05 உரைச் சிறப்பு

தருமை ஆதீனத் தமிழ்ப்புலவர், சித்தாந்தக்கலைமணி, வித்துவான்.

சி. அருணைவடிவேலு முதலியார் அவர்கள்

காஞ்சிபுரம்.

தோற்றுவாய்:

பண்டை நூல்களுக்கு உரை காணுதல் என்பது எளிதான ஒரு செயலன்று; அவற்றுள்ளும் திருமுறைகட்கு உரை காணுதல் இயலாத தொன்றென்றே பலரும் கூறுவர். தவறான உரையைத் திருமுறைகட்கு உரைத்தல் மற்றைய நூல்கட்கு உரைத்தலைவிடக் கூடாததொன் றென்னுங் கருத்தால், `திருமுறைகட்கு உரை எழுதுதல் கூடாது' என்று சொல்லிவரும் ஒரு வழக்கமும் உண்டாயிற்று. ஆயினும், "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்று எடுத்து, அவர்களே பெரும்பயன் பெறுவாராகத் திருமுறையுள்ளே சொல்லப்படுவதால், இயன்ற அளவில் திருமுறைகட்கு உரை காணுதலும் இன்றியமையாத தேயாம்.

இதனைத் திருவுளங்கொண்டு, தருமை ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகளவர்கள் பல புலவர்களைக் கொண்டு, திருமுறைகட்குக் குறிப்புரை, பொழிப்புரை, திருப்பதிக வரலாறு, முதலியன எழுதுவித்து முறையாக அவைகளை வெளிவரச் செய்து வருகின்றார்கள். அம்முறையில் இதுகாறும் நான்கு திருமுறைகள் மிகச் சிறப்பான முறையில் வெளிவந்துள்ளன. ஐந்தாந் திருமுறை இதுபோது அங்ஙனம் வெளிவருகின்றது.

உரையாசிரியர்கள்:

இதற்குக் குறிப்புரை வரைந்தவர்கள், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரிப் பேராசிரியர், திருநெறிச்செம்மல், வித்துவான். திரு.வி.சா. குருசாமிதேசிகர் அவர்கள்.

பொழிப்புரை உரைத்தவர்கள், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி முதல்வர், செஞ்சொற்கொண்டல், வித்துவான். திரு.சொ. சிங்காரவேலனார், எம். ஏ., அவர்கள்.

திருப்பதிகவரலாறு கூறியவர்கள், அக் கல்லூரிப் பேராசிரியர், சிரோமணி. வித்துவான் திரு.வி. சபேசனார் அவர்கள்.

இம்மூவரது அறிவுத் திறனும், ஆராய்ச்சித் திறனும், பேருழைப்பும் இவ்வுரையில் நன்கு தெளிவாகின்றன. இவர்கட்கு அவ்வப்பொழுது பல அரிய கருத்துக்களையும் விளக்கங்களையும் தந்தும் சில செப்பங்களைச் செய்தும் உதவியவர்கள், காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சித்தாந்த சிகாமணி உயர்திரு. க. வச்சிரவேல் முதலியார் அவர்களாவார்கள். அவர்களது உதவியால் இவ்வுரை மேலும் மிக்க சிறப்புற்றுத் திகழ்கின்றது.

இதன் சிறப்பினை ஆய்ந்து எடுத்துரைக்கும் வண்ணம் ஸ்ரீலஸ்ரீ கயிலைக்குருமணி அவர்கள் அடியேனுக்கு அருளாணை யளித்துள்ளார்கள். அவர்களது பெருங்கருணைத்திறத்திற்கு அவர் களது திருவடித்தாமரைகட்கு அடியேனது மன மொழி மெய்களா லாகிய பெருவணக்கத்தினைச், செலுத்தி இவ்வுரைச் சிறப்புக்களில் சிலவற்றை எடுத்துக்காட்ட முயல்கின்றேன்.

செயலின் அருமை:

திருமுறைகளுள்ளும் தேவாரங்கட்குப் பொருள் காணுதல் அரிது. சிலர் தேவாரங்கள் எளிதில் பொருள் விளங்கக் கூடிய வெள்ளைப் பாடல்கள் எனக் கருதுவர். அவர்கள் தேவாரங்களை முற்றிலும் உள் நுழைந்து நோக்காமையாலே அங்ஙனங் கருதுவர். தேவாரங்களுள்ளும் திருநாவுக்கரசரது தேவாரத்தின் பொருளை உணர்தல் மிகமிக அரிது.

திருநாவுக்கரசரை. `அலகில் கலைத்துறை தழைப்ப வந்தார்' என்கின்றார் சேக்கிழார். `அலகில் கலை' என்றது. எல்லையற்று விளங்குவதாகிய மெய்க்கலை (ஞானக்கலை)யையேயாம். எனவே, மெய்க்கலையின் அளவற்ற நுண்பொருள்கள் அப்பர் தேவாரத்துள் ஆங்காங்கு நிரம்பிக்கிடப்பனவாம். அவைகளையெல்லாம் உணர்ந்து வெளிப்படுத்துதல் என்பது பெரியதோர் அருஞ் செயலாகும்.

அச்செயலை மேற்கொண்டு முடித்த இப்புலவர் பெருமக்கள் மூவர்க்கும் தமிழுலகமும், சைவ உலகமும் எஞ்ஞான்றும் நன்றி பாராட்டுங் கடப்பாடு உடையவாம்.

அருந்தொடர்கள்:

"திருநாவுக்கரசரது தேவாரம் புலவர்களால் எளிதிற்பொருள் காண இயலாதது" என்பதற்குக் காட்டாக ஒன்று இரண்டை இவ் ஐந்தாந் திருமுறையினின்று எடுத்துக் கூறலாம்.

முதற் றிருப்பதிகத்துள் முதற் றிருப்பாடலிற்றானே, "என்னம் பாலிக்கு மாறுகண்டின்புற" என ஒரு தொடர்வந்துள்ளது. அதில் `என்னம் பாலிக்குமாறு' என்னுந்தொடர் எளிதில் பொருள் விளங்குவது அன்று.

அதன் இரண்டாவது திருப்பாடலில், "அரும்பற்றப்பட ஆய்மலர் கொண்டு", "கரும்பற்றச்சிலைக் காமன்" என்னுந் தொடர்கள் காணப்படுகின்றன. அவற்றுள்ளும் `அரும்பற்றப்பட', `கரும்பற்றச் சிலை' என்னும் பகுதிகள் அத்தன்மையன.

அருஞ்சொற்கள்:

இன்னும் மூன்றாவது திருப்பதிகத்துள் மூன்றாவது திருப்பாடல்,

"பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா

இரப்பொப் பானை இளமதி சூடிய

அரப்பொப் பானை அரத்துறை மேவிய

சுரப்பொப் பானைக்கண் டீர்நாம் தொழுவதே"

என்பது. இதனுள். `இரப்பு, அரப்பு, சுரப்பு, என்னும் சொற்களின் பொருள் இன்ன என ஒருதலையாகத் துணிதல் எத்துணை உழைப்பைத் தருவது, இவற்றிற்கெல்லாம் பொருத்தமான பொருள்கள் இவ்வுரையுட் கண்டு கூறப்பட்டுள்ளன.

மற்றும் இத்திருமுறையுட் காணப்படும் அருஞ்சொற்கள் சில; அவை `கறும்பி, சரக்க, சீரம், சுபத்தர், சுவண்டர், தவனி, தனகு, பாழிமை, மொண்ணை, முதலியன. இவை பிறவிடங்களிற் காண்டற்கரியன. இவற்றிற்கு முறையே, `துன்புறுத்தி, விரைவாக, சீரணம், நலஞ்சான்ற சிந்தையர், திருவெண்ணீறணிந்தவர், தபிக்கப்பட்டவள், உள்ளக்களிப்பு, உறைப்பு, முரண்டல்' எனப் பொருள் கூறப்பட்டுள்ளன.(தி.5. ப.74. பா.6.) (ப.10. பா.11) (ப.82. பா.10) (ப.7. பா.4) (ப.10. பா.3) (ப.7. பா.8) (ப.92. பா.1) (ப.18. பா.2) (ப.15. பா.5)

"இராவ ணஞ்செய மாமதி பற்றவை

யிராவ ணம்முடை யான்றனை யுள்குறின்

இராவ ணன்றனை ஊன்றி யருள்செய்த

இராவ ணன்றிரு வெண்கா டடைமினே" (தி.5. ப.49. பா.11)

என்னும் திருப்பாடல் `மடக்கு' அல்லது `யமகம்' என்னும் முறையில் அமைந்து, பொருள் விளங்குதல் அரிதாய் இருத்தல் தெளிவு. இதன் நான்கு அடிகளிலும் முதற்கண் வந்துள்ள மடக்குச் சொற்களுக்கு முறையே, `இல்லாதபடி, ஐராவணம், இராவணன், கரிய நிறமுடை யவன் (அகோரமுகத்தினன்)' எனப் பொருளுரைத்துத் தெளிவுபடுத்தி யிருத்தல் அறிந்து இன்புறத்தக்கது.

பொருள்கோள் திறன்:

பொருள் முடிவு காணுதல் அரியனவாய் உள்ள பல இடங்களுக்கு அறிஞர்கள் வியக்கும்படி பொருள் கண்டிருத்தல் உரையாசிரியரது பொருள்கொள்ளுந் திறனை நன்கு புலப்படுத்து வதாகும். எடுத்துக்காட்டாக,

"கட்டி யொக்கும் கரும்பி னிடைத்துணி

வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்"

என்பதன் உரையில் (தி.5. ப.5. பா.6) `துணி வெட்டி - வீணையை மீட்டும்போது ஓசையைத் துணித்தும் நரம்பை வெட்டியும்' என உரைத்திருத்தல்,

"கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்" என்பதில், (தி.5. ப.5. பா.7) `கோணிக்கொண்டை - சேர்த்துக்கட்டிய சடைக்கொண்டை' எனக் குறித்திருத்தல்,

"குறைக்காட்டான்" (இராவணன்) என்பதற்கு, (தி.5. ப.9. பா.9) `குறைக்கு ஆள்தான்' எனப் பிரித்து, `குற்றங்களுக்கு' ஆளாய் இருப்பவன் எனினும் அமையும் என்று எழுதியிருத்தல்.

"மலையின் நீடிருக்கும்மறைக் காடரோ" என்பதில், (தி.5. ப.10. பா.5) `மலையின் நீடு இருக்கும் மறைக்காடு - திருக்கயிலை ஊழிகளில் அழியாதுநிற்றல்போலத் தானும் அழியாது நீடுதலாக இருக்கும் மறைக்காடு' எனப் பொருள் விரித்திருத்தல்.

மாடத்தாடு மனத்துடன் வைத்தவர் - (மாடத்தும்) விண்ணிழி விமானமாகிய புறத்தும், (ஆடும் மனத்தும்) நிலையாது திரியும் மனத்தும் (அகத்தும்) வழிபட்ட திருமால், கோடத்தார் - வேதகோஷம் செய்யும் பிரமன், பாடத்தார் - மூலபாடம் பேணும் 'அந்தணர்' என உரைகண்டிருத்தல், (தி.5. ப.12. பா.4-கு-ரை)

"மங்கை காணக் கொடார்மண மாலையை"
என்னும் திருப்பாடலுள் (தி.5. ப.15. பா.6) "எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே" என்பதில் `இதழி' என்பதற்குக் கொன்றை என்னாது, `கொன்றை போலும் பசலை' என்று உரைத்திருத்தல்,

"கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலைப் படுங்க ணொன்றில ராய்ப்பல பத்தர்கள்"

என்பதில் (தி.5. ப.23. பா.1) `குறைவிலைப் படுங்கண் ஒன்றிலராய் - குறைந்த விலைக்கு விற்றுக்கொள்வதோர் இடமும் இல்லாதவராய்' என்றுரைத்து, `விற்றூணொன்றில்லாத நல்கூர்ந்தான்காண்' என மேற்கோள் காட்டியிருத்தல், எட்டு மலர்கள் (அட்ட புட்பங்கள்) இட்டு வழிபடுதலையே கூறிவரும் திருப்பதிகத்துள், "ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர்" என்பதில், (தி.5. ப.54. பா.6) `ஏழி' என்பதற்கு, `ஏழை முன்னாக உடையது; எட்டு' என்று கூறியிருத்தல்,

"நஞ்ச நெஞ்சர்க் கருளும்நள் ளாறரே" என்பதில் `நஞ்ச - நைந்த; நைஞ்ச என்றாய், நஞ்சஎன மருவியது' எனக் குறிப்புத் தந்திருத்தல்,

"ஙகர வெல்கொடியான்" என்பதற்கு, (தி.5. ப.97. பா.16) `இடபம் ங போன்றிருத்தலின், ஙகரவெல்கொடியான் என்றார்' எனக் கூறியிருத்தல்,

இன்னோரன்ன பல இடங்கள் வியப்பிற்கும், பாராட்டிற்கும் உரியனவாய் விளங்குகின்றன.

நய உரைகள்:

சில இடங்களில் உண்மைப் பொருள்களோடு, நய உரைகள் கூறப்பட்டிருத்தல் அறிவிற்கு விருந்தாய், சுவை பயப்பனவாகும். ஒன்று - இரண்டு - வருமாறு:

"கங்கை செஞ்சடை வைப்பது மன்றியே

அங்கை யில்லன லேந்த லழகிதே"

என்பதற்கு (தி.5. ப.9. பா.8) `இயற்கையின் மாறுபட்ட ஆற்றல்களைத் தன் பேராற்றலுள் அகப்படக்கொண்டு இணைத்து வேண்டியவாறு தொழிற்படுத்துவன் என்பது கருத்து' என்று உண்மையை உணர்த் தியபின்னர், `உமையம்மைக்குத் தெரியாதபடி கங்கையை மறைத்து வைத்ததே தவறு; மேலும், இல்லை என்று உறுதி உரைப்பார் போலக்கையில் அனல் ஏற்றல் அழகாகுமா என்பது நயம்' எனக் காட்டியிருத்தல் கண்டு இன்புறுதற்கு உரியது.

"கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்

பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும்

தனிமு டிகவித் தாளு மரசினும்

இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே"

என்னும் திருப்பாடலின் குறிப்பில், (தி.5. ப.14. பா.10) `இப்பாடலில் கூறும் நான்கு பொருள்களும் குழந்தை, இளைஞர், குமரர், முதியர் என்பார்க்கு, இனிமை பயப்பன' எனக் காட்டியிருத்தல் சுவை பயப்பதொன்றாகும்.

"நினைவார்க் கெலாம் - ஊற்றுத் தண்டொப்பர் போல் ஒற்றி யூரரே" என்பதற்கு, (தி.5. ப.24. பா.3) `ஊற்றுத் தண்டு - கரும்பு. ஊன்றுகோல். இரட்டுற மொழிந்து கொள்க. வழுக்குழி உதவி, அமைந்துழிப் பேரின்பம் பயப்பர்' என்னும் குறிப்பு பயன் தரத்தக்கதொரு சிறந்த குறிப்பாகும்.

"இம்மை அம்மை யெனவிரண் டும்மிவை

மெய்ம்மை தானறி யாது விளம்புவர்"

என்பதற்கு, (தி.5. ப.26. பா.5) ஏகான்மவாதிகள் இம்மையை இல்லை என்றும், உலோகாயதர் மறுமையை இல்லை என்றும் பேசுவர் என்று பொருள் கொண்டமை நயனொடு நன்றி பயக்கும் பயனுடைய உரையாகும்.

"ஒத்தொவ்வாத உற்றார்கள்" என்பதற்கு, (தி.5. ப.77. பா.7) `செல்வம் உள்ளபோது ஒத்தும், செல்வம் இல்லாதபோது ஒவ்வாதும், புறத்தால் கலந்து, அகத்தால் கலவாத உறவினர்' எனக் கூறியுள்ள பொருள், உலகியலை உள்ளவாறு உணர்த்தும் இனிய உரையாம்.

மற்றும் இன்னோரன்னவாக இதன்கண் பொதிந்துள்ள பல நயம் வாய்ந்த உரைகள் உணர்வோர் உள்ளத்தை உவகையில் திளைக்கச்செய்வனவாம்.

விழுப்பொருள்கள்:

பல தொடர்களுக்குப் பொதுப்பொருள்கள் கூறியொழியாது, சிறந்த விழுப்பொருள் கண்டு எழுதியிருத்தல் இவ்வுரைக்கென்று அமைந்ததோர் தனிச்சிறப்பாகும். அவைகளுள்ளும் சிலவற்றைக் குறிப்பிடுதல் பயன் தருவதாகும்.

"கருவினைக்கடல் வாய்விட முண்டவெம் - திருவினை" என்பதில் `கரு' என்பதற்கு, (தி.5. ப.4. பா.8) `கருவாய் இருப்பவன்' என்றொழியாது, `உயிர்கள் தோன்றுங்கால் அவ்வக் கருவின்கண் அவ்வவ்வுயிர்களை அவ்வவற்றின் வினைக்கீடாக விழச்செய்து, அவற்றின் உடம்புகளையும், கரணங்களையும், ஆண்டைக்குப் பொருந்தும் நுகர்ச்சிகளையும் தந்து வளர்ப்போன்' என்று உரைத்து, மேலும் `இனி உலக முதற்காரணமாகிய மாயைக்குத் தான் தாரகமாய் நின்று தனது சத்தி சங்கற்பத்தால் உலகைத் தோற்றுவித்தல்பற்றி முதல்வனைக் கரு என்றார் எனினும் அமையும். உலகுக்கெல்லாம் வித்தவன்காண் எனச் சுவாமிகள் பின் அருளிச்செய்தல் காண்க, என்று உரைத்து, `தத் ஆத்மாநம் அகுருத' (அது தன்னைத்தானே ஆக்கியது) என்னும் தைத்திரீய உரைக்கும் இதுவே கருத்து என்க' என விளக்கியிருத்தல் மிகச் சிறந்ததோர் உரையாகும்.

"எம்மை யாரிலை யானுமு ளேனலேன்" என்னும் திருப்பாடற்கு, (தி.5. ப.7. பா.6) சுவாமிகளது வரலாறே பொருளாக அகச்சான்றுபடப் பொருள் விரித்திருத்தல் பெரிதும் அரியதோர் உரையாகும்.

"பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்" என்பதில் `பஞ்ச மந்திரம்' என்பதற்கு, (தி.5. ப.11. பா.3) "ஓம் ஹொம் ஈசான மூர்த்தாய நம; என்பது முதலிய ஐந்து மந்திரங்கள்' எனச் சிவாகமங்களுள் இன்றியமையாதனவாக எடுத்தோதப்பட்ட வழிநிலை மந்திரங்களை மட்டும் குறித்துப் போகாது, `ஈசானஸ் ஸர்வ வித்யாநாம் எனத் தொடங்கும் ஐந்து மந்திரங்கள்' என வேத மந்திரங்களாகிய மூல மந்திரங்களையே குறித்தது பெரிதும் போற்றியுணர்தற்குரியது. இது வேதத்தின் தெளிவே சிவாகமம் என்பது உணராது சிவாகமங்களை விலக்கியொழுகுவார்க்குச் சிறந்ததோர் அறிவுரையாகற்பாலதாம்.

"அரிய நான்மறை ஆறங்க மாய்ஐந்து புரியன்" என்பதில், `ஐந்து புரியன்' என்பதற்கு, (தி.5. ப.18. பா.7) ஐந்து பூதத் தலத்தில் உள்ளவன், ஐந்து தொழில் புரிபவன் என்றாற்போலப் பொருள் கூறாது, `அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் என்னும் ஐங்கோசங்களாக எண்ணப்படுபவன்; இவை உயிர்க்கு இடமாகலின் புரி எனப்பட்டன' எனச் சிறந்த பொருள் உரைக்கப்பட்டிருப்பது பெரும்பயன் தருவதாகும்.

இத்தகைய விழுப்பொருள் காண்டல் பேரறிஞர்க்கே கூடுவதாதல் அறியத்தக்கது.

விளக்கங்கள்:

பருப்பொருள் உடையனபோலத் தோன்றும் சொற்களுக்கு நுண்பொருள் விளக்கங்களும், தொகைப்பொருளான சொற்களுக்கு விரிப்பொருளான விளக்கங்களும் போன்ற பலவகை விளக்கங்கள் இவ்வுரைக்கண் அமைந்து விளங்குகின்றன. அன்ன சில வருமாறு:

"அம்பலத் - துள்நி றைந்துநின் றாடும் ஒருவனே" என்பதில் `ஒருவன்' என்பதற்குப் (தி.5. ப.1. பா.8) பின்வரும் சிறந்த நுண்பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. `சிவபிரானை ஒருவன் என்றல்` உபநிடத வழக்கு. முழுமுதல் என்னும் கருத்துடையது.

"அட்ட மாமலர் சூடி" (தி.5. ப.9. பா.4) என்பதற்கு `அட்ட மாமலர் - சிவபூசைக்குரிய புஷ்ப விதியில் கூறிய எட்டு மலர். புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்னும் எட்டும் புலரிக்காலத்திற்கு உரியவை, `கொல்லாமை, அருள், பொறியடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்னும் எட்டும் ஞானபூசைக்குரிய எண்மலர்கள்' என்னும் விளக்கம் இன்றியமையாத தொன்றாகும்.

"குறிக ளும் அடை யாளமுங் கோயிலும் நெறிக ளும்அவர் நின்றதோர் நேர்மையும்"
என்பதில் (தி.5. ப.90. பா.6) `குறிகள் - கடவுளின் திருவுருவங்கள். அடையாளம் - விடை, கொடி முதலிய சின்னங்கள். நெறிகள் - சமய நெறிகள் அல்லது சரியை கிரியை யோக ஞான நெறிகள். அவர் நின்றதோர் நேர்மை - அப்பெருமான் இவற்றை நாம் உய்யும் நெறி களாகக் காட்டி நின்றதொரு நடுவுநிலை. `நேர்மை நுண்மை எனலுமாம்'. என்பது உண்மை விளக்கமாய் விளங்குகின்றது.

"புழுவுக் கும்குணம் நான்கு எனக் கும்அதே

புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை"

என்பதில் புழுவுக்கு உள்ள குணம் நான்கு எவை? என்பதற்கு, (தி.5. ப.91. பா.4) `உணவின் பொருட்டு முயலல், உண்டல், உறங்கல், இன்ப துன்ப நுகர்ச்சி` என்ற விளக்கம் மிகப் பொருந்துவதேயாம்.

"விறகிற்றீயினன்" என்னும் திருப்பாடலில் "உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால் - முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே" என்பதில் `உறவு - அறிவு; உணர்வு - அன்பு' என்னும் விளக்கம் சிறந்த தொரு விளக்கமாகும் (தி.5. ப.90. பா.10) "நரிவிருத்தம தாகுவர் நாடரே" என்பதற்கு, `நரியின் வரலாறு' எனப் பொருள் கூறி நகை விளைக்கும் அக்கதை நன்கு குறிக்கப்பட்டமை சிறந்ததொரு விளக்கமாம் (தி.5. ப.100. பா.7). இப்பெற்றியவான விளக்கங்கள் பல்வகைப் பொருளைப் பலருக்கும் இனிது புலப்படுத்துவனவாகும்.

உண்மைப் பொருள்கள்:

இறைவனது அடையாளங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வோர் உண்மையை உணர்த்துவது என்பதே மெய்யுணர்ந்தோர் கண்ட உண்மை. அவ்வுண்மை இவ்வுரையுள் நன்கு விளக்கப்பட்டுள்ளது. சில இடங்களைக் குறிப்பிடுதல் பொருந்தும்.

"பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந்

தஞ்சி நிற்பது மைந்தலை நாகமே" (தி.5. ப.9. பா.6)

என்பதில், ஐந்தலை நாகம் என்பது குண்டலினி எனப்படும். சுத்த மாயை எனவும், அதன் தலை ஐந்தும் சுத்தமாயையின் காரியமாகிய `சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை' என்னும் சுத்த தத்துவங்கள் எனவும் உண்மைப் பொருள் புலப்படுத்தப் பட்டுள்ளது.

"மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்

கறைகொள் கண்ட முடைய கபாலியார்

துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்

பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே" (தி.5. ப.6. பா.1)

என்னும் திருப்பாடல் முழுவதற்கும் சிறந்த உண்மைப் பொருள்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் சுருக்கம், `மறை ஓதுதல், உலகிற்கு ஒழுக்கநெறி வகுத்தல்; மான்மறி ஏந்துதல், வேதத்திற்கு முதல்வன் தானே என்பதை விளக்கல்; கறைக்கண்டம் கொள்ளுதல், பேரருள் தன்வயம் என்னும் குணங்களைக் காட்டல்; கபாலம் ஏந்தல், உயிர்களின் செருக்கை அறுத்து இன்பம் தருதல்; துறைபோதல், எக்கலைக்கும் முதல்வனாதல்; பிறை சூடுதல்; உயிர்களின் அக இருளைப் படிமுறையாற் போக்கும் நல்லுணர்வுடைமையும், இளைத்துச் சார்ந்தார்க்குச் சார்பாய் நின்றருளுதலும்.' என்பது. மற்றும் இன்னன பல இதனுட் காணலாகும்.

சித்தாந்தக் கருத்துக்கள்:

`வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்' எனப்பாராட்டப் படும் சித்தாந்தப் பொருள்கட்கெல்லாம் மூலமாய் உள்ளவை திருமுறைகளாம். அதனால், சித்தாந்த நுண்பொருள்களைத் திருமுறைகளில் நுனித்துணர்தலே திருமுறை உணர்வை நிரப்புவதாகும். அஃது எல்லோர்க்கும் கூடாது, சித்தாந்த உணர்வினர்க்கே கூடுவதாகலின், அந்நுண்பொருள்களை இவ்வுரையுள் இனிது விளங்க ஆங்காங்கு விளக்கியிருத்தல் உரையாசிரியர்களது சித்தாந்தப் பேருணர்வை விளக்குவதுடன், பலரும் அந்நுண்பொருளை உணர்ந்து பயன்பெறச் செய்வதாம்.
அந்நுண்பொருள்களில் ஒன்று இரண்டு வருமாறு: "கரும் பொப் பானைக் கரும்பினிற் கட்டியை - அரும்பொப் பானை" என்ப வற்றிற்கு, (தி.5. ப.3. பா.2) இறைவன் சாதகர்க்கு அவர் சாதித்த வழித் தோன்றுதலையும், சீவன் முத்தர்க்கு யாண்டும் வெளிப்பட்டு நின்றே அருளுதலையும், சரியை முதலிய மூன்றில் நிற்பார்க்கு அவர் உள்ளத்தே தோன்றி விரிந்துவருதலையும் பொருளாகக் குறித்தமை, "உருவினை", "அருவினை" எனப் போந்தவற்றிற்கு, (தி.5. ப.4. பா.8.கு-ரை) `அருவம்' அருவுருவம், உருவம் என்னும் நிலைகளைக் கடந்த முதல்வன், உயிர்கள் தன்னை உணர்ந்து உய்யக்கருதி அத்திருமேனி களைக் கொண்டான்' எனவும், `உரு - மகேச்சுரத் திருவுருவங்கள்; அரு - யோகியர் பிரணவம், பிராசாதம் முதலிய மந்திரங்களின் துணையால் அகத்தே காணும் ஒளியுரு' எனவும் எழுதினமை, "கருத்தன்" (தி.5. ப.4. பா.9. கு-ரை) என்றதற்கு, `தலைவன்; தன்வயமுடையவன்`. `சுட்டுணர்வாகிய பிரபஞ்சம், சுட்டுணர்வின்றி நின்ற சங்காரத்தின் வழியல்லது சுதந்திரமின்றி நிற்றலான்' என விளக்கினமை,

"துணையி லாமையின் தூங்கிருட் பேய்களோ

டணைய லாவ தெமக்கரி தேயெனா

இணையி லாஇடை மாமரு தில்லெழு

பணையி லாகமம் சொல்லுந்தன் பாங்கிக்கே"

என்பதில், (தி.5. ப.15. பா.4) `தூங்கிருள்' என்பதற்கு `ஊழி' என்றும், `பாங்கி' என்பதற்கு, `பக்கத்தில் உள்ள உமையம்மை' என்றும் பொருள் கூறி, `ஊழியில் இறைவனும், அம்மையும், பேய்களும் அன்றிப் பிறர் இரார்' என்றும், `ஆகமம் அம்மைக்கே முதற்கண் விளக்கப்படுவது' என்றும் உரைத்தமை,

"அடிகள் சேவடிக் கீழ்நாம் இருப்பதே" (தி.5. ப.32. பா.1) எனத் திருப்பூந்துருத்தித் திருப்பதிகத்துள் எல்லாப் பாடல்களிலும் குறிக்கப்பட்ட இறைவன் திருவடிக்கீழ் இருத்தலை, `இன்புறுநிலை' என்றும், "ஓங்குணர்வி னுள்ளடங்கி உள்ளத்துள் இன்பொடுங்கத் - தூங்குவர்மற்றேதுண்டு சொல்" என்றாற் போல நிட்டையின் இயல்பு கூறுவனவற்றிற்கெல்லாம் இது போலும் திருமுறைகளே மூலம் என்றும் தெளிவித்தமை,

`உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்" (தி.5. ப.68. பா.1) எனக் குறிக்கப்பட்ட அகத்தாமரையின் இயல்பை விளக்குமிடத்து, `ஏனைத் தாமரைபோல் நீர்க்கீழ்த் தோன்றாத பீசம் முதலாகத் தோன்றி முளைத்த ஒப்பற்ற வெண்டாமரை' எனச் சிறப்பித்துரைத்தமை முதலியவை அரிய பல சித்தாந்த நுட்பங்களைத் திருமுறையில் வைத்து உணர்தற்குத் துணைசெய்வனவாம்.

இலக்கணக் குறிப்புக்கள்:

மொழித்திறத்தின் முட்டறுத்து முதல்நூற் பொருளை உள்ள வாறுணர்தல், இலக்கணம் வல்லார்க்கே இயல்வதாகும் என்பர். அத்தகைய இலக்கணக் குறிப்புக்களும் பல இவ்வுரையுட் காணப்படும். எடுத்துக்காட்டாக;

"அருத்தனைஅரவைந்தலை நாகத்தை" (தி.5.ப.4. பா.9) என்பதில், `அரவைந்தலை நாகம்' என்பதற்கு, `முன் பின்னாகத் தொக்க இருபெயரொட்டு. ஐந்தலை நாகமாகிய அரவு என்க' என்றும்,

"இடைமாமரு தில்லெழு - பணையி லாகமம் சொல்லுந்தன் பாங்கிக்கே" (தி.5. ப.15. பா.4) என்பதில், `பணை' என்பதற்குத் திருவிடைமருதூர்த் தலவிருட்சமாகிய மருதமரம் எனப் பொருள்கொண்டு, `பணை - மருதநிலம்; அஃது அந்நிலத்துக்குரிய மரத்துக்கு ஆயிற்று `(இடவாகு பெயர்) என்றும் குறிப்பெழுதியிருத்தல் முதலியவற்றைக் காண்க.

இங்ஙனம் இலக்கணம், இலக்கியநயம், தத்துவக் கருத்துக்கள், வேத ஆகம சித்தாந்த நுண்பொருள்கள் பலவும் விளங்குமாறு அமைந்த இவ்வைந்தாந் திருமுறையுரை இதனை அன்புடன் ஓதி உணர்வார்க்குப் பல்லாற்றானும் சாலவும் பயன் தருவதாகும்.

பொழிப்புரையாசிரியர், தமிழில் புலவர் பட்டத்துடன், ஆங்கிலத்தில் எம். ஏ., பட்டம் பெற்ற சிறப்புடையவர்; குறிப்புரை ஆசிரியர், தமிழ்ப் புலமையோடு திருமுறைகளை ஆழ்ந்து பயின்று, `திருநெறிச் செம்மல்' புலவர் பட்டமேயன்றி வடமொழியிற் சிரோ மணி என்னும் சீரியதொரு பட்டத்தைப் பெற்ற பெருமையுடையவர்; திருப்பதிகவரலாற்று ஆசிரியர், தமிழ்மொழியிற் புலவர் பட்டமும், அதுமட்டுமன்றி, வடமொழியிற் சிரோன்மணிப் பட்டமும் பெற்ற சீர்த்தி யுடையவர். இம் முப்பெரும் பேராசிரியர்களும் ஒருங்கிருந்து ஆய்ந்து அமைத்துள்ளது இவ்வுரை எனின், இது பல்லாற்றானும் சிறந்து விளங்குதல் சொல்ல வேண்டாவன்றோ!

இத்தகைய புலவர் பெருமக்களைக்கொண்டு இவ்வுரையினை ஆக்குவித்தும், சிறந்த முறையில் அச்சிடுவித்தும் உலகிற்கு உபகார மாம் வண்ணம் வெளியிட்டருளிய, தருமை ஆதீனம் 25-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளது பெருங்கருணைத்திறத்திற்குச் சைவ உலகமும், தமிழ் உலகமும் பெரிதுங் கடப்பாடுடையனவாகும். இவ்வுரையின் சிறப்பினைக் கண்டு கூறும் வாய்ப்பினை அடியேற்கு அளித்தருளிய ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களது திருவடித் தாமரைகட்கு எளியேனது மனமொழி மெய்களாலாகிய வணக்கத்தைச் செலுத்திக்கொள்ளுகின்றேன்.

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் திருமுறைகளை மிகவும் ஆர்வத்தோடும் அருளோடும் சிறந்த பல விளக்கங்களுடன் வெளிவரச் செய்துவருகின்றார்கள். அவ் வெளியீடுகள் அனைத்தும் செந்தமிழ்ச் சொக்கன் தண்ணருள் வளத்தால் அவர்கள் திருவுளப் பாங்கின்படியே இனிது வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஐந்தாந் திருமுறைக்குப் பின் ஏனைய திருமுறைகளும் இனிது வெளிவர அப்பெருமானது பேரருள் முன்னிற்பதாக. வாழ்க கயிலைக் குருமணியவர்கள்! வளர்க திருநெறிப் பணிகள்!.

திருத்தொண்டர் புராண சாரம்

போற்றுதிரு வாமூரில் வேளாண் தொன்மைப்

பொருவில்கொறுக் கையதிபர் புகழ னார்பால்

மாற்றருமன் பினில்திலக வதியாம் மாது

வந்துதித்த பின்புமருள் நீக்கி யாரும்

தோற்றியமண் சமயம்உறு துயரம் நீங்கத்

துணைவரருள் தரவந்த சூலை நோயால்

பாற்றருநீள் இடரெய்திப் பாடலிபுத் திரத்தில்

பாழியொழித் தரனதிகைப் பதியில் வந்தார்.

வந்துதமக் கையர்அருளால் நீறு சாத்தி

வண்தமிழால் நோய்தீர்ந்து வாக்கின் மன்னாய்

வெந்தபொடி விடம்வேழம் வேலை நீந்தி

வியன்சூலம் கொடியிடபம் விளங்கச் சாத்தி

அந்தமில்அப் பூதிமகன் அரவு மாற்றி

அருட்காசு பெற்றுமறை அடைப்பு நீக்கிப்

புந்திமகிழ்ந் தையாற்றில் கயிலை கண்டு

பூம்புகலூர் அரன்பாதம் பொருந்தி னாரே.

-உமாபதி சிவம்.