04 மதிப்புரை

மாண்புமிகு. எம். பக்தவத்சலம் பி.ஏ., பி. எல்.,

அறநிலையத்துறை அமைச்சர், சென்னை மாநிலம்.

தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே ஆறாம் நூற்றாண்டைப் "பெரும் புரட்சி ஆண்டு" என்று குறிப்பிடலாம். பல்லவ வேந்தர்களின் ஆட்சிப்புகழ், அதன் உச்சநிலையை அடைந்து விளங்கிய காலம் அது.

அக்காலத்தில்தான் சீனநாட்டின் ஹியூவன்சாங் காஞ்சி நகரத்திற்கு வந்து அங்கே சில காலம் தங்கி இருந்தார்.

பல்லவர்களின் ஆணை தென்னக மெங்கும் பரவி அதற்கப்பாலும் ஊடுருவிச் சென்றது. தமிழ் நாட்டின் கிராமங்களில் கிராம ஆட்சி ஏற்பட்டு மக்களிடையே ஒழுங்கும், அமைதியும் நிலவின. பின்னால் வந்த இரண்டாவது சோழப் பேரரசர்கள், பெரும்பாலும் தங்களுடைய கிராம ஆட்சியினை இந்த அடிப்படையிலேயே நடத்தி வந்தனர் என்பதனை நன்கு அறியலாம்.

ஆனால் அந்தக்காலத்தில் தமிழ் மொழியின் நிலைமை மிகவும் இரங்கத்தக்க நிலையிலே இருந்தது. பல்லவ மன்னர்கள் சமண சமயத்தைப் பேணி வளர்த்தனர்.

மகேந்திர பல்லவன் ஆட்சியிலே அவன் வடமொழியை ஆட்சி மொழியாகவே ஆக்கினான். இக் காரணத்தைக் கொண்டு சிலர் பல்லவர்களைத் தமிழ் நாட்டிற்குப் புறம்பானவர் என்றும் கூறுவது உண்டு.

பல்லவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்பதைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பலவாறாக எழுதியுள்ளனர்.

அது எப்படி இருப்பினும் மகேந்திரப் பல்லவன் தமிழ் நாட்டில் வடமொழியை ஆட்சி மொழியாக ஏற்படுத்திய காரணத்தினால் அவனைத் தமிழன் அல்லன் என்று கூறுவது மட்டும் அவ்வளவு பொருத்தமாக இல்லை. நம்மிடையே உள்ள அறிஞர்களில் இன்று கூடச் சிலர், ஆங்கிலமே ஆட்சி மொழியாகவும், பயிற்சி மொழி யாகவும் இருக்கவேண்டும் என்று கூறவில்லையா? இதனால்

அவர்கள் "ஆங்கிலேயர்கள்" என்று பிற்கால வரலாற்று அறிஞர் யாராவது கூறினால் அது எவ்வளவு நகைப்பிற்குரியதாக இருக்கும்? வட மொழிப் பயிற்சியும், அம்மொழியிற் பற்றும் கொண்டவனாக மகேந்திரன் இருந்தான் என்ற காரணமே சரியான காரணமாகும்.

இவ்வேந்தன் காலத்தில்தான் நம் நாவுக்கரசர் வாழ்ந்து வந்தார். இவருடைய இயற்பெயர் மருள்நீக்கியார் என்பது. தென் மொழியும், வடமொழியும், நன்கு கற்றவராக இருந்தார்.

தாம் கற்ற கலைகளின் பயனாய் உலகத்தின் நிலையாமையை நன்கு உணர்ந்து சமணத்துறவியானார். சமண நூல்களை நன்கு கற்று அவற்றில் வித்தகராக விளங்கினார். இவருடைய ஆழ்ந்த புலமையைக் கண்டு இவருக்குத் "தருமசேனர்" என்னும் சிறப்புப் பெயரை அவர்கள் சூட்டி மகிழ்ந்தனர்.

ஆனால் இவருடைய தமக்கையாகிய திலகவதியார் தம் அருமைத் தம்பி "சைவ நெறியைப் பின்பற்றாமல் சமண நெறியில் சென்றுவிட்டானே" என்று வருந்தினார். இரவும் பகலும் இறைவனை நோக்கித் தம் தம்பி மீண்டும் சைவ நெறிக்குத் திரும்ப அருளுமாறு வேண்டினார்.

அங்ஙனம் வேண்டும் அவ்வம்மையார் முன், ஆண்ட வன் ஒருநாள் கனவில் தோன்றி "நீ உன் மனக் கவலையை ஒழி; நின் இளவலைச் சூலை நோய் மடுத்து ஆட்கொள்வேன்; அவன் முன்னமே என்னை அடையத் தவம் செய்துள்ளான்" என்று கூறி மறைந்தருளி னார்.

அவ்வாறே தருமசேனர் சூலை நோயினால் பீடிக்கப் பெற்றுச் சொல்லொணாத் துன்பமுற்றார். சமண முனிவர்களின் மந்திரமும், மாயமும் அவர் நோயைச் சற்றும் தணிக்க முடியவில்லை.

இறுதியில் தம் தமக்கையை வந்தடைந்தார். தம்பிக்குத் திருநீற்றை அணிவித்து, அவரை உடன் அழைத்துக்கொண்டு திருவீரட்டானத் திருக்கோயிலின் உள்ளே நுழைந்தார். இங்குத்தான் "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்னும் திருப்பதிகத்தைப் பாடித் தம் சூலை நோயின் துயரை ஆண்டவனிடம் எடுத்துக் கூறி அதனைத் தீர்க்கும்படி வேண்டினார்.

சூலை நோய் பகலவன் முன் பனியெனப் பறந்தது. இவருக் கும் இறைவன் "நாவுக்கரசு" என்னும் அழகிய பெயரை அளித்தார்.

அதுமுதற்கொண்டு சிவனைப்பாடுவதையே தம் பிறவிப் பயனாய்க் கொண்டார். கோயிலில் உழவாரப்பணி செய்து "என்கடன் பணி செய்துகிடப்பதே"

என்றொழுகித் தொண்டின் மூலமாக இறைவனின் உண்மை வடிவத்தினை உணர்ந்தார்.

"சத்தியமே கடவுள், தொண்டின் மூலமே அவனை அடைய முடியும்" என்று நம் காலத்தில் மகாத்மா காந்தி அடிகள் கூறினார். அவருடைய வார்த்தைகளுக்கு இலக்கியமாய்த் திகழ்பவர் நம் அப்பர்.

"மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே"

என்ற தேவாரம் அவருடைய மெய்யநுபவ நிலை எது என்பதை நன்கு விளக்கும்.

"நாமார்க்கும் குடி அல்லோம்" என்று முழங்கிய அப்பர், வேந்தனையும் தம் அருளாற்றல் மூலம் தம்வழிக்குத் திருப்பினார்.

சம்பந்தரும், அப்பரும் இறைவனின் பெயரால் தெருவெலாம் தமிழ்ப் பாடல்களைஇசைத்தனர். அவர்களின் பக்திப் பெருக்கால் அந்நாளில் தமிழும் சைவமும் மறு வாழ்வு பெற்றனவென்றே கூறலாம்.

அன்பர் பணியிலே இன்பநிலை கண்டவர் அப்பர். மனிதக் காதலைத் தெய்வக்காதலாக மாற்றிய புண்ணியர். அகிம்சையே அவர் ஆயுதம். தொண்டே அவர் கடமை.

இவருடைய பாடல்களில் சோலை யின் அழகும், வானத்தின் செறிவும், நிறைந்து விளங்குவதைக் காணலாம். இயற்கையின் எழிலோடு இறைவனைப்பாடிப் போற்றியவர். இவரது பாடல்களைப் படிப்பதால் நம்மைச் சூழ்ந்துள்ள அக இருளும், புற இருளும் மறைந்தோடும்; உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகும்.

தெய்வ மணங் கமழும் இவரது தித்திக்கும் பாடல்களைத் தருமை ஆதீனத்தார் வெளியிடுவது மிகவும் பொருத்தமுடையது. இவர்களின் வெளியீட்டிலே ஒவ்வொரு பதிகத்திற்கும் அதனுடைய வரலாற்றைச் சுருங்கக் கூறியுள்ளார்கள். பாடலுக்குரிய பொருளையும் எழுதியுள்ளார்கள்.

பொருள் இன்னும் எளிய நடையிலே இருந்தால் அது எல்லார்க்கும் நன்கு பயன்படும். கற்றவர் படித்தால் கல்லாதவரும் அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வகையில் பொருள் இருத்தல் வேண்டும். அதனால் பயனும் அதிகமாகக் கிட்டும் என்று மட்டும் குறிப்பிட விரும்புகின்றேன்.

சைவத்தைப் பரப்பும் வகையிலே இவர்கள் ஆற்றியுள்ள அருஞ்செயல்கள் பல. அவற்றினுள்ளே இவ்வாறான வெளியீடு களையும் அவர்கள் மேற்கொண்டுள்ளது மிகவும் போற்றத்தக்கதாகும்.

தமிழ் உலகம், குறிப்பாக, சைவப் பெருமக்கள் இவர்களின் இந் நன்முயற்சியைப் போற்றி வாழ்த்துவர் என்பதிலே ஐயமில்லை.

அவர்களின் தமிழ்த் தொண்டும், சைவத் தொண்டும் பன்னெடுங் காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

சென்னை

எம். பக்தவத்சலம்

25.03. 1958