04 பதிப்புரை

இடையறாப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும உழவாரத் திண்

படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும்

நடையறாப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன் ஞானப் பாடல

தொடையறாச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும் துதித்து வாழ்வாம்.

- ஸ்ரீ சிவஞான சுவாமிகள்.

தேவாரத் திருமுறைகளில் 4, 5, 6 திருமுறைகளை அருளிச் செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள். இவர்தம் அருட்பாடல்கள், திருஞானசம்பந்தர் தொகுத்துச் சொல்லும் இறைவன் பெருமைகளை விரித்துச் சொல்லுவனவாய், அறவுரைகளால் ஓதுவோர் உள்ளங்களை இறையருளில் ஈடுபடுத்துவனவாய் அமைந்து விளங்குவன.

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் சம காலத்தவர்கள். தமிழகத்தின் வடபகுதியில் சைவ சமயத்தை நிலை பெறச் செய்தவர் திருநாவுக்கரசர். சமண் சமயம் சார்ந்திருந்த மன்னன் மகேந்திரவர்மப் பல்லவன் இவர் நிகழ்த்திய அற்புதங்களை அறிந்து, சைவத்தின் பெருமையை உணர்ந்து சைவசமயம் சார்ந்தான்.

தமிழகத்தின் தென்பகுதியில் பரவியிருந்த அமண் மாசறுத்த கவுணியர் பெருந்தகை திருஞானசம்பந்தர். நின்றசீர் நெடுமாற பாண்டியன் திருஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்களை அறிந்து, சைவ சமயத்தின் சிறப்பினை உணர்ந்து சைவம் சார்ந்ததை அவர் வரலாற்றால் அறியலாம்.

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இணைந்தும் பல தலங்களுக்கும் யாத்திரை செய்து மக்கட்குச் சைவ சமயத்தின் சிறப்பினை உணர்த்தித் திருப்பதிகங்கள் அருளிச் செய்துள்ளனர்.

திருநாவுக்கரசர் இறைவனைப் பாடிப் பரவுவதோடு கையில் உழவாரப்படை ஏந்திக் கைத்தொண்டும் புரிந்தவர். "திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர்" என இவரைச் சேக்கிழார் போற்றி உரைக்கின்றார்.

தேவாரத் திருமுறைகளில் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள் 49000 என்று சுந்தரரும், நம்பியாண்டார் நம்பிகளும், திருமுறை கண்ட புராணத்தில் உமாபதி சிவமும் குறிப்பிடுகின்றனர்.

"பதிகம் ஏழெழு நூறு பகரும் மாகவி யோகி"

என்பது நம்பியாண்டார் நம்பிகளின் திருவாக்கு.

"இணைகொள் ஏழெழு நூறிரும்பனுவல்

ஈன்றவன் திருநாவினுக் கரையன்"

என்பது சுந்தரர் வாக்கு.

நம்பியாண்டார் நம்பிகள் திருமுறைகளை அபயகுலசேகர மன்னன் வேண்டுகோளின்படி தொகுத்த காலத்தில் திருநாவுக்கரசர் பாடிய திருப்பதிகங்களில் 321 மட்டுமே கிடைத்தன என்றும், அவற்றை 4, 5, 6 திருமுறைகளாகத் தொகுத்தனர் என்றும் கூறப்படு கிறது.

ஆனால் இன்று அவர் அருளிய திருப்பதிகங்கள் மூன்று திரு முறைகளிலுமாக 312 மட்டுமே உள்ளன. நம்பிகளால் தொகுக்கப் பட்ட திருப்பதிகங்களிலும் 9 பதிகங்கள் இன்னும் நமக்குக் கிடைத்தில.

திருநாவுக்கரசரின் திருப்பதிகங்கள் பெரும்பாலும் பத்துத் திருப்பாடல்களைக் கொண்டவை.

பத்தாவது திருப்பாடலில் இராவணனுக்கு அருள்புரிந்த செய்தி குறிப்பிடப்பெற்றிருப்பதைக் காணலாம். முற்பிறவியில் இராவணனுக்கு இரங்கியமையால் இப்பிறவி தனக்கு வாய்த்தது என்ற குறிப்புப்பட ஒவ்வொரு பதிகத்தின் பத்தாம் பாடலிலும் இராவணன் வரலாற்றைத் திருப்பதிகங்கள் தோறும் அப்பர் தவறாது குறித்தலைக் காணலாம்.

"வாக்குக் கருணகிரி வாதவூரர் கனிவில்

தாக்கில் திருஞான சம்பந்தர் - நோக்கிற்கு

நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்

சொற்குறுதி அப்ப ரெனச் சொல்."

என்பதொரு வெண்பா அப்பர் பாடல்கள் உய்தி பெறுதற்குரிய உறுதிச் சொல்லால் இயன்றுள்ளதை எடுத்துக் கூறுகிறது.

நான்காம் திருமுறையில் கொல்லி, காந்தாரம், பியந்தைக் காந்தாரம், சாதாரி, காந்தார பஞ்சமம், பழந்தக்கராகம், பழம்பஞ்சுரம், இந்தளம், சீகாமரம், குறிஞ்சி ஆகிய 10 பண்களுடன் அமைந்த பதிகங்களும், திருநேரிசை, திருவிருத்தம் ஆகிய பதிகங்களும் ஆக 113 பதிகங்கள் உள்ளன. இவற்றுள் நேரிசை, விருத்தம் ஆகியன இயற்றமிழ்ப் பாடல்கள் எனவும், கொல்லி என்னும் பண் வகைக் குரியன எனவும் இருவேறு கருத்துக்கள் உண்டு.

நான்காம் திருமுறையுள்,

-சூலை நோய் நீங்கியது,

-கொலை யானையைக் கண்டு அஞ்சாதது,

-கல்லைத் தெப்பமாகக் கொண்டு கரையேறியது,

-இடபக்குறி சூலக்குறி பெற்றது,

-அரவு தீண்டிய அப்பூதி அடிகள் மகனார்க்கு விடம் தீர்த்தது,

-கயிலைக் காட்சி கண்டது

ஆகிய அற்புதங்கள் குறித்த திருப்பதிகங்கள் உள்ளன.

இத்திருமுறைக்குத் தருமை ஆதீனப் புலவர் சித்தாந்தரத்னாகரம் மதுரகவி திரு. முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் (தொண்டை மண்டல ஆதீனம் 229 ஆவது குருமகா சந்நிதானம்) விளக்கக் குறிப்புரை வரைந்துள்ளார்.

செந்தமிழ்க் கலாநிதி, பண்டித வித்துவான் திரு. தி. வே. கோபாலய்யர் எழுதிய பொழிப்புரை இப் பதிப்பில் புதிதாகச் சேர்க்கப் பெற்றுள்ளது.

தருமை ஆதீனப் புலவர், செஞ்சொற் கொண்டல் டாக்டர். திரு. சொ. சிங்காரவேலன் உரை மாட்சி எழுதியுள்ளார்.

இப்பதிப்பு மயிலாடுதுறை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நன்கொடை வெளியீடாக வெளிவருகிறது.

இத்திருமுறைப் பதிப்பைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.

ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் பெருங்கருணையைப் போற்றி அன்பர்கள் இத்திருமுறையை ஓதி உணர்ந்து பயன் எய்துவார்களாக.