05 பதிப்புரை

திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ

வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்

பெருநாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகில்

ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்.

- சேக்கிழார்

மலர்தலை உலகின்கண் மன்னிய இருளை அகற்றி, இலகொளி பரப்பி யாவையும் விளக்கும் பன்னிரு பகலவர்களைப்போல, மக்கள் அக இருள் போக்கும் அருமணிச் சுடர்களாய் இலங்குவன, பன்னிரு திருமுறைகள். அவற்றுள் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப் பெயர் பெறும். இவற்றை அருளிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் மூவர் முதலிகள் எனப் பெறுவர்.

பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் ஞானசம்பந்தர் அருளியன. நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள் நாவுக்கரசர் அருளியன. ஏழாம் திருமுறை சுந்தரர் அருளியது.

தமிழ் மொழியில் அமைந்த வேதங்களாக இவை போற்றப்பெறும். வேதங்களில் நான்காவதாகிய அதர்வண வேதம் ஏனைய மூன்றனுள் அடங்கியிருத்தலால், வேதம் மூன்றே என ஸ்மிருதிகள் கூறும். அம்மூன்றனுள் நடுவில் உள்ளது யசுர் வேதம். இவ்வேதத்தின் நடுவில் சதருத்ரீயத்தின் நடு நாயகமாகத் திருவைந்தெழுத்து விளங்குகின்றது.

மூவர் அருளிய தமிழ் வேதமாகிய தேவாரமும் மூன்று வேதங்களாக விளங்குவன. அப்பர் அருளிய திருமுறை மூன்றனுள், நடுவணதாகிய, யசுர் வேதம் போல விளங்கும் ஐந்தாம் திருமுறை, நூறு பதிகங்களைக் கொண்டது. அதன் நடுவே விளங்கும் திருப்பாலைத்துறைத் திருப்பதிகம் பதினொரு பாடல்களை உடையது. இத்திருப்பதிகத்தின் ஆறாவது திருப்பாடலில் முத்தி பஞ்சாக்ஷரம் போற்றப் பெற்றிருக்கின்றது எனப் பலரும் எடுத்துக்காட்டி, தேவாரத் திருமுறையைத் தமிழ் வேதம் என மொழியக் காணலாம். அத்திருப்பாடல்,

விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்

மண்ணி னார்மற வாதுசி வாயஎன்

றெண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்

பண்ணி னாரவர் பாலைத் துறையரே -தி.5 ப.51 பா.6

என்பதாகும். இனிமையும், எளிமையும் கருத்தாழமும் உடைய இத் திருமுறைப் பாடல்கள் பலராலும் பயிலப் பெறுபவை.

இத்திருமுறையில் 1015 பாடல்களைக் கொண்ட 100 பதிகங்கள் அடங்கியுள்ளன. 88 பதிகங்கள் தலங்களைப் பற்றியவை. 12 பதிகங்கள் பொதுவானவை.

அவை தனிக்குறுந்தொகை -3, காலபாசத் திருக்குறுந் தொகை-1, மறக்கிற்பனே என்னும் திருக்குறுந்தொகை-1, தொழற் பாலதே என்னும் திருக்குறுந்தொகை-1, இலிங்கபுராணத் திருக்குறுந் தொகை-1, மனத்தொகை-1, உள்ளத்தொகை-1, சித்தத்தொகை-1, பாவநாசத் திருக்குறுந்தொகை-1, ஆதிபுராணத் திருக்குறுந்தொகை-1 என்ற பெயர்களால் வழங்கப்பெறும்.

குறுந்தொகை என்பது யாப்பிற்குரிய பெயராகும். குறுகிய பாவினமாகிய கலிவிருத்த யாப்பில் இவை அமைந்துள்ளன.

இத்திருமுறையில் அற்புதத் திருப்பதிகங்களாக உள்ளவை:

-திருமறைக்காட்டில் மறைக்கதவம் திறக்கப் பாடியது,

-நீற்றறை குளிரப் பாடியது,

-வாய்மூருக்கு வரப்பணித்த இறைவரைப் பாடியது,

-பழை யாறை வடதளியில் சமணரால் மறைக்கப்பட்ட சிவலிங்கக் காட்சியைக் காணப் பாடியது, ஆகியனவாம்.

இத்திருமுறையில் விளங்கும் காலபாசத் திருக்குறுந்தொகை மகா மிருத்யுஞ்சய மந்திரமாக விளங்குவது.

இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை திருமால், பிரமர் அடி முடி தேடி அயர்த்துத் தொழுதபோது பெருமான் சிவலிங்கமாக வெளிப்பட்ட நிலையைத் தெரிவிப்பது.

தனித்திருக் குறுந்தொகையுள் 89ஆவது திருப்பதிகம் ஒன்று முதல் பத்து எண்கள் தொடர்ந்து வர இறைவன் புகழை எடுத்தியம்புகிறது. சித்தத்தொகை என்னும் 97ஆவது திருப்பதிகம், ஆத்திசூடிபோல, தமிழ் எழுத்தின் வரிசையமைப்பைப் பாடிய முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது.

இனிய எளிய சொற்களால் உயர் நெறிகளை மக்கட்கு உபதேசிக்கும் இத்திருமுறையை எல்லோரும் விரும்பிப் பயிலக் காணலாம்.

ஐய னேஅர னேயென் றரற்றினால்

உய்ய லாம்உல கத்தவர் பேணுவர்

செய்ய பாதம் இரண்டும் நினையவே

வையம் ஆளவும் வைப்பர்மாற் பேறரே. -தி.5 ப.60 பா.7

கற்றுக் கொள்வன வாயுள நாவுள

இட்டுக் கொள்வன பூவுள நீருள

கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்

எற்றுக் கோநம னால்முனி வுண்பதே. -தி.5 ப.91 பா.6

நன்று நாள்தொறும் நம்வினை போயறும்

என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்

சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை

துன்று பொற்சடை யானைத் தொழுமினே. -தி.5 ப.42 பா.1

ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும்

ஓதி அஞ்செழுத் தும்உணர் வார்கட்குப்

பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே

மாதும் தாமும் மகிழ்வர்மாற் பேறரே. -தி.5 ப.60 பா.1

பூவ னூர்புனி தன்திரு நாமந்தான்

நாவில் நூறுநூ றாயிரம் நண்ணினார்

பாவ மாயின பாறிப் பறையவே

தேவர் கோவினும் செல்வர்கள் ஆவரே. -தி.5 ப.91 பா.6

உள்ளம் உள்கி உகந்து சிவனென்று

மெள்ள உள்க வினைகெடும் மெய்மையே

புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர்

வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே. -தி.5 ப.79 பா.8

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்

தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே. -தி.5 ப.90 பா.7

என்பன போன்ற பாடல்கள் பலராலும் பலகாலும் ஓதப்பெறுபவை. அடங்கன்முறையிலும், அப்பர் தேவாரப் பதிப்புக்களிலும் காணப் பெறாததும், நூலாசிரியர் உரையாசிரியர்களால் மேற் கோளாகக் கூறப்பெறுவதுமாகிய திருக்குறுந்தொகைப் பாடல் ஒன்று ஆய்வறிஞர்களால் கண்டு உணர்த்தப் பெற்றுள்ளது.

தாயுமானவர்,

"உன்னில்உன்னும் என்ற உறுமொழியால் என்இதயந்

தன்னில்உன்னிநன் னெறியைச் சாரும்நாள் எந்நாளோ"

எனக் கூறியுள்ளதையும், அருணந்தி சிவம் இருபா இருபதில்

"கோதில் அமுதக் குணப்பெருங் குன்ற

என்னில் ஆர்தலும் அகறலும் என்னைகொல்

உன்னில் உன்னி உனாவிடில் பெயர்குவம்

என்னும் அதுவே நின்னியல் பெனினே"

என்று கூறியதையும் நோக்க, பின்வரும் பாடல் திருக்குறுந் தொகையில் இடம் பெற்றிருந்ததை உணரலாம்.

இருபா இருபதில் மேற்கூறிய பாடல் வரிகளுக்கு அரிய உரை எழுதிய திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் நமச்சிவாயத் தம்பிரான் சுவாமிகள் தாம் கூறிய உரைக்குப் பிரமாணமாக,

பன்னி லூறும் பழத்தினும் இன்சுவை

என்னி லூறி எனக்கே களிதரும்

உன்னி லுன்னுமுன் னாவிடில் விட்டிடும்

என்னில் ஈசன் இருந்த இயற்கையே.

என்ற `தேவார'த்தில் கண்டுகொள்க என்று எழுதியுள்ளார்கள். இப்பாட்டின் அமைப்பாலும் சிறப்பாலும் அப்பர் அருளிய குறுந் தொகைப் பாடல்களில் ஒன்றாக இப்பாடல் இருத்தல் வேண்டும் என ஆய்வு அறிஞர்கள் உணர்த்தியுள்ளனர்.

இத்தகைய பாடல்களின் தொகுப்பாய் இலங்கும் ஐந்தாம் திருமுறை ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் அருளாணை வழியே தருமை ஆதீனப் புலவர் திரு. க. வச்சிரவேலு முதலியார் மேற் பார்வையில் ஆதீனப் புலவர்களாகிய டாக்டர். திரு. சொ. சிங்கார வேலன், வித்துவான் திரு. வி. சா. குருசாமி தேசிகர் ஆகியோர் எழுதிய பொழிப்புரை, குறிப்புரைகளோடு கூடியதாய் 1961 ஆவது ஆண்டு வெளியிடப்பெற்றது.

இதுபோது இவ்வைந்தாம் திருமுறை, சிதம்பரம் திரு. திருநாவுக்கரசுப் பிள்ளை, திருமதி சிவகாம சுந்தரி ஆகியோர் நன்கொடையால் ஒளியச்சில் வெளிவருகின்றது.

இத்திருமுறைப் பதிப்புக்களைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.

அன்பர்கள் ஓதி உணர்ந்து பயன் எய்துவார்களாக.

தருமை

ஆதீனம்

இங்ஙனம்

10. 12. 1996

ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின்

. உத்தரவுப்படி,

குமாரசாமித் தம்பிரான்

(காறுபாறு, ஸ்ரீகாசிமடம், திருப்பனந்தாள்)