உ
குருபாதம்
திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய 04 ஆசியுரை
பதிகம்ஏ ழெழுநூறு பகரும்மா கவியோகி
பரசுநா வரசான பரமகா ரணஈசன்
அதிகை மாநகர்மேவி அருளினால் அமண்மூடர்
அவர்செய்வா தைகள்தீரும் அனகன்வார் கழல்சூடின்
நிதியராகு வர்,சீர்மை உடையரா குவர்,வாய்மை
நெறியராகு வர்,பாவம் வெறியரா குவர்சால
மதியரா குவர்,ஈசன் அடியரா குவர்,வானம்
உடையரா குவர்,பாரில் மனிதரா னவர்தாமே'
-நம்பியாண்டார் நம்பிகள்.
நால்வர் வாழ்வு காட்டும் உண்மை:
பரமன் பாலைக்கொடுத்து ஞானசம்பந்தரை ஆட்கொண்டார். "போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத், தாதையார் முனிவுறத் தான்எனை ஆண்டவன்" என்பது ஞானசம்பந்தர் அகச்சான்று.
சூலைகொடுத்து நாவுக்கரசரை ஆட்கொண்டார். "சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே" என்பது நாவரசர் நற்சான்று.
ஓலை கொடுத்துச் சுந்தரரை ஆட்கொண்டார். "அன்று வந்தெனை அகலிடத்தவர் முன் ஆளதாக என்று ஆவணம் காட்டி" என்பது சுந்தரர் சொல்மாலை.
காலைக்காட்டி மணிவாசகரை ஆட்கொண்டார். "இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே, துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்" என்பது மணிவாசகர் மணிமொழி.
இந்நால்வரும் சைவசமய ஆசாரியர்களாவர். ஒவ்வொரு வரையும் ஒவ்வொரு வகையில் அவரவர் தன்மைக்கு ஏற்ப ஆட்கொண்டுள்ளார்.
"ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான்புகில் அளவில்லை கிளக்கவேண்டா" என்பது ஞானசம்பந்தரின் நல்வாக்கு. ஞானசம்பந்தர் வாழ்வில் துன்பமே இல்லாத நிலையைக் காணமுடிகிறது.
நாவுக்கரசர் வாழ்வில் அடிமுதல் முடிவுவரை துன்பங்கலந்த நிலையையே காண்கிறோம். "என்னை வகுத்திலனேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே" என்பது அப்பர் அநுபவ வாக்கு.
சுந்தரர் வாழ்வில் துன்பமும் இன்பமும் கலந்தே நடையிடுகிறது. "பாடிய அடியேன் படுதுயர்களையாய் பாசுபதா பரஞ்சுடரே" என்பதும், "கஸ்தூரி கமழ் சாந்தும் பணித்தருள வேண்டும்" என்பதும் சுந்தரர் அநுபவ அருள்மொழி.
மணிவாசகர் வாழ்வில் முன்னர் இன்பமும் பின்னர்த் துன்பமும் கலந்து வருவதைக் காண்கிறோம். "இன்றோர் இடையூறு எனக் குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே, நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே" என்பது மணிவாசகரின் மணிமொழிச்சான்று.
அறக்கருணை, மறக்கருணை:
இறையருள் காட்டுகின்ற நன்னெறியிற் செல்வோரை அறக்கருணைகாட்டி ஆட்கொள்கின்றான் சிவபெருமான். அந்நெறி வழுவுவோரை மறக்கருணை காட்டி ஆட்கொள்கின்றான். அறக்கருணை காட்டி ஆளும் திறத்தை ஆளுடைய பிள்ளை வாழ்வில் காணமுடிகிறது. மறக்கருணை காட்டி ஆளும் திறத்தை மற்ற மூவர் வாழ்விலும் கண்டு தெளிகின்றோம். இதனை அப்பர் வாக்காலும் அருணந்தி சிவத்தின் அருள்மொழியாலும் நன்குணரலாம்.
ஒதுவித் தாய்முன் அறவுரை காட்டி அமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக் கில்புளி யம்வளாரால்
மோதுவிப் பாய்உகப் பாய்முனி வாய்கச்சி யேகம்பனே -தி.4 ப.99 பா.1
என்பது அப்பர் அருள்வாக்கு. "வளாரினால் அடித்துத் தீயபந்தமும் இடுவர் பார்த்திடில் பரிவேயாகும்" என்பது அருணந்தி சிவத்தின் சித்தியார் வாக்கு.
சொன்னதைக் கேட்டு அதன்படி நடப்போர்க்கு நலம் செய்வது அறக்கருணை எனப்படும். சொன்னதைக்கேட்டு அதன்படி நடவாதாரை அவரவர் தன்மைக்கேற்ப இடர் கொடுத்து அவ்விடரால் அவர்களை நன்னெறிப்படுத்தி நலம் செய்வது மறக்கருணை எனப்படும்.
இவர்கள் அறக்கருணை வழியாலும், மறக்கருணை வழியாலும் ஆட்கொள்ளப்பெற்றவர்களாயினும் நம்பெருமக்கள் நால்வரும் நந்தமக்கெல்லாம் நல்லாசாரியர்களேயாவர். அவர்தம் முடிவான வாழ்க்கை நம்மனோர்க்கெல்லாம் எடுத்துக்காட்டான வழிகாட்டியாகும்.
திருவதிகை - திருப்பணிக் குறிப்பு:
அறம்தரும் நாவுக்கரசும் ஆலாலசுந்தரரும் பிறந்தருளிய பெருமைக்குரியது திருமுனைப்பாடி நாடு. முனை அரையர்கள் ஆட்சி செய்தமையால் முனைப்பாடி நாடு எனப் பெயர்பெற்றது. இதுவே நடுநாடு என்றும் பேசப்பெறுகிறது. இது தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவே இருப்பதனால் இப்பெயர் பெற்றிருக்கலாம். முனை அரையர், போர்முனையில் பேரரசர்களுக்குத் தளபதியாக இருந்து வெற்றி தேடித் தந்தமையால் இப்பெயர் பெற்றவராகக் கொள்ளலாம். முனையரையர்கள் ஆட்சிசெய்த முனைப்பாடி நாட்டில் பெருந்தலமாக விளங்குவது திருவதிகை வீரட்டானம் ஆகும். சுந்தரரைக் காதல் மகவாகப் பெற்று இப்பகுதியை ஆட்சி செய்த நரசிங்க முனையரையர் இதற்குச் சான்றாகத் திகழ்கிறார்.
இத்தலம், நிருபதுங்க பல்லவமன்னன் காலத்தில் அதிஅரைய மங்கலம் என்றும், முதலாம் இராசேந்திரன் காலத்தில் அதிராசமங்கலம் என்றும். முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் அதிராசமங்கலியபுரம் என்றும், காலிங்கராயன் திருப்பணிகளைக் குறிக்கும் கல்வெட்டுப் பாடல்களில் அதிகை என்றும் குறிக்கப்பெறுகிறது.
இத்தலத்துத் திருக்கோயிலை நிருபதுங்கதேவரின் 13ஆம் ஆண்டில் முனைப்பாடி ஆமூர்பெருங்குளத்தில் வாழ்ந்து வந்த முனைப்பேரரையர் மகன் முனையர்கோன் இளவரையர் புதுப்பித்தார். கேரள வம்சத்து இரவிவர்ம மகாராஜர் ஆன பெருமாள் குலசேகர தேவர், இக்கோயிலின் வான் கயிலாயத்திருமாளிகையை ஸ்தூபி பரியந்தம் திருமஞ்சனம் பண்ணிப் புறச்சாருணைத் திருக்கல்லும் சாத்தி அருளினார். இது நிகழ்ந்த காலம் கி.பி.1313 ஆகும்.
அம்பிகை எழுந்தருளியிருந்த திருக்காமக் கோட்டத்தை முதற்குலோத்துங்க சோழன். விக்கிரம சோழன் ஆகியோரின் படைத்தலைவராய் இருந்த கூத்தர் காலிங்கராயர் கட்டினார். இவர் வீரட்டானேஸ்வரம் உடையார் கோயிலைப்பொன்வேய்ந்தார். மேலும் திருநாவுக்கரசருக்குத் திருவதிகைத் திருக்கோயிலுக்குள் ஈசான்ய பாகத்தில் ஒரு தனிக்கோயிலும் கட்டினார். இச்செய்திகள் வீரட்டானத் திருக்கோயில் கல்வெட்டுப் பாடல்களில் காணப் பெறுகின்றன.
திருக்கயிலாய அமைப்பு:
இன்று திருவதிகைத் திருக்கோயிலில் அம்பிகைக்குரிய காமக் கோட்டம் பழுதடைந்துவிட்டதனால் சுவாமி கோயிலை ஒட்டியே வலப்பாகத்தில் பிற்காலத்தில் கட்டியுள்ள ஒரு கோயிலில்தான் அம்பிகை எழுந்தருளியுள்ளார். சுவாமிகோயிலில் கருவறைக்கு உள்ளேயே ஒரு பிராகாரம் உள்ளது. இது கயிலாயத்தில் உள்ள அமைப்புப் போன்றது. இப்பிராகாரம் இன்று இருபுறமும் அடைக்கப்பெற்றுள்ளது. இங்ஙனம் கருவறைக்குள்ளேயே பிராகாரம் உள்ள அமைப்பு தஞ்சைப் பெரிய கோயிலிலும், கங்கைகொண்டசோழபுரக் கோயிலிலும் உள்ளன. இந்த நிலை கயிலாயத்திருமலையிலும் உள்ளது. இவ்விமானம் கயிலாய அமைப்பில் அமைந்துள்ளது.
திருஅதிகை - பெயர்க்காரணம்:
இத்தலத்திற்குத் திருவதிகை என்ற பெயரும் இறைவன் எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்கு வீரட்டானம் என்ற பெயரும் இருந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இத்தலத்திற்குத் திருவதிகை என்றபெயர் வந்தமைக்குரிய காரணத்தைச் சிந்திக்க வேண்டுவது அவசியமாகும். அதிராஜன், அதி அரையன் என்ற பெயர்கள் இருப்பதைக் கொண்டு தகடூரைத் (தருமபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்தவனும், அவ்வைக்கு நெல்லிக்கனி அளித்தவனும், கடைஎழு வள்ளல்களில் ஒருவனுமாகிய அதியமானோடு இத்தலம் தொடர்புடையதாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. அதியமானின் ஆட்சி இத்திருவதிகை எல்லைவரை பரவியிருந்தது என்று ஒரு செவிவழிச் செய்தி கிடைக்கிறது. இதுகாரணமாக இத்தலம் இவன் பெயரால் அதிஅரையன் என்று இருந்து பின்னர் அதிகை என்று மருவி இருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. திருவதிகை என்னும் இவ்வூர் பண்ணுருட்டி1 நகராட்சியின் கீழ் எல்லையில் அமைந்துள்ளது.
அட்ட வீரட்டானம்:
வீரட்டானம் என்பது இறைவன் வீரத் திருவிளையாடல்கள் புரிந்த இடங்களைக் குறிப்பதாகும். அங்ஙனம் உள்ள தலங்கள் எட்டு, இத்தலங்களை,
பூமன் சிரங்கண்டி அந்தகன் கோவல் புரம்அதிகை
மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர்
காமன் குறுக்கை யமன்கட வூர் இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே -தனிப்பாடல்
என்னும் பாடல் குறிப்பிட்டு விளக்கும். இவற்றில் திரிபுரத்தை எரித்த வீரத் திருவிளையாடல் நிகழ்ந்த இடம் இத்தலமாகும். இதில், 1,300 ஆண்டுகட்கு முன்பு திருநாவுக்கரசர் இறைவனால் சூலை நோய் தரப்பெற்று ஆட்கொள்ளப் பெற்றார் சூலைநோய் நீங்கும்பொருட்டு இத்தலத்தில் அவர்பாடியருளிய திருப்பதிகம் நான்காம் திருமுறையில் முதலில் இடம் பெற்றுள்ளது.
திருவதிகையில் முதல்பதிகம்:
திருநாவுக்கரசர், திருவாமூரில் புகழனாருக்கும் மாதினியாருக் கும் அருந்தவமகவாக உதித்தார். இவரின் தமக்கையார் திலகவதியார். நாவரசர் நல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமையினால் சமண சமயச் சார்புற்றார். திலகவதியாரின் திருக்கரத்தால் திருநீறு அளிக்கப் பெற்றுப் பெருவாழ்வு வந்தது என மகிழ்ந்தணிந்தார். தமக்கையாருடன் திருக்கோயில் வீரட்டானேசுரர் சந்நிதி சேர்ந்தார். ஆண்டவன் உள்நின்று உணர்த்தப் பதிகம்பாடியருளினார். அப்பொழுது பாடியருளிய பதிகமே `கூற்றாயினவாறு' என்று தொடங்கும் பதிகமாகும். முதலில் இவர் பாடியருளிய பதிகம் இதுவே.
தேவாரம்:
இவர் பாடியருளிய 4,5,6-ஆம் திருமுறைகளைத் தேவாரம் என்பர். திருஞானசம்பந்தர் பாடியருளியதைத் `திருக்கடைக்காப்பு' என்றும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளியதைத் `திருப்பாட்டு' என்றும் குறிப்பது வழக்கம்.
10 பாடல்கள் பாடி 11ஆவது பாடலில் பாடல்களின் பயனையும், பாடியருளிய தன்னையும் குறித்துப் பாடும் அமைப் பிற்குத் திருக்கடைக்காப்பு என்று பெயர்.
தேவாரம் என்பது தேவு - ஆரம் எனப்பிரித்து தெய்வத்தின் மேல் பாமாலையாகச் சூட்டி மகிழத்தக்கது என்னும் பொருளையும், தே-வாரம் எனப் பிரித்துத் தெய்வத்தினிடத்து அன்பு செலுத்த உதவுவது - அன்பை விளைவிப்பது என்னும் பொருளையும் உடையது.
`திருப்பாட்டு' திருவை - அதாவது இறைவனை அடையத் தக்க நெறிகளைப் போதிக்கும் பாடல் என்னும் பொருளது.
இக்கருத்தில் ஞானசம்பந்தர் தன்னைப் பாடினார் என்றும், அப்பர் என்னைப் பாடினார் - அதாவது இறைவனைப் பாடினார் என்றும், சுந்தரர் பொன்னைப் பாடினார் என்றும் கூறுவர். பொன்னைப் பாடினார் என்றால் பொன்னார் மேனியனாகிய இறைவனிடத்துப் பொன் வேண்டிப் பாடினார் என்பதும், பிரதிப்பயன் கருதாப் பொன்னைப் போன்ற பொன்னார் மேனியனைப் பாடினார் என்பதும் பொருளாகக் கொள்ளலாம்.
நான்காம் திருமுறை:
நான்காம் திருமுறையில் மொத்தம் 113 பதிகங்கள் உள்ளன. இவற்றில் முதல் திருப்பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்துள்ளது.
பண் அமைப்பில், கொல்லிப்பண்-1, காந்தாரம்-6, பியந்தைக் காந்தாரம்-1, சாதாரி-1, காந்தார பஞ்சமம்-2, பழந்தக்கராகம்-2, பழம்பஞ்சுரம்-2, இந்தளம்-3, சீகாமரம்-2, குறிஞ்சி-1 ஆகிய 21 பதிகங்களே பண்ணமைப்பில் உள்ளன.
திருநேரிசை 58உம், திருவிருத்தம் 34உம் ஆக 92 பதிகங்களும் யாப்பமைதியில் உள்ளன. திருவிருத்தம் 34இல் முதலில் உள்ள "பாளையுடை" என்ற பதிகமும், "கருநட்ட கண்டனை" என்ற பதிகமும் கொல்லிப்பண் என்று குறிக்கப்பட்டுள்ள போதிலும் இத் தொண்ணுற்றிரண்டும் நேரிசைக் கொல்லி என்றும் விருத்தக் கொல்லி என்றும் கொல்லிப் பண்ணாகவே கொள்ளப்படுகின்றன.
அற்புதத் திருப்பதிகங்கள்:
நான்காம் திருமுறையில் பாடல்பெற்ற தலங்கள் 50 உள்ளன. அற்புதத் திருப்பதிகங்களாக 7 பதிகங்கள் உள்ளன. (ப.1, ப.2, ப.11, ப.110, ப.18, ப.97, ப.3)
1. சூலை நோய் நீங்கப்பாடியருளியது.
2. யானையைவிட்டு இடறச் சொன்னபோது பாடியருளியது.
3. கல்லோடு கட்டிக் கடலில் வீழ்த்தியபொழுது பாடியுய்ந்தது.
4. சூலக்குறி, இடபக்குறி பொறிக்கவேண்டியது.
5. மூத்த திருநாவுக்கரசரை உயிர்ப்பிக்கப்பாடியருளியது.
6. திருச்சத்திமுற்றத்தில் திருவடிசூட்டவேண்டிப்
பாடியருளியது.
7. திருக்கயிலைக் காட்சியை ஐயாற்றில் கண்டு
வழிபட்டபோது பாடியருளியது.
இந்த நான்காம் திருமுறையில் இன்னும் ஒரு சிறப்பு உண்டு. இத்திருமுறையில்தான் யாப்பமைதிப் பாடல்களும், பண்கள் பொருந்திய பாடல்களும் உள்ளன. ஐந்தாம் திருமுறை- திருக்குறுந்தொகை, ஆறாம் திருமுறை- திருத்தாண்டகம், இவை இரண்டும் யாப்பு அமைதியுடன் உள்ளவை.
கூற்றாயினவாறு - கூற்று:
இம்முதல் பதிகம் கொல்லிப்பண்ணில் அமைந்தது என்பதை முன்னரே சிந்தித்தோம். இப்பண் இறைவனின் திருவுளத்திற்கு உகந்தது என்று அப்பர் குறிக்கின்றார். "கொல்லியாம் பண் உகந்தார் குறுக்கை வீரட்டானரே" என்பது அத்தொடர். இப்பண்ணிலேயே இவர் தம் முதல் பதிகத்தைப் பாடியருளியது குறிக்கத்தக்கது.
இப்பதிகத்தில் வரும், `கூற்றாயினவாறு' என்பதற்கு இருபொருள் காணலாம்.
கூற்று என்பது உடலையும், உயிரையும் கூறுபடச் செய்கின்ற கூற்றுவனைக் குறிக்கும் சொல் என்று கொண்டு அவ் எமன் வந்து நலிய வைக்கும்பொழுது ஏற்படும் துன்ப அளவுக்கு இப்பொழுது துன்புறுகின்றேன் என்பது ஒரு பொருள்.
அப்பர் பெருமான் திருக்கயிலையில் வாகீச முனிவராக விளங்கிய காலத்தில் இராவணன் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட போது அவன் கயிலை மலையின் அடியில் இறைவன் அருளால் சிக்கிக்கொண்டு துன்புற்றான். அவன் நிலை கண்டு இரங்கி, அவன் துன்பம் நீங்கித் தப்பிக்கும்வண்ணம் வாகீசமுனிவர் `இறைவன் சாமகானப்பிரியன்' என்றுகூறிவிடுகின்றார். உடனே இராவணன் தன் தலை ஒன்றையும், தன் கை நரம்பையும் கொண்டு யாழ் இசைத்துச் சாமகானம்பாடி இறையருளால் நாளும் வாளும் பெற்றுப் போயினான். இவ்விடத்தில் இறைவன் திருவுள்ளம் அறியாது வாகீசர் இராவணனுக்கு உதவியமையால், துட்டனுக்குத் துணைபோன குற்றத்திற்கு ஆளாக நேர்ந்துவிட்டது. அதனால் அவன் அநுபவிக்க வேண்டிய துன்பத்தை இவர் அநுபவிக்க நேர்ந்துவிட்டது. எனவே கயிலையில் நான்கூறிய ஒருகூற்று, இங்கு இவ்வண்ணம் ஆயினவாறு என்று கூறுவது பிறிதொருபொருள்.
கூற்று என்பதற்குச் `சொல்' என்பது பொருள். `தலைவன் கூற்று' `தலைவி கூற்று' என்னும் அகஇலக்கிய நூல்களில் வருவதுகொண்டு இதனைஉணரலாம். கூற்றாயினவாறு இது; இதனை விலக்ககிலீர்; என்றார். கயிலையிலும் இம்மண்ணுலகிலும் இதுவரை கொடுமை பல அறியாது செய்தேன் என்றும் கூறுகிறார். இராவணனுக்கு உதவியதும் சமணசமயம் சார்ந்ததும் கொண்டு இங்ஙனம் கூறுகிறார். இவைகளை எல்லாம் நான் அறியாது செய்தேன் என்பார், `கொடுமை பல செய்தன நானறியேன்' என்றார். இந்நிலையில் இறைவனே என்னை ஏற்றுக் கொண்டார் என்பார். "ஏற்றாய்" என்றார். இனி, இரவும் பகலும் பிரியாது உன்னைத் தொழுவேன் என்பார். "அடிக்கே இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன்" என்றார். இப்பாடலில் அடுத்துவரும் வரிகளில் வயிற்றுவலியின் துன்பத்தைக் கூறுகின்றார்
உண்மைப் பொருள்:
தொடர்ந்துவரும் பாடல்களில் "நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன், நினையாதொரு போதும் இருந்தறியேன்" "சலம்பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்" என்றும் கூறியிருக்கிறார்.
சமண்சமயத்தில் இருந்தபோது எப்படி இதுபோல் இருந்திருக்க முடியும் என்று சிலரும், அப்பர் வஞ்சனையாக மனத்தளவில் சிவப்பற்றுடையவராயிருந்து சமண் சமய விஷயங்களை அறிந்துகொள்ளவே சமண் சமயம் சார்ந்து தெரிந்த பிறகு சைவம் மீண்டார் என்று சிலரும் அறியாமையால் பிதற்றுகின்றனர். முதல் பாடலைச் சரியாகப் படிக்காததே பிதற்றுதலுக்குக் காரணமாகிறது.
முதற்பாடலில், ஏற்றாய் அடிக்கே என்கிறார். ஏற்றாய் என்பது இறந்தகாலம். இறைவன் இவர்தம் பிழை நீக்கி ஏற்றபிறகே இரவும், பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன் என்கின்றார். இம்முதற்பாடலில் இவர் இறைவன் ஏற்றவுடனேயே பிரியாது வணங்குவன் என்று சொல்கிறார். வணங்குவன் என்பது எதிர்காலம். ஏற்ற அந்நொடிக்குப் பின் நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன். சலம்பூவொடு தூபம் மறந்தறியேன், என்பதிலிருந்து இவரை இறைவன் ஏற்ற பிறகே இச்செயல்கள் நாவரசரிடம் நிகழ்ந்தன என்பது தெளிவாகிறது.
அப்பரின் மன உணர்வு:
அப்பர் பெருமான், தான் சமண சமயச் சார்பில் இருந்தமையைத் தவறு என உணர்ந்து பல முறையும் வருந்திப் பாடுகின்றார். சிதம்பரத்திற்கு வந்தபொழுது அத்தலம் புண்ணியத்தலம், பூலோக கயிலாயம், ஆதலின் அதன் நான்குவீதிகளிலும் தன் திருமேனி சமண சமயம் சார்ந்திருந்த அருவருப்பு நீங்கவேண்டும் என்று கருதி அங்கப்பிரதட்சிணம் செய்கின்றார்.
திருத்தூங்கானை மாடத்தில்; "பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்..., என் ஆவிகாப்பதற்கு இச்சையுண்டேல், மின்னாரும் மூவிலைச் சூலம் என்மேல் பொறி" என்று வேண்டுகின்றார்.
திருச்சத்திமுற்றத்தில் மேலும், "பூவார் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை" என்று வேண்டுகின்றார். இறைவன் "நல்லூருக்கு வா" என்று அழைக்க அங்குச் சென்றபோது திருவடி சூட்டப்பெறுகிறார்.
சமண்விட்டுச் சைவம் சார்ந்தவுடனேயே திருவதிகையில் ஏழைத் திருத்தாண்டகம் என்ற ஒன்றைப் பாடுகின்றார். ஏழை என்பது இங்கு அறிவின்மையைக் குறித்தது. அதில் சமணத்தில் இருந்தபோது சிவபெருமானை இகழ்ந்த குறிப்புக்களைப் பாடியுள்ளார். அத்திருத்தாண்டகப் பதிகத்தின் முதற்பாடல் "வெறிவிரவு கூவிளம்" என்பது. ஒவ்வொரு பாடல் இறுதியிலும் "ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே" என்று இங்ஙனம் சமணச் சார்பினை எண்ணி எண்ணி இரங்கி வருந்தியவர், அதற்குப் பரிகாரமாக அங்கப்பிரதட்சிணம் முதலிய பலவற்றையும் செய்துள்ளார். இறைவன் திருநல்லூரில் திருவடி சூட்டிய பிறகுதான் ஓராற்றான் மன அமைதியுறுகிறார். இவற்றாலெல்லாம் அப்பர் தூய வாழ்வு துலங்குவதைக் காணலாம்.
அகச் சான்று:
இவர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களுக்கு அகச்சான்றுகள் பல உள்ளன.
"கல்துணைப்பூட்டி ஒர் கடலில் பாய்ச்சினும் நல்துணையாவது நமச்சிவாயவே" (தி.4 ப.11 பா.1) என்று ஓதுகிறார். இப்பாடலைப் படிப்பவர்களில் சிலர், இப்பாடல் கல்லோடு கட்டிக் கடலில் போட்ட பிறகு பாடியது அன்று என்றும், எனவே இதுகொண்டு வரலாற்றினை நிர்ணயம் செய்யமுடியாது என்றும் கூறுகின்றனர். இப்பாடல் அப்பர் பெருமானைக் கல்லோடு கட்டிப்போடுவதற்கு முன்பே அதனை உணர்ந்து, பாடியது போலத்தான் இருக்கிறது. ஆனால் அப்பெருமான் திருநீலக்குடிப் பதிகத்தில்,
கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கஎன் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே -தி.5 ப.72 பா.7
என்று வரலாற்றுக்குரிய அகச்சான்றாகப் பாடி உள்ளார். எனவே "சொற்றுணை வேதியன்" என்னும் பாடல் அச்செயல் நிகழ்வதற்கு முன்னே பாடியதுபோல் உள்ளது என்பதும், இப்பாடல் அந் நிகழ்ச்சியில் உய்ந்த பிறகு பாடியதாக உள்ளது என்பதும் தெளிய வேண்டிய உண்மைகளாகும்.
தில்லை வழிபாடு:
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தில்லையைத் தரிசனம் செய்தபொழுது பெற்ற அநுபவம் ஒருபடித்தாக இருப்பதனை அவரவர்கள் பாடல் வழிக்கொண்டும், சேக்கிழார் வாக்கினை வைத்தும் உணரலாம்.
திருஞானசம்பந்தர் நடராஜப் பெருமானை வழிபாடு செய்த முறையினைச் சேக்கிழார் தெளிவுறக் கூறுகிறார். பிள்ளையார், "அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ்ஞானமே ஆன அம்பலத்தையும், தம் உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனிக்கூத்தையும் கண்ணின்முன்புறக் கண்டார் என்பது சேக்கிழார் வாக்கு. இதன் பயனாய் நடராஜப்பெருமான் தில்லைவாழ் அந்தணர்களின் திருவுருவில் அவருக்குக் காட்சி நல்கினர். இதனை,
"நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல
நெற்றிமேலுற்ற கண்ணினார் பற்று
சூலத்தார் சுடலைப் பொடி நீறணிவார் சடையார்
சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம்..." -தி.3 ப.1 பா.3
என்ற தொடரால் ஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைக் குறிப்பிடுகிறார்.
அப்பர் அடிகள் அம்பலத்து இறைவனை வழிபாடு செய்தபோது ஒன்றி இருந்து நினைந்ததன் பயனாய்ப் பெருமான் புன்சிரிப்புடன் அபய கரத்தின்வழி, "என்று வந்தாய்" என்று உசாவுவதாக உணர்ந்து பாடுகிறார். இறைவன் "என்று வந்தாய்" "எதற்கு வந்தாய்" என்று உசாவிக் கேட்ட கேள்விகளுக்கு விடை அளிப்பவராக அப்பர், "பத்தனாய்ப் பாடமாட்டேன்" என்று தொடங்கும் பாடலில், "அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே" என்று கூறுகிறார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லை இறைவனை வழிபட்டதைச் சேக்கிழார், ஐந்துபேர் அறிவையும் கண்களே கொள்ளும்படியாகவும், அளப்பரும் கரணங்கள் நான்கையும் சிந்தையே பெற்றதாகவும், குணம் ஒரு மூன்றும் சாத்துவிகமேயானதாகவும் அமைய, அவர் வழிபட்டார் என்கிறார். இங்ஙனம் இம்மூவரும் தில்லையை வழிபட்டபோது உயிர் ஒன்றிய நிலையில் அநுபவ உணர்வில் இருந்தனர் என்பதை அறிந்து இன்புறலாம்.
ஈகையின் சிறப்பு:
திருநாவுக்கரசு சுவாமிகள் இந்நான்காம் திருமுறையில் பல இடங்களில் உலகியல் உண்மைகளையும், 96 தத்துவங்கள் பற்றிய குறிப்பையும் விளக்குகின்றார். மேலும் பொருள் உடையோர் அப்பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவுதலே அதன் பயன் என்றும், அதனால் அருள்கிட்டும் என்றும், அங்ஙனம் கொடாதோருக்குக் கடுநரகமே வாய்க்கும் என்றும்பசு புண்ணியமான செயல்களைத் திருஐயாற்றுத் திருநேரிசையில் கூறுகிறார்.
இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயன் ஐயாற னாரே. -தி.4 ப.38 பா.10
பொருள் உடைமையின் பயன் ஏழைகட்குக் கொடுப்பதே என்னும் இக்கருத்து திருவள்ளுவர் கூறும்,
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி -திருக்குறள் 226
என்னும் திருக்குறளோடு இணைத்துச் சிந்திக்கத்தக்கதாயுள்ளது.
விளக்கிட்டார் பேறு:
விளக்குதல்- கூட்டுதல் - அஃதாவது பெருக்குதல். இப்பணி யைச் செய்தவர் வாழ்வில் துன்பிலாது இன்புறுவர்.
இதைவிடக் கோயில் தலத்தை மெழுகினால் பத்து மடங்கு அதிகம் நலம் பெறுவர்.
நல்ல மலர்களை எடுத்து பலவிதமாலைகளாகத் தொடுத்து இறைவற்குச் சார்த்துவோர் அதனினும் மேலாகச் சிவலோக வாழ்வு பெறுவர்.
தூயவிண் என்றதானால் சிவலோகம் ஆயிற்று. கூட்டி, மெழுகி, கோலமிட்டு, திருமேனிக்குப் பலவகை மாலைகளைச் சார்த்தி திருவிளக் கிடவேண்டும். விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய் நெறியும் அதை அடையத்தக்க ஞானமும் கிடைக்கும்.
இவ்வளவு அழகுபடுத்தி ஒளிஏற்றியபிறகு நல்ல கீதம் பாடவேண்டும். கீதம் பாடுவோர்க்குப் பெருமான் அருள்வது அளக்க இயலாப்பேறு என்கிறார் அப்பர். அவ்வினிய பாடல் (தி.4 ப.77 பா.3) காண்போம்.
விளக்கினாற் பெற்ற வின்ப மெழுக்கினாற் பதிற்றி யாகும்
துளக்கினன் மலர்தொ டுத்தாற் றூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளு மாறே.
படிப்பவர்கட்கு அறிவுபெருகவேண்டுமானால், அறிவில் குழப்பமில்லாமல் தெளிவுபெற வேண்டுமானால், பெருமான் சந்நிதியில் விளக்கிட்டால் அந்த இடம் விளக்கமுறுதல் போல, இடுவோன் உள்ளத்திலும் விளக்கம் கிடைக்கும். இதுபற்றியே படிப்போரும் மற்றையோரும் விளக்கிடுவதைக் காணலாம். விளக்கு எண்ணையைத் திருடினால் அறிவு விளக்கம் கிடைக்காது. அறிவிலியாகத் திரிவான்.
அபுத்திபூர்வப் பேறு:
நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடன் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாம்
குறைவறக் கொடுப்பர்போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே. -தி.4 ப.49.பா.8
என்பது மகாபலிச் சக்கரவர்த்தியின் வரலாறு காட்டும் திருமறைக் காட்டு நிகழ்ச்சி.
எண்ணெய் குடிக்கச் சென்ற எலி அபுத்திபூர்வமாகச் செய்த புண்ணியத்தால் பேறு பெற்றதை அப்பர் இங்கு குறிக்கின்றார்.
ஐந்தெழுத்து மந்திரம்:
திருமுறை ஆசிரியர்கள், நமசிவாய என்னும் அஞ்செழுத்தை மந்திரமாகக் கொள்ளவேண்டும் என்பதை, வற்புறுத்திக் கூறியுள் ளனர். அவ்வகையில் திருநாவுக்கரசு சுவாமிகள், சாமவேதப் பிரிய னாகிய சிவபெருமானின் மந்திரமாகிய நமசிவாயத்தை ஒருவர் ஓதுவதோடு, திருநீற்றையும் மருந்தாகக எண்ணி அணிந்தால், வினையும் நோயும் அழலிற்பட்ட விறகாக வெந்து அழியும் என்கிறார். இதனைப் பொது நேரிசையில்,
சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாம வேதி
அந்தரத் தமரர் பெம்மா னானல்வெள் ளூர்தி யான்றன்
மந்திர நமச்சி வாய வாகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையு நோயும் வெவ்வழல் விறகிட் டன்றே.
என்று (தி.4 ப.77 பா.4) கூறுகிறார். இக்கருத்தினை, மேலும் இத்திருமுறையில் "சொற்றுணை வேதியன்" என்ற பதிகத்தின் மூன்றாம் பாடலில் விளக்கிக் கூறுகிறார்.
விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
. நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே
என்பது (தி.4 ப.11 பா.3) அப்பாடல்.
பாண்டவரும் அப்பரும்:
மகாபாரதத்தில் உள்ள பஞ்சபாண்டவர்களின் வரலாறும் திருநாவுக்கரசர் வரலாறும் தொடக்கத்தில் ஒத்துள்ளமையைக் காணலாம். பாரத வரலாறு நிகழ்ந்தது துவாபர யுகம்; திருநாவுக்கரசர் வரலாறு நிகழ்ந்தது கலியுகம். இரண்டு வரலாறுகளிலும் காணும் ஒற்றுமை-வேற்றுமைகளைச் சிறிது சிந்திப்போம்.
பொறாமையே குடிகொண்ட துரியோதனாதியர்கள் பஞ்சபாண் டவர்கள் வாழ்வதைப் பொறுக்காமல் அவர்களை அழிக்க எண்ணினர். பஞ்சபாண்டவர்ளை விருந்தினராக வரவேற்று அரக்கு மாளிகையில் தங்கச் செய்தனர். அம்மாளிகையை எரியூட்டினர். அதனின்றும் பாண்டவர்கள் திருவருளால் தப்பினர்.
திருநாவுக்கரசரைச் சமணர்கள் துர்ப்போதனையால் மகேந்திரவர்மப் பல்லவன் நீற்றறையில் இட்டபோது "மாசில் வீணையும்" என்ற பதிகம் பாடி நீற்றறை ஈசன் எந்தை இணையடியாகக் குளிர்ந்து தீங்கு இன்றிப் பிழைத்ததனோடு இவ்வரலாறு ஒத்துள்ளமை காண்க.
பஞ்சபாண்டவர்களில் பீமனை ஓர் அறையில் அடைத்து வைத்து, நச்சுப் பாம்புகளை அவ்வறையில் விட்டனர். பாம்புகள் இறந்தன. பீமன் பஞ்சாட்சர ஜெப பலத்தால் தீங்கின்றிப் பிழைத்தான்.
அமணர்கள் நஞ்சு கலந்த பால் சோற்றை நாவரசருக்குக் கொடுத்தனர். நஞ்சும் அமுதாம் எங்கள் நாதன் அடியாருக்கு, என்று அகமலர்ந்து அந்நஞ்சை ஏற்று உண்டு சாகாது பிழைத்தார். இந்நிகழ்ச்சி நச்சுப் பாம்பை விடுத்து பீமனைக் கடிக்கச் செய்த வரலாற்றுடன் ஒத்துள்ளமை காணலாம்.
அடுத்து, பீமனது கைகால்களைக் கயிற்றால் கட்டி கங்கையில் வீழ்த்தினர். அதிலும் பீமன் பஞ்சாட்சர மகிமையால் கரையேறிப் பிழைத்தான்.
நாவுக்கரசரையோ அமணர்கள் கைகால்களைக் கயிற்றால் கட்டிக் கடலில் இட்டால் பீமனைப் போல் கரையேறி விடுவார் என்று எண்ணினர்போலும், அப்பரைக் கல்லுடன் சேர்த்துக் கட்டிக் கடலில் பாய்ச்சினர். அஞ்செழுத்துப் பதிகமாகிய "சொற்றுணை வேதியன்" என்ற பதிகம் பாடி, கல்லே தெப்பமாகக் கடலூருக்கு அருகில் உள்ள கரையேறவிட்ட குப்பத்தில் கரையேறினார். இது பீமன் கங்கையி னின்றும் கரையேறிய வரலாற்றுடன் ஒப்புமை உள்ளதாகக் காணமுடிகிறது.
துவாபர யுகத்தில் பஞ்சபாண்டவர்கள், அதிலும் சிறப்பாக பீமன் வரலாறும், கலியுகத்தில் அப்பர் வரலாறும் ஒத்துள்ளமையை ஒப்புநோக்கி உண்மை காண்க.
நாமார்க்கும் குடியல்லோம்:
பின்னே வந்த தேசத்தொண்டர்களாகிய காந்தி அடிகள் பாரதியார் போன்றவர்கட்கெல்லாம் தெய்வத்தொண்டராகிய அப்பரடிகள் வழிகாட்டியாக அமைந்து விளங்குகிறார்.
நாவரசர் சமணம் விட்டுச் சைவம் சார்ந்தபோது, மகேந்திரவர்மப்பல்லவன் அமணர் துர்ப் போதனையால், ஏவலர் மூலம் நாவரசரை அழைத்துவரச் செய்தான், "நாமார்க்கும் குடியல்லோம்" "சங்கரன் நற்சங்க வெண்குழை யோர் காதில் கோமாற்கே நாம் என்றும் மீளா ஆள்" என்று சொல்லி ஏவலர்கட்கு ஏதம்வரக்கூடாதே என்று கருதி அவர்களின் வேண்டுகோட்படி முடிமன்னன் எதிர் அஞ்சாமல் சென்றார். "பாராண்டு பகடேறி வருவார் சொல்லும் பணிகேட்கக் கடவோமோ பற்றற்றோமே" என்று பகர்ந்து நின்றார்.
யானையை விட்டு இடறச்செய்தபோதும் "அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதும் இல்லை" என்று யானையின் எதிர்நின்றார். யானை அப்பரை வணங்கி அமணர்களைத் துரத்தியது.
சத்தியாக்கிரகம்:
சத்தியாக்கிரகம் மிகப் புனிதமானது. இதனை முதன்முதலில் நடத்திக் காட்டியவர் அப்பர் சுவாமிகளேயாவார். வரலாற்றுச் சிறப்புமிக்க பழையாறையில் அமணர்கள் சிவலிங்கத்தை மண்ணி லிட்டு மறைத்தனர். அஃதறிந்த அப்பர் உண்ணாநோன்பு மேற்கொண்டார். பெருமானின் வண்ணங்கண்டு வணங்கியன்றிப் போகேன் என்று சத்தியாக்கிரகம் செய்து வெற்றியும் கண்டார். இது காந்தியடிகளின் உண்ணாநோன்பிற்கு எல்லாம் முன்னோடியாகத் திகழ்வதைக் காணலாம். அப்போது பாடிய பதிகத்தின் முதல்பாடல் காண்க.
தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே. -தி.5 ப.58 பா.1
கயிலை யாத்திரை:
திருஞானசம்பந்தர் காளத்திமலையில் இருந்தவாறே கயிலை மலைநாதனை வணங்கித் திருப்பதிகம் பாடி மனநிறைவுற்றார்.
அப்பரோ கயிலைமலையானை நேரேகண்டு வழிபட எண்ணிக் கயிலாயப் பயணம்மேற்கொண்டார். கை,கால், மார்பெலாம் தேய்ந்தும் உறுதியுடன் செயலின்றிக் கிடந்தார். அப்போது பெருமான் தோன்றி மானிடரால் கயிலை காண்டல் அரிது என்றார். அதற்கு அப்பர், "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்" (தி.12 பெ.புராண. நாவுக்கரசர் புராணம்) என்றார்.
அப்பரின் உறுதிகண்ட இறைவன் அருகில் பொய்கையைத் தோற்றுவித்து, அதில் மூழ்கி ஐயாற்றில் கயிலைக்காட்சி காண்க என்றார். அப்பொய்கையே "மானசசரோவரம்" என்பதாகச் சொல்கின்றனர். அங்கு மூழ்கிய அப்பர் யாதும் சுவடு படாமல் திருவையாற்றில் கோயிலின் வடமேற்றிசையில் உள்ள அப்பன்குட்டை என்று இன்றும் வழங்கும் திருக்குளத்தில்தோன்றி தென்கயிலாயமாகிய ஐயாற்றில் கயிலைநாதனைக்கண்டு மகிழ்ந்து பாடிப்போற்றினார்.
அப்பர் கண்ட கயிலைக் காட்சியைக் காண்போம். "மாதர்ப் பிறைக்கண்ணியானை" என்ற திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும்,
"காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்" -தி.4 ப.3 பா.1
"கோழி பெடையொடும் கூடி குளிர்ந்து வருவன கண்டேன்" -௸பா.2
"வரிக்குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன்" -௸ பா.3
"சிறையிளம் பேடையோடாடிச் சேவல் வருவன கண்டேன்" -௸ பா.4
"பேடை மயிலொடுங்கூடிப் பிணைந்து வருவன கண்டேன்" -௸ பா.5
"பைங்கிளி பேடையோடாடிப் பறந்து வருவன கண்டேன்" -௸ பா.10
"இளமண நாகுதழுவி ஏறு வருவன கண்டேன்" -௸ பா.11
என்று பாடியுள்ளார்.
விலங்கினங்கள் பறவையினங்கள் தமது துணையுடன் வருவதை அன்றோ பாடியுள்ளார். கயிலைநாதனைக் கண்டதாகக் கூறவில்லையே என எண்ணுவோரும் உண்டு. இதில் பறவை யினங்களும் விலங்கினங்களும் ஆணும் பெண்ணுமாய் இணைந்து வருவதைக் கண்டதாகக்கூறும் அப்பர் கடைசி அடியில் "கண்டேன்" அவர்திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்" என்று ஒவ்வொரு பாடல் இறுதியிலும் கூறியுள்ளதே குறிக்கொள்ளத்தக்கது.
பாதம் என்று ஒருமையில் சொன்னபோதிலும் பாதம் இரண்டையுமே தொகுதி ஒருமையாகச் சொன்னார் என்று கொள்ளவேண்டும். இரு திருவடிகளும் அம்மை அப்பரைக் குறிப்பன. வலது திருவடி சிவம். இது ஞானத்தைக் குறிப்பது. இடது திருவடி சக்தி, இது கிரியை-செயலைக் குறிப்பது. எனவே உலகம் முழுவதையும் அறியும் சிவத்தையும் உலக முழுவதையும் இயக்கும் சக்தியையும் ஒருங்கே கண்ட ஒருமைப்பாட்டை உணர்ந்து உலகிற்கு உணர்த்தினார் அப்பர் என்பதை நாம் நன்கு உணர்தல் வேண்டும்.
ஆணும் பெண்ணுமாக வந்த விலங்கையும், பறவைகளையும் சிவசக்தியாக, சிவசக்தியின் செயலாக தடத்த வடிவாகக்கண்டு காட்டினார் நமக்கெல்லாம் என்பது உணர்க.
தியாகேசர் திருவுரு:
`பாடிளம் பூதத்தினானும்' என்ற திருப்பதிகத்தில் (தி.4 ப.4) இறைவன் நினைப்பவர் நெஞ்சத்து உள்ளான் என்ற தத்துவத்தை விளக்குகிறார். ஆதிரைநாள் உகந்தவன் சிவபிரான், என்பதை அறிவிக்கிறார். திருவாரூர்த் தியாகேசப் பெருமான் இருபத்தைந்து மகேஸ்வர மூர்த்தங்கட்கு உட்பட்டவரல்லர் என்பதை இறுதிப்பாடலில், `ஐயஞ்சின் அப்புறத்தான்' என்ற தொடரால் விளக்கியுள்ளார். அப்பாடலில், பொய்பேச அஞ்சவேண்டும், வாய்மைகள் பேசவேண்டும், அப்படிப்பட்ட புகழ் உடையோர்க்கே தியாகேசன் அருள்செய்வான் என்று கூறுகிறார். அப்பாடல் (தி.4 ப.4 பா.10) காண்க.
பையஞ் சுடர்விடு நாகப் பள்ளிகொள்வா னுள்ளத் தானும்
கையஞ்சு நான்குடை யானைக் கால்விர லாலடர்த் தானும்
பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந் தார்க்கருள் செய்யும்
ஐயஞ்சி னப்புறத் தானு மாரூ ரமர்ந்தவம் மானே.
25 மகேஸ்வரமூர்த்தங்களுள் ஒன்றான சோமாஸ்கந்த வடிவம் போல் தியாகராஜர் தோன்றினாலும் அவர் சோமாஸ்கந்த வடிவிலும் வேறுபட்டு அதற்கு அப்பாற்பட்டவர் என்பது உணரத்தக்கது.
என் மனத்தே வைத்தேன்:
காஞ்சிபுரத்தில் கச்சியேகம்பனைத் தொழுது பாடிய "கரவாடும் வன்நெஞ்சர்" என்ற (தி.4 ப.7) பதிகத்தில் வஞ்சகர் உள்ளத்திற்கு அரியவன் என்றும், வஞ்சகர் அல்லாதார் உள்ளத்தில் கலந்து உறவாடுபவன் என்றும் குறிக்கின்றார்.
"..........
அப்போது மலர்தூவி யைம்புலனு மகத்தடக்கி
எப்போது மினியானை யென்மனத்தே வைத்தேனே". -தி.4 ப.7 பா.3
என்பதும் அப்பதிகத்துள் உள்ள ஒரு பாடல் பகுதி.
பெருமான் நமது உள்ளத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார். இதனை மணிவாசகர் "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்று பேசுவார். எப்போதும் இனியவனாக இருக்கும் பெருமான் நம் உள்ளத்தே எப்போதும் இருக்கவேண்டுமாயின் அப்போடு மலர் தூவி இறைவனை வழிபடுதலும், ஐம்புலன் அடக்கி வாழ்தலும் இன்றியமையாதது. ஐம்புலனும் அடக்கம் இருந்தால்தான் ஞானம் உள்ளத்தே குடிபுகும். ஞானம் உள்ளவரிடத்தேதான் ஞானமே வடிவாக இனிமையாக விளங்கும் சிவபிரான் எப்போதும் நாம் இனிமையாக இருக்க நம் உள்ளத்தில் குடி கொள்வார். எனவே நாமும் எப்போதும் இனிமையாக வாழலாம்.
சிவபூசையின் முடிவில் "எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே" என்று உள்ளத்தே ஒடுக்கி உகப்புடன் பூசை நிறைவு காணவேண்டும். இப்பதிகம் நமக்கு உணர்த்தும் உண்மைகள் இவை.
சிவபூசை நிறைவில் சிந்திக்க வேண்டியமற்றொரு பாடலையும் அப்பர் திருப்பழனப் பதிக இறுதியில் குறிப்பிடுகின்றார். பூசை எடுத்துக்கொள்கிறவர்கள் தம் உடலில் உயிர் உள்ளளவும் இடைவிடாது பூசை புரியவேண்டும். கண்ணை மூடும் வரையில் - இறக்கும் வரை பூசனை விடாது புரிதல் வேண்டும். இக்கருத்தமைந்த பாடல் காண்க.
மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த விசைபாடும் பழனஞ்சே ரப்பனையென்
கண்பொருந்தும் போதத்துங் கைவிடநான் கடவேனோ -தி.4 ப.12 பா.5
முக்கரணங்கள்:
மனம் வாக்கு காயமே முப்பொறி. மனித ஈடேற்றத்திற்கு இறைவன் முப்பத்தாறு தத்துவங்ளோடு கூடிய உடம்பை நமக்குத் தந்திருக்கிறான். இவ்வுடம்பைக் கொண்டு நல்லதை நாளும் தன்முனைப்பின்றிச் செய்தால் விரைவில் வீடுபேற்றை அடையலாம். ஆனால் மனிதன் தனக்குக் கிடைத்த உடம்பைப் பெரும்பகுதி தீமைக்கே பயன்படுத்துகிறான். சிறிதே நன்மைக்குப் பயன்படுத்து கிறான். எனவே இவன் கரையேறுதற்குப் பலகோடி பிறவிகள் எடுக்கநேரிடுகிறது. இக்கருத்தை ஞானசம்பந்தர் திருநாரையூர்த் தேவாரத்திருப்பதிகத்துள் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பரமன் வழிபாடு பாவம் போக்கும்:
மனிதன்உரையினால், அஃதாவது வாக்கினால் வேண்டாத தீமைகளைப் பேசிப் பாவம் செய்கிறான். மனத்தினால் வேண்டாத தீய எண்ணங்களை எண்ணுவதால் பாவம் செய்கிறான். கை முதலிய உறுப்புக்களாலும் வேண்டாத தீமைகளைச் செய்து பாவங்களைச் செய்கிறான். வாக்காலும், மனத்தாலும், காயத்தாலும் செய்கின்ற முக்கரணக்குற்றங்கள் அம்மூன்று கரணங்களாலும் நன்மைகளைச் செய்தே அப்பாவங்களைப் போக்க வேண்டும் என்று சொல்கிறார் ஞானசம்பந்தர். எந்த எந்தக்கரணங்கள் எந்த எந்தத் தீமைகளைச் செய்தனவோ அவ்வக் கரணங்களைக்கொண்டே நன்மைகளைச் செய்து அவ்வத் தீமைகளைப் போக்கிக்கொள்ளவேண்டும். இது ஒருவன் செய்த செயலாகிய வினையை அநுபவித்தே தீர்க்கவேண்டும் என்ற வினைக்கோட்பாட்டை வலியுறுத்திக் கூறுகிறது. நன்மையிலும் பெரிய நன்மை இறைவழிபாடேயாம். ஆதலால் அவரவரும் பாவம் செய்த அவ்வக்கரணங்களைப் பரமன் வழிபாட்டில் ஈடுபடச் செய்தால் பாவங்கள் தீர்ந்து பயன்பெறலாம் என்பதுஞானசம்பந்தர் அருளுரை. இக்கருத்தமைந்த பாடல் காண்க.
உரையினில் வந்தபாவ முணர்நோய்களும்ம
செயறீங்கு குற்ற முலகில்
வரையினி லாமைசெய்த வவைதீரும் வண்ண
மிகவேத்தி நித்த நினைமின்
வரைசிலை யாகவன்று மதின்மூன் றெரித்து
வளர்கங்குல் நங்கை வெருவத்
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே. -தி.2 ப.86 பா.1
உரையினில் வந்த பாவம் - வாக்கினால் வந்த பாவம். உணர்நோய்கள் - மனத்தினால் நினைந்த பாவம். இதனை நோய் என்றார் அடிப்படை அதுவேயாகலின். உம்மசெயல் தீங்கு குற்றம் - உம்முடைய செயலால் வரும் தீங்காகிய குற்றங்கள் - அளவில்லாமல் செய்கின்றோம். அதனால் மிகஏத்தி நித்தம் நினைக. திருநாரையூர் இறையை-கையால் தொழுது, நினைத்து, துதித்து, தொழுதால் வினை அகலும் - வீடுபேறு கிட்டும் என்பது உணர்க.
இதனை ஞானசம்பந்தர் திருவண்ணாமலைப் பதிகப்பாடல் ஒன்றில் குறிப்பிடுதலும் கண்டு தெளிக. "நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறைகோயில் என்பது அப்பாடல் தொடர்.
திரு அங்கமாலை:
திருஞானசம்பந்தர் வேதம்போலச் சுருக்கமாகச் சொல்வனவற்றை நாவுக்கரசர் ஆகமம்போல் விளக்கிச் சொல்வார். ஞானசம்பந்தர் முக்கரணங்களால் செய்கின்ற தீங்காகிய குற்றங்களை அம்முக்கரணங்களையும் இறைவழிபாட்டில் ஈடுபடுத்தி அக்குற்றங்களைக் களைக என்று அறிவுறுத்தினார்.
அதே கருத்தை விரிவாகவும் விளக்கமாகவும் மனிதனின் அடிமுதல் முடிவரையுள்ள அத்தனை உறுப்புக்களும் குற்றம் செய்வதால் திருநாவுக்கரசர் திருஅங்கமாலைப் பதிகத்தில் அவ்வுறுப்புக்களையெல்லாம் இறைவழிபாட்டில் ஈடுபடுத்தி இன்னல் களைந்து இன்புறுக என விளக்கியுள்ளமை அறிந்து போற்றத்தக்கது.
தலை செய்த குற்றத்தை தலைவணங்கித் தீர்த்துக்கொள்க.
கண் செய்த குற்றத்தை இறைவனைக் கண்டு அக்குற்றம் நீக்குக.
அதேபோல், நெஞ்சு, கை, ஆக்கை (உடம்பு) மூக்கு, வாய், கால்கள், செய்த குற்றங்கள் தீர அவ்வவ்வுறுப்புக்களையும் இறை வழிபாட்டில் ஈடுபடுத்தி வினைநீங்கி விளக்கம் உறுக என்று அறிவுறுத்துகிறார். அங்கம் - உறுப்பு. இக்கருத்துக்களைத் திருஅங்க மாலைத் திருப்பதிகத்து (தி.4 ப.9)விளக்கமாகக் காண்க.
தேர்ப்பாகன் கூறிய அறம்:
விரைந்து செல்லத்தக்க சிறந்த தேராயினும் கயிலைநாதன் வீற்றிருக்கும் கயிலாய மலைக்குமேல் நம் தேர் செல்வது அறம் அன்று என்று தேரைச்செலுத்திய பாகன் அறம்கூறினான். அவ் அறம் மொழிந்த பாகனை முனிந்து நோக்கி தேரை விடு விடு என்று சொல்லி வரையுற்றெடுத்தான் இராவணன். அவனது முடியையும் தோளையும் நெடு நெடு இற்றுவீழ விரல்வைத்த பெருமானின் பாதத்தை என்மனம் நினைவுற்றது என்று "கடுகிய தேர் செலாது" (தி.4 ப.14 பா.11) என்ற பாடலில் அப்பர் குறிப்பிடுகின்றார். இவ்வரலாற்றுக் குறிப்பு இப்பாடலில் மட்டுமே காணப்படுகிறது.
அரநெறி அப்பர்க்கு ஆலயம்:
திருவாரூர்ப் பூங்கோயிலில் வன்மீகநாதர் சந்நிதியின் எதிரில் வலப்பக்கம் உள்ளது அரநெறியப்பர் ஆலயம். இது நமிநந்தியடிகள் நீரால் விளக்கு எரித்த நீர்மை உடையது. செருத்துணை நாயனார் மலர்த்தொண்டு செய்த சிறப்புடையது. வெண்மதியைக் கண்ணியாகவும் கொன்றை மலரை அடையாள மாலையாகவும் கொண்ட அரநெறியப்பர்க்கு ஆலயம் காலையும் மாலையும் கைதொழுவார் மனமேயாம் என்கிறார்.
".........
காலையு மாலையுங் கைதொழு வார்மனம்
ஆலைய மாரூ ரரநெறி யார்க்கே." -தி.4 ப.17 பா.8
என்பது அப்பாடல் பகுதி. இக்கருத்தையே ஐந்தாம் திருமுறையின் தில்லைப் பதிகத்தில் "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்று அருளியுள்ளமையும் இங்குக் கருதத்தக்கது.
பொருள் மன்னன், மருள் மன்னன்:
பொருள் மன்னன் குபேரன். அவனைக் கைப்பற்றி, அவனிடம் இருந்த புட்பக விமானமாகிய தேரைப் பறித்துக் கொண்டான், மருள் மன்னனாகிய இராவணன். அவனை ஒரு விரலால் எற்றிப் பிறகு வாளுடன் நாளும் ஈந்த திறத்தை அரநெறித் தலப்பாடலில் குறிக்கின்றார்அப்பர். சொற்சுவையும் பொருட்சுவையும், அருட்சுவையும் கனிந்த அப்பாடலைக் காண்போம்.
பொருண்மன் னனைப்பற்றிப் புட்பகங் கொண்ட
மருண்மன் னனையெற்றி வாளுட னீந்து
கருண்மன்னு கண்டங் கறுக்கநஞ் சுண்ட
அருண்மன்ன ராரூ ரரநெறி யாரே. -தி.4 ப.17 பா.11
அரவு தீண்டுவதில்லை, தீண்டினும் இறப்பு இல்லை:
திங்களூரில் அப்பூதி அடிகள் திருமகனார் மூத்த திருநாவுக்கரசு வாழை இலை கொய்தபோது அரவு தீண்டியது. அவரை அப்பர் அத்தலத்து இறைவன் சந்நிதியில் கிடத்தி, "ஒன்றுகொலாம்..." என்னும் திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்தார். இதனால் இன்றுவரை அவ்வூரில் பாம்பு யாரையும் தீண்டுவதில்லை. இது அவ்வூரவர் அநுபவம்.
ஞானசம்பந்தர் வரலாற்றில், திருமருகலில் விடம் தீண்டிய வணிகனை "சடையாய் எனுமால்..." என்னும் பதிகம் பாடி விடம் நீங்கச் செய்தார். இன்றுவரை இவ்வூரில் அரவு தீண்டினாலும் யாரும் இறப்பதில்லை என்பது அவ்வூரவர் அநுபவம்.
வீடுகளில் பாம்பு நடமாட்டம் இருக்குமானால் "ஒன்று கொலாமவர்" என்னும் பதிகத்தை ஆசாரத்துடனும் பக்தியுடனும் பாராயணம் செய்தால் பாம்பு நம் கண்ணில்படுவதில்லை. இது இன்றும் பலரது அநுபவம். சிந்திப்போம். செயல்பட்டுப் பயனடைவோம்.
புராணம்:
புரா-நவம். புராணம். புரா என்பது பழமையையும், நவம் என்பது புதுமையையும் குறிப்பது. பழமை என்பது புதுமையைத் தன்னகத்தே கொண்டிருப்பது. உயிர்களின் தகுதிக்கேற்ப அவ்வப் போது பழமை தன்னகத்தே உள்ளபுதுமையை வெளிப்படுத்துகிறது. எனவே பழமையிலிருந்துதான் புதுமை தோன்றுகிறது. இதனால்தான் மணிவாசகர் (தி. 8 திருவா.) திருவெம்பாவை(பா.9)யில், "முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே" என்றார்.
இப்படிப் பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் இருக்கும் பேரறிவுடைய பொருளே சிவபரம்பொருளாகும். இப்பரம்பொருளையே புராணன் என்று பேசுகின்றன திருமுறைகள். திருஞானசம்பந்தர் திருவீழிமிழலைத் தேவாரத்தில் "புராணன்" என்ற இச்சொல்லைக் கையாளுகிறார். இப்புராணன் நமது உள்ளத்தில் சிறப்பாக எழுந்தருளி அருள்புரியவேண்டுமானால் நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அருளிச் செய்கிறார்.
முதலில் நமக்குப் பரம்பொருள் இடத்தில் அகனமர்ந்த அன்பு வேண்டும். முகனமர்ந்த அன்பு பயன்படாது. அன்புடையார்கட்கு அறுவகைக் குற்றங்கள் கடியப்படவேண்டும். அவையாவன காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்பனவாம். அடுத்து ஐம்புலன் அடக்கம் வேண்டும். இந்நிலையிலேதான் உண்மை ஞானம் கைவரப்பெறும். அங்ஙனம் மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றோர் உள்ளத்தாமரையிலேயே புராணனாகிய இறைவன் எழுந்தருளி அருள் வழங்குவான். இக்கருத்தமைந்த பாடல் பகுதி காண்க.
"அகனமர்ந்த வன்பினரா யறுபகைசெற்
றைம்புலனு மடக்கிஞானம்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
துள்ளிருக்கும் புராணர்....." -தி.1 ப.132 பா.6
இப்புராணருடைய வரலாறே புராணங்கள். இவர் பழங்காலம் தொட்டே அடியார்கட்கு அருளிய செயல்கள் புராணம் என்று பேசப்படுகிறது.
அப்படி உள்ள தலபுராண வரலாறுகளை அப்பர் பல இடங்களில் குறிப்பிட்டபோதிலும் திருக்குறுக்கை வீரட்டானத் திருப்பதிகமாகிய "ஆதியிற் பிரமனார்தாம்" என்னும் பதி.49இல் முதற்பாடலில் பிரமனுக்கு அருள்செய்த வரலாறும், இரண்டாம் பாடலில் மார்க்கண்டேயர்க்கு அருள்செய்த வரலாறும், மூன்றாம் பாடலில் சண்டீசர்க்கு அருள்செய்த வரலாறும், நான்காம் பாடலில் கோச்செங்கட்சோழ நாயனார் வரலாறும், ஐந்தாம் பாடலில் திருமாலுக்குச் சக்கரப் படையளித்த வரலாறும், ஆறாம் பாடலில் சாக்கிய நாயனார் வரலாற்றுடன் கொல்லியாம் பண்ணுகந்த திறமும், ஏழாம் பாடலில் கண்ணப்பர் வரலாறும், எட்டாம் பாடலில் மகாபலிச்சக்கரவர்த்திக்கு அருள்செய்த வரலாறும், ஒன்பதாம் பாடலில் கணம்புல்ல நாயனார்க்கு அருள்செய்த வரலாற்றுடன் அன்புடைத்தொண்டர்கட்குத் தமது எண்குணங்களையும் கொடுப்பர் என்ற கருத்தும், பத்தாம் பாடலில் இராவணனுக்குக் கொற்றவாளும் நாளும் கொடுத்த வரலாறும் குறிக்கப்படுகின்றன. பத்து புராண வரலாறுகளைத் தொகுத்து, பத்துப்பாடல்களிலும் கூறியுள்ள சிறப்பு வேறு இடங்களில் காணப்பெறாதது.
தோன்றினார் தோன்றினாரே:
அம்மையப்பராகிய சிவபெருமானைத் தொழுதலும் வலம் செய்தலுமாகிய செயல்களைச் செய்தவர்களே தோன்றியவராவர். அஃதாவது பிறந்தவர் ஆவார். பிறந்ததன் பயனை அடைந்தவராவார். அல்லாதார் பிறந்தும் பிறவியின் பயனைப் பெறாமையால் பிறந்தவராகார். தோன்றியவராகார். இதே கருத்தை சுந்தரர் தம் வாழ்வில் வைத்துக் குறிப்பிடுகிறார்.
"மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இனிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்...." -தி.7 ப.48 பா.1
பிறவியின் பயன் இறைவனை நினைத்தலும் தொழுதலுமாம். அந்நிலை பெற்றதனால் பிறந்ததன் பயனாகிய பிறவாத தன்மை வந்தெய்தப்பெற்றேன் என்று துணிவுபடக் கூறுகின்றார். இதனையே திருமூலர்,
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரான்அடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே -தி.10 திருமந். 2090
என்னும் திருமந்திரத்தால் தெளிவிக்கின்றார்.
மேலும் அப்பர், தில்லைத் திருவிருத்தத்தில் (தி.4 ப.81 பா.4),
குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே
என்ற பாடலால் இக்கருத்தையே வேறு ஒருவகையில் விரித்துரைக்கின்றார். "அரிது அரிது மானிடராதல் அரிது" என்றபடி பெறுதற்கரிய மானிடப்பிறவியைப் பெற்றவன் அவ்வுயர் பிறவிக்கேற்ப இறையுணர்வு இல்லாதிருப்பானானால் அவன் தோன்றலின் தோன்றாமையே நன்றாம் என்கிறார். தோன்றில் புகழொடு தோன்றுக என்னுமாப்போலே, தோன்றில் பிறவிப் பயனை எய்துவிக்கும் இறைவழிபாட்டில் ஈடுபாடு உடையவனாய்த் தோன்றுக. அதுவே மனித்தப்பிறவியின் பயன். அஃதின்றேல் அறிவுக் குறைவுடைய ஏனைய பிறவிகளாகப் பிறந்திருக்கலாமே என்பது கருத்து. இதனைத்தான் அப்பர் "இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் சிறப்புடைய இம்மனித்தப் பிறவியும் வேண்டுவதே. காணப்பெறாவிட்டால் இவ்வரிய மானிடப்பிறவியால் பயன் இல்லை. எனவே புல்லாய், பூண்டாய், புழுவாய் விலங்காய், பறவையாய் பிறந்திருக்கலாம் என்று அறிவுறுத்துகிறார். இதனால் பிறவி வேண்டும் என்பது கருத்தல்ல. கிடைத்தற்கரிய பிறவியை அப்பிறவிக்கேற்பப் பயனுடையதாக்குக என்பதே கருத்து. மேலும் இக்கருத்தை அப்பர் திருநாகைக்காரோணப்பாடல் (தி.4 ப.71 பா.8) ஒன்றில்,
"..........
கற்றவர் பயிலு நாகைக் காரோணங் கருதி யேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே."
என்ற வரிகளால் வலியுறுத்தியுள்ளமை காண்போமாக.
குழல் வலம்கொண்ட சொல்லாள்:
இதுவரை இப்பாடலின் பிற்பகுதியைப் பார்த்தோம். குழல் வலம் கொண்ட சொல்லாள் என்பது அரிய பிரயோகம். தம்மக்கள் மழலைச்சொல்லைக் குழலுக்கும் யாழுக்கும் ஒப்புமை காட்டுகிறார் வள்ளுவர். யாழைப்பழித்த மொழியம்மை என்பது வேதாரண்யம் அம்பாளின் திருப்பெயர். இப்பாடல் பதிகம் திருவாரூரைப் பற்றியது. ஆரூர் அம்பாள் பெயர் நீலோத்பலாம்பாள், அல்லியங்கோதை என்றிருக்கிறது. கமலாம்பாளும் தவக்கோலத்தில் உள்ளார். குழல் வலம் கொண்ட சொல்லாள் என்ற பெயர் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. யாழைப்பழித்த மொழியாள் என்பதுபோல இங்கு குழலை வென்ற சொல்லாள் என்கிறார். அம்மையின் குரலின் இனிமை பற்றி இங்ஙனம் சிறப்பித்துள்ளமை கண்டு மகிழலாம்.
அஞ்சுவேலி:
திருவாரூர்ப்பூங்கோயில் அஞ்சுவேலி நிலப்பரப்பில் உள்ளது. அதை ஒட்டி மேல்புறம் உள்ள கமலாலய தீர்த்தக்குளம் அஞ்சுவேலி. தியாகராஜப் பெருமானுக்கு உகந்த செங்கழுநீர் மலர் மலரும் ஓடை அஞ்சுவேலி. இதனை ஆரூர்ப்பாடலில் (தி.4 ப.53 பா.7), "அஞ்சணைவேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டாரே" என்று அறிவிக்கிறார் அப்பர்.
ஆலவாயில் அப்பன்:
ஆலம் என்பது விஷத்தைக் குறிக்கும். நஞ்சுள்ள வாயை உடைய பாம்பு மதுரை மாநகருக்கு எல்லை காட்டியதால் மதுரை இப்பெயர் பெற்றது என்பது திருவிளையாடற்புராணம் காட்டும் உண்மை.
இங்குள்ள பெருமான் துவாதசாந்தப் பெருவெளியில் வீற்றிருப்பவன். என்பதை அப்பர் அத்தலத் தாண்டகத்தில் "என்தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை" என்கிறார். தலைக்குமேலே பன்னிரண்டு அங்குலத்திற்கு அப்பால் உள்ள இடமே துவாதசாந்தம் எனப்படும். அப்பெருமானிடத்தில் ஈடுபட்டு அருள்வேண்டுகிறார். "வேதியா வேதகீதா" என்னும் பதிகத்துள் ஏழாவது பாடலில் நான்கு வகையாக அழைக்கிறார். அழைப்பே அழகாய் அமைந்துள்ளது.தென்திரை நெஞ்சம் உண்ட குழகனே! கோலவில்லி கூத்தனே! மாத்தாயுள்ள அழகனே! ஆலவாயில் அப்பனே! வழுவிலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்செழுமலர்ப் பாதம் காண அருள்செய்யாயே" என்று தோத்திரம் செய்யும் அழகே தனித்தன்மை வாய்ந்து விளங்குகிறது. அப்பாடல் (தி.4 ப.62 பா.7) காண்க.
வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேனுன்
செழுமலர்ப் பாதங் காணத் தெண்டிரை நஞ்ச முண்ட
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
குறிக்கோள் இலாது கெட்டேன்:
உயர்பிறவி எடுத்துள்ள மனிதர்கள் குறிக்கோளுடன் வாழ்தல் வேண்டும். மற்ற பிறவிகள் மனவளர்ச்சியடையாத பகுத்தறிவில்லாத பிறவிகள். அவற்றைப் பகுத்தறிவு உள்ள மனிதன் நல்லவழியில் பயன்படுத்துகிறான். அதனால் அவையும் நலம் உறுகின்றன. மனிதனும் அவற்றால் நலம் பல பெறுகின்றான். பகுத்துணர்வுடைய மனிதன் இப்படித்தான் வாழவேண்டும். இப்படி வாழக்கூடாது என்ற குறிக்கோளுடன் வாழ இளமையிலேயே கற்றுக்கொள்ளவேண்டும். பெரியோர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், குருமார்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். இன்றேல் அவர்களது வாழ்வு வீணாகிவிடும். நாயன்மார்கள் வாழ்வெல்லாம் குறிக்கோளுடைய வாழ்வு. ஒவ்வொரு நாயனாரும் ஒவ்வொரு உயரிய குறிக்கோளை மேற்கொண்டு அதனினின்றும் வழுவாது வாழ்ந்து இறையருள் பெற்றனர். வாழ்வாங்கு வாழ்ந்தனர்.
அப்பர் சுவாமிகள் இளமையிலேயே பெற்றோரை இழந்தமை யால் தமக்கையார் திலகவதியார் சொற்கேளாமல் சமண் சமயம் சார்ந்து துயருற்று மீண்டும் திலகவதியாரின் தவத்தால் சைவம் சார்ந்தவர். தம் வாழ்க்கை வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் திருக்கொண்டீச்சரத்துப் பாடல் ஒன்றில் தம் அநுபவத்தைக் குறிப்பிட்டுள்ளார். பாலப்பருவம், காளைப்பருவம், முதுமைப் பருவம், இவற்றுள் அப்பர் முதுமையில் குறிக்கோள் கொண்டார். அப்பாடல் (தி.4 ப.67 பா.9) காண்க.
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன்
சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத் துளானே.
நஞ்சு அமுதாக்குவித்தார்:
நம்பினார்கெடுவதில்லை, இது நான்குமறைத்தீர்ப்பு என்பார் சுப்பிரமணிய பாரதியார். இறைவனை நம்பி வழிபட்டால் அவர் நமக்கு எந்தவகையான தீங்கு வந்தாலும் அதனை எல்லாம் அகற்றி நன்மையே செய்வார். புலர்காலையிலும் அந்திமாலையிலும் தொடர்ந்து நாள்விடாமல் நமசிவாய என்னும் அஞ்செழுத்தை ஓதி இறைவனடிக்கு அன்புசெய்வார்க்கு எந்த இடர்ப்பாடும் இன்னல் செய்யாது விலகும். இதனை அப்பர் தம் அனுபவத்தில் வைத்து அருளிச் செய்கிறார். அமணர்கள் பால்சோற்றில் நஞ்சு கலந்து கொடுத்தபோது அதை அமுதமாக அஞ்செழுத்தோதி அருந்தினார். நனிபள்ளிப் பெருமான் அருளால் அப்பருக்கு அந்த நஞ்சும் அமுதமாயிற்று. அதை அகச்சான்றாக அப்பர் அருள்வது (தி.4 ப.70 பா.5) காண்க.
துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே
அஞ்செழுத் தோதி னாளு மரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா வமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி யடிக ளாரே.
அதே பதிகத்தில் மற்றொரு பாடலில் "தொண்டர் தம்மை நரகத்தில் வீழஒட்டார் நனிபள்ளி அடிகளாரே" என்றும் உறுதிபடக் கூறி யுள்ளமை குறித்துக் கொள்ளத் தக்கதாம்.
ஆட எடுத்திட்ட பாதம்:
ஆட எடுத்த பாதத்தைத்தான் குஞ்சிதபாதம் என்கிறோம். அப்பாதம்தான் தக்கன் வேள்வியில் சந்திரனைச் சாடித் தேய்த்ததும், காலனை மார்க்கண்டேயருக்காக உதைத்ததும், நாரணன் நான்முகனும் தேட எடுத்ததும், தில்லையுள் சிற்றம்பலத்தில் ஆட எடுத்திட்டதுமாகும். அத்தகைய பாதமல்லவா நம்மை ஆட் கொண்டருளியது. தீயவர்களை நிக்கிரகம் செய்த பாதமே தூயவர்கட்கு அநுக்கிரகம் செய்தது என்ற குறிப்பு அறிந்து அனைவரும் இன்புறற் பாலதாம்.
கூரியபற்களையுடைய பூனை தன் குட்டிகளைத் துன்புறுத்தாமல் தன்வாயால் கவ்வித் தூக்கிக் காப்பாற்றும். அதே வாய்தான் எலிகளைச் சங்கரிக்கிறது என்பதை ஒப்புநோக்கி உணர்க.
ஒன்றரைக் கண்ணன்:
சிவபரம் பொருளுக்கு மூன்று கண்கள். வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், நடுக்கண் நெற்றிக்கண், அது அக்னி-நெருப்புக்கண்.
இம்மூன்றில் வலது கண் வலப்பாகம் உள்ள சிவனுக்குரியது. இடதுகண் இடப்பாகம் உள்ள சக்திக்கு உரியது. நடுக்கண்ணாகிய நெற்றிக்கண் இருவருக்கும் உரியது. எனவே ஆளுக்குப்பாதியாகிறது.
இதனையே ஒன்றரைக்கண்ணன் என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். நகைச்சுவைபடக் கூறினாரேனும் தத்துவம் பொதிந்த சொல்.
முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றே தோன்றினார். சிவபெருமானுக்கு ஆறுமுகம் உண்டு. ஐந்து முகம் எல்லோருக்கும் தெரிவது. அதோ முகமாகிய கீழ்நோக்கிய முகம் அறிஞர்கள் - ஞானிகட்கே தெரியும். எனவே ஆறுமுகங்களிலும் உள்ள நெற்றிக்கண்களினின்றும் ஆறு தீப்பொறிகளாகத் தோன்றியவரே முருகப்பெருமான். இத்தகு கருத்துள்ள பாடல் (தி.4 ப.86 பா.7) காண்போம்.
இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை யிமயமென்னும்
குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்டநா
ளன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி யூருறை யுத்தமனே.
ஆரா அமுது:
ஆரா அமுது என்றால் பலரும் ஐயங்கார், பெருமாள் சம்பந்தம் என்று கருதுகின்றனர். அப்பெயர் சிவபெருமானுக்கே உரியது. திருமால் நெறி சைவத்தினின்றும் பிரிந்தது. அதுமுதல் ஆரா அமுது என்ற சொல்லை வைணவர்கள் அதிகம் பயன்படுத்தினர். அவர்கள் பயன்படுத்தவே சைவர்கள் விட்டனர். இதனால் விளைந்ததே இத்தவறான எண்ணத்திற்குக் காரணம்.1
"ஆர்கிலா அமுதை மறந்துய்வனோ" என்னும் அப்பர் வாக்காலும், "அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே" என்றும், ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே என்றும், கூறியுள்ள மணிவாசகர் வாக்காலும் தெளியலாம். மேலும் இந்நான்காம் திருமுறையில் திருவேதிகுடிக்கு உரிய "கையது காலெறி" என்னும் பதிகத்தில் (தி.4 ப.90) ஐந்து பாடல்களின் இறுதியில்,
"ஐயனை ஆரா அமுதினை நாம் அடைந்தாடுதுமே
அத்தனை ஆரா அமுதினை நாமடைந்தாடுதுமே" ௸ பா.1
"நண்ண அரிய அமுதினை நாம் அடைந்தாடுதுமே
ஐயனை ஆரா அமுதினை நாமடைந்தாடுதுமே" ௸ பா.6
"அருத்தனை ஆரா அமுதினை நாமடைந்தாடுதுமே" பா.10
ஆரா அமுது என்றால் தெவிட்டாத இனிமையான அமுதம் போன்றவன் என்பது பொருள்.
மூன்றாய் உலகம் படைத்துகந்தான்:
ஈன்றாள் - மாதினியார், தந்தை - புகழனார், உடன் தோன்றியவர் - திலகவதியார் இம்மூவருடைய தோன்றும் துணைக்கொண்டே தோன்றியவர் அப்பர். இவருக்குத் தோன்றாத் துணையாயிருந்த திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர், இவருக்கு தோன்றும் துணையாகிய இம்மூவரையும் படைத்தருளினான் என்று நன்றி உணர்வோடு போற்றுகிறார். பாடலம் என்பது பாதிரி மரத்தைக் குறிக்கும். பாதிரி மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட தலம் பாதிரிப்புலியூர். தலவிருட்சம் பற்றிய பெயரே பாடலேசுவரர். தோன்றாத் துணைவர் என்பது அப்பர் வரலாற்றால் பெற்ற பெயராகத் திகழ்கிறது.
94ஆவது பதிகத்துள் விடையான் விரும்பி என் உள்ளத் திருந்தான் இனி நமக்கு இங்கு அவலம் அடையா. அருவினை சாரா, நமனை அஞ்சோம் (தி.4 ப.94 பா.6) என்கிறார்.
கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.
"பாதிரிப்புலியூர் அரனே நான் அடுத்த பிறவியில் புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாதிருக்க வரம் தரவேண்டும்" என்று வேண்டுகிறார்.
"திருந்தா அமணர்தம் தீநெறிப்பட்டுத் திகைத்து முத்திதரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் இப்போது அடியேன் பிறவாமல் வந்து ஆண்டுகொள்க" என்று விண்ணப்பம்செய்கிறார்.
தேசமெல்லாம் புகழும் மூன்று தலங்கள்:
"தேயமெலாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூர்" என்று இத்தலத்தைப் போற்றுகின்றார் அப்பர். "திக்கெலாம் புகழும் திருநெல்வேலி உறை செல்வர்தாமே" என்கிறார் திருஞானசம்பந்தர். "தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித்திருஏகம்பம்" என்கிறார் மணிவாசகர்.
தேசமெல்லாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூரும், திக்கெலாம் புகழும் திருநெல்வேலியும், தேசமெல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித்திரு ஏகம்பமும் தலங்களுள் சிறந்தனவாகக் கருதப்படுகின்றன என்பது இப்பெரியவர்கள் வாக்கினால் கொள்ளத்தக்கனவாய் உள்ளன.
திருவமர் தாமரை:
திரு அமர் தாமரையும், திருவளர் தாமரையும், பொருளால் ஒன்றே. சொல் மாற்றத்தால் பொருள் மாற்றமில்லை. அதேபோல சீர்வளர் செங்கழுநீரும் சீர்வளர் காவியும் சொல்மாற்றமேயன்றிப் பொருள் மாற்றம் இல்லை. இப்படி அப்பர் பாடியுள்ள பாடலுக்கும் மணிவாசகர் பாடியுள்ள கோவைப் பாடலுக்கும் சொல் மாற்றமின்றி பொருள் மாற்றமின்மை கீழ்க்காணும் அப்பர் திருவிருத்தத்திலும் கோவையிலும் காணலாம். தாமரை, காவிகள், கோங்கு, இவையெல்லாம் மணிவாசகர் (தி.8 திருக்கோவை.)கோவையில் கூறிய தலைவிக்குக் கொள்ளப்படுகிறது. அப்பர் உமையம்மைக்கு ஏற்றிப் பாடியுள்ளார். இவ்விரு பாடல்களிலும் உள்ள ஒப்புமை காண்க.
திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொணெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கணல்லூர்
உருவமர் பாகத் துமையவள் பாகனை யுள்குதுமே. -தி.4 ப.97 பா.10
திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலைஓர் வல்லியின் ஒல்கி அனநடைவாய்ந்து
உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்று ஒளிர்கின்றதே.
-தி.8 திருக்கோவையார் பா.1
பசுபதித் திருவிருத்தம்
"சாம்பலைப் பூசி" எனத் தொடங்கும் திருவிருத்தப் பதிகப் பாடல்கள் எட்டு மட்டுமே உள்ளன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "எம்மையாளும் பசுபதியே" என்றே முடிகிறது. இப்பதிகம் திருப்புகலூரில் இருந்து பாடியருளிய பொதுப்பதிகங்களுள் ஒன்று என்றே பெரியபுராணம் குறிப்பிடுகிறது.
இப்பதிகத்துள் "உடம்பைத்தொலைவித்து உன்பாதம் தலைவைத்த உத்தமர்கள் இடும்பைப் படாமல் இரங்குகண்டாய்" என்றும், "தாரித்திரம் விரா அடியார் தடுமாற்றம் என்னும் மூரித்திரைப் பவ்வம் நீக்கு கண்டாய்" என்றும், "ஒருவரைத் தஞ்சம் என்றெண்ணாது உன்பாதம் இறைஞ்சுகின்றார்.
அருவினைச்சுற்றம் அகல்வி கண்டாய்" என்றும் "இடுக் கொன்றும் இன்றி எஞ்சாமை உன்பாதம் இறைஞ்சுகின்றார்க்கு, அடர்க்கின்ற நோயை விலக்கு கண்டாய்" என்றும் "சித்தத்துருகிச் சிவன் எம்பிரான் என்று சிந்தை உள்ளே பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்தருளாய்" என்றும் அடியார்கட்கு இடர் வாராது தவிர்க்க வேண்டுகின்றார்.
இப்பதிகம் பொதுப்பதிகத்துள் இடம் பெற்றுள்ளதெனினும், இது அப்பர் அவதாரத் தலமாகிய திருவாமூர் பசுபதீசுவரரைக் குறித்ததாகவே தோன்றுகிறது. மருள்நீக்கியாராய் திருவாமூரைவிட்டு வெளியேறிய பிறகு அப்பர் திருவாமூர் சென்றாரில்லை. எனினும் இப்பாடல்கள் எட்டும் அவ்வூர் பசுபதீசுவரரை நினைவு கூர்ந்து பாடியதாகவே தோன்றுகிறது. சிந்தித்துப் பயன்பெறுக.
நிறைவுப்பதிகம்
"பவளத்தடவரைபோலும் திண்தோள்" என்பது நான்காம் திருமுறையில் 113ஆவது நிறைவுப்பதிகம். இதன் நிறைவுப்பாடல் "மேலும் அறிந்திலன் நான்முகன்" என்பது. அயன் அன்னமாய்ப் பறந்து மேற்சென்று இறைவனின் முடியைக் காணவில்லை. மாலும் பன்றியாய்க் கீழ்ச்சென்று இறைவனின் அடியைக் காணவில்லை. ஆனால் வழிபாடு செய்த மார்க்கண்டேயர் மீது பாசம் வீசி மயங்கிய சிந்தை உடைய காலன் (இயமன்) இறைவனின் திருவடியை அறிந்தான் என்று நிறைவு செய்கிறார் அப்பர். ஆம் பெருமான் இயமனை உதைத்த போது அவர் திருவடி அவன் மீது பட்டதல்லவா? இதனையே சமத்காரமாகக் குறிப்பிட்டுள்ளார். இது மறக்கருணையாகக் கொள்ளலாம்.
நான்காம் திருமுறையின் தொடக்கத்தில், "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்று கூற்றுத் தொடர்பு வந்துள்ளதும், நிறைவுப்பாடலில் "காலன் அறிந்தான் அறிதற்கரியான் கழலடியே " என்று காலன் தொடர்பு வந்திருப்பதும் திருவருட் பொருத்தமாக உள்ளது.
இவ்வண்ணம் பலவேறு சிவநெறிக் கருத்துக்களைத் தெளிவாக விளக்கியுள்ள நான்காம் திருமுறைப்பாடல்களைப் பக்தர்கள் பண் பொருந்தவும் பொருள் பொருந்தவும் பாடியும் படித்தும் பயன் அடைய ஷ்ரீ செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.
சிந்தை திருந்தத் திருமுறை வளர்க!
சிந்தை தெளியச் சிவநெறி மலர்க!.