05 முகவுரை
இறை, உயிர், உலகம் என்னும் முப்பகுதியாய் நிற்கும் பொருள்கள் என்றும் உள்ளவை. அவை அநாதி என்பது சாத்திரம். இம் முப்பொருளையும் பதி, பசு, பாசம் என்ற அழகுறுஞ் சொற்களாற் சாத்திரம் தெரிவிக்கும். உயிர்கள் பாசம் நீங்கிப் பதியினைக் கூடி யின்புறுதற்கு இடைக்கால நிலையே இவ்வுலக `வாழ்வு' எனலாம்.
வாழ்வில் தன் குறிக்கோளை உணர்ந்து மன, மொழி, மெய் களால் தூயனாய் வழிபாடியற்றும் மனிதனுக்கு உலகப் புறத்தோற்றக் கவர்ச்சிகள் தடையாய்நின்று மெய்ஞ்ஞானத்தை அடைய வொட்டாமல் தடுக்கின்றன. சான்றோர்களது அருள் வாக்குகளை -திருவருள் மொழிகளைக் கற்றுக் கேட்டுச் சிந்தித்துத் தெளிவதால் இத்தடைகள் நீங்கும் என்பது அநுபவம்.
தவச்சிறப்பும், ஞானநலமும் வாய்ந்த சான்றோர்களாகிய அருளாளர்கள் வாழ்ந்து அருள் நலம் பெருக்கிவரும் ஞானப் பண்ணைகளே ஆதீனங்களாகிய சைவமடங்கள்.
மடாலயங்கள் நம் நாட்டில் தொன்றுதொட்டு அறிவு விளக்கம் புரிந்து வரும் அற நிலையங்களாக உள்ளன. தென்னாட்டிலும் வட நாட்டிலுமாக இம்மடங்களின் பணிகள் எண்ணிறந்த பல.
சைவ இலக்கியப் பேரறிஞராகிய டாக்டர். மா.இராச மாணிக்கனாரவர்கள் இம்மடங்களது தொன்மையைப் பற்றித் தம் நூல்களில் தெளிவுபடுத்தியுள்ளார். கி.மு.249 இல் அசோகன் தன்மகள் சாருமதியுடன் நேபாளம் சென்றதாகவும், அங்கே ஒரு மடம் பசுபதிநாதமடம் என்ற பெயரில் இருந்ததாகவும், அது காட்மண்டு நகரத்திற்கு 3. கி.மீ. வடக்கே அமைந்திருந்ததாகவும், சாருமதி அம்மடத்திற் சேர்ந்ததாகவும், அதனால் அந்த முற்காலத்திலேயே நேபாளத்தில் சைவசமய வளர்ச்சியை அறியலாம் என்றும் தம் நூலில் எழுதியுள்ளார். (Monograph on the Religious Sects in India among the Hindus -D. A.Pai. pp.62)
நம் சமயாசாரியர்கள் காலத்திற்கு முன் வாழ்ந்த திருமூலர் காலத்திலே சன்மார்க்க நெறியை உபதேசித்த ஏழு மடங்கள் இருந்தன எனவும், மூலர், காலங்கர், அசோகர், மாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர், போகதேவர் ஆகிய அவர்களுள் மூலரது சீடர்கள் மூலன் பரம்பரையினர் எனப்பட்டனர் எனவும் அறிகின்றோம். இதனால் கி.பி. 4,5,6 ஆம் நூற்றாண்டுகளிலேயே மடங்களின் தொன்னிலை, தொண்டுநிலை பற்றி நன்கு தெளியலாம்.
மடங்களில் வாழ்ந்து மோனத்தவம் பெருக்கி வையகம் வாழத் தொண்டு புரியும் ஞானச் சான்றோர்களது அருள் மொழிகள் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் உயர்மொழிகளாக உள்ளன. சமயாசாரியப் பெருமக்களது திருவருள் மொழிகளாகிய திருமுறைகளைப் பொருள் உணர்ந்து சொல்லுதல் வாழ்வைத் திருத்திப் பண்படுத்தும் என்பது ஆன்றோர் அநுபவம்.
இத்தருமை ஆதீன ஆதிபரமாசாரிய சுவாமிகளும், "சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்" என்று பணித்தருளினார்கள். இத்திரு முறைகள் காட்டும் செம்பொருளை உணர்ந்தாலன்றி இந்நெறி நிற்றல் இனிது கூடாமையின், நல்ல உரை விளக்கத்தோடு திருமுறைகளை உலகிற்கு வழங்குதலும் தேவையாயிற்று.
இதனைத் திருவுளத் தடைத்தருளிய தருமை ஆதீனம் 25-ஆவது குருமகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கருணைப் பெருக்கால் இதுகாறும் முதல் நான்கு திருமுறைகளும் குறிப்புரை, தலக்கல்வெட்டு, பதிக வரலாறுகளுடன் தமிழ் உலகு பெற வெளிவந்தன.
இந்த ஐந்தாம் திருமுறை திருநாவுக்கரசு சுவாமிகளது திருக் குறுந்தொகைப் பாடல்களை உட்கொண்டொளிர்வது. கோயில் முதலாக ஆதிபுராணத் திருக்குறுந்தொகையீறாக நூறு பதிகங்களை உடையது.
ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்கள் அருளாணையைச் சென்னியிற்றாங்கி, இப்பதிகங்கட்குக் குறிப்புரை, சொல் - அரும் பொருள் அகராதிகள் எழுதியவர், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கும் தேவார இசைமணி, வித்துவான், திரு. வி.சா. குருசாமி தேசிகர்.
பொழிப்புரை எழுதியவர், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி முதல்வராக இலங்கும் செஞ்சொற் கொண்டல், வித்துவான், திரு. சொ. சிங்காரவேலன் எம்.ஏ.,
அவ்வாறே பதிக வரலாறு தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர், வித்துவான், சிரோமணி, திரு. வி. சபேசனாலும், தல வரலாற்றுக் குறிப்புக்கள், கல்வெட்டாராய்ச்சிக் கலைஞர், வித்துவான், திரு. வை. சுந்தரேச வாண்டையாராலும் எழுதப் பெற்றுள்ளன.
இவ்வுரைப் பகுதியினைத் தம் அறிவு நலத்தால் ஆய்ந்து உரைச்சிறப்பு எழுதியுள்ளவர் தருமை ஆதீனப் புலவர் சித்தாந்தக் கலைமணி வித்துவான், திரு.சி. அருணைவடிவேலு முதலியார் ஆவர்.
ஐந்தாம் திருமுறை உரை முதலியவற்றை மீளநோக்கி ஆராயும் வாய்ப்பு ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணியவர்கள் அருளாணையால் அடியேனுக்கு எய்திற்று. உரைப் பகுதிகள் அனைத்தையும் கண்டு செப்பமுறத் தொகுத்து நோக்கும் திருவருள் வாய்ப்பு அடியேனுக்கு வாய்த்தது குருவருள் விளக்கத்தாலே ஆதலின், ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணி அவர்கள் திருவடிகளில் மன மொழி மெய்களாலாகிய என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
ஏனைய திருமுறைகளும் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி யவர்கள் திருவுளப்படி விரைவில் உரையுடன் வெளிவர இருக்கின்றன. எல்லாம் குருவருள் வளம்.
திருநாவுக்கரசர் திருவடி வாழ்க!
ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமகாசந்நிதானத்தின் அருளாணைப்படி,
க. வச்சிரவேல் முதலியார்,
தலைமை ஆசிரியர், பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி,
காஞ்சிபுரம்
.
தருமை ஆதீனம்
25. 05. 1962.