைக்குரியதே. பத்தாம் பாடலில், "ஆங்கணைந்த சண்டிக் கும் அருளி அன்று, தன்முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்" எனச் சண்டீசர் வரலாறு பேசப்படுவதும் காணலாம்.

முன்னே முளைத்தான்:

"முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி" (தி.6 ப.19 பா.1) என்பது அப்ப மூர்த்திகளின் ஆலவாய்த் திருத்தாண்டகத்தின் முதல் பாடலின் முதல் அடி. இதற்குப் பலரும் பலவாறாகப் பொருள் கண்டுள்ளனர். உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் தோன்றுதற்குப் பெருமானே நிமித்தகாரணன். ஆதலின் எல்லார்க்கும் முன்னே தோன்றி நின்றருளினார் என்றும், ஏனைய தலங்களில் உள்ள இலிங்க மூர்த்திகட்கெலாம் முன்னே தோன்றி முளைத்த சுயம்புமூர்த்தி என்றும், முதலில் தோன்றிய பழைமை வாய்ந்த இலிங்கமூர்த்தி என்றும் குறிப்பிடுகின்றனர்.

பரஞ்சோதி முனிவர் கருத்து:

திருவிளையாடற் புராணம் அருளிய பரஞ்சோதி முனிவர் இதுபற்றி என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். தடாதகைப் பிராட்டியார் திருமணம் நிறைவெய்தியது. எல்லோரும் உணவரந்திச் செல்க என்து இறையாணை. எல்லோரும் உணவருந்திச் சென்றனர். பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாத முனிவரும், அம்பலத்துளாடும் பரஞ்சுடர் நடனங் கண்டே நாங்கள் உணவு கொள்வது நியமம் என்றனர். அக்குவத்தை இங்கு நாம் செய்கிறோம், கண்டு தரிசிக்க என்றார் பெருமான். மேலும் உலகமாகிய விராட புருஷனுக்கு இதயமாயிருப்பது சிதம்பரம். இம்மதுரையோ துவாதசாந்தத் தலமா யிருப்பது என்று சொல்ல, ஏனைய மூலாதாரம் முதலிய தலங்களையும் அருள் என்றனர் முனிவர்கள்.

மூலாதாரத் தலங்கள்:

திருவாரூர் மூலாதாரத் தலம். திருவானைக்கா சுவாதிட்டா னத் தலம். திருவண்ணாமலை மணிபூரகத் தலம். சிதம்பரம் இருதயத் தலம். திருக்காளத்தி கண்டத் தலம். காசி புருவமத்தியத் தலம். திருக் கயிலாயம் பிரமந்திரத் தலம். மதுரை - துவாதசாந்தத் தலம். இத்தலம் எல்லாத் தலங்களினும் அதிகச் சிறப்பு வாய்ந்தது. எதனால் என்னின் முன்னர்த்தோன்றிய முறையால் என்று கூறிப் பெருமான் இருமுனிவ ரோடும் ஆலவாய்க் கோயில் சேர்ந்தார். முன்னர்த்தோன்றியது துவாதசாந்தமாகலின், "முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி" (தி.6 ப.19 பா.1) என அருள் ஞானியாகிய அப்பரடிகள் அருளிச் செய்தார். இதனால்தான் எல்லார்க்கும் முன்னே தோன்றி என்றருளினார். எல்லோரது தலைக்குமேல் துவாதசாந்தத்தலம் இருப் பது உண்மையாகலின் இங்ஙனம் கூறினார்.

மனித உடம்பில் ஆறாதாரம்:

இனி, மனித உடலிலும் இந்த ஆறு ஆதாரத் தலங்களையும் சிந்தித்தாலே இக்கருத்து இனிது விளங்கும். அதனையும் காண்போம். மனித உடலில் மூலாதாரம் என்பது எருவாய் கருவாய்க்கு இடைப் பட்ட இடம். இதைத்தான் மண்தலமாகிய திருவாரூர் என்பர். சுவாதிட்டானம் என்பது அடிவயிற்றுப் பகுதி. இதைத்தான் நீர்த் தலமாகிய திருவானைக்கா என்பர். மணிபூரகம் என்பது கொப்பூழ்ப் பகுதி. இதனைத்தான் நெருப்புத் தலமாகிய அண்ணாமலை என்பர். அனாகதம் என்பது இதயத்தானம். இதைத்தான் ஆகாசத் தலமாகிய சிதம்பரம் என்பர். விசுத்தி என்பது (கழுத்து), கண்டத்தைக் குறிக்கும். இதைக் காற்றுத் தலமாகிய திருக்காளத்தி என்பர். ஆக்ஞை - ஆணையிடுதல். இதுவே புருவ மத்தியமாகும். இது காசித்தலம் என்பர். ஆறாதாரத்திற்கு மேல் ஏழாவது தானம் தலையின் உச்சி பிரமந்திரம் எனப் பேசப் பெறும். இதுவரை ஆதாரத் தலம் என்பர்.

நிராதாரத் தலம்:

இதற்கு மேல் பற்றுக்கோடு இன்மையின் பன்னிரண்டங்குலம் வரை நிராதாரத்துவம் என்பர். இதையே துவாதசாந்தத் தலம் என்பர். இதற்குமேல் உள்ள இடம் மீதானம். எல்லாவற்றிற்கும் மேலான இடம். முதன்மையான இடம். இங்குதான் தத்துவங்கடந்த தத்துவாதீத னாகிய இறைவன் அம்மையோடு அப்பனாகி எழுந்தருளியுள்ளான். எனவே இங்கு நிகழ்த்துகின்ற நடனக் கோலத்தைத் தரிசித்துச் செல்லுமாறு, பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு வெள்ளியம் பலக் கூத்தன் கட்டளை இட்டான். அவ்வாறே தரிசித்தேகினர் முனிவர் கள். இக்கருத்தே, "முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி" (தி.6 ப.19 பா.1) என்பதற்கு உண்மைப் பொருள் எல்லோரும் சிந்தித்துச் சிறப்புறுக. இதே கருத்தை. இப்பதிகத்தின் பத்தாவது பாடலின் முதல் இரண்டடிகளில் அப்பர் குறிப்பிட்டுள்ளமை கண்டு மகிழத்தக்கது. "மலையானை மாமேரு மன்னி னானை, வளர்புன் சடையானை வானோர் தங்கள், தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித் திருந்தானை" (தி.6 ப.19 பா.10) என்பது அப்பாடற்பகுதி. மேலும் ஆறாதாரத் தலங்களையும் அவற்றுள் துவாத சாந்தத் தலத்தின் சிறப்பினையும் கூறும் திருவிளையாடல் புராணம் - வெள்ளியம்பலக் கூத்தாடிய படலப் பாடல் இரண்டனையும் கண்டு மகிழ்வோம்.

திருவளர் ஆரூர் மூலம் திருவானைக் காவே குய்யம்

மருவளர் பொழில்சூழ் அண்ணா மலைமணி பூரம், நீவிர்

இருவரும் கண்ட மன்றம் இதயமாம், திருக்கா ளத்தி,

பொருவரும் கண்ட மாகும் புருவமத் தியமாம் காசி.

பிறைதவழ் கயிலைக் குன்றம் பிரமரந் திரமாம், வேதம்

அறைதரும் துவாத சாந்தம் மதுரை, ஈது அதிகம், எந்த

முறையினால் என்னின்? முன்னர்த் தோன்றிய முறையால் என்றுஅக்

கறையறு தவத்தரோடு கவுரியன் கோயில் புக்கான்.

- திருவிளை. புரா. வெள்ளி ப.6, 7

குலம்கொடுத்துக் கோள் நீக்கவல்லான்:

"ஆதிக்கண் நான்முகத்தில்" என்று தொடங்கும் திருநள்ளாறு திருத்தாண்டகப் பதிகத்தின் ஆறாம் பாடலில், இறைவன் குலம் கொடுத்துக் கோள்நீக்க வல்லான் என்றும், தயாமூலதர்மமென்னும் தத்துவத்தின் வழிநின்று, தாழ்ந்தோரை உயர்த்துகின்றான் என்றும், இரண்டு தர்மங்களைச் சொல்கிறார். அழுக்கைச் சேர்த்து அழுக்கைப் போக்குவதுபோல், குலத்தைக் கொடுத்துத்தான் குலத்தைக் கெடுக்கிறான் இறைவன். கோள் நீக்கவல்லான் என்றால் குற்றத்தைப் போக்க வல்லான் என்பது பொருளாகிறது.

தயையே மூலதர்மம்:

தயை என்பது கருணை அல்லது அருள் எனப் பொருள்படும். இறைவனது எண்குணங்களில் பேரருளாளன் என்பது ஒன்று. அவன் பெருங்கருணையால்தான் இவ்வுலகத்தைப் படைத்து காத்து, அழித்து, மறைத்து, அருளி ஐந்தொழில் புரிகின்றான். இவ்வைந்தொழிலால் உயிர்கள் பலவகையிலும் படிப்படியாக வளர்ந்து வருகின்றன. அவன் அருள் இன்றேல் ஐந்தொழில் இல்லை. ஐந்தொழில் இன்றேல் உயிர் களுக்கு ஈடேற்றம் இல்லை.

காரிட்ட ஆணவக் கரு அறையில், கண்ணிலாக் குழந்தை யைப் போல், கட்டுண்டு செயலற்றுக் கிடக்கும் உயிர்களை, அருட் பார்வையால் பிறவிக்குக் கொணர்ந்து, உடல் முதலிய கருவி கரணங்களைக் கொடுத்து, அறிவுபெருகச் செய்து நல்லது கெடுதல் களை அறியச் செய்து, காலப்போக்கில் நல்லதை நாடவும், அல்தை விடவும் செய்து, உயிர்களை உயர்த்துகிறான். தாழ்ந்த உயிர்களை உயர்த்துதற்கே, பலகோடி பிறவிகளை உயிர்கட்கு அளித்து, படிப் படியாக உயர்த்தித் தன்னிலையை மன் உயிர்கள் சாரும்படி1 செய் கிறான். இது இறைவனின் பேரருள் வெளிப்பாடன்றோ இவ்விரு கருத்துக்களும் அமைந்துள்ள பாடல் காண்க. குலம்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்

குலவரையின் மடப்பாவை யிடப்பா லானை

மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட

மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்

சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந்

தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்

நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த வாறே. (தி.6 ப.20 பா.6)

இதே பதிகம், பத்தாம் பாடலிறுதியில், தகுதியுடைய உயிர் களின் மனத்தில் இறைவன் என்றும் நிலைபெற்று விளங்குகிறான் என்பதை, மறவாதார் மனத்தென்றும் மன்னினானை என்று குறிப்பிட் டுள்ளமையும் அறிந்து மகிழத் தக்கது.

நரகம் சாராமல் காப்பான்:

நரகம் என்பது துன்ப உலகம். அதில் போய் விழாமல் காப் பவன் இறைவன். எப்படிக் காக்கின்றான்? மக்களை நன்னெறிப் படுத்துவதால் காக்கின்றான். இதனைத் திருநாகைக்காரோணத் தாண்டகப் பகுதியில் தெளிவிக்கிறார் அப்பர். "தோல்நரகம் நன்னெறி யால் தூர்ப்பான் தன்னை" (தி.6 ப.22 பா.9) என்பது அப்பாடல் பகுதி. இப்பாடல் தலைப்பு "சொல்லார்ந்த" என்பது.

வேண்டுவார் வேண்டுவதே ஈவான்:

மக்களின் வேண்டுகோள், அவரவர் தரத்திற்கு ஏற்ப, பல தரப்படும் அத்தனை மக்களையும், ஏனைய உயிர்களையும், அதனதன், தன்மை - தரத்திற்கேற்ப, வேண்டியதை வேண்டியாங்குக் கொடுத்தே அவ்வவ்வுயிர்களை ஈடேற்றம் செய்ய வேண்டும். அதனைத் திருமறைக்காட்டில் உறைகின்ற ஈசன் வழங்குகிறான் என்கிறார் அப்பர். அப்பாடல் பகுதி காண்க. "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" (தி.6 ப.23 பா.1) இப்பகுதியின் பாடல் தலைப்பு "தூண்டு சுடரனைய சோதி" என்பது.

நிரூபியாய் ரூபியுமாய் நின்றான்:

இறைவன் யாதொரு வடிவமும் இல்லாதவன். இது அவனது உண்மைநிலை. ஆனால் உலகத்தை நடத்துவதற்கு மூன்று வடிவம் கொள்கிறான். 1. அருவம்: இது ஆகாயம் போன்றது. இதனைத் தில்லையில் உள்ள இரகசியம் நமக்கு நன்கு உணர்த்தும். 2. உருவம்: இது மனித உருவம் போன்றது. தில்லையில் நடராசப் பெருமான் திருவுரு இதனைத் தெளிவிக்கும். 3 அருவுருவம்: அருவமும் இன்றி, உருவமும் இன்றி, தத்துவம் நிறைந்த அடையாளமாய்த் திகழ்வது. தில்லையில் சிவலிங்க வடிவாய் உள்ளது. வானக்கவிவும், மனிதத் தலையும் இத்தத்துவத்தை இனிதே விளக்கும். உருவம் அற்றநிலையே இறைவனுக்கு உண்மைநிலை என்பதை நமது ஆதிகுருமூர்த்திகள், தமது ஆசாரியரைச் சிவமாக வைத்து அருளிய சிவபோகசாரப் பாடலால் (பா.2) அறிந்து இன்புறத்தக்கது அப்பாடல்.

அருவும் உருவும் அருவுருவும் அல்லா

ஒருவன் உயிர்க்குயிராய் ஓங்கித் - திருவார்

கமலைவரு ஞானப்ர காசனென வந்தே

அமலபதந் தந்தெனையாண் டான்.

அப்பர் கூறும் அப்பாடல் பகுதி திருமறைக்காட்டுத் திருத்தாண்டகம் "சிலந்திக்கருள் முன்னம்" (தி.6 ப.23 பா.3) எனத் தொடங்குவது. அதன் மூன்றாம் அடியில் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் என அறிவிக்கிறது. நிரூபி - உருஅற்றன். ரூபி - அருவம், உருவம். அருவுருவம் கொள்பவன்.

யோகநெறித் தியாகேசன்:

அப்பர் சுவாமிகள் அருளிய திருவாரூர்த் திருத்தாண்டகம் யோகநெறியை உணர்த்தும் சிறப்புடையது. ஆரூர் மூலாதார கே்ஷத்திரம் என்பதும், சுந்தரருக்கு யோகநெறி அருளியது என்பதும் சிந்திக்கத்தக்கது. யோக மார்க்கத்தில் இறைவனை அடைந்துய்ந்தவர் சுந்தரர். இவர் வரலாற்றில் மிகுந்த இயல்புடையது ஆரூர். இது, யோகநெறி காட்டும் தலமாக இலங்குவதில் வியப்பில்லை. அதனால் அப்பர் அடிகள், "உயிராவணம் இருந்து உற்றுநோக்கி" (தி.6 ப.25 பா.1) என்ற இத்தலத் திருத்தாண்டகத்தில் யோக நெறியினை விளக்கி அருளுகிறார். மங்கையோடு இருந்தே யோகு செய்யும் அம்மணா ளனை, உயிர் எங்ஙனம் ஒன்றியிருந்து வழிபட வேண்டும் என்று இதில் கூறுகிறார். உயிர்க்காற்றை அடக்கி உற்றுநோக்கி, உள்ளம் எனும் கிழியில் இறைவனின் திருவுருவத்தை எழுதி, அதன் முன்பு உயிரையே ஆவணம் செய்து தந்தால், அஃதாவது மீளா அடிமை உனக்கு என ஓலை எழுதித் தந்தால், தன்னை உணரும் சிறப்புடை யாரோடு இணைந்து அருளுவன் இறைவன் என்பது கருத்து. ஆயிரம் கொம்புகளைக் கொண்ட யானையாகிய அயிராவணத்தில் ஏறாது, ஆனேறு ஏறி, அமரர்நாடு ஆளாது ஆரூர் ஆண்ட அயிராம்வணமாக இலங்கும் இறைவனே! என் அம்மானே! நின் அருட்கண் துணை யின்றி யார் எது செய்ய வல்லார்? என்று கேட்டு அருளுகின்றார். இப்பாடலில் நுட்பமான பல கருத்துக்கள் உள்ளன. உயிரை அடிமை ஓலை எழுதி இறைவனிடத்துத் தருதல் என்றால், தன்னை - தன் முனைப்பை - தன் செயலை அறவே மறந்து, துறந்து இனி எல்லாம் நீயே என்று சரண் புகுதல். இதனை மாணிக்கவாசகர் தன் அநுபவமாகத் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில், இறைவன் குருநாதராக இருந்து காட்சி தந்த பொழுது உயிரை அர்ப்பணித்ததாகக் கூறுகிறார். "அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லா மும், குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டி லையோ - இன்று ஓர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே, நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே" (தி.8 குழைத். பா.7) என்று அருளுகின்றார். உயிர், உடல், உடைமை அனைத்தையும் ஆண்டவன் கொண்டான் என்கிறார். ஆவி, உடல், உடைமை எல்லாம் என்பதில்லாமல், எல்லாமும் என்று முற்றும்மை கொடுத்துக் கூறியிருப்பதனால், இனி என்னிடம் ஏதும் இல்லை என்பது பொருளாயிற்று. இங்ஙனம் அர்ப்பணித்தலே, உயிர் ஆவணம் செய்து உன்கைத் தருதல் என்பது. சுந்தரரும் திருவாரூர்த் தேவாரத்தில், "மீளா அடிமை உமக்கே ஆளாய்" (தி.7 ப.95 பா.1) என்று அருளியிருப்பதும் இக்கருத்தையே உணர்த்துகிறது.

ஈண்டு உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி என்பது அடியார்களுடன் உடனாய் இருந்து அருளுகின்றான் என்னும் கருத்துடையது. இதுவே யோகநெறி ஆகும். ஒட்டுதல் யோகம் ஆம். "ஏகபோகமாய் நீயும் நானுமாய்" என்று அருணகிரிநாதர் குறிப்பது ஈண்டு நினையத் தகும். அடுத்து இந்தப்பாடலில் அயிராம்வணமே என் அம்மானே என்பதில் அயிராம்வணமே என்றதற்குப் பொருள் நுண்மணலால் ஆகிய வடிவத்தையுடையவனே என்பதாகும். அயிர் என்னும் சொல்லிற்கு நுண்மணல் என்பது பொருள். அந்த நுண்மணலையே உண்டு வாழும் மீன்தான் அயிரை மீன். எனவே நுண் மணலால் ஆகிய திருவுருவத்தையுடையவனே (புற்றிடங் கொண்டவனே) என்பார். அயிராம்வண்ணமே என்றருளினார். இக்கருத்துக்களையுடைய பாடல் காண்க.

உயிரா வணம்இருந்து உற்றுநோக்கி

உள்ளக் கிழியில் உருஎழுதி

உயிரா வணம்செய்திட்டு உன்கைத் தந்தால்

உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி

அயிரா வணம்ஏறாது ஆனேறு ஏறி

அமரர்நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட

அயிரா வணமே என் அம்மானே நின்

அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே. - தி.6 ப.25 பா.1

என்பது அப்பாடல். அயிராவணம் ஏறாது, ஆனேறு ஏறி, அமரர் நாடு ஆளாது, ஆரூர் ஆண்ட இறைவன், என்பதால் அவன் தனக்குரிய வாய்ப்பு வசதிகளையெல்லாம் விட்டுவிட்டு, மன்னுயிர்களை ஈடேற்றம் செய்யும் பொருட்டு இந்த மண்ணுலகுக்கு எளிவந்த கருணாமூர்த்தியாக இறங்கி வந்தான் என்று போற்றுகிறார்.

ஏக்காதார் மனத்து இருள்:

இறைவனை இரவும் பகலும் எப்பொழுதும் நாவாரத் துதித்து ஏத்தும் அடியார் உள்ளத்து அவன் ஒளிவளர் விளக்காக ஒளிவிடு வான். அல்லாதார் உள்ளத்து இருளாயிருப்பான். இதனைத் திரு வாரூர் அறநெறித் திருத்தாண்டகம், "பகலவன்தன்" (தி6 ப.33 பா.10) என்ற பாடலில், "ஏத்தாதார் மனத்தகத்துள் இருளானானை" என்றும், "பொருளியல் நல்" (தி.6 ப.33 பா.7) என்ற பாடலில், "மருளியலும் சிந்தையார்க்கு மருந்துதன்னை" என்றும் அருளியிருப்பதால் தெளிய லாம். திருவாரூர்அரநெறி என்பது, திருவாரூர் திருமூலட்டானார் சந்நிதிக்கு எதிரில், வலப்பக்கம் மேற்கு நோக்கிய சந்நிதியாகத் திகழ்வது. நமிநந்தி அடிகள் நாயனார், நீரால் திருவிளக்கு இட்ட திருத்தலம். செருத்துணைநாயனார், மலர்தொடுக்கும் இடத்தின் கீழ் இருந்த மலரை முகந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கரிந் ததும் கழற்சிங்க நாயனார் இதை அறிந்து மலரை எடுத்த மனைவியின் கையைத் தடிந்ததுமாகிய தலம் என்பதும் அறியத்தக்கது.

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாள்:

திருவாரூர் மிகமிகப் பழமைவாய்ந்த திருத்தலம். இதனைப் பல புராணக் குறிப்புகள் கொண்டும், வரலாற்றுக் குறிப்புக்கள் கொண்டும் விளக்குகிறார் அப்பர். ஆரூர்ப் பெருமானே நீ ஒருவ னாக, ஏகனாக இருந்தபோதே இக்கோயிலை இடமாகக் கொண்ட னையா? ஓருருவே மூவுருமாய் அயன், அரி, அரன் எனப் படைத்து, காத்து, அழிக்கத் தொடங்கிய அந்நாளோ? மார்க்கண்டேயர் மீது பாசம் வீசிய நாளில் கோபித்துக் காலனைக் காய்ந்த நாளோ? காமனை ஒரு காலத்தில் நெற்றிக் கண்ணால் விழித்தழித்தனையே? அந் நாளோ? பஞ்சபூதங்களிலும் கலந்திருந்து மண் முதல் விண் முடிய ஐம்பூதங்களையும் படைத்த நாளோ? மான் கன்றினைக் கையிலே ஏந்திய பெருமானே! ஒப்பற்ற உமாதேவி உனது இடப்பாகத்தைத் திருவினளாய்ச் சேர்ந்தாளே அந்த நாளோ? அதற்கு முன்போ பின்போ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாள்? என்று வினா வடிவிலேயே பதிகம் (தி.6 ப.34) முழுவதும் பாடியுள்ளார்.

ஓராதார் உள்ளத்தில் நில்லார்:

தினையாதவர் உள்ளத்தில் மறைந்திருப்பானே தவிர நிறைந்திருக்க மாட்டான் இறைவன். உள்ளுருகி நிற்பார் சிந்தையில் தெளிவாயிருப்பவன். இதனை, "ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே, உள்ளூறும் அன்பர் மனத்தார் தாமே" (தி.6 ப.36 பா.8) என்றும் திருப்பழனத் தாண்டகப் பகுதியில் அறிவிக்கிறார். மேலும் விடை யேறி என்னும் தாண்டகத்தில் சப்தஸ்தானத் தலங்களில் ஐந்து தலங் களைக் குறிப்பிட்டு உள்ளமை அறிந்து மகிழத் தக்கது.

ஏழூர் விழா:

விடைஏறி வேண்டுலகத் திருப்பார் தாமே

விரிகதிரோன் சோற்றுத் துறையார்1 தாமே

புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே

பூந்துருத்தி2 நெய்த்தானம்3 மேயார் தாமே

அடைவே புனல்சூழ் ஐயாற்றார்4 தாமே

அரக்கனையும் ஆற்றல் அழித்தார் தாமே

படையாப்பல் பூதம் உடையார் தாமே

பழன நகர்5 எம்பிரானார் தாமே. - தி.6 ப.36 பா.10

மேலே 1, 2, 3, 4, 5 எனக் குறியிட்டவற்றுடன், திருவேதிகுடி, திருக்கண்டியூர் என்னும இருதலங்களும் சேர்த்து சப்தஸ்தானத் தலங் கள் எனப் போற்றப்படுகிறது. திருவையாறு சித்திரைப் பெருவிழாவை அடுத்து நந்திகேஸ் வரர் திருக்கல்யாண ஊர்வலமாக, சப்தஸ்தான விழா நடைபெற்று வருகிறது. சித்திரைப் பெருவிழாவிற்கு முன்பே, பங்குனி மாதத்தில் திருநந்திதேவர் திருஅவதார விழா ஐயாற்றுக்கு அண்மையில் உள்ள அந்தணர்குறிச்சியிலும், திருமணவிழா திருமழபாடியிலும் திருமண ஊர்வல விழா சப்தஸ்தானங்களிலும் விழாவாகக் கொண்டாடப்படு கிறது. திருவையாறு, திருக்கயிலாயமாகப் போற்றப் பெறுவதால் அதை மையமாக வைத்து, ஆறு ஊர் சுவாமிகளும் திருவையாற்றுக்கு எழுந்தருளி ஐயாறப்பரும் அறம்வளர்த்த அம்மையும் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருள, ஏழூர் சுவாமிகளும் விசேட பல்லக்கில் உடன்வர நந்தியெம் பெருமான் விளாமிச்சைவேர்ப் பல்லக்கில் எழுந்தருள, தேவார பாராயணம், பஜனை கோஷ்டிகள் புடைசூழ வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இன்றும் நடைபெறுகிறது.

இன்பம் துன்பம் இல்லான்:

இறைவன் இன்பமே வடிவானவன். துன்பம் என்பது ஒரு சிறிதும் இல்லாதவன். இதனை வலிவலம் தாண்டகத்துள் ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பானான்காண், இன்பன்காண் துன்பங்கள் இல்லாதான் காண் (தி.6 ப.48 பா.3) என்ற அடியினால் தெளிவித்துள் ளார். திருக்கோகரணம், "பின்னு சடைமேல்" (தி.6 ப.49 பா.8) என்னும் தாண்டகத்து மூன்றாம் அடியில், "இன்னவுரு என்று அறிவொண்ணாதான்" என்று அருளியமை, உருவொன்றில்லா உத்தமத் திறத்தை எடுத்துக் காட்டுகிறது. பத்தாம் பாடல் மூன்றாம் அடியில், "பொய்யர் மனத்துப் புறம்பாவான் காண்" (தி.6 ப.49 பா.10) என்று இறைவனது தூய தன்மையை எடுத்தாள்கிறார்.

நன்னெறிக்கண் சேராதாரே:

எல்லோருக்கும் நல்லவனாகிய இறைவனைச் சேர்கின்றவர் கள் தீநெறி நீத்து நன்னெறி சேர்க்கின்றனர். அங்ஙனம் சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே, என்று இரங்குகிறார். இக்கருத்தைத் திருவீழிமிழலைப் பெருமானைத் தரிசிக்கிறபோது அருளிச் செய்துள்ளார். "போரானை" (தி.6 ப.50 பா.1) எனத்தொடங்கும் திருத்தாண்டகப் பதிகம் முழுவதிலும் ஈற்றடியில் "திருவீழிமிழலையா னைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே" என்று இரங்கி அருளியுள்ளார். இதனை உடன்பாட்டு வகையில் கூறியுள்ளார். பெரு மானைச் சேராதவர்கள் எல்லாம் நன்னெறிக்கண் சேராதாரே, என்று எதிர்மறை வகையாலும் அருளியுள்ளார். இக்கூற்று திருநாகேச்சுரம் "தாயவனை" (தி.6 ப.66 பா.1 - 10) எனத் தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தின் பாடல் முழுவதும் இறுதியில் திருநாகேச்சரத்துளானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே என்றருளியுள்ளமை கண்டு மகிழ்க.

அகச்சான்று:

திருவீழிமிழலைப் பதிகத்து மூன்றாம் பாடலில், "நேரிழை யைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றானை" (தி.6 ப.50 பா.3) என்று பெருமானின் தூய நிலையைப் புலப்படுத்தியுள்ளார். இதே கருத்தைத் திருஇசைப் பாவிலும், "மங்கையோடிருந்தே யோகுசெய் வானை" (தி.9 திருவிசை 13 பா.11) என்று அருளியுள்ளமை ஈண்டு சிந்தித்தற்குரியது. இதே பொருளில், "வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயானை" (தி.6 ப.50 பா.4) என வருவதும் காண்க. வஞ்சனை இங்கு ஐய உணர்வு. பெருமான் நமக்கு அருள் செய் வானோ செய்யானோ என்ற சந்தேகத்துடன் அஞ்செழுத்தை ஓதுவார் க்கு, வெகு தூரத்திற்கு அப்பால் இருப்பவன் பெருமான் என்பதைக் குறித்துள்ளமை கண்டு உண்மை உணர்வோமாக. மேலும் இப்பதிகத் துள் "வெஞ்சொற் சமண்சிறையில் என்னை மீட்டார்" என்றும், "எண்ணில் சமண் தீர்த்தென்ன ஆட்கொண்டான்காண்" என்றும் தமது வாழ்வியல் உண்மைகளை எடுத்துக் காட்டியுள்ளார்.

பாமாலை பாடப் பயில்வித்தான்:

ஞானசம்பந்தருடன் திருக்கோலக்கா வணங்கி விடைபெற்ற அப்பர், திருக்கருப்பறியலூர் முதலிய தலங்களை வணங்கப்போம் வழியில் திருப்புள்ளிருக்கு வேளூரைப் பணிந்து போற்றினார். போற் றிய திருத்தாண்டகப் பதிகமே, "ஆண்டானை அடியேனை" (தி.6 ப.54 பா.1) எனத் தொடங்குவது. அதில் மூன்றாம் பாடல், "பத்திமையால் பணிந்து அடியேன், தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில் வித்தானை" என்பதாகும். இதில், தன்னைப் பன்னாளும் பாமாலை பாடத் தனக்கு வைத்தியநாதப் பெருமான் பயிற்சி அளித்தார் என்று கூறுகிறார். இதே கருத்தையும் தொடரையும் திருமுதுகுன்றத் திருத்தாண்டகமாகிய "எத்திசையும் வானவர்கள்" (தி.6 ப. 68 பா.3) எனத் தொடங்கும் பாடலில் பத்தனாய்ப் பணிந்து அடியேன், தன் னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித்தானை என்று அருளியுள் ளமை கண்டு மகிழத்தக்கது. தன்னை என்பது இங்கே இறைவனைக் குறித்தது.

தன்னைப் போல் ஆக்கும் அருளாளன்:

பெரியோர், தாம் சொன்னதைக் கேட்டு நடக்கும் பிள்ளை யாக ஒருவன் இருப்பானாயின், தமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அவனுக்குச் சொல்லிக் கொடுத்துப் பயிற்சி அளித்து அவனைத் தன்னைப் போலாக்கவே கருதுவர். இந்த உணர்வு அப்பெரியோர் கட்கு எங்கிருந்து வந்தது? இறைவனிடமிருந்தே வந்தது. அப்பெரி யோரும் இறைவனையே நம்பித் தொழுததால், இறைவன் அவர்களை யும் தன்னைப் போலாக்கியுள்ளான். இதே நிலையில் அவர்களும் தமக்குக் கால்வழியாக வரும் நல் இளைஞர்களைத் தம்மைப் போலவே ஆக்க முயல்கின்றனர். இக்கருத்தை "இருளாய உள்ளத் தின்" (தி.6 ப.54 பா.4) என்ற பாடலில் இனிது விளக்குகிறார்.
இருளாய உள்ளம் - ஆணவ இருள் வேறு தான்வேறு என்றில் லாமல் அத்துவிதமாய்க் கலந்துள்ள உயிரை (உள்ளம் - உயிர், ஆன்மா) ஆணவ இருளிலிருந்து நீக்கி, இடரையும் அதற்கு முதலா கிய பாவத்தையும் கெடுத்து, அறிவில் ஏழையாகிய என்னை உய்யு மாறு, என் தெளிவில்லாத சிந்தையைத் தெளிவித்துத் தன்னைப்போல் என்னை ஆக்குவதற்கு சிவலோகமாகிய தனது உலகத்தை அறியுமாறு சிந்தை தந்த அருளாளன் வேளூர்ப் பெருமான். அவனைப் போற் றாதே பலநாள்கள் போக்கினேனே என்று இரங்குகிறார் அப்பாடற் பகுதி காண்க.

"இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி

இடர்பாவம் கெடுத்து ஏழையேனை உய்யத்

தெருளாத சிந்தைகளைத் தெருட்டித் தன்போல்

சிவலோக நெறியறியச் சிந்தை தந்த

அருளானை" -தி.6 ப.54 பா.4

வாராத செல்வம் வருவிப்பான்:

பேராயிரம் உடைய பெருமானை வானோர்கள் பயன் அடையப் பரவுகிறார்கள். அப்பெருமானைப் பிரிவிலாது - இடை யீடில்லாது வழிபடும் பக்தர்களுக்கு என்றும் யாவர்க்கும் கிடைக்காத பெருஞ்செல்வமாகிய வீடுபேற்றை இறைவன் அருள்கிறான். அவ் விடுதலையை நாம் பெறுதற்கு ஐந்தெழுத்தாகிய மந்திரத்தாலும் தந்திரமாகிய ஆகமங்களை அறியச் செய்வதாலும், மருந்தாகிய செபம், பூசை, தியானம் முதலியவற்றைச் செய்வதாலும் அறியாமை யாகிய ஆணவம் முதலிய நோய்களை நீக்கி வீடு அருள்கிறான்.
வாராத செல்வம் என்பது எவர்க்கும் எளிதில் கிடைக்கப் பெறாத மோட்சம். அஃதாவது வீடுபேறு, விடுதலை. இது கிடைத்தற்கு நம்மிடையே உள்ள அறியாமை நீங்க வேண்டும். இதனையே எவ ராலும் தீர்க்க முடியாத பிறவி நோயைத் தீர்த்தருள வல்லான் என்றருளினார். தீரா நோய் தீர்த்தருள வல்லான் என்றருளினார். தீராநோய் தீர்த்தருள வல்லான் என்பதால் துன்ப நீக்கத்தையும், வராத செல்வம் வருவிப்பான் என்றதால், இன்ப ஆக்கத்தையும் இப்பாடலி லேயே அப்பர் அருளியுள்ளார். இங்குள்ள இறைவன் பவரோக வைத்தியநாதர் என்னும் பெயருடையவர். பவம் - பிறப்பு. பிறவி நோயைத் தீர்ப்பவர். எனவே உடலில் வரும் நோயைத் தீர்ப்பவர் என்பது சொல்லத் தேவையில்லை அன்றோ!

சிந்தை புகுந்தாய் போற்றி:

திருக்கயிலாயக் காட்சியைத் திருவையாற்றில் கண்டபோது, "வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி" (தி.6 ப.55 பா.1) எனத் தொடங்கி மூன்று திருத்தாண்டகப் பதிகம் பாடிப் போற்றினார். இம்மூன்று திருப்பதிகங்களும் போற்றித் திருத்தாண்டகம் என்றே போற்றப்படுகின்றன. இவற்றுள் "வேற்றாகி" என்ற பதிகத்தில் 2ஆம் பாடலில், வெளியில் எங்கும் போகாமல் என் சிந்தையுள் புகுந்தாய் என்கிறார். "போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி" என்பது அத் தொடராகும். 7, 8ஆம் பாடல்களில், "என் சிந்தை நீங்கா இறைவா போற்றி" என்றருளி மகிழ்கிறார். 11ஆம் பாடலில், "பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி" என்று தம்மைப் பெருமான் திருவதிகை யில் சூலைகொடுத்து ஆண்டருளிய அன்றே என் சிந்தை புகுந்தான் என்பதை நினைத்து அருளியுள்ளார். அன்று முதல் இடையீடில்லாது இடையறாப் பேரன்புடன் பரமனை நினைந்தும் பாடியும் வரும் பண்பை உணர்த்துகிறது. இப்பாடலில் காணும் பண்டே என்ற குறிப்பு. அடியார் அடிமைத் திறத்தை, ஆண்டவனாகிய இறைவன் நன்கு அறிவான் என்பதை மூன்றாவது போற்றித் திருத்தாண்டகப் பதிக எட்டாம் பாடலில் குறிப்பிடுகிறார். "அடியார் அடிமை அறிவாய் போற்றி" என்பது அப்பகுதியாகும்.

தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றார்:

தன்னையே நம்பி வழிபடும் அடியவர்கள், மிகக் கற்றார் இல்லையாயினும், மிகக் கற்றவரினும் மேலாயநெறி நிற்கக் கற்பிக்கின் றார் கடவுள். இதனையே பல இடங்களிலும் சமயாசாரி யப் பெருமக்கள் அருளியுள்ளனர். அவற்றுள் சில இடங்களைக் குறிக்கலாம். திருவெண்ணியூர் திருத்தாண்டகப் பதிகம் முதல் பாடலிலேயே, "தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியினாரும்" என்றருளியுள்ளார் (தி.6 ப.59 பா.1). "துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னை" (தி.6 ப.19 பா.7) என்பது திருஆலவாய்த் திருத்தாண்டகம் ஏழாம் பாடல்.

கற்பகம்:

திருக்கற்குடிக் கற்பகத்தைக் காண்போம். கற்பகதரு நினைத் ததையெல்லாம் தரும் என்பர். கற்குடிப் பெருமான் கற்பகமாய் அருள் செய்பவன். அவன் "மெய்யானைப் பொய்யேதும் இல்லான் தன்னை" (தி.6 ப.60 பா.2) எனப் போற்றப்பெறுகிறார். இடரை எல்லாம் காத்தவன் என்கிறார். "பாரில் வாழ் உயிர்கட்கெல்லாம் கண்ணவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே" (தி.6 ப.60 பா.2) என்பது கற்குடிக் காட்சி. "பல்லாடுதலை சடைமேல்" என்னும் தாண்டகத்தில், "கல்லாடை புனைந்தருளும் காபாலியைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே" என்கிறார் (தி.6 ப.92 பா.2). இத்திருக்கழுக்குன்றத் தாண்டகப் பதிகத்தில் இரண்டே பாடல்கள்தான் உள்ளன. இரு பாடல்களிலும் கற்பக்தைக் கண்ணாரக் கண்டேன் என்றருள்கின்றார். "முவிலைநற்சூலம்" எனத் தொடங்கும் திருக் கஞ்சனூர்த் தாண்டகப் பதிகப் பத்துப் பாடல்களின் இறுதியிலும் "கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே" (தி.6 ப.90 பா.1-10) என்றருளியுள்ளமை கண்டு இன்புறத்தக்கது.

நடுதறியப்பர்:

திருவிளையாடற்புராணத்தில் விருத்தகுமாரபாலரான படல வரலாறுபோல், கன்றாப்பூரிலும் ஒரு வரலாறு வருகிறது. இத்தலத்தில் சைவப்பெண் ஒருத்தி வைணவக்குடியில் வாழ்க்கைப்பட்டாள். சிவபத்தியைக் காட்ட அவளுக்கு அவ்வீட்டில் இடமில்லை. மாட்டுத் தொழுவத்தில் கன்றுக்குட்டி கட்டும் முளைத்தறியையே சிவலிங்க மாகப் பாவித்து வழிபட்டு வந்தாள். வைணவக் கணவன் அது கண்டு பொறாது கோடரியால் அத்தறியைப் பிளக்க முயன்றான். அப்போது அத்தறியே சிவலிங்கமாய்க் காட்சி தந்தது. அதுமுதல் ஊர் கன்றாப் பூர் என்றும், பெருமான் நடுதறியப்பர் என்றும் போற்றப் பெறுகிறார். "மாதினையோர்" என்று தொடங்கும் பதிகம் முழுவதும் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், "கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே" (தி.6 ப.61) என்றருளியுள்ளார். முதல் பாடல் மூன்றாம் அடியில் வாதனை யால் என்பதை வாசனையால் என்று பொருள் கொள்ள வேண்டும்.

மனத்தூய்மையும், அன்பும், ஆசாரமும், நெறி தவறாமை யுமே வாழ்வின் இன்றியமையாமை என்பதை இப்பதிகம் எடுத்துக் காட்டுகிறது.

ஓங்காரம்:

அகர, உகர, மகரமே ஓங்காரம். ஓங்காரத்து உட்பொருளாயி ருப்பவனே பரம்பொருள். எல்லாக் கலைகளும் அவ் ஓங்காரத்துள்ளே இருந்துதான் வெளிப்படுகின்றன. அவ்வனைத்திற்கும் முதல்வனாயி ருப்பவனே பரம்பொருள். அவனன்றி ஓரணுவும் அசையாது. அவனே படைப்பவன், காப்பவன், அழிப்பவன், மறைப்பவன், அருள்பவன். இக்கருத்தை எல்லாம் உள்ளடக்கியதே ஓங்காரம். ஓம் என்னும் பிரணவம். இதன் உள்ளும் புறமுமாய் இருப்பவனே பரம்பொருள். இதனை, "ஒரு சுடராய் உலகேழும் ஆனான் கண்டாய். ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய்" (தி.6 ப.39 பா.10) என்றருள்கிறார் அப்பர். இது திருமழபாடித் தாண்டகத்தின் இறுதிப்பாடல். இதே கருத் தைத் திருவானைக்கா திருத்தாண்டகம், "முற்றாத வெண்திங்கள்" என்ற பாடலின் இரண்டாம் அடியில், "உற்றானைப் பல்லுயிர்க்கும் துணையானானை, ஓங்காரத்துட் பொருளை உலகமெல்லாம் பெற்றானைப்பின் இறக்கம் செய்வான் தன்னை" (தி.6 ப.63 பா.3) என்று அருளியுள்ளார். காஞ்சிபுரத் திருத்தாண்டகம் இரண்டாம் பதி கம் முதல் பாடல் முதல் அடியில், "உரித்தவன்காண் உணர்மெய்ஞ் ஞானம், விரித்தவன்காண்" (தி.6 ப.65 பா.1) என்றும், திருக்கீழ் வேளூர்த் திருத்தாண்டகம், "உளர்ஒளியை" எனத் தொடங்கும் பாடலில், "ஓங்காரத்து உட்பொருள்தான் ஆயினானை" (தி.6 ப.67 பா.7) என்றும், திருமாற் பேறு தாண்டகத்தில், "உற்றானைஉடல் தனக்கோர் உயிரானானை, ஓங்காரத்து ஒருவனை அங்கு உமையோர் பாகம், பெற்றானை" (தி.6 ப.80 பா.4) என்றும் அருளியுள்ளமை காண்க.

ஆலின் கீழ் அறம் உரைத்தான்:

ஆலின்கீழ் பெருமான் தட்சணாமூர்த்தியாய் எழுந்தருளி, சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமார் ஆகிய நால்வர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு உபதேசித்ததுடன் வேதம், ஆறங்கங்களும் உபதேசித்ததாக "உரித்தானை" என்னும் திருநாகேச்சரப் பாடலில் குறித்துள்ளார். இப்பாடற்பகுதி காண்க. "...தன்னடைந்தார் தம் வினை நோய் பாவமெல்லாம், அரித்தானை, ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறங்கம், வேதம், தெரித்தானைத் திருநாகேச்சரத்துளானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே" (தி.6 ப.66. பா.2) இதே பதிகத்துள் மூன்றாம் பாடலில், "காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் வாரானை மதிப்பவர்தம் மனத்துளானை" என்னும் இறைத் தத்துவம் பேசப் பெறுவதையும் காணலாம்.

மெய்யர்க்கு மெய்யன்:

இறைவன் தன்னை விரும்புவார்க்கு மெய்ப்பொருளாக இருந்து அருள் செய்பவன். இறைவனை விரும்பாதவரை அரும் பாவி என்கிறார். அப்பாவிகட்குப் பொய்ப் பொருளாகவே இருந்து வருபவன். இப்பாடல், "மெய்யானைத் தன்பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும்பாவியர்கட்கென்றும் பொய்யானை" (தி.6 ப.66 பா.5) என அறிவித்துள்ளார். அடுத்த பாடலில், "அறம்புரியாத் துரிசர் தம்மைத் துறந்தான்" என்றும், "தோத்திரங்கள் பலசொல்லி வானோர் ஏத்த, நிறைந்தானை" என்றும் அருளினார். அடுத்த பாடலில், "மறந் தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை" என்றும், "அஞ்செழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் சிறந்தானை" என்றும் அடுத்து, "ஏகம்பத்தில் உறைவானை ஒருவரும் ஈங்கறியாவண்ணம் தன் உள்ளத்துள்ளே ஒளித்துவைத்த சிறையானை" என்றும், "அறத்தில் நில்லாப் பிரமன்தன் சிரம் ஒன்றைக் கரம் ஒன்றினால் கொய்தானை" என்றும் பல தத்துவ உண்மைகளையும் புராண வரலாறுகளையும் இப்பதிகம் உணர்த்துவது காணலாம்.

சொற்பாவும் பொருள்:

சொல்லில் பரவியுள்ள பொருளை அறிந்து ஓதுவதே பெரும் பயன் நல்குவது. இதனையே மணிவாசகரும், சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வாரே செல்வர். இவரே சிவபுரம் சேரத் தக்கார். சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்த இருப்பாரும் இவரே (தி.8 சிவபுரா, வரி 95) என்று குறித்துள்ளார். இதைத்தான் திருக்கீழ் வேளூர்த் தாண்டகம், "சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளை வாங்காதானை" (தி.6 ப.67 பா.2) என்று குறிக்கின்றது. இப்பாடலில், பொருள் உணர்ந்து சொல்லாதார் உளத்திருளை நீக்கான், என்று எதிர்மறையாய்க் கூறியுள்ளார். பன் னிரு திருமுறைகளும் உரையுடன் வருதற்குக் காரணமாயிருந்த திரு முறைப்பாடல் இஃது என்பது குறிக்கத் தக்கது.

ஊன்கருவின் உள்நின்ற சோதி:

திருமுதுகுன்றத்தீசனை வணங்கினார் திருநாவுக்கரசர், முப் பொருள் உண்மை தெளியத் தோன்றியது. இக்கருத்தைத் திருமுதுகுன் றத் திருத்தாண்டகம், "ஊன்கருவின்" (தி.6 ப.68 பா.4) என்ற பாடலில் தெளிவிக்கிறார். ஊன் - உயிர் குடியிருக்கும் உடம்பு. கரு - உடம்பில் குடியிருக்கும் உயிர். சோதி - அவ்வுயிரில் ஒளியாய் உள்ள இறைவன். ஊன் என்பது பாசத்தையும், கரு என்பது உயிர்களையும், சோதியானை என்பது கடவுளையும் குறித்துள்ளன. அப்பாடற்பகுதி "ஊன்கருவின் உள்நின்ற சோதியானை, உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண்டானை" என்பதாம் திருஞானசம்பந்தரும் இத்திருமுது குன்றத் தேவாரமாகிய "விளையாத தோர்பரிசில் வருபசு, பாச, வேதனை, ஒண்தளை, ஆயின தவிரவ்வருள்தலைவன்" (தி.1 ப.12 பா.3) என்னும் பாடலால் முப்பொருள் உண்மையோடு, இருவினை, மாயையையும் குறித்துள்ளமை காண்க.

கோச்சோழர்:

முற்பிறவியில் சிலந்தியாயிருந்து வெண்ணாவல் மரத்தடிக் கீழ் வீற்றிருந்த பெருமான் மீது சருகு படாவண்ணம் தன் வாயின் நூலால் பந்தர் செய்த புண்ணியத்தால் மறுபிறவியில் சோழ மன்னரான கோச்செங்கட் சோழர் வரலாறு பெரிய புராணத்துள் காண்பது. சிலந்தியும், யானையும் முற்பிறவி உணர்ந்தவர்கள், முற்பிறவியிலும் இருவரும் பகையாயிருந்தவர்களே. இருவருள் சிலந்தி சோழ மன்ன ரானார். யானை கயிலையில் கணங்கட்குத் தலைவரானார். முற்பிறவி யில் மாலியவானே சிலந்தி புட்பதந்தனே யானை. சிலந்திக்கு அருள்செய்த திறத்தை, "பூச்சூழ்ந்த" என்னும் பாடலில், "சிலந்திக் கந்நாள் கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்" (தி. 6 ப. 75 பா.8) என்ற பகுதியில் போற்றி உள்ளமை காணலாம்.

நன்பாட்டுப் புலவன்:

திருவாலவாயப் பெருமான், ஆதிசைவ அந்தணனாகிய தருமிக்குப் பொற்கிழி அளித்த வரலாற்றை அப்பர் திருப்புத்தூர்த் திருத்தாண்டகத்தில் அருளியமை கண்டு மகிழத்தக்கது. அப்பாடற் பகுதி காண்க. "மின்காட்டும் கொடிமருங்குல் உமையாட்கு என்றும், விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண், நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி, நற்கனகக் கிழிதருமிக்கு அருளி னோன் காண்." (தி.6 ப.76 பா.3)

தோத்திரமும் சாத்திரமும்:

மெய்யறிவு முதிர்ந்த மெய்யன்பில் விளைவது தோத்திரம். மெய்யன்பு முதிர்ந்த மெய்யறிவில் விளைவது சாத்திரம். உதாரண மாக, சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் முதலியோர் மெய்யன் பில் விளைந்தனவே தோத்திரம் மெய்கண்டார். அருணந்திசிவம், மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம் முதலியோர் மெய்யறிவில் விளைந்தனவே சாத்திரம்.
தோத்திரம் என்பது பெருமாள் உயிர்கட்காகச் செய்தருளிய செயல்களையெல்லாம் புகழ்ந்து உரைப்பதாகும். சாத்திரம் என்பது பெருமான் அன்பராயினும் வன்பராயினும் நடுநிலை நின்று அவரவர்க்கு உள்ளபடி அவரவரைக் கொண்டு செலுத்தும் திறம் பாடுவது.

தோத்திரங்கள் என்பது இலக்கியம் போன்றது. சாத்திரம் என்பது இலக்கணம் போன்றது. தோத்திரங்களுள் தலையாயது திருமுறை. சாத்திரங்களுள் தலையாயது மெய்கண்ட சாத்திரம். இக்கருத்தை உள்ளடக்கி எழுந்த திருத்தாண்டகம் காண்போம். இதில் இறைவன் இரவாகவும் பகலாகவும் இருக்கின்ற தன்மையையும். அந்தி - மாலைப் பொழுது. சந்தி - காலைப் பொழுது. இவ்விருபொழுதா யும் இருப்பவன் என்பதையும், செயலாகவும், சொல்லின் பொரு ளாகவும் இருப்பவன் என்பதையும் அருளியுள்ளார். சொல், வடிவத் தைக் குறிப்பது. சொல் வடிவம் அம்மை. பொருளே அதனுள் உறை யும் சிவம். இதனை, "சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவ ருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே" என்றார் அபிராமிப் பட்டர். அப்பர் காட்டும் திருவாலங்காடு தாண்டகப் பகுதி காண்க. "அல்லும் பகலுமாய் நின்றார் தாமே, அந்தியும் சந்தியும் ஆனார்தாமே, சொல் லும் பொருளெலாம் ஆனார் தாமே, தோத்திரமும் சாத்திரமும் ஆனார்தாமே." (தி.6 ப. 78 பா.5)

சீலத்தார் ஏத்தும் திறம் :

சீலம் என்பது இங்கு ஒழுக்கத்தைக் குறித்தது. ஒழுக்கம் என்பது அன்பு, அருள், ஆசாரம், உபசாரம், உறவு, தவம், தானங்கள், வணக்கம், வாய்மை, அழுக்கிலாத் துறவு, வழிபடுதல் முதலிய நற்குண நற்செயல்களாம். இப்படிப்பட்டவர்களே இறைவனை ஏற்றிப் போற்றுவர். அல்லாதார் இப்பணியில் ஈடுபாடே கொள்ளார். அத் தகையோர் போற்றுதலைப் பெருமானும் கொள்ளார். இதனைப் பல இடங்களிலும் நமது ஆசாரிய மூர்த்திகள் குறிப்பிட்டுள்ளனர். சில வற்றைக் காண்போம். திருவாலங்காடு திருத்தாண்டகம், "மாலைப் பிறை" என்னும் பாடல் நான்காம் அடியில், "சீலத்தார் ஏத்தும் திறத்தார்தாமே திருஆலங்காடுறையும் செல்வர்தாமே" (தி.6 ப.78 பா.10) என்றும், திருவீழிமிழலைத் தாண்டகம் ஆலைப்படு கரும்பின் என்னும் பாடல் இரண்டாம் அடியில், "சீலம் உடை அடியார் சிந்தையான் காண்" (தி.6 ப.52 பா.2) என்றும் அப்பர் அருளியுள்ளமை காண்க. ஞானசம்பந்தரும் தில்லையில் பாடியருளிய "ஆடினாய்" என்னும் பதிக மூன்றாம் பாடலில் "சீலத்தார் தொழுதேத்து சிற்றம்ப லம்" (தி.3 ப.1 பா.3) என்று தில்லைவாழ் அந்தணர்களைச் சிறப் பித்துள்ளமை காண்க.

அடியவர் விருப்பே ஆண்டவன் விருப்பம்:

உலகியலில் ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு வேறொன்று தோன்றும். அருளியலில் பெருமானைப் போலவே அடி யவர்களும் பாசம் ஒன்றிலராய், அற்றவர்க்கு அற்றவராய் இருத்தலின் பெருமான் அருள் எதுவோ அதையே வேண்டுவதன்ற வேறொன்றை விரும்பார். இதனையே அடியவர் வழி ஆண்டவன் வருவதாகக் கூறுகிறார். திருமாற்பேறு திருத்தாண்டகமாகிய, "மலைமகள்தம்" என்னும் பாடலில், "விலைபெரிய வெண்ணீற்று மேனியானை, மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை" (தி.6 ப.80 பா.3) என்றருளியுள்ளார். இதனையே மணிவாசகரும், "வேண்டத் தக்கதறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ" (தி.8 குழை. பா.6) என்றெல்லாம் கூறி, "வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே" என அருளிப் போந்தார்.

அனாசாரம் பொறுத்தருளி:

இறைவழிபாட்டில் ஈடுபடுவோர் அன்பும் அச்சமும் உடைய வராயிருத்தல் வேண்டும் என்பர். அப்பர் ஐந்தாம் திருமுறையில் அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும் எப்படியேனும் இறைவனை வழிபடுக என்று அருளினார். இது தாழ்ந்தோர் ஆசாரம். அன்பு, ஆசாரம், அச்சம் இவற்றுள் எது முதன்மையானது? பெருமான் விரும்புவனவற்றுள், அன்பே முதன்மையானது. சிவகோசரியார் அச்சத்துடனும் ஆசாரத்துடனும் வழிபட்டார். கண்ணப்பர் அச்சம், ஆசாரம் இன்றி அன்புப் பிழம்பாய் வழிபட்டார். அவரது தூய அன்பையே ஏற்றார். சிவகோசரியாருக்கும் அருள் செய்தார். திருநீல நக்க நாயனார் சாத்தமங்கை ஈசனை ஆசாரத்துடன் வழிபட்டார். இறைவன் மீது விழுந்த சிலந்திப் பூச்சியை அகற்றுவதற்கு அவர்தம் மனைவியார் அன்பு மேலீட்டால் ஊதி உமிழ்ந்தார். இங்கும் அன்பே முதன்மை பெற்றது. எனவே இறைவன் இரண்டையுமே விரும்பு கிறான் என்றாலும் மிகுதியாக நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பு ஒன் றையே என்பது தெளிவாகிறது. இதனைத் திருமாற்பேறு திருத் தாண்டகமாகிய "நீறாகி நீறுமிழும்" என்னும் பாடலில் குறிப்பிட் டுள்ளமை கண்டு கடைப்பிடிப்போமாக. உவகைக் கண்ணீர் ஆறாத ஆனந்தத்து அடியவரின் ஆசாரமற்ற செயல்களைப் பொறுத்து அவருக்கு அருளும் வழங்குகிறான்.

நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி

நினைவாகி நினைவினிய மலையாள் மங்கை

கூறாகிக் கூற்றாகிக் கோளுமாகிக்

குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்

ஆறாத ஆனந்தத் தடியார் செய்த

அனாசாரம் பொறுத்தருளி அவர்மேல் என்றுஞ்

சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ்

செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. (தி.6 ப.80 பா.5)

இத்தலத்தாண்டகமாகிய, "பிறப்பானை" என்ற பாடலில், "நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினை வோன் தன்னை" என்றருளியுள்ளமை காண்க. பெருமான், "நலமிலன் நண்ணார்க்கு, நண்ணினர்க்கு நல்லன், சலமிலன் பேர் சங்கரன்" (திரு வருட்பயன் 9) என்னும் நடுவுநிலையையும் சுகத்தையும் செய்வதே அவன் தொழில் என்பதையும் உணர்வோமாக.

அற்றார்கட்கு அற்றான்:

சிவபெருமான் பற்றற்ற பரம்பொருள். அவனைத் திருவள்ளு வர் "பற்றற்றான்" (குறள் 350) என்கிறார். "வேண்டுதல் வேண்டாமை இலான்" (குறள் 4) என்கிறார். ஞானசம்பந்தர், "அற்றவர்" (தி.3 ப. 120 பா.2) என்கிறார். இங்ஙனம் பற்றற நிற்கும் பரம்பொருளாகிய சிவனே. நம்மையெல்லாம் பற்றி நம்மிடையே உள்ள பற்றை அகற்றி, பற்றற்ற நிலையில் உள்ள உயிர்களைத் தம்முடனே ஒன்றாக ஆக்கிக் கொள்கிறான். இதனையே "அற்றார்கட்கு அற்றான்" என்கிறார் அப்பர் அடிகள். திருக்கோடிகா திருத்தாண்டகமாகிய, "மற்றாரும் தன்னொப்பார்" என்னும் பாடல் மூன்றாம் அடியில், "அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்" (தி.6 ப.81 பா.4) என்று பேசுகிறது. தூய பொருளோடு அழுக்குப்பொருள் சேர இயலாது. எனவேதான் தூய்மையாக இருக்கின்ற பரம்பொருளோடு தூய்மையாக இருக்கின்ற உயிரே சேர இயலும். எனவேதான் இதே கருத்தை ஞானசம்பந்தரும் "அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாயாவதுமிதுவே" (தி.3 ப.120 பா.2) என்றருளினார். தூய்மை தூய்மையோடு சேர்வதே இயல்பு என்பதை, இதனால் அருளினார். "நினைப்பார் தம் வினைப் பாவம் இழிப்பான் கண்டாய்" (தி.6 ப.81 பா.5) என்றும், ஆறாம் பாடலில், "பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்" (தி.6 ப.81 பா.6) என்றும் அருளியிருப்பனவும் இக்கருத்திற்கு அரண் செய்வன வாயுள்ளன.

உருகுமனத்து அடியார்:

மனம் உருகி வழிபடுதல் பக்தர்களுக்கு உரிய சிறப்பு இலக் கணம். அத்தகையவர்களின் உள்ளத்தே தேனாகச் சுரந்து, இனிமை தருகிறான் இறைவன். இதனை அப்பர் திருச்செங்காட்டங்குடி தாண்ட கம் ஒன்றில், "உருகுமனத் தடியவர்கட்கு ஊறும் தேனை" (தி.6 ப.84 பா.3) என்று அருளியுள்ளார். மேலும், "கந்த மலர்" என்ற தாண்ட கத்தில் நமது பந்தங்களை அறுத்து ஆளாகக் கொண்டு தமிழ்மாலை பாடுமாறு செய்து சிந்தையில் உள்ள மயக்கத்தைப் போக்கி அருள் புரிகின்றான் (தி.6 ப.84 பா.4) என்கிறார். அப்பாடல் பகுதி காண்க.

பந்தமறுத்து ஆளாக்கிப் பணிகொண்டு ஆங்கே

பன்னியநூல் தமிழ் மாலை பாடுவித்துஎன்

சிந்தை மயக்கறுத்த திருவருளினானைச்

செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே (தி.6 ப.84 பா.4)

மேலும் "கல்லாதார் மனத்தகத்து" என்னும் பாடலில் "கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன்" (தி.3 ப.40 பா.3) என்னும் ஞானசம்பந்தர் வாக்கைப் போலவே அப்பரும் அருளியது, "கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக், கற்றார்கள் உற்றோரும் காதலானை" (தி.6 ப.84 பா.8) என்பதாம். மேலும் இப்பாடல் இறுதியில், "நிறைதவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும், செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச் செங்காட்டங் குடியதனில் கண்டேன்" (தி.6 ப.84 பா.8) என்று அருள்வதும் காண்க. திருமுண்டீச்சரம், "நம்பன் காண்" என்னும் தாண்டகத்தில் "ஏசற்று மனம் உருகும் அடியார் தங்கட்கு அன்பன் காண்" (தி.6 ப.85 பா.3) என்பதும் சிந்திக்கத் தக்கது.

தானம் தர்மம்:

தானம் தம்மிற் பெரியார்க்குக் கொடுப்பது தர்மம். தம்மில் தாழ்ந்த ஏழைகட்கு அளிப்பது. ஒவ்வொரு நாளும் மூன்று சந்தியா காலங்களிலும் அர்க்கியம் கொடுப்பதைப் பெருமானே ஏற்றுக் கொள்கிறார். எல்லாம் அவரைய சேரும். அவரைவிடப் பெரியார் யாரும் இல்லை. ஆதலின் அவருக்கே தானம் சேரத்தக்கது. இதனை, "தானத் தின் முப்பொழுதும் தாமே போலும், தம்மிற் பிறர் பெரியார் இல்லார் போலும்" (தி.6 ப.89 பா.4) என்று அறிவிக்கின்றார். ஏழாம் பாடலில், "கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும், கற்றவர்கள் ஏதம் களைவார் போலும்" என்று கல்லார்க்கும் கற்றார்க்கும் அருள் செய்யும் திறன் கூறுகிறார்.

மறந்தும் அரன்திருவடிகள் நினையாதேன்:

அறத்தின் உண்மையைச் சிறிதும் உணராத ஊத்தை வாய்ச் சமணரோடு அரனை மறந்திருந்தேன். மறந்துங்கூட அரனை நினை யாத மதியிலியேன் ஆயினேன். பல்லாண்டுகள் வாழ்ந்தும் அரனை நினையாமையால் வாழாதவனாயினேன். அந்நாள்களெல்லாம் பிறந்த நாள்களல்லவாயின. இறுதியில் சில நாள்களே. சில ஆண்டுகளே ஈசன் பேர் பிதற்றி அடியேன் அடிமைத் திறத்துன் அன்பு செறிந்து எறும்பியூர் மலைமேல் உள்ள மாணிக்கத்தைச் சென்றடையப் பெற்றேன். பன் னாள்களைப் பாழாக்கி விட்டேனே என்று இரங்கி, இன்று எறும்பியூர்ப் பெருமானை வணங்கும் பேற்றால் இறும்பூதெய்துகிறார். அப்பாடல் காண்க.

அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை

ஆரம்பக் குண்டரோடு அயர்த்து நாளும்

மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா

மதியிலியேன் வாழ்வெல்லாம் வாளாமண்மேல்

பிறந்த நாள் நாளல்ல வாளா ஈசன்

பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்துள் அன்பு

செறிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே (தி.6 ப.91 பா.8)

இப்பாடலாலும் அப்பர் புறச் சமயத்திருந்த போது சிவநெறி உணர்வின்றியிருந்தார் என்பது தெளிவாகும். பெருமான் இவரை அடிமையாக ஏற்ற பிறகே, நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் என்பதும் சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் என்பதும் நிகழ்ந்தன என்பதும் நன்கு தெளியலாம்.

அப்பன் நீ அம்மை நீ:

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்பது கொன்றை வேந்தன். மாதா, பிதா, குரு தெய்வம் என்பது பழமொழி. கண்ணுக்குப் புலனாகும் மாதா பிதாவாகிய தெய்வங்களைக் காட்டி இவர்களை யெல்லாம் நமக்குத் தந்தவனே எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கும் பரம்பொருள் என்பதை அப்பன் நீ என்னும் தாண்டகத்தால் உணர்த்து கிறார். அப்பன் என்பது தந்தையையும், அம்மை என்பது தாயையும், ஐயன் என்பது குருவையும் குறிப்பதாகக் கொள்ளலாம். அன்புடைய என்ற சொல் இடைநிலைத் தீவகமாக எல்லோரையும் பற்றுமாறுள்ளது. குலம், சுற்றம், ஊர் என்பன. உயிர் ஒரு வரையறைக்குட்பட்டே வாழவல்லது என்பதைக் காட்டுகிறது. துய்ப்பன என்பது அநுபவித்தல், உய்ப்பன அநுபவத்திலே செலுத்துதல். இப்படி அநுபவத்தில் செலுத்தி நுகரச் செய்து அதற்கும் உடனாயிருந்து துணை செய்து என்நெஞ்சத் துறப்பிப்பவனும் நீயே, ஆதலின் இப்பொன், மணி, முத்து, இறைவன் எல்லாம் நீயாகவே இருக்கின்றாய் எனறருள் கிறார். அறவிடையூரும் செல்பவனாகவும் இருக்கின்றான் என்கிறார். ஐயன் - அண்ணன் என்பர் அருணை வடிவேலனார் அப்பாடல் காண்க.

அப்பன்நீ, அம்மைநீ, ஐயனும்நீ

அன்புடைய மாமனும், மாமியும் நீ

ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ

ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்.

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ

துணையாய்என் நெஞ்சம் துறப்பிப் பாய்நீ

இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ

இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே. (தி.6 ப.95 பா.1)

நாம் வணங்கும் கடவுள்:

எவ்வளவு குற்றம் உடையவரே ஆயினும், முழுமுதற்பரம் பொருளிடத்து உண்மை அன்புடையவராயின் அவர் அடியவர்களால் வணங்கத்தக்கார் என்பதையே "புலையரேனும் நாம் வணங்கும் கடவுளாரே" (தி.6 ப.95 பா.10) என்ற தொடர் நமக்கு உணர்த்துகிறது.

சங்கு வடிவில குவிந்துள்ள நிதி, பதும வடிவில் குவிந்துள்ள நிதி இவற்றுடன் பூவுலகத்தோடு தேவ உலகும் ஆளத்தருவரேனும் மகாதேவனாகிய சிவபெருமானிடத்து அன்பில்லையானால் அழியும் செல்வமாகிய அவற்றை உடையாரை மதியோம்.

உடலின் உறுப்புக்களெல்லாம் பெருநோயால் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்று உழலும் புலையராயினும் கங்கைவார் சடைக்கரந்த கண்ணுதல் பெருமானிடத்து அன்புடையா ராயின் அவரையே நாம் வணங்கும் கடவுள்களாகக் கொள்வோம் என்று அருளியுள்ளார்.

இக்கருத்தை முண்டக உபநிடதம் கூறுகிறது. நீலகண்ட பாடியத்தும் காட்டப்பட்டுள்ளது. பின் வந்தோர் இப்பகுதியை மறைந்துள்ளனர். ஆயினும் மாதவச் சிவஞான யோகிகள் இக்கருத் தைத் தாம் பாடியருளிய கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதியில் ஒரு பாட லில் குறிப்பிட்டுள்ளமை கண்டு மகிழலாம்.

சிவன்எனும் மொழியைக் கொடியசண் டாளன்

செப்பிடின் அவனுடைன் உறைக,

அவனோடு கலந்து பேசுக அவனோடு

அருகிருந்து உண்ணுக என்னும்

உவமையில் கருதிப் பொருள்தனை நம்பா

ஊமரோடு உடன்பயில் கொடியான்

இவன்எனக் கழித்தால் ஐயனே கதிவேறு

எனக்குஇலை கலைசை ஆண்டகையே

- மாதவச் சிவஞான யோகிகள்

இக்கருத்தைத் தெளிவுறுத்தும் அப்பர் தனித்திருத்தாண்டகத்தை ஓதி உணர்ந்து உய்தி பெறுவோம்.

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து

தரணியொடு வான்ஆளத் தருவ ரேனும்

மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்

மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்

அங்கம்எலாம் குறைஅழுகு தொழுநோ யராய்

ஆவுரித்துத் தின்றுஉழலும் புலைய ரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்

அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே. -தி.6 ப.95 பா.10

சூலைதீர்த்து ஆட்கொண்டார்:

முடிகொண்டார் எனத் தொடங்கும் தனித் திருத்தாண்டகப் பாடலில் திருமாலை இடப்பாகத்தில் பொருந்துமாறு பெருமான் கொண்டார் என்பதையும், அப்பரைச் சூலை தீர்த்து ஆட்கொண்டார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அப்பாடற்பகுதி காண்க. "மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்" "சூலைதீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே" (தி.6 ப.96 பா.3)

இப்பதிகத்துள், சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார் (தி.6 ப.96 பா3) என வருகிறது. இதற்கு ஆலாலசுந்தரராகப் பணி செய்த சுந்தரரையே இது குறிப்பதாகக் கொள்ள வேண்டும். "சமண்தீர்த்தென்றன்னை ஆட்கொண்டார் தாமே" என்ற அகச்சான்றும் இப்பதிக ஐந்தாம் பாடலில் வருகிறது. ஆறாம் பாடலில், "உடல் உறுநோய் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே" (தி.6 ப.96 பா.6) என்றும் சூலை தீர்த்தாட் கொண்டமையை வேறொரு வகையால் குறிப்பிட் டுள்ளார். பதினொன்றாம் பாடலில், "குடமுழநந்தீசனை வாசகனாகக் கொண்டார்" என அறிவித்துள்ளார். இதற்கு மணிவாசகர் எனப் பொருள் கொள்கின்றனர். இது பொருந்தாது. குடமுழவை வாசிப் பவன் `வாணன்' என்பவன். அவனே அன்றி நந்தீசனும் குடமுழவு வாசிப்பது உண்டு. வாசகன் என்றால் வாசிப்பவன் எனவே இங்குப் பொருள் கொள்ள வேண்டும். நந்தீசனைக் குடமுழாவாசிப்பவனாகக் கொண்டார் என்பதே உண்மைப் பொருள்.

எழுதிக்காட்ட ஒண்ணாது:

சிவபெருமான் அம்மை அப்பராகிய இருதன்மைப்பட்ட ஒரு பொருளாகவே இருப்பவர். ஒருவனே தேவன் என்பதே அவர் இயல்பு. அவனை யார், யார் எங்கெங்கு, எவ்வண்ணத்தில் கண்டாலும், அங் கங்கு அவ்வண்ணத்தில் அவ்வவ்வடிவாய்க் காட்சியளிப்பார். இப்படித் தான் இருப்பான் நம் சிவன் என்று எழுதிக் காட்ட முடியாது. அப்பரம் பொருளின் அருளையே கண்ணாகக் கொண்டு கண்டால் அவரது உண்மையை நாம் உணரலாகும். அதற்கும் அவனருள் நமக்கு வேண்டும். அதனையே திருவாரூர்த் தாண்டகத்தில், "நின்அருட் கண்ணால் நோக் காதார் அல்லாதாரே" (தி.6 ப.25 பா.1) என்று அப்பரே அருளிப் போந்தமை காண்க. இக்கருத்தையே தருமை ஆதீன முதற்குரவர் ஷ்ரீகுருஞானசம்பந்தரும் தமது குருநாதன் தமக்கு உணர்த்தியதாக அருளியுள்ள இருவெண்பாக்களைக் கண்டு உண்மை தெளியலாம். முதலில் குருநாதர் தமக்கருளிய ஆணையிட்ட பாடல்.

ஏதேது செய்திடினும் ஏதேது பேசிடினும்

ஏதேது சிந்தித் திருந்திடினும் - மாதேவன்

காட்டிடுவ தானஅருள் கண்ணைவிட்டு நீங்காது

நாட்டம் அதுவாய் நட. - சிவபோகசாரம்

குரு ஆணைப்படி நடந்ததனால் விளைந்த அநுபவப் பயன் உணர்த் தும் பாடல்,

ஏதேது செய்தாலும் ஏதேது சொன்னாலும்

ஏதேது சிந்தித் திருந்தாலும் - மாதேவா

நின்செயலே என்று நினதருளா லேஉணரின்

என்செயலே காண்கிலே னே. - சிவபோகசாரம்

நாம், யான், எனது என்னும் தருக்கால் எதனையும் காண இயலாது என்பதே முடிவான பொருள்.

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி

மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால்

ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன்

ஓரூரன் அல்லன் ஓர்உவமன் இல்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்,

அவன்அருளே கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்

இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே. -தி.6 ப.97 பா.10

இப்பாடலே இறைவனை எழுதிக்காட்ட முடியாது என்று அறிவிக்கும் அப்பரின் அமுத மொழிப்பாடல்.

புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்:

புண்ணியம் என்பதற்கு நல்லதற்கெல்லாம் மேலாய நல்லது என்பதே பொருள். இதற்குமேல் ஒரு நன்மை இல்லை என்பதையே இப்புண்ணியம் என்ற சொல் குறிக்கும். உலகியலில் சாதாரண நன்மைகளையே புண்ணியம் என்ற சொல்லால் குறிப்பிடுவர்.

சமண நூலாகிய சீவகசிந்தாமணியும் சிவபெருமானைப் "போகம் ஈன்ற புண்ணியன்" (சீவகசிந்தாமணி,362) என்று குறிப்பிட் டுள்ளமை குறிக்கத்தக்கது. அப்பர் பெருமான் நிறைவாகப் பூம்புகலூர் சென்று பணி செய்து வாழ்ந்தார். அப்போது, வந்த பொருளாசை, மண்ணாசை, பெண்ணாசை இந்த வகை ஆசையெல்லாம் அவரிடம் இல்லை என்பதை உலகத்தார்க்குக் காட்ட எண்ணிய சிவபெருமான் உழவாரப்பணி செய்தபோது பொன்னும் மணியும் புழுதியுடன் வரச் செய்தார். அப்பர் அவற்றையெல்லாம் புரட்டி எறிந்தார். அரம்பையர் ஆடல் பாடல் காட்டி அசைத்தனர். அரன் அடிக்கே பதித்த நெஞ்சின ரானதால் அசையவில்லை. அற்றார்க்கு அற்றானாய இறைவற்கு ஆளாயினார் அப்பர். சுரும்பமரும் குழல் மடவார் கடைக்கண் ணோக்கில் துளங்காத சிந்தையராய்த் துறந்தோராகிய அப்பர் உள்ளத்தைத் தேடிப் புகலூர்ப் பெருமான் பெரும் பயனாய் வந்து பொருந்தினார். "எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ" (தி.6 ப.99 பா.1) எனத் தொடங்கும் திருத்தாண்டகப் பதிகம் பாடி, "புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன். பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என்று போற்றி, ஒரு சித்திரைச் சதயத்தில் புண்ணியன் திருவருளில் சிவபிரான் திருவடி நீழலில், இரண்டறக் கலந்தருளினார். இரண்டாவது பாடல் இறுதியில் "சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன். திருப்புகலூர் மேவிய தேவதேவே" என்பதைத் தவிர மற்ற ஒன்பது பாடல்களிலும், "பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என்றே பாடியுள்ளார். நிறைவுப் பாடலில் "கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன் கடுந்தேர் மீது ஓடாமைக் காலாற் செற்ற பொரு வரையாய் உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என்று நிறைவு செய்துள்ளார். கயிலை மலைக்கு மேல் இராவணன் தேர் ஓட முயன்றதாகவே நிறைவுப் பாடலில் குறிப்பிட் டுள்ளமையும் கண்டு உணரத்தக்கது. ஆட்பட்ட போதும் கயிலை உணர்வு, முத்திப்பேற்றிலும் கயிலை உணர்விலேயே நிறைந்து விட்டார் அப்பர். இத்திருமுறையைப் பொருளுணர்வுடன் ஓதுவோரும், கேட்போரும் இனிதே வாழ்வர். வாழ்வாங்கு வாழ, அருள்மிகு செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.
கயிலை மலையானே போற்றி, போற்றி.