04 குறிப்புரை மாட்சி

(இது ஒரு திறனாய்வுக் கட்டுரை)

முனைவர், வித்துவான் சொ. சிங்காரவேலன்,

தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர்.

தமிழ்இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்த ஒப்பற்ற மொழி. அயல் நாடுகளும் இவ்வுண்மையை அறிவுறுத்தி வருகின்றன. மொழியியல் ஆராய்ச்சிக்காரர்களும் பழமையும் இனிமையும் வாய்ந்த உயர் தனிச்செம்மொழி யாகும் ஒண்டமிழ் என்று உரைக்கின்றனர்.

இத்தகைய பெருமை இம்மொழிக்கு எப்படி வந்தது? தெய்வீக ஆற்றலால் இம்மொழி அமிழ்தாயிற்று என நம்பலாம். தெய்வீகமே தமிழின் செறிந்த அமிழ்தம்.

தமிழினிமை அருளினிமை. வடவேங்கடத்தில் நெடுமாலும், தென்குமரியில் குமரித்தாயுமிருந்து அருட்காவல் புரியும் இம்மாநிலத்தின் மொழியிலும் அவ்வருளனுபவம் தேங்கி யிருக்கிறது. பொங்கித் ததும்பிப் பயில்வோர் சிந்தையிலும் பாய்கிறது.

அந்த அருளனுபவம் தேக்கிய - ஆன்மீக வெற்றி அடங்கிய ஞானத்தமிழ்ப் பெட்டகமாகத் திருமுறைகள் திகழ்கின்றன.

அவற்றுள்ளும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திரு முறைப் பாடல்களில் இன்ப அன்பின் முழு நிறைவு அநுபவம் நிறைந்து ஒளி வீசுகிறது; தண்சுவை வழங்குகிறது. திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவருட் கவிதைகளில் தோய்வோர் உலகத் தளையினின்றும் ஓய்வோர்; ஆன்மீக வாழ்வின் அடிப்படையாகிய குறிக்கோளை ஆய்வோர். அத்தகைய உயிர்ப்பு - அருள் விழிப்பு திருநாவுக்கரசு சுவாமிகளின் அருள்வாக்கில் மலர்கின்றது.

`தொண்டு கிழவர்' என்று வையம் கூறும், மிக்க முதிர்ச்சி யுடைய முதியவரைக் குறிக்கும் தொடர் அப்பர் சுவாமிகளை நோக்க மிகவும் பொருத்தமாக உளது. ஏன்? தொண்டு புரிந்த கிழவர் இத் தூயோர்தாமே!

கையில் உழவாரப் படையுடன் தமிழ் நாட்டுத் திருக் கோவில்கள் தோறும் மெய்யன்பர் புடைசூழ வழிபட்டார்; வழிந் தொழுகும் தமது அநுபவத்தை இனிய வண்டமிழ்ப் பாடல்களாக வழங்கினார். உலகம் வாரி வாரி உண்டது. அருளனுபவச் செல்வரின் ஞான விழிப்பு ஞாலத்தே ஆன்மீக மலர்ச்சியை விளைத்தது. உலகம் உய்ந்தது.

இருபதாம் நூற்றாண்டில் வாழும் நாம் இதய விழிப்பு இன்றி வாழ்கின்றோம். சிலர் கேட்கலாம்; `செயற்கைக் கோள்களாக்கும் அளவுக்கு மனித உள்ளத்தில் அறிவு விழிப்பு உண்டாயிருக்கிறதே, இதய விழிப்பு இல்லை என்பது பொருந்துதல் எவ்வண்ணம்' என்று. அறிவு விழிப்பு அக விழிப்பு என்றும் புறவிழிப்பு என்றும் இருவகை உடையது. முன்னது ஆண்டாண்டு புரண்டாலும், வினைப்பயனால் விளைவது. பின்னது எளிதில் வாய்ப்பது. இப் புறவிழிப்பிலேயே இப்புவி இந்நூற்றாண்டில் தக்கவோர் முன்னேற்றம் பெற்றிருக்கிறது. அக விழிப்பு மலரவில்லை விரிந்த அளவில். அக விழிப்பு உண்டாயின் உலகத்தினிடத்து அன்பு உண்டாகும்; காதல் பிறக்கும். எல்லாரும் இன்புறவேண்டும் என்ற எண்ண விரிவு ஏற்படும்; நான் உலகத்திலே ஒருவனென்ற உணர்வு பிறக்கும்; இயற்கையில் இயங்கும் திருவருட்சக்திக்கு நானோர் மகவு என்ற நல்லுணர்வு விளையும். இவ்விழிப்புக்குத் திருமுறையே துணை புரியும். இத் திரு முறைப் பணியைத் தொடக்கிவைத்துத் தருமை ஆதீனத்து எங்கள் ஷ்ரீலஷ்ரீ குருமகா சந்நிதானமவர்களின் அருளாணையின் வண்ணம் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய முதல் திருமுறைக்கு, எனக்கு ஆசிரியரும், ஆதீனப் பல்கலைக் கல்லூரியின் முன்னாள் துணைத் தலைவரும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து இந்நாள் தமிழ் விரிவுரையாளருமான மகா வித்துவான், திரு.ச. தண்டபாணி தேசிகர் அவர்கள் உரையெழுதினார்கள்.

இரண்டாம் திருமுறை எனக்கு ஆசிரியரும் இத்திருமுறை உரையாசிரியரும், முதுபெரும் புலவரும் இத் தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தலைவருமான புலவர். திரு. முத்து. சு. மாணிக்கவாசக முதலியாரவர்களால் உரைஎழுதப்பெற்றது.

மூன்றாம் திருமுறைக்கு பண்டித திரு. அ. கந்தசாமிப் பிள்ளையவர்களால் உரையெழுதப் பெற்றுத், திருஞானசம்பந்தர் அருளிய மூன்று திருமுறைகளும் குறிப்புரையுடன் நிறைவுற்றன.

தமிழ்ப் பெருங்குடிமக்களுக்குத் திருமுறைகளை உரையோடு வழங்கி வரும் இத்தகைய பணி புரிந்து, `உலகத்தார் உள்ளத்து ளெல்லாம்' நிலைத்துவிட்ட தருமை ஆதீனம் இவ்வரிசையில் திருநாவுக்கரசு சுவாமிகளின் திருமுறைகளை இப்போது வெளியிடத் தொடங்கி, நான்காம் திருமுறையைச் செவ்விய உரையோடு செந்தமிழ் உலகுக்கு இஞ்ஞான்று வழங்குகிறது.

இத் திருக்கை வழக்கம் தருமை ஆதீனத்து 25 ஆவது குருமகா சந்நிதானமாக எழுந்தருளியிருப்பவர்களும், அடியவனை ஆட் கொண்ட ஆசாரியப் பெருந்தகையும், சமய `சமூக' இலக்கியப் பணிகள் புரிவதையே குறிக்கோளாகக் கொண்டு வீற்றிருப்பவர்களும் ஆகிய சீலத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களுடையது என்பது யாவரும் எண்ணி எண்ணி இன்புற வேண்டுவதாகும். ஆட்சியேற்ற நாள்முதல் அறப்பணி பல புரிந்து வரும் இவ் வருளரசு இக்காலை ஆன்மீக ஞான அநுபவச் செல்வத்தை அறிவுலகுக்கு உரையோடு வழங்க முற்பட்டிருப்பது தமிழ் உலகு புரிந்த தவமே யாகும்.

இரண்டாம் திருமுறைக்கு உரையெழுதிய முதுபெரும்புலவர் திரு. முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் அவர்களையே இத் திருமுறைக்கும் உரையெழுதத் தேர்ந்ததும் திருவருள் வாய்ப்பே. சித்தாந்த நூல்களிற் சிறந்த புலவரும், திருமுறைப் பயிற்சியிற் சீரிய வரும், இலக்கண இலக்கியங்களில் வழிவழிவந்த அறிஞருமாகிய திரு. முதலியாரவர்கள் திருநாவுக்கரசு சுவாமிகளின் அநுபவ வாக்குக்கு உரையெழுதத் தகுதி உள்ளவர்கள்.

இவர்களது இச்சீரிய குறிப்புரையின் பலபகுதிகளையும் பயிலும் வாய்ப்பை எனக்கு வழங்கியருளிய குருமகாசந்நிதானம் அவர்கள், இக்குறிப்புரை மாட்சிகளையும் விதந்தெழுதும் வண்ணம் ஆணை பிறப்பித்தது யான் செய்த தவப்பேறே என மதிக்கின்றேன். ஏனெனில், அநுபவப் பயிற்சியில்லாத எனக்கு இது ஓர் அருளிப்பாடே யல்லவா?

இரண்டாவது திருமுறையையும், அதற்குத் திரு. முதலியார் அவர்கள் எழுதிய குறிப்புரையையும் படித்தறிந்து அத் திருமுறைப் பதிப்பிலேயே `குறிப்புரை மாட்சி' யெழுதும் பேறும் முன்னர்ப் பெற்றேன். உரையாசிரியரின் பரந்த அறிவை உணரும் பெரு வாய்ப்புப் பெற்றது போலவே இத்திருமுறையிலும் உணரலானேன். உரையைப் படிக்குங்கால் என் உள்ளத்தே நச்சினார்க்கினியர், பரிமேலழகர், பேராசிரியர் முதலிய தமிழ் உரையாசிரியர்கள் நினைவே மேலோங்கி நின்றது. ஏன்? அதே அழகு நடை; தேர்ந்த சொல்லாட்சி; தெளிவான விளக்கம்: ஏற்ற மேற்கோள்; இனிய சொல்லாராய்ச்சி. திருப்பதிக வரலாற்றைப் படிக்கின்ற போதெல்லாம் பெரிய புராணப் பூங்காவுக்குள் நுழைந்து சேக்கிழாரின் கவி மணத்தை உரை மணமாக நுகரக்கூடிய வாய்ப்புங் கிடைத்தது.

பொருள்காணும் வகையில் நம் உரையாசிரியர் கொண்டுள்ள முறை புதியது. வினாவும் விடையுமாகப் பொருள் விளக்கம் புரிகின்றார். எடுத்துக் காட்டாக முதற் பதிகத்துள் `கூற்றாயினவாறு' என்ற முதற்பாடலுக்கமைந்த உரையைக் காட்டலாகும். சித்தாந்த சாத்திர நுணுக்கங்கள் கூடிய பகுதியாக அவ்வுரைப் பகுதி ஒளிர் கின்றது. அகம்பு, புறம்பு என்ற சொல்லாராய்ச்சி இனியது.

வஞ்சம் என்ற சொல், வல் + து + அம் என்ற மூன்றன் மருவிய வடிவமே என்பதனை நிறுவியுள்ளார். (பதி. 1 - 2)

ஏடு - இளைது; சிந்தாமணி (446 - 1552) இளைது - இளது - ஈள்து - எள்து - ஏடு என மருவிற்று' (பதி. 3 - 5) என்ற விளக்கம் ஆய்தற்குரியது.

`வண்ணப் பகன்றிலோடாடி வைகி வருவன கண்டேன்' (பா. 26) என்புழிப் பகன்றில் என்ற சொல்லினைப் பற்றிய ஆராய்ச்சியை நிகழ்த்தியுள்ளார். `பக + அன்றில், மக + அன்றில் இரண்டும் துணை பிரியா மகன்றில். மகன்று - மகனை (ஆணை) உடையது. துணை பிரியா மகன்றில் என்றதை நோக்கி, பகு + அன்றில் எனப்பிரித்து துணைபிரியா அன்றில் எனலாம். பகன்றில் என்பது மகன்றில் என மருவியுமிருக்கலாம். பிரியாத இயல்புநோக்கிப் பகா அன்றில் என்றிருந்தது பகன்றில் என மருவியதெனலும் கூடும்' என்ற விளக்கம் ஆய்தற்குரியதே.

`பற்றிக் கயிறறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன்' - என்புழி (பா. 29). `பாசம் என்னும் வடசொற் பொருள்பற்றிக் கயிறு எனப்பட்டது'- என்று விளக்குதல் ஆய்வாளர்க்கு ஓர் புதிய செய்தியாகும். கயிறு என்று கூறுதலைப் பற்றிப் பாசம் என்ற வடசொற் பிறந்திருக்கலாகாதா என்று வினாவுவார்க்கு இவ்வுரையாசிரியரின் விடை இது.

`திங்கள் மதிக் கண்ணியானை' (பா. 30) என்ற தொடர்க்கு விளக்கம் எழுதுங்கால்; `திங்கள் மதி ஒருபொருட் பலபெயர்; திங்கள் சாந்திரமானம்பற்றிய திங்களை விளைவிப்பது. காரணப் பெயர். மதி பிறை என்னும் பொருட்டு. சந்திரனுக்கு வடமொழியில் மதி என்னும் பெயரில்லை. இரண்டும் தமிழ்ச் சொல்லே' என்ற விளக்கவுரை நோக்கற்குரியது.

`பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு தலையோடே திரிதர்வேனை' (பா. 47) என்றவிடத்துப் பம்பு - பப்பு - பரப்பு - விரிதல். குவிதல் (நிவிர்த்திக்கு இடம்) இல்லாமை' என்று எழுதியிருத்தல் சிந்தித்து உணர்தற்குரியது.

`இறுத்தானை எழில் முளரித் தவிசின்மிைச' என்புழி (பா. 51) `தவிசு - (தவிர் + து) தங்குதலுடையது, இருக்கை. காரணப் பெயர். தவிர்து என்றதன் மரூஉ' என்று எழுதுதல் ஓர் புதிய சிந்தனைக் கிளர்ச்சியாதல் ஓர்க.

`ஓர் ஓதம் ஓதி உலகம் பலிதிரிவான் என்கின்றாளால்' என்புழி (பா. 59) `ஓதுவது - ஓத்து; ஓதம்; ஓது - பாடு; ஓத்து - பாட்டு; ஓதம் - பாடம் என வரும் சொல்லமைதி உணர்க. பாடம் என்னும் வடசொல் வேறு, இது வேறு. `பாடம் (பாடு + அம்) கருத்தே சொல்வகை சொற்பொருள்' என்புழி வருவது தமிழ்ச்சொல்லுமாம்; `பாடம் படித்தான்' என்புழி நிற்பது வடசொல் என்ற விளக்கம் உணர்தற்கினியவோர் பகுதியாகும்.

`இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தனே' (பா. 65) என்றவிடத்து `இணையடை என்பதன் மரூஉ இண்டை' என்று விளக்கி, சுமையடு என்பது சும்மாடு என மருவியதறிக என்று உவமையும் காட்டியிருத்தல் இனியதாதல் தெரியலாம்.

`சிவனெனும் ஓசையல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மையுளதே' என்ற பொதுப் பதிகத்து `ஒலிசெய் என்பது ஓசை என மருவிற்று' என்று விளக்குதல் ஓர் புதிய செய்தி.

`நள் + து = நண்டு; நள்ளி என்றதால் விளங்கும்' என்று 206 ஆம் பாடற்பகுதியில் எழுதி விளக்குதல் அறியத்தக்கது.

`ஏறனார் ஏறுதம்பால்' (பா. 219) என்ற பாடற் பகுதிக்கு உரை விளக்குகையில், `நில் + து, நீல் + து = நீறு என்று கூறி, செல் + து, சேல் + து = சேறு, வெல் + து, வேல் + து = வேறு முதலியன போல்வது என்று எடுத்துக்காட்டுதல் இனியவோர் பகுதி.

`செஞ்சடைக் கற்றை முற்றத்து' எனத் தொடங்கும் 218ஆம் பாடலில் (மஞ்சு - மை + து - மைத்து, மைந்து, மைஞ்சு, மஞ்சு என ஆகியதை விளக்கியுள்ளார்.

இருள் + பு என்பதன் மரூஉவே இரும்பு என்பதும், சுருள் + பு என்பதன் மரூஉவே சுரும்பு என்பதும் 239ஆம் பாடலில் விளக்கி யுள்ள சொல்லராய்ச்சிச் செய்திகள்.

`நொய்யவர் விழுமியாரும்' என்ற 285ஆம் பாடலில், `இடிந்த + இல் இடிந்த வில்; அதன் மரூஉ இடிஞ்சில் என்பது. குற்றிற்சுவர் என்பது குட்டிச்சுவர் என மருவிற்று, குறு + இல் குற்றில். இடுஞ்சில் இடிஞ்சில் என மருவியது' என்ற விளக்கத்தை நன்கு உணர்தல் வேண்டும்.

`பள்ளியா நெஞ்சத்துள்ளார் பஞ்சமம் பாடியாடும்' என்புழி (பா. 286) "பஞ்சமம் - பண்சமம் - பஞ்சம சுருதி பற்றியது - ஒருபண்" என்று விளக்கியிருத்தல் மிக வினியவோர் உரைப் பகுதியாகும்.

`இந்திரனோடு தேவர் இருடிகள்' என்று தொடங்கும் திரு மறைக்காட்டுத் தேவாரத்தின் (பா. 324) உரையில் (துதிக்கல் - துதி + க் + கு + அல்) குகரச் சாரியையும் சந்தியாகிய ககர வொற்றும், தொழிற்பெயர் விகுதியாகிய அல்லும் துதி என்னும் வடசொற் பகுதியுடன் இயைந்து தொழிற்பெயர்ப் பகுபதம் ஆயிற்று.

கதி, மதி, திதி, உதி முதலிய பிற வடசொற்பகுதிகளுடனும் இவ்வாறு இயைந்து ஆன சொற்கள் உள. பழந்தமிழில் `இன்னோ ரன்னவை இல' என்ற விளக்கப்பகுதி சிந்தை கவரும் ஒன்றாம்.

`பாயன நாடறுக்கும் பத்தர்கள் பணியவம்மின்' என்ற விடத்து (பா. 325). `பாயன நாடு - பரப்பினாலொத்த நாடு' (உலகம்) பாயனம் - பாசனம்; நீர் பாய்த்துகின்ற நாடு எனலுமாம்' என்று விளக்கியிருத்தல் அறிதற்குரியது.

`மனத்தினுள் மாசு தீர்ப்பார் மாமறைக் காடனாரே' என்புழி (பா. 331) மாசு என்ற சொல் மறு + து, மறுது, மறுசு, மாசு என மருவிய சொல்லென்று விரித்துரைத்திருத்தல் அறிந்து இன்புறத்தக்கது.

`தேரையும் மேல்கடாவித் திண்ணமாத் தெழித்துநோக்கி' என்றவிடத்து (பா. 334) ஆள் + மை, ஆண்மை எனக்காட்டி ஆளின் தன்மை என்று கூறுதலே சிறந்தது என்று குறித்து, `ஆளும் தன்மை யெனின் ஆள் என்பது வினையாகும்; தமிழில் மை என்பது வட மொழியில் துவம் என்றது போல்வது; பண்புணர்த்துவது' என்றெழுதி யிருத்தலும் நோக்கி மகிழ்தற்குரியது.

`நாள்முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்' (பா. 334) என்ற விடத்து நாள் முடிக்கின்ற சீரான் - செங்கதிரோன். நாளிறு என்றதன் மரூ உவே ஞாயிறு ... ...
செங்கதிர்த் தோற்றத்தை அடியாகக் கொண்டு கணக்கிடுவதே நாள். நாள் இறுதற்கும் அதுவே அடியாகும். அதனால் அக்கதிரை நாளிறு என்றனர் செந்தமிழர். அது ஞாயிறு என்று மருவிற்று என்றெழுதியிருத்தல் தமிழ்ச்சொற்களின் ஆழமுடை மையை உரையாசிரியர் உளங்கொண்டுள்ள செய்தியை மேலும் உரைக்கும்.

`ஞாலமும் குழிய நின்று நட்டமதாடுகின்ற மேலவர்' என்புழி (பா. 370) நட்டம் - திருக்கூத்து; இது தமிழ்ப் பெயர்; வடசொற் சிதைவு அன்று; `கொட்டம் வட்டம் போல்வது' என விளக்கியிருத்தல் அனைவரும் உணரவேண்டிய பகுதியாகும். நிருத்தம் என்ற சொல் தான் நட்டமாயிற்று எனச் சொல்வோர்க்கு இது தக்க வாய்ப்பூட்டாக அமையுமல்லவா? இவ்வாறே சாடவெடுத்தது (பா.789) என்ற பாடல் உரையிலும் `நட்டம் வடசொற்சிதைவன்று; தமிழ்ச்சொல்' என்று வற்புறுத்தியுள்ளனர், பின்னரும்.

`இரப்பவர்க்கீய வைத்தார் ஈபவர்க்கருளும் வைத்தார்' என்ற 383ஆம் பாடல் உரையில், இரத்தல் புரத்தல் இரண்டும் மறுதலைப் பொருளன என்ற செய்தியைப் புறநானூறு முதலிய பழந்தமிழ் இலக்கியச் செய்யுளாட்சி காட்டி ஆய்ந்துரைத்திருத்தல் சீரியதாகும்.

`தருவினை மருவும் கங்கை' என்ற 439ஆம் பாடற்றொடரில் கொடுக்குஞ் செயல் என்றும், மரங்களையென்றும் இரு பொருள்கண்டு அச்சொற்றொடராற்றலைத் தெற்றெனப் புலப்படுத்தியுள்ளமை உளம் கொளற்குரியது.

`கனகமா வயிர முந்து மாமணிக்கயிலை கண்டும், உனகனாய் அரக்கனோடி' என்ற 456ஆம் பாடற் பகுதியில் உனகன் என்ற சொற்கு உன்னுகின்ற அகத்தையுடையவனாய் என்றதோடமையாது இழிந்தவன் என்ற (லெக்சிகன்) பொருளையும் புலப்படுத்தியுள்ளார்.

`மயக்கமாய்த் தெளிவுமாகி' என்ற 473 ஆம் பாடற் பகுதியில் அசைத்தல், அசைக்கல்,அசக்கல், அசக்கம், அயக்கம் என முறையே மருவிற்று எனல் அறிதற்குரியது.

`கேழல் வெண்கொம்பு பூண்ட கிளரொளி மார்பினானே' எனத் தொடங்கும் திருக் கோடிகாத் தேவாரத்தின் உரையில் (பா. 493) செய்கேன் என்ற சொல்லின் உருவம் காட்டப்பட்டுள்ளது. செய் + கு + ஏன் - செய்கேன். பிற்காலத்தார் ககரவொற்று எதிர்காலம் காட்டிற்று என்றனர். செய்கு + யான் என்பதன் மரூஉ என்பர் சொல்லாராய்ச்சி யாளர் என்ற உரைப் பகுதி மிக இனியது.

`குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை' என்புழி (பா. 580) `தாதை - தாதா என்னும் வட சொற்றிரிபு; ஆவீறு ஐயீறாதல் விதி' என்று விளக்கமெழுதி யிருத்தல் உணரத்தக்கவோர் பகுதியாகும்.

`குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப் பும்' - என்புழி (பா. 783) மலரது முன்னிலையான அரும்பைக் குமிழ் எனலுக்குக் கோவிற் புராணச்சான்று காட்டி அரும்பும் நகையைக் குமிழ் சிரிப்பு என்பர்; `குமிண் சிரிப்பு' என்றதிற் குமிண் என்றது முதனிலையாதல் வேண்டும். அவ்வாறொன்று தமிழில் வேறெங்கும் காணப்படவில்லை என்று அவ்வரிய சொல்லாட்சியை விளக்கி யுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது.

`பொன்னொத்த மேனிமேல் வெண்ணீறணிந்து' என்றவிடத்து (பா. 788)ப் பொன்னொத்தமேனி என்ற தொடர்க்கு விளக்குங்கால், `சிவன் என்பதைச் செம்மேனியன் என்னும் பொருட்டாகிய தமிழ்ச் சொல்லாக்கியருளியதுணரப்படும்' என்றெழுதிய தொடர் சிந்திப் பினும் பேரின்பம் விளைப்பதாகும்.

`பேழ்வாயரவின் அரைக் கமர்ந் தேறி' என்ற பாடல் உரையில் (பா. 802) `பிறழ் என்பது பேழ் என்று மருவிற்று' என்று ஓர் சொல்லின் தொல்லுருவத்தைப் புலப்படுத்தியுள்ளார்.

`புற்றினில் வாழும் அரவுக்கும்' எனத் தொடங்கும் பாடல் உரையில் (பா. 827) `கங்கையைச் சிற்றிடையாள் என்றது வடமொழி வழக்கு' எனப் புலப்படுத்தியுள்ளமை இனியது.

`சுணங்கு முகத்து துணைமுலைப்பாவை' எனத் தொடங்கும் (பா. 900) பாடல் உரையில் வரும் `வளைக்கரம் கூப்பி நின்று' என்ற தொடர்க்குரிய விளக்கப்பகுதி இனியவோர் சொல்லாராய்ச்சிப் பகுதியாகும். "குவிபு என்றதன் மரூஉவே கூப்பு என்பது. குவி பிட்டான், கூப்பிட்டான் என்று மருவியதும் அறிக. கைகுவிதலும் வாய்குவிதலும் பற்றி உண்டான சொல். குவிபு - கூவ்பு - கூம்பு - கூப்பு என்னும் முறைமையில் மருவிற்று".

"ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய்" என்ற 913ஆம் பாடற் பகுதிக்கமைந்த உரைப்பகுதி உன்னி உன்னி உவத்தற்குரியது. ஈன்றாள், எந்தை, உடன் தோன்றினர் என்ற மூன்றும் மாதினியார் முதலிய மூவரையுமே குறித்தன என்று தெளிவாக்கியுள்ளார். இப்பாடலுள் `இமையவர்க்கன்பன்' என்ற தொடர் உமையவட்கன்பன் என்பதை நோக்க. (பா. 914) இமையவட்கன்பன் என்றிருந்திருக்க லாமோ என்று சிந்தித்திருக்கும் பகுதி மெய்யன்பர் உணர்விற்குரிய வோரிடமாம்.

கருதல் என்றதன் மரூஉவே காதல் என்பது என்று உரைத்து, அதற்குப் பத்துப் பாட்டுச் சான்று தந்திருப்பது உணரத்தக்கது. இச்சொல்லாராய்ச்சி தமிழ் உலகுக்கு இவ்வுரையாசிரியர் தந்துள்ள புதிய படைப்புக்களில் ஒன்று எனலாம். இதனை ஒப்புவோரும் உளராகலாம்; ஒவ்வாதோரும் உளராகலாம். ஆயினும் இஃதோர் புதிய சிந்தனையாதலைத் தமிழ் கூறுநல்உலகு உன்னுதல் தக்கது என்பது என் கருத்தாகும். இச்செய்தியை 64ஆம் பாடல் உரையிலும் காண்கின்றோம்.

`அல்லாக்குழி வீழ்ந்து அயர்வுறுவேன்' என்ற 936ஆம் பாடற் பகுதியில், பொருந்துவதாகிய சாத்திரக் கருத்தைச் சித்தியார் கொண்டு குறித்திருத்தல் உணரத்தக்கது.

`இலங்கையர் காவலன்' என்ற (பா. 953) தொடரில் காவலன் என்பதனை விளக்கியுள்ளனர்.

`கருவுற்றநாள் முதலா' எனத் தொடங்கும் (பா. 961) திரு விருத்தமும், அதற்கமைந்த உரையும் அருள் அநுபவம் விளைந் தாலன்றி உணரவியலாத உயர்வுடையன என்று தோன்றுகின்றன.

படிமம் என்ற சொல் (பா. 988) பிரதிமா என்ற வடசொல்லின் திரிபு என்பர் நம் உரையாசிரியர்.

இன்னோரன்ன பிறவிடங்களிலெல்லாம் தமிழ்ச் சொற்களைத் தமிழ்ச் சொல்லாராய்ச்சி அடிப்படையில் ஆய்ந்து நிறுவும் உறுதிப்பாடு இவ்வுரையாசிரியர்க்கு உள்ளதனை இக்குறிப்புரை உணர்த்துகிறது. நம் உரையாசிரியரின் தமிழ்ப்பற்று எல்லோராலும் உணரப் பட்டிருந்தாலும், இவ்வுரைநூலின் ஓரிடத்தே அப்பற்று குன்றிலிட்ட விளக்கென அமைந்து ஒளிர்தலைக் கூறாமல் இருத்தலியலாது.

திருநாகைக் காரோணத்திருப்பதிகத்தின் திருக்கடைக்காப்புச் செய்யுள், முதல் இரண்டு வரிகளைப் படிக்குங்கால் நம் நெஞ்செலாம் நிறையும் அருளமுதம் அவ்விருவரிகளில் ததும்பிநிற்றலை அறிய லாம்.

"கருந்தடங்கண்ணியும் தானும்

கடனாகைக் காரோணத்தான்

இருந்த திருமலையென்றிறைஞ்சாது

அன்று எடுக்கலுற்றான்" (பா. 1001)

இதற்கு உரையெழுத முற்பட்ட நம்மாசிரியரின் தூய அறிவு நலம் தமிழ்ப்பற்றுத் தழுவித் தழைக்கலாயிற்று. பலபடக் கூறுவானேன்? அவ்வுரைப்பகுதியை உங்கள் திருமுன் வைக்கின்றேன். படித்து நீங்களே தீர்ப்பு வழங்கிவிடுங்கள்.

`கருந்தடங்கண்ணி என்னும் அழகிய தூய தமிழ்ப்பெயர், அப்பர் அடிகள் காலத்தின் முன்னரே வழங்கியதென்பதுணர்க. அஃது இப்பொழுது நீலாயதாட்சி என்று வழங்குகின்றது. இவ்வாறு தமிழ்மொழியிடத்தைக் கவர்ந்து, தாம் நின்று அவற்றையொழித்த வடமொழிக்கு அளவில்லை. இருமொழிக்கும் முதற்குரவர் ஆகிய கண்ணுதலார், ஒருமொழியால் மற்றொரு மொழி ஒழியப் படைத் தாரலர்". இருமொழியும் வளரவேண்டும்; வாழவேண்டும் என்ற சம நிலை உடைய நம் உரையாசிரியரின் உணர்வையும் மீறித் தமிழ்ப்பற்று வெளிப்படுகிறது என்பதற்கு இஃதும் ஓர் சான்றாகும் அல்லவா?

இவ்வண்ணமே, `சிவனெனும் நாமம்' என்ற (பா. 1058) பாடல் உரையில் `சிவன் - செய்யன், தமிழ்ச் சொல்லாகக் கொண்டு பொருள் கூறிய இடம் இது. செம்மேனி எம்மான் என்றது சிவன் என்ற தமிழ்ச்சொல்லின் பொருளாகும்' என்று எழுதியிருத்தலும் எண்ணி மகிழற்குரியவோரிடமாகும்.

வடமொழிச் சொற்களை விளக்குங்காலும், சில இன்றியமை யாத வேதோபநிடதக் கருத்துக்களை விளக்குங்காலும் தக்க வடமொழி மேற்கோள்கள் வருகின்றன. உரையாசிரியரின் வடநூலறிவை அவை விளக்கத் துணை புரிகின்றன.

அப்பர்க்கு மனைவாழ்க்கை இருந்ததா இல்லையா என்று ஆராய்கின்ற திறத்தை `உயர்ந்தேன் மனைவாழ்க்கையும்' என்ற (பா. 7) பாடல் உரையில் பார்க்கின்றோம். `கருவுற்றிருந்துன் கழலே நினைந்தேன்' `ஒரு பற்றிலாமையும் கண்டு இரங்காய்' என்ற அகச் சான்றுகளால் அவ்வாகீசருக்கு மனையறம் இல்லையென்னாது உண்டு என்பார்க்கு நரகம் இல்லாது போமோ?" என்று எழுதும்போது உரையாசிரியரின் சைவ உறுதி புலனாகிறது அல்லவா?

பிழைபட்ட பாடங்களைத் தம் உரைப் பகுதியிற் காட்டித் திருந்திய பாடங்களைத் தெளிவாக்குதல் நம் உரையாசிரியரின் நல்லியல்புகளில் ஒன்றாகும். இத்திருமுறையிற் பல்வேறிடங்களில் அத்திருத்தங்களையும், அவற்றுக் கமைந்த செப்பமான உரைப்பகுதி களையும் காணலாம்.

உரையெழுதுங் காலத்தில் என்னிடத்தேயும், ஏனைய கல்லூரிப் பேராசிரியர்களிடத்தேயும் உசாவி இப்புதிய பாடங் களையும் திருத்தங்களையும் கூறி எம்மையெல்லாம் மகிழ்விப் பார்கள். அவற்றுள் ஓரிரண்டு பாடங்களின் திருத்தங்களை இங்கு உணர்தல் நலம் பயப்பதாகும்.

"வளர்மதிக் கண்ணியினானை

வார்குழலாளொடும்பாடிக்

களவுபடாததொர் காலம்

காண்பான் கடைக்கணிற்கின்றேன்"

என்ற (பா. 31) பாடலில் கடைக்கணிக்கின்றேன் என்று இதுகாறும் தவறாக இருந்த ஓர் பாடத்தை இவ் வுரையாசிரியர் துணிவுடன் கடைக்கணிற் கின்றேன் என்று மாற்றியுள்ளார். கடைக்கண் - கடைவாயிலின்கண் நிற்கின்றேன். கடைக்கணிக்கின்றேன் என்றது எழுதினோராற் பிழைபட்ட பாடம். முற்பாடல் பலவற்றில் வருவேன் என்றார். இதில் வந்துநிற்கின்றேன் என்றார்" என விளக்கமும் கூறியுள்ளார். இதனை 289ஆம் பாடல் உரையோடும் நோக்கி உணர்க.

`தாடழுவு கையன் தாமரைப்பூஞ் சேவடியன்' என்ற 196 ஆம் பாடலில், தாடவுடுக்கையன் என்று பிழைபட்ட பாடத்தைத் திருத்திச் செப்பமாக்கிப் பொருள்விளக்கம் புரிந்துள்ளமையை உணரலாம்.

`ஆவியாய் அவியுமாகி' - என்ற (பா. 320) பாடல் உரையில் `பாவியாய்' என்றும் பாடம் உளது. அது பொருத்தமுடையதன்று என்று விளக்க இதனை வலியுறுத்துவதற்கு 358, 320 பாடல்களை நன்கு கூர்ந்து நோக்கி, `பாவியார் பாவம் தீர்க்கும் பரமன்' என்பதே உண்மையான பாடம் என்று ஆய்ந்து நிறுவுகின்றார்கள். `மனமெனும் தோணிபற்றி' என்ற (பா. 455) பாடலில், `மதனெனும் பாறைதாக்கி' என்ற தொடரை `மனனெனும் பாறைதாக்கி' என்று மாற்றியிருத்தலும், மதன் என்பது பிழைபட்ட பாடம் என்று எழுதியிருத்தலும் அறியவேண்டிய பகுதிகள். `கைப்போது மலர் தூவிக் காதலித்து வானோர்கள்' என்ற பாடல் உரையில் (பா. 64) காதலித்து என்ற சொல்லுக்கு விளக்கம் எழுதுங்கால்: கருதல் என்பது காதல் என மருவிற்று. அப்பெயரடி யாகப் பிறிதொரு தொழிற்பெயர் காதலித்தல் என்று உண்டாயிற்று. அதினின்று இவ்வினையெச்சம் அமைந்துள்ளது' என்று வரை கின்றனர். இஃதோர் அரிய செய்தியாகும்.

`புலனடக்காத பூசையாற் பயனின்று' என்ற கருத்துரையை அப்பாடலால் விளக்கிக் காட்டியதும் பயனுள்ள செய்தியாகும்.

`தலையே நீ வணங்காய்' என்ற பதிகத்துப் பாடல்கள் முழுமைக்கும் அமைந்துற்ற உரைப்பகுதிகள் ஆழமுடைமையும், அரும் பொருளமைதியும் கொண்டனவாய் அமைந்துள்ளன. ஒவ்வொரு சொல்லுக்கும் விரிவுரைகண்டு பொருளின்பத்தில் நம்மை ஆழ்த்துகின்ற பெருமை உரையாசிரியர்க்கு வாய்த்த ஒன்று.
"நெஞ்சே நீ நினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும்மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்"

என்ற 87ஆம் பாடலின் உரையில், நிமிர் புன்சடை என்ற தொடர்க்கு உரை எழுதுகின்றார்:

"அவன் நின்மலனாதலைப் புறக்குறியாய் விளக்குவது ஈதென்பார் `சடை' என்றும், அதனை உடையார்க்கும் அவனை உடையார்க்கும் என்றும் உள்ளது உயர்ச்சியே என்பார் `நிமிர்சடை' என்றும், அது நிறத்தாலும் விளங்கும் என்பார் `புன்சடை என்றும் அருளினார்".

`புன்சடை' என்பதற்கு நம் உரையாசிரியர் கொள்ளும் பொருள் இனியதொன்றாம். `பொன்சடை என்பது புன்சடை என மருவிற்று; ஈண்டுப் புன்மை கொள்வார் புல்லரே' என்று எழுதி யுள்ளார்.

`கால்களாற் பயனென்' என்று தொடங்கும் (பா. 90) பாடலில் கோகரணம் என்பதற்குப் பொருள் உரைக்குங்கால்;

`தமிழகத்துத் தலப்பெயர்க் காரணம்போல் தள்ளத்தக்கதன்று இது. வடமொழி சிறிதுணர்ந்தாரும் பெயர்க்காரணம் காட்டி மெய்ப்பிக்கும் அக்காலத்தில் தமிழில் வழங்கப்பெற்ற ஊர்ப்பெய ரெல்லாம் வடமொழிப் பெயராக்கிக் கதை புனைந்து வழங்கும் பொய்க்கிடமாயின' என்றெழுதுதல் உரை ஆசிரியரது உண்மைத் தமிழ்ப்பற்றின் மெய்யுறுதிப்பாட்டை நன்கு அறுதியிடும் ஓர் இட மாகும். `இல்லக விளக்கது இருள் கெடுப்பது' என்று தொடங்கும் (பா. 111) பாடலுக்கு அமைந்த உரையில் `நல்லக விளக்கு' எனப் பட்டமைக்குக் காரணம் எழுதும் இடம் உரை ஆசிரியரின் தமிழ்நடை அழகும் ஆற்றலும் வாய்ந்ததென்பதற்குத் தக்க சான்றாகும்:

"உணர்விற்கு விடயமாகக் காணப்படும் பசுபாசங்களோடு ஒப்ப வேறு காணப்படாத பதிப்பொருளாகிய முதல்வனைத் தன் அகத்தின்கண் அஞ்செழுத்து ஓதும் முறையால் காணும் ஆயின், கோலைநட்டுக் கயிற்றினாற் சுற்றிக் கடையவே விறகினின்றும் தோன்றும் தீயைப்போல அம்முதல்வன் அங்குத் தோன்றி, அறிவிற்கு அறிவாய் விளங்கிநிற்குமாகலின் `நல்லகவிளக்கு' எனப்பட்டது.

"மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்" எனத் தொடங்கும் (பா. 118) பாடலின் விளக்கவுரையிறுதியில் `இப் பாடலைச் சிவபூசை முடிவிற் சொல்லிவருதல் சைவரது வழக்கம்' என்று தம்மநுபவத்தையும் உள்ளடக்கி நம்முரையாசிரியர் வரைந் திருத்தல் உணர்க.
"வஞ்சித்தென் வளைகவர்ந்தான்" என்ற பாடலில்,
"அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
குஞ்சிப்பூவாய் நின்ற சேவடியாய் கோடியையே"

என்ற வரிகட்கு வினைமுடிபும் தெளிபொருளும் தக்க மேற் கோள்களோடு எழுதியிருத்தல் இன்புறத்தக்கது.
நம் உரையாசிரியரின் உரைநடை சேனாவரையர் நடை போன்றது; சிவஞானமுனிவர் நடைபோன்றது. எடுத்துக்காட்டு வேண்டுமாயின், இந்நாலாந்திருமுறையின் குறிப்புரைப் பகுதிகளை - குறிப்பாக பதிகம் 14 தசபுராண உரையாக எழுதப்பட்டுள்ளவற்றைப் பயின்று பாருங்கள். எதுகை மோனைகளும் அமைய எழிலோடு அமைந்துள்ளன இப்பகுதிகள்.

"பெருவேளூரெம் பிறப்பிலியைப்

பேணுவார்கள் பிரிவரிய

திருவாஞ்சியத் தெம்செல்வனைச்

சிந்தையுள்ளே வைத்தேனே"

என்ற பாடற் பகுதியில் (பா. 150) வாஞ்சியம் என்றதன் பொருள் தோன்றப் பேணுவார்கள் என்றார் என்று குறிப்பாக அத்தலத்தின் பெயர்க் காரணத்தைப் புலப்படுத்தியுள்ள திறம் பெரிதும் மதிக்கத் தகுந்தது.

தில்லையில் நள்ளிராக் காட்சியும் திருவாரூரில் திருவந்திக் காப்புக் காட்சியும் மிக்க சிறப்புடையன என்ற செய்தியை 172-ஆம் பாடல் உரையில் திருவாரூர் உலாவைக் கொண்டு விளக்கியிருத்தல் உணரத்தக்கது. பாம்பைப் பற்றிய பல செய்திகளைச் சிந்தாமணி, தசகாரியம், சித்தராரூடச்சிந்து ஆகிய நூல்களின் மேற்கோள்களைக் கொண்டு `பத்துக் கொலாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்' (பா. 186) என்ற விடந்தீர்த்த பதிகத்துக் கடைக்காப்புச் செய்யுளில் விளக்கி யிருத்தலும் விழுமியதே. குஞ்சி இருபாலார் தலைமயிர்க்கும் பொதுப் பெயர் என்ற கருத்தும் குருக்கண்மார், செட்டிமார் என்பன குருக்கள் மகார், செட்டிமகார் என்பனவற்றின் மரூஉவே என்ற கருத்தும் 203 ஆம் பாடல் உரையில் காட்டப்பட்டுள்ளன.

திருவாரூர்த் திருத்தலத்து ஆதிரைநாட் பெருமையை அருளும் `முத்து விதானம்' என்ற பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் வினைமுடிவு விளங்கவில்லை. இதற்கு விளக்கம் எழுதப்புகும் உரையாசிரியர் உள்ளத்தே நகைச் சுவை அரும்புகிறது; குறுமுறுவல் விளைக்கின்றார். "இத்திருப்பதிகம் முழுதும் வினைமுடிவு விளங்காத வாறுள்ளது. வினைமுடிவு விளங்காமை உயிர்க்கு இயல்பன்றோ?" என்று எழுதியுள்ள பகுதியை நினைக்குந்தோறும் கருத்திலே முறுவல் எழுதல் இயல்பேயல்லவா? (பா. 208).

சம்பிரதாயங்களைப் பேணுதலிலும், அவை வழுவாமல் உரை யெழுதுவதிலும் நம் உரையாசிரியர்க்கு உள்ள, உள்ள மிகுதியைப் பழகி யறிந்த நான், அவர்தம் குறிப்புரையைப் படிக்குந்தோறும் ஒவ்வொரு எழுத்திலும் சம்பிரதாயமணம் கமழ்வதை உணரலானேன். எடுத்துக்காட்டாக, இரண்டு இடங்களை ஈண்டுக் குறித்திட விழை கின்றேன்.

"நாகங் கொப் பளித்த கையர் நான்மறை யாய பாடி

மேகங் கொப் பளித்த திங்கள் விரிசடை மேலும் வைத்துப்

பாகங் கொப் பளித்த மாதர் பண்ணுடன் பாடி யாட

ஆகங் கொப் பளித்த தோளா ரதிகை வீரட்ட னாரே"

என்ற திருவதிகைவீரட்டானத்துப் பாடலின் (பா. 246) உரையில்:- `மாதர் பண்ணுடன் பாடியாட" என்பது அம்பிகை பண்ணொடு பாடுதலும் அன்றி ஆடுதலும் செய்தாள் என்று குறித்தலாலும் ஆடுதல் காளியம்மைக்கே உரியதாக்கிக் கூறுதலாலும், சிவகாமவல்லிக்கு ஆட்டம் உண்டென்னல் மரபு அன்று ஆதலாலும், பாடி என்றதைப் பாட என்று செயவெனெச்சமாகத் திரித்துக் கொள்ளல் நன்று" என்று எழுதியிருக்கும் இடத்தினை ஓர்க. மற்றப்பகுதி வருமாறு:- `கொண்ட தொர் கோலமாகி'- எனத்தொடங்கும் பாடல் (பா. 440) உரையில் `எல்லாத் தலங்களிலும் கோயில் கொண்டிருக்கும் முழுமுதல் ஒருவனே. அவனே ஞானானந்த நடனம் புரிபவன். ஐந்தொழிற் கூத்தன். இவ்வுண்மை யறியாதார், திருமுறையில் திருக்கூத்தன் என்றுள்ள இடந்தோறும் மகேசுவரமூர்த்தியாகிய நடராசர் என்பர்

"வரிமுரி பாடி யென்றும் வல்லவாறடைந்து" எனத் தொடங்கும் பாடல் உரையில் (பா. 254) சிலப்பதிகாரம், தொல்காப்பியச் செய்யுளியற் பேராசிரியம் முதலியவை கொண்டு வரிப் பாடல், முரிப் பாடல் என்ற இரு தமிழ்ப் பழம் பாடல்களின் பொருளை விளக்கி யிருத்தல் சிந்தித்து இன்புறத்தக்கது.

பஞ்சமம் என்ற பண், பண் சமம் என்ற இருசொற்களின் இணைப்பே என்று விளக்கிய உரையாசிரியர், காந்தாரம் என்ற பண் அப்பர் சுவாமிகள் வாக்கில் கந்தாரம் என்று ஆளப்பட்டதுபோலவே (கந்தருவம்) கந்திரம் என்றும் ஆளப்பட்டிருக்கலாம் என்று 313-ஆம் பாடல் உரையில் மொழிந்திருத்தல் ஆய்வுக்குரிய தொன்றாகும்.

"கந்திருவங்கள் கேட்டார் கடவூர் வீரட்டனாரே"

என்ற பகுதியிற் குறிக்கப் பெற்றமை காண்க.

திருவிடைமருதூர்ப் பதிகமாகிய திருநேரிசை "காடுடைச் சுடலை நீற்றர்" எனத் தொடங்குகிறது. இரண்டாம் பாடல் "முந்தை யார் முந்தியுள்ளார்" என்ற தொடக்கம் உடையது.

"சந்தியார் சந்தியுள்ளார்" (பா. 345) என்ற தொடர்க்கு நம் உரையாசிரியர் காணும் விளக்கம் நம் கருத்தைக் கதுவுகிறது. `சந்தியாவந்தனம் புரிபவரது சந்தியாதியானத்திலும் அச் சந்தியிலும் விளங்கும் திருவருளுருவின ராயிருப்பவர். சந்தியார்; சந்தியாதியானத்தைச் செய்யும் வேளை யாகிய சந்தியையுடையவர், என்று சரியையாளர், கிரியையாளர், யோகியர், ஞானியர் ஆகிய நால்வகையாரையும் குறித்தது. "சந்தி யானைச் சமாதிசெய்வார் தங்கள் புந்தியானை". (தி.5 ப.44 பா.2)

`விண்ணென வரூஉம் காயப்பெயர்' என்ற (தொல்-365) சூத்திரத்தில் வெயிலும் நிலவும் காய்தல் பற்றி விண்ணைக் காயம் என்னும் தமிழ் வழக்குண்மை உணர்க. ஆகாசம் என்னும் வடசொல் முதற்குறையாய்க் காசம் என வராது. வரின் அது காயம் என மருவலாம் என்று 361ஆம் பாடல் உரையில் எழுதியிருத்தல் சிந்தனைக்கு ஓர் விருந்து.

பதசாரம் எழுதுதல் நம் உரையாசிரியரின் தனியியல்பு. ஆசிரியரது உள்ளத்தை அவ்வண்ணமே அறிந்து எழுதும் தனிப் பண்பு இவரது உரைப் பண்பாதலுக்கு ஓர் எடுத்துக்காட்டு 402ஆம் திரு நேரிசைக்கு எழுதும் இவர்தம் உரைநடையாகும். அதனை ஈண்டுக் கண்டு கழிபேருவகையாதல் கடனே யல்லவா?

அப்பகுதி:-
"சிவபெருமானுக்குச் சொரூபம் சிவஞானமேயாதலின் `உமையலாதுருவமில்லை' என்றும். உடைமை உலகம், அடிமை உயிர்கள். இரண்டும் உடைப்பொருள். அவற்றுள் உடைமையை `உலகலாதுடையதில்லை' என்றும் அடிமையை `நமையெல்லாம் உடையர் ஆவர்' என்றும், அவனுடைமையான உலகம் அவன் அருள்வழி நின்றொழுகும் அடிமைகளாகிய உயிர்கட்கு நன்மையே யன்றித் தீமைபயவாமையின் `நன்மையே தீமையில்லை' என்றும், வினைப்பயனாக எய்தும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு மேலும் வினையேறாது திருவடித்தொண்டு பூண்டார்க்கு அளவிலாது அருள்கொடுப்பது ஆண்டானது கடமையாதலின் `கமை (பொறுமை) யெலாம் உடையராகிக் கழலடிபரவும் தொண்டர்க்கும் அமைவு இலா அருள்கொடுப்பர்' என்றும் அருளினார் மொழிவேந்தர்".

சொற்களின் ஆழத்தில் திருநாவுக்கரசு சுவாமிகளின் அருள் அனுபவத் தோய்வோடு கூடிய கருத்துக்களை அள்ளி வழங்கும் பெருமை நம் உரையாசிரியர்க்கு வாய்த்த அருமையை என்னென்பது!

திருக்கச்சி மேற்றளிப் பதிகத்தின் (பா. 43) முதற்பாடல் உரை யிலேயே (பா. 424) ஆசிரியரின் தமிழ்ப்பற்றும், சிவதலப் பற்றும் ஒளிவிடுகின்றன. `கறையது கண்டம் கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்' என்ற மூன்றாவது வரிக்கு அகல உரை எழுதுகின்றார்:- காஞ்சி - காஞ்சி என்னும் மரம் பற்றிய காரணப் பெயர்; இதனை வட சொல்லாகக் கொண்டு பல பொருள் கூறும் கற்பனை வேறு; இவ் வுண்மை வேறு. ஆலவாயில். வன்னியூர், குற்றாலம் முதலிய தமிழ்ப் பெயர்களையும் வடமொழி யறிவிற்கேற்ப மொழிபெயர்த்த திறத்தை யறிக. வாயாற் சொல்லாது உளத்திலெண்ணியவற்றைச் சொன்னவாறு அறிவார் என்னும் பொருளதாய்ச் சொன்னவாறறிவார் என்றதை `உக்தவேதி' என்றால் சொன்னதை அறிதலில் வியப்பென்னை? மொழி பெயர்ப்பின் குறைகட்கு இதுவும் ஒரு சான்றாகும்.

இந்த உரைப்பகுதியை மட்டும் படித்தலே போதும். உரை யாசிரியர் தெய்வத் தமிழினிடத்தில் வைத்திருக்கும் பற்றை உணரலாம். எல்லாப் பற்றை விட்டவர்க்கும் தமிழ்ப் பற்றை விட முடியாதபோது, மனையற வாழ்க்கை மேற்கொண்டு மாண்புறும் இவ்வுரையாசிரியரை - தந்தையாரிடமிருந்தே தமிழிலக்கண இலக் கியங்களைத் தக்கவண்ணம் கற்ற இவ்வுரையாசிரியரை - பல சித்தாந்த சாத்திரங்களது விளக்க நூல் ஆசிரியரை - பல்லாண்டுகள் மாணாக்கர் களுக்குத் தமிழ் பயிற்றிவரும் இப்போதகாசிரியரைச் செந்தமிழ் பிணித்துக் கொண்டிருத்தலில் வியப்பும் உண்டோ?

இவ்வாறு, திருமயிலாடுதுறைத்தலத்து எழுந்தருளியுள்ள அஞ்சொல் நாயகி என்ற அருமையான செந்தமிழ்ப் பெயரை, அஞ்சல் நாயகி என்று பிறழ உணர்ந்து, அபயாம்பிகை என மொழி பெயர்த்து விட்டனர் சில மொழியறியா மனிதர். இதனை உரையாடுங்கால் என்னிடம் கூறி இவ்வுரையாசிரியர் உள்ளம் வருந்தியதுண்டு. தமிழ் மொழியிற் பல்லாண்டுகளாகப் பழகி அதனைத் தம்முயிராகப் பேணிவரும் பெருந்தகையாளராதலின், இவ்வுரையாசிரியர் தம்முடைய உரைப்போக்கிலும் அப்பற்றைத் தம்மை யறியாமலேயே வெளிப்படுத்துவாராயினர் எனலாம்.

பிறநூல் தெளிவுரை பகுதிகளில் சில:

(1) "ஏமத்தும் இடையிராவும் ஏகாந்தம் இயம்புவார்க்கு ஓமத்துள் ஒளியதாகும் ஒற்றியூருடைய கோவே"

என்ற (பா. 44) பாடல் உரையில், ஏகாந்தம் - ஒருதலை. பரிமேலழகர் உரையின் வாய்மையை உணரமாட்டாமல் பொருத்தம் இன்றி எழுதியதோருரையைப் பொருளாகக் கொண்டு செல்வம் என்று உரைப்பது பொருந்தாது. இறைவனை இயம்புவார்க்கு ஏகாந்தம் இன்றி அநேகாந்தம் ஒவ்வாது" என்றெழுதியிருத்தல் அறிவிற்கோர் புதுமை.

(2) கம்பராமாயணத்தில் ஓர் பாடலுக்கமைந்த நேரிய பொருளைத் திருவையாற்றுப் பதிகத்துள் ஓர் பாடல் உரையில் (பா. 894) விளக்கியுள்ளார் நம் உரையாசிரியர்.

"பொலம்புண்டரீகப் புதுமலர் போல்வன்" என்ற தொடரில் புதுமலர் - நாண்மலர் என்று பொருளெழுதியபின் உரையாசிரியர் இதற்கு ஓர் ஒப்புமைப் பகுதியாகக் கம்பன் பாடலைக் காட்டுகிறார். எப்படி?

"இராமன் திருமுகச் செவ்விநோக்கில் ஒப்பதே முன்பு பின்பு, அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது, அலர்ந்த செந்தாமரை யினை வென்றது" - இங்கு முன்பும் பின்பும் தாமரையை ஒப்பது; வாசகம் கேட்ட அப்பொழுது மாத்திரம் அம்மலரை வென்றது இராமன் திருமுகம் என்ற வாய்மையை உணர்க. முன்பு, பின்பு. அப்பொழுது என்ற முக்காலத்தையும், சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக் கும் முகம் அதனை வென்ற பொழுதைக் கூறும் அரியதோர் இடத்தை யும் உணராத பிறர் `கேட்ட அப்பொழுது' என்னாது `அப்பொழுது அலர்ந்த செந்தாமரை' என்றனர்.

முன்பு திருக்குறளில் ஓர் சொல்லாட்சியைச் சமயம் வந்த போது நன்கு விளக்கிய நம் உரையாசிரியர், இவ்விடத்துக் கம்பநாடன் கருத்தொன்றினை விளக்கியுரைத்தமை போற்றத்தக்கது.

(3) இவ்வாறே பெரியபுராணத் திருவிருத்தம் ஒன்றின் உண்மைப் பொருளையும் விளக்குகின்ற பொறுப்பு நம் உரை யாசிரியர்க்கு வந்து விடுகிறது. மரபு காக்க வேண்டுமென்ற மனப் பாங்கின் உரத்தால் இவ்வாறு இடம் கண்ட விடத்தெல்லாம் இனிது விளக்கிச் செல்லல் இவர்தம் மியல்பு.

"சொற்றுணை வேதியன் சோதிவானவன்

பொற்றுணைத் திருந்தடிபொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணையாவது நமச்சிவாயவே" (பா. 104)

என்ற பாடல் உரையில் இந்த இயல்பு மிளிர்கின்றது. கடலிற் பாய்ச்சிய மெய்ம்மை

"கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்

ஒல்லை நீர்புக நூக்க என் வாக்கினால்

நெல்லு நீள்வயல் நீலக்கு டியரன்

நல்ல நாமம் நவிற்றிஉய்ந் தேன்நன்றே"

என்றுள்ள வாய்மையாதல் உணர்க. இருவினையாகிய பாசத்தால் மூன்று மலமாகிய கல்லொடு கட்டியிருத்தலின் மாறி மாறி வருகின்ற பிறவிப் பெருங்கடலில் வீழ்கின்ற அறிவிலுயிர்களும் பேரின்பக் கரையேறிட அருளும் அத்தகைய பேராற்றல் உடைய திருவைந் தெழுத்து, உணர்வுருவான நாவுக்கரசரை மிகச் சிறிய இவ் வுவர்க் கடலில் ஒரு கல்லின்மேல் ஏந்திக் கரையேற்றிடலை உரைத்தல் வேண்டுமோ? (தி.12 பெரியபுராணம். பா. 1394) ஒருகல் முக்கல் என்னும் நயம் அறியாமல், `இருவினைப்பாசமும்' எனப் பிரித்துப் பொருந்தா உரையெழுதியிருத்தல் சேக்கிழார் திருவுள்ளத்துக்கு ஏலாது" என்ற உரைப்பகுதி இதனை உள்ளடக்கி நிற்றல் காண்க. யாண்டும் ஓர் பெரியபுராணப் பாடலில்கூடச் சம்பிரதாயத்துக்கு மாறானபொருள் எழுதுதல் கூடாது என்பது இவ்வுரையாசிரியர் கொள்கை.

`சம்பிரதாய தீபம்' என்ற நூலையே தமிழகத்துக்கு வழங்கிய தருமையாதீனத்தே வாழும் புலவராகிய இவர் சம்பிரதாயங்களைக் காக்கக் கண்ணுங் கருத்துமா யிருத்தலில் வியப்பில்லையல்லவா?

இலக்கணச் சூத்திரங்களை இவ்வுரையாசிரியர் விளக்கிச் செல்லும் இடங்கள் பலப்பல. சித்தாந்த சாத்திரக் கருத்துக்கள் தம் உரை முழுதும் விரவி மணக்க எழுதியுள்ளார். சமய இலக்கண, மொழி இலக்கண விஷயங்களில் இவ்வுரையாசிரியர் எல்லை தேர்ந்தவர் என்பதனை இவ்விடங்களில் அறிகின்றோம். இவர் தம் உரையில் இன்னின்ன இடங்களில்தான் சித்தாந்த சாத்திரக் கருத்துக்கள் சிறந்து உள்ளன என்று காட்டுதல் மிகை.

தொட்ட இடமெல்லாம் சாத்திர மணம் வீசுகிறது இத்திருமுறை உரையில். சாத்திரமும் தோத்திரமும் இணைப்புள்ளவையென்ற தத்துவத்துக்கு இலக்கியம் இத்திருமுறைக் குறிப்புரையே என்றும் கூறிவிடலாம்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினர் வாயிலாகத் திருப்பனந்தாள் காசிமடம் வழங்கிவரும் சாத்திரப் பரிசாகிய ஆயிரம் வெண்பொற்காசுகளையும் பெற்றுச் சிறக்கும் பெருந்தகையாரன்றோ இப்புலவர் திலகர்! அதனுடன் `மெய்கண்ட சாத்திரம்' முழுமையும் ஆராய்ந்து பல ஏட்டுச் சுவடிகளையும் ஒப்புநோக்கி நிறுவி ஆதீனச் சார்பில் அதனை வெளியிடும் விழுப்பமும், `தோத்திரங்களும் சாத்திரங்களும்' எழுதி அச்சிடும் அருமையும் வாய்ந்த நூலாசிரிய ராதலின் இவர் எழுதும் எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் சாத்திரக் கருத்துக்கள் தாமாக வந்து பாய்கின்றன. ஒவ்வொரு கருத்தும் இனிமையும் அருமையும் வாய்க்க வந்து வந்து தோய்கின்றன. இஃது ஒரு தனியழகு.

திருநாவுக்கரசு சுவாமிகளின் அநுபவ இன்பம் தோய்ந்த இவ்வரிய திருமுறைக்கு இத்தகையரோர் முதுபெரும் புலவரே இத்துணைத் தனியழகோடு உரையெழுதமுடியும் மெய்ம்மையைத் தமிழகம் இவ்வுரைநூலால் உணரலாகும். திருமுறைக்கு உரைகாண்டல் என்பதே தெளிவுள்ள சிந்தையாலேயே முடியும். அதிலும் அப்பர் சுவாமிகள் வாய்மொழியில் ஒவ்வோர் சொல்லும் ஆழமுடைய சொல். எழுத்தும் ஆழமிக்க எழுத்து. அசையும் தெய்வீகத்தன்மை சார்ந்த அசை. இவ்வுரைநூலை முற்றப் பயின்றால்தான், இதனை உரையாசிரியர் எழுதுதற்கு எவ்வளவு பெருமுயற்சி எடுத்துக்கொண்டிருக்க வேண்டுமென்பது புலனாகும். பலப்பல பாடல்களுக்கு வினை முடிவு காண்டலே அருமை. பொருள் உணர்தல் அதனினும் அருமை. படிக்கும்போது தோன்றும் பொருள் எழுதும்போது நலமே வெளிவரல் அதனினும் அருமை.

இந்த அருமையான சோதனையில் ஷ்ரீ சொக்கலிங்கப் பெருமான் திருவருளும், ஷ்ரீலஷ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களின் திருவருளும், திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவடித் துணையும் கொண்டு வெற்றி பெற்றுள்ளார் உரையாசிரியர் முதுபெரும் புலவர் திரு. முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் அவர்கள். இத் திருமுறைப் பணியில் இவ்வுரையாசிரியர் தூங்காமற் சிந்தனையோடு கழித்த இரவுகள் பலப்பல.

சிந்தனை தோய்ந்த முகத்தோடு, எஞ்ஞான்றும் காட்சியளித்த பகல்களும் பலப்பல. அல்லும் பகலும் அப்பரடிகள் அருளமுதத்தில் தோய்ந்து, சொல்லுக்குச் சொல், தொடருக்குத் தொடர், பாடலுக்குப் பாடல் ஆழ்ந்து ஆழ்ந்து கருத்து முத்துக்களை எடுத்தெடுத்து இனிய கோவையாக்கி இஞ்ஞான்று சொக்கலிங்கப் பெருமான் திருவடிகளில் அம் முத்துக் கோவையைச் சூட்டுமளவுக்கு இவ்வுரையாசிரியர் பெரும்பேறு பெற்றிருக்கின்றனர்.

இதற்கிடையில் ஆதீன உற்சவங்களிலும், சமயப் பிரசாரக் கூட்டங்களிலும் தாம் இந்நூலிற் கண்டுள்ள அரும் பொருள்களை வெளிப்படுத்தியுள்ளனர் இவ்வுரையாசிரியர். பலகாலும் இப் பேராசிரியர்பால் கேட்டறிந்த நாவரசர் பாவமுதக் கூட்டெல்லாம் இக்காலைத் திரண்டு ஓர் இனிய நூல் வடிவாதலைக் காணுந்தோறும் உலகத் தமிழர் அனைவர் உள்ளமும் விரியும்; அப்பர் அடிகள் திருவடிமலர்களில் குவியும் என்பதில் ஐயம் இல்லை.

நன்றி செலுத்த முற்படும் அன்பர் மனமெல்லாம், இத்திருக்கை வழக்கத்தை நல்ல உரையாசிரியர் வாயிலாக நாட்டினுக்கு வழங்கி அருளிய எங்கள் குருமுதல்வரும், தருமை ஆதீனத்து 25ஆவது அருளரசரும் ஆகிய சீலத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் திருவடி மலர்களுக்கே நன்றி செலுத்துக.

அவர்கள் ஆட்சி ஓங்குக! திருவருள் பணிகள் உலகெங்கும் தேங்குக! இனிவரும் திருமுறைப்பணிகளும் இவ்வண்ணமே இனிது நிறைவெய்துக! என்று தமிழர் நெஞ்சுகள் தமிழ்ச் சொக்கன் தண்ணருளை நோக்கித் துதி பாடுகின்றன. வாழிய வையகம்! வாழிய சைவத் திருமுறை திருநெறிகள்!