04 முகவுரை
தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்
"ஒருமருந் தாகி யுள்ளாய் உம்பரோ டுலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளாய் ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமருந் தாலவாயில் அப்பனே அருள்செ யாயே."
தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்
பன்னிரண்டு திருமுறையுள், திருக்கடைக்காப்பென்னும் மூன்றும் திருஞானசம்பந்தருடைய திருமொழியாகும்.
நாலாவது இத் திருமுறை. ஐந்தாவது திருக்குறுந்தொகை. ஆறாவது திருத்தாண்டகம். இம் மூன்றும் திருநாவுக்கரசர் திருமொழி.
ஏழாவது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியது.
எட்டாவது மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம். கோவைத் திருவாசகமும் அதில் அடங்கும்.
ஒன்பதாவது திருவிசைப்பா. திருப்பல்லாண்டும் அதனையடுத்து உளதாகும்,
பத்தாவது திருமந்திரம். அது திருமூலதேவ நாயனார் அருளியது.
பதினொன்றாவது திருமுறை பல பிரபந்தங்களின் தொகுதி.
பன்னிரண்டாவது திருத்தொண்டர் புராணம்; சேக்கிழார் நாயனார் அருளியது. அதைப் பெரியபுராணம் என்று வழங்குவர்.
திருமுறைகளைத் `தோத்திரம்' என்பர். மெய்கண்ட நூல்களைச் `சாத்திரம்' என்பர். அவற்றைச் சைவர் எல்லாரும் போற்றுவர். `திருமுறை' முதலியன பண்டு பனையோலை வடிவில் அமைந்திருந்து இன்று தாள் வடிவிலும் உள்ளன.
முறை என்பது நிரல் படச் செய்த பொருட் கோவையைக் குறிக்கும். `கிரமம்' என்ற வடசொற் பொருளைத் தமிழில் `முறை' என்பது கொடுக்கும். நிரல் படத் தொகுத்த பொருட்கோவை பனுவல் (புத்தகம், பொத்தகம், நூல்) எனப்படும். அதை `முறை' என்றும் முன்னோர் மொழிந்தனர்.
ஆசிரியர் தமது நூலை அமைத்த முறையில், கற்போர் உணர்தலும் கற்பிப்போர் உணர்த்தலும் கடன். `இறையும் ஞானம் இலாத என்புன்கவி முறையின் நூலுணர்ந்தாரும் முனிவரோ' என்ற கம்பர் கூற்றாலும் அது விளங்கும். நூலுணர்ச்சிக்கு அந் நூல் ஆசிரியர் அந் நூலில் அமைத்த முறையும், உரையாசிரியர் அந் நூற் பொருளை உணர்த்தும் முறையும், அந் நூலின் பொருள்கோளாளர் உணரும் முறையும் `முறை' என்னும் பெயரின் பொருள் முதனிலையாகும்.
" இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன்
முறைவரை வேன்என முயல்வ தொக்குமால்
அறுமுகம் உடையதோர் அமலன் மாக்கதை
சிறியதோர் அறிவினேன் செப்ப நின்றதே "
என்னும் கந்தபுராணத்து அவையடக்கப் பாடலில், `முறை' என்றது `பொத்தகம்' என்னும் பொருளைக் குறித்தல் காண்க.
பண்டைப் பள்ளிகளில், ஆசிரியர், தம் மாணாக்கர் பலரையும் `முறை' சொல்வித்தல் உண்டு. அம் `முறை'யே ஓதுவித்தலுக்கும் ஓதலுக்கும் உரித்து. கற்பித்தற்கும் கற்றற்கும் ஓதுவித்தற்கும் ஓதற்கும் முறை பிறழ்ச்சி சிறிதும் கூடாது.
இத்தனையும் கருதியே ஆன்றோர், `முறை' என்னும் பெயரைப் பொத்தகத்திற்கு இட்டனர். `புஸ்தகம்' என்னும் வடசொல்லின் திரிபாகிய புத்தகம் வேறு. பொத்தகம் வேறு. `பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள்சேர் ஞான வித்தகம் தரித்த செங்கை விமலை' என்ற கம்பர் மொழியை ஈண்டுக் காண்க. பொத்து + அகம். பனையோலையேட்டைப் (பனைக்குரிய போத்து எனும் பெயர் பொத்து எனவாகி அது ஆகுபெயராய் ஏட்டுக்காகி அவ்வகையால் ஏட்டுச் சுவடி பொத்தகம் என ஆயிற்று எனலுமாம்.)பொத்தும் முறைமை உணர்வார்க்கு அது தமிழ்ச்சொல்லாதல் புலனாகும்.
இதுகாறும் உணர்த்தியவாற்றால், `திருமுறை' என்றது `அருள் நூல்' என்னும் பொருளதாதல் நன்கு விளங்கும். பனுவல், நூல் என்ற பெயரின் காரணங்கள் முன்னோரால் விளக்கப்பட்டுள்ளன.
`அருள் நூல்' என்றது வடிவையும் பொருளையும் குறித்தல் வழக்கில் அறியப்படுகின்றது.
`தோத்திரம்' என்பதும் தோத்திர நூல்களையும் அந் நூல்களில் அமைந்த தோத்திரப் பாடல்களையும், அப் பாடல்களின் உருவாய்த் திகழும் போற்றுக்களையும் உணர்த்தும்.
`வீரட்டானத்துறை அம்மானே, நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்; நினையாது ஒருபோதும் இருந்தறியேன்; என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்; அஞ்சேலும் என்னீர்' என முன்னிலையிலே அமைந்த போற்றும்-
`கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்; முப்போது முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை; அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி; எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே' என்று கடவுளைப் படர்க்கையிலும் கடவுளைக் குறித்த தனது செயலைத் தன்மையிலும் கூறிய போற்றும் -
`தோத்திரம்' என்றே சொல்லப்படும். இந் நாலாந் திருமுறையிலே பலவகைப் போற்றும்-
இலங்குகின்றன. விரிவஞ்சி
ஈண்டு அவற்றைக் குறித்திலேன்.
`மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னியமன்னே' என்றது மணிவாசகம். அத்திறத்தில், தோத்திரமோ சாத்திரமோ கடவுளே அவற்றின் உருக்கொண்டு, அருளப்பெற்றால் தான் அவற்றின் பயன் உயிர்க்கு உண்டாகின்றது.
கடவுளும் கடவுளருள் வழிப்பட்ட சான்றோரும் அருளாவகையில் வந்த பிறர் தோத்திரமும் சாத்திரமும் என்றும் எவர்க்கும் பயன்படா. இவ்வுண்மையை நிறுவப் பற்பல நூல்கள் உள்ளன.
திருநாவுக்கரசு சுவாமிகள், இத் திருமுறையிலே `பண்ணிய சாத்திரப் பேய்கள்' (பா. 982) என்றதன் கருத்தை உணர்வோர்க்கு இது தெளிவுறும்.
`அல்லும் பகலுமாய் நின்றார் தாமே' எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தில் `சொல்லும் பொருளெலாம் ஆனார்தாமே தோத்திரமும் சாத்திரமும் ஆனார்தாமே' என்றருளினார் திருநாவுக்கரசர். அதில், சிவபிரான் அல்லும் பகலும், அந்தியும் சந்தியும், சொல்லும் பொருளும், தோத்திரமும் சாத்திரமும், பாவும் ஆகும் பொது வியல்பு (தடத்த ரூபம்) கூறப்பட்டது.
அன்பு முதிரச்செய்து அருள் பெறுவிப்பது தோத்திரம். அருளை (அறிவை) முற்று வித்து அழியாத இன்ப அன்பு அடைவிப்பது சாத்திரம்.
"ஆனாய் என்பது அனைத்தும் அவ்வகை
தான்ஆ காமையைச் சாற்றிடும் என்க."
சங்கற்பநிராகரணத்தில், உமாபதிதேவ நாயனார் அருளிய இவ்வுண்மையை உணர்க. சிவபெருமானுடைய உண்மையியல்பு (சொரூபலட்சணம்) ஒரு காலத்தில் ஆவதன்று; என்றும் உள்ளது. ஆவன அனைத்தும் முன்னின்மை (பிராகபாவம்) முதலியவற்றை உடையனவாகும். சிவபிரானார் `தோத்திரமும் சாத்திரமும் ஆனார்' எனின், அவர், அவ்விரண்டும் ஆவதன்முன் அவையாயில்லை. அவர் அவ்விரண்டுருவும் ஆன பின்னரே அவ்வத் தோத்திரமாகவும் சாத்திர மாகவும் அவரைப் போற்றிப் பயன் எய்துதல் உயிர்கட்குக் கூடும். கூடுங்கால், அம் முழுமுதற்பொருள் `தோத்திரம்' என்னும் சொல்லின் பொருளாய்த் திகழ்கின்றார். அவ்வாறு திகழும் சிவபெருமானைத் தோத்திரங்களாக வழிபடும் ஆற்றல் சிலர்க்கே எய்தும். அத் தோத்திரங்களையுடைய ஏட்டு வழிபாடுதான் பெரும்பாலும் நிகழும். இரண்டுமாக வழிபடுவது சாலச் சிறந்தது.
திருமடாலயங்களில் இச் சிறப்பு வழிபாடு நாடோறும் நிகழ்கின்றது. தோத்திரம் சாத்திரம் இரண்டையும் அவ்விருவழியிலும் போற்றுதல் அறிவும் அருளும் பெறுவார்க்கு உரிய கடனாகும்.
ஆதலின், தோத்திர நூல்களும் சாத்திர நூல்களும் கிடைக்கும் வழியை வகுத்தல் சிவ நல்வினையுள் மிகச் சிறந்ததாயிற்று. ஆகவே, அவ்விரண்டு திறத்து நூல்களையும் உரிய காலங்களில் வெளியிடும் அருட்பணியை இத் தருமை ஆதீனம் கடைப்பிடித்துச் செய்துவருகின்றது.
25 ஆவது பட்டம் குருமகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், அத் திருமுறைகளைக் குறிப்புரையுடன் வெளிட்டு வழங்குவது சாலச் சிறந்தது என்று திருவுளங்கொண்டு, முதல் மூன்று திருமுறைகளையும் அரும் பெருங் குறிப்புரைகளுடன் வெளியிடச்செய்து, உலகர்க்கு அருள்நூற் கொடையாக நல்கியருள்கின்றார்கள். ஒவ்வொன்றும் ஐந்தாயிரம் (5000) படிகள் அச்சிடப்பெற்றுள்ளன.
இந் நாலாந் திருமுறைக்குக் குறிப்புரை எழுதுக என அடியேனைப் பணித்தருளினார்கள். அவ்வருளைப் பெறப் பல பிறவிகளிற் செய்த தவத்தின் பயன் காரணம் என்று கருதி அளவிலாக் களிப்பெய்தினேன். எய்தினும், அடியேன் அறிவுக்கும் அப்பர் அருளிய அருமுறைப் பொருளுக்கும் எள்ளளவேனும் அணிமை உண்டோ? திருஞானசம்பந்தக்கண்ணுடைய வள்ளலார் அருளிய சிவாநந்த மாலை (பா. 6) யில்,
"சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும்எம் சுந்தரனும்
சிற்கோல வாதவூர்த் தேசிகனும் - முற்கோலி
வந்திலரேல் நீறெங்கே? மாமறைநூல் தான்எங்கே?
எந்தைபிரான் ஐந்தெழுத்தெங் கே?"
என்று அவ்வருட்சான்றோர் வினாவியருளினார். அடியேனும் இக்கருத்திற்கு ஏற்ப,
"நாவுக் கரசர் நவின்ற திருவருளின்
பாவுக் கரசெங்கே? பாவியேன் - கூவுக்
கணுகாத பெம்மான் அருள் எங்கே? எங்கே
நுணுகாத என் அறிவின் நோக்கு?"
என்று வினாவி அமைகின்றேன். அத் திருவெண்பாவிலே, முதற்கண், `சொற்கோ' வே தோன்றுகின்றார். `நாவரசு' என்னும் பொருளதே அதுவும். அத்தகு மாண்பு மிக்க அருட் செல்வர் திருப் பாடலின் பொருளை அறியவும் குறிப்பு வரையவும் துணிவுண்டாமோ? என் புல்லறிவு நல்லறிவாளர்க்குத் தெற்றெனப் புலப்படினும் படுக என்னும் ஒரு துணிவு தோன்றித் தானே எழுதியுள்ளேன்? அதற்கு அடி (கார ணம்) என்ன? அவ்வடி எங்கள் தருமைக் குருமணியின் திருவடியே ஆகும்.
"குருவே சிவம்எனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரைஉணர் வற்றதோர் கோவே"
என்னும் திருமந்திரம் குருவே சிவம், குருவே கோ என்று உணர்த்துவதை அறியாதார் ஆர்?
"சிவனை வழிபட்டார் எண்ணிலி தேவர்
அவனை வழிபட்டுஇங்கு ஆம்ஆறு ஒன்றுஇல்லை
அவனை வழிபட்டுஅங்கு ஆம்ஆறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே"
என்னும் திருமந்திரம் தேவர்கள் சிவனை வழிபட்டுப் பெறாத நலத்தைக் குருவை வழிபட்டுப் பெறலாம் நாம் என்கின்றது. எனவே, குருவருள் கிடைக்கப்பெற்றதொன்றே திருவருட் பணி செய்யும் இத் துணிவுக்கு ஏதுவாயிற்று என்பதை மறுக்கத் துணிவார் யாவர்?
இத் துணிவு குருவருளால் வரப்பெற்றேன் ஆதலின் செருக்கிற்குச் சிறிதும் ஆளாகாதுய்ந்தேன்.
"திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்"
என்று அருளிய அருண்மொழித்தேவர் அருண்மொழியை அகத்துட் கொண்டே இக் குறிப்பெழுதினேன்.
இந் நாலாந்திருமுறையின் பொருட்குறிப்பெழுதுந் திறத்தில் அடியேன் உற்ற இடர்ப்பாடுகளுக்கு அளவில்லை. `களவு படாததோர் காலம் காண்பான் கடைக்கணிக்கின்றேன்' (பா.31) என்றதன் பொருள் நன்கு புலப்பட்டிலது.
கடைக்கணித்தல் (கடைக்கண்ணால் நோக்கி யருளுதல்) சிவன் சீவனுக்குச் செய்யலாம். சீவன் சிவனுக்குச் செய்யலாமோ? அது பேரிடர் விளைத்தது. கடைக்கணிற்கின்றேன் என்றிருந்து பிழைபட்டதோ எனக் கருதினேன்.
பிழை கணித்தல் நம் அப்பர் பழக்கத்தில் இருந்த ஒன்று என்பது, `அரிதின் திறக்க.....திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ்கணித்து மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர்' (தி.12 பெரியபுராணம். அப்பர். 275) என்றதால் விளங்கும். பிழை (பேழ்) கணித்தலும் கறைக்கணித்தலும் ஒரு பொருளன.
"பிறைக்கணிச்சடை யெம்பெரு மானென்று
கறைக்கணித்தவர் கண்ட வணக்கத்தாய்
உறக்கணித்துரு காமனத் தார்களைப்
புறக்கணித்திடும் புத்தூர்ப் புனிதரே." (தி.5 ப.61 பா.2)
என்ற திருப்பாடலால், அது `கறைக்கணிக்கின்றேன்' என்றிருந்து பிழைபட்டதோ என்றும் ஐயுற நின்றது.
இவ்வாறு, குறிப்பெழுதிய பின்னர்த் தோன்றியன எண்ணற்றன. அவற்றுள் மறந்தன பல. மறவாதவற்றை அடுத்த திருமுறையிற் பொருத்தமுள்ள இடங்களில் எழுதக் குறித்து வைத்துளேன். அறிஞர் இவ்வுரையில் உள்ள குற்றங்களை அறிவிப்பின். அவற்றை எவ்வாற்றாலும் திருத்தி வெளி யிடத் தவறேன்.
இந் நாலாந்திருமுறையை நோக்கி, பாராட்டுரை எழுதித் தந்த, சென்னை மாநிலத்தின் அமைச்சர் உயர்திருவாளர். மாண்புமிகு. எம். பக்தவத்சல முதலியார் பி. ஏ., பி. எல்.,, அவர்களுக்குத் தருமைத் திருமடாலயத்தின் சார்பில் நன்றியும் குருவருளும் உரியன.
`அணிந்துரை' அளித்த திருவுடையந்தணர் சம்பந்த சரணாலயர் (கோயம்புத்தூர் சி. கே. எஸ் .) அவர்களுக்கும் அவை உரியனவாகும்.
`உரையின் மாட்சி'யை எழுதிய என் மாணாக்கர். வித்துவான், திரு. சொ. சிங்காரவேலனார்க்கும், தல வரலாற்றுக் குறிப்புக்களை எழுதிய நண்பர் வித்துவான், திரு. வை. சுந்தரேச வாண்டையார்க்கும், திருப்பயற்றங்குடி வரலாற்றையெழுதியும் வரலாற்றுக் குறிப்புக்களை அச்சுப்பிழை அறநோக்கியும் உதவிய துணைவர், வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர்க்கும் என் வாழ்த்துக்கள் உரியன.
சென்ற குருபூசைத் திருநாள் மலராய்த் திகழும் இது, குறிப்பும் விளக்கமும் மருவிய உரையுடன். இத் தருமைக் குருமணியின் திருவுள்ளத்துப் பெருங்கருணை வடிவாய், உலகிற்கு வாய்க்கின்றது.
என் குடி முழுதாளும் அக் குருநாதரது அருட்பெருக்கே, என் உள்ளிருந்து தூண்டி எழுதுவித்தது. இது விரிவுரை எழுதவல்லாரைத் தூண்டும். பொருள் அறியாமல், பாராயணம் புரிவோர்க்குச் சிறிதேனும் விளக்கம் உண்டாக்கும். திருவாலவாய்ச் சொக்கேசன் திருவருளும், அவனுருவாய்த் திகழும் குருவருளும், மெய்யன்பும், அடிமைத் திறமும், இருமொழிப் பெரும் புலமையும் உடையவரே திருமுறைக்கு உரை யெழுதவல்லார் என்பதை நன்குணர்ந்தும் குருவாணையை மீற அஞ்சியே இவ்வருஞ்செயலில் ஈடுபடலாயிற்று. ஆதலின், உலகம் அடியேன் பிழை பொறுத்துக் கொள்க.
வாழ்க சைவம்!
வளர்க திருமுறையுணர்ச்சி!
அடியார்க்கு அடியன்,
தருமை ஆதீனம், முத்து. சு. மாணிக்கவாசகன்,
17-4-1958. தருமை ஆதீன வித்துவான்.