03 உரைத்திறம் செந்தமிழ்க் கலாநிதி பண்டித வித்துவான் திரு. தி. வே. கோபாலய்யர்
பிரெஞ்சு இந்தியக் கலைநிறுவனம்,
புதுச்சேரி.
தேவாரத்தின் முதல் திருமுறைக்குக் குறிப்புரை வரைந்த மகா வித்துவான் ச. தண்டபாணிதேசிகர் அவர்கள் ஆழ்வார்களின் அருளிச் செயல்களுக்கு வைணவச் சான்றோர் வரைந்த உரைநயங்களில் ஆழங்காற்பட்டு, அவர்கள் வரைந்த உரைபோலவே தாமும் சற்றுச் சுருக்கமான முறையில் உரை வரைய முற்பட்டுப் பலசொற்றொடர் களுக்கு நயமான உரைவரைந்து முதல் திருமுறையின் குறிப்புரையை நிறைவு செய்துள்ளார்.
அடுத்து, இரண்டாம் திருமுறைக்குக் குறிப்புரை வரைய முற் பட்டு சித்தாந்த ரத்நாகரம். முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் அவர்கள் ஆட்டாண்டு பொருள் விளக்கங்களை மேற்கோள்களோடு தந்து சொல்லமைப்புப்பற்றிய ஆராய்ச்சியில் பெரிதும் ஈடுபட்டுள்ளார்.
இம் மூன்றாம் திருமுறைக்கு உரைவரைந்த பண்டித. அ.கந்தசாமிப்பிள்ளையவர்கள் தமக்குமுன் உரை வரைந்த சான்றோர்கள் பின்பற்றிய நெறிமுறைகளை ஏற்றபெற்றி பின்பற்றித் தமக்கே உரிய நெறிமுறைகளையும் உளங்கொண்டு இந்த மூன்றாம் திருமுறையின் குறிப்புரையை நிறைவு செய்துள்ளார்.
பாடல்களுக்கு விரைவில் பொழிப்புரை எழுதி வழங்கும் ஆற்றலுடைய இவர் பொழிப்புரையில் மூலப்பகுதிகளுக்கு உரையாக அமைந்த சொற்றொடர்கள் எவை? பொருள் இணைப்புக்காக வருவித்துச் சேர்க்கப் பட்ட சொற்கள் எவை? என்ற செய்தி தெளிவாகப் புலப்படாதாகலின், பாடல்களின் பல பகுதிகளுக்குப் பதவுரை வரைந்துள்ளார்.
பதவுரை வரையும்போது அச்சொற்களின் பொருளைத் தெரிவிப்பதோடு அச்சொற்களின் முடிக்குஞ் சொல்லையும் பெரும்பாலும் இணைத்தே குறிப்பிட்டுள்ளார். உவம உருபுகளாக வழங்கும் சொற்கள், இன்றியமையாத நுட்பமான இலக்கணக் குறிப்புக்கள், பொருள் விளக்கத்துக்காகப் பலநூல்களின் மேற்கோள்கள், சில நுட்பமான விளக்கங்கள் என்பனவற்றை இவர் வரைந்த உரையில் எங்கும் காணலாம்.
சிவபெருமானைக் குறிப்பிடும் சொற்கள் வரும் இடங்களிலெல்லாம் இது சிவனுக்கு ஒரு பெயர் என்று பெரும்பாலும் மேற்கோள்களோடு குறிப்பிடுவது இவரிடத்தில் காணப்படும் தனிச் சிறப்பாகும்.
இவருக்குப் பன்னிரு திருமுறைகளிலும் பயிற்சி மிக உண்டு என்பது இவர் உரையில் பெறப்படுவதாகும். எனினும் பல இடங்களில் திருவாசகம் திருக்கோவையார் என்பனவற்றை மேற்கோளாகக் காட்டுவது இவர்பால் அமைந்த தனிச்சிறப்பாகும்.
நுட்பமாக அருஞ்சொற்பொருள் உணர்த்துதலைப் பல இடங்களிலும் காண்கிறோம். புராணவரலாறுகளைத் தேவையான இடங்களில் குறிப்பிடும் இவர் தமக்குப் புலப்படாத செய்திகள் ஒரோவழி உளவாயின் தம் புலப்பாடின்மையை வெளிப்படையாகக் கூறும் இயல்பினர். இச்செய்திகளைச் சற்று விரிவாகக் காண்போம்.
1. பதவுரை வரைதல்:
பெரும்பாலும் பாசுரங்களின் பெரும்பான்மையான பகுதி களில் காணப்படும் சொற்றொடர்களுக்கு உரைவரைந்து விளக்கும் இவர், ஒரு சில பாடல்களுக்கு முழுமையும் பொழிப்புரை வரைவதும், முதல் ஈரடிகளுக்கோ பின் ஈரடிகளுக்கோ கருத்து வரைந்து விளக்குவதும் பல இடங்களில் காணப்படுகின்றன.
பாடல் முழுதும் பொழிப்புரை - முதல் பதிகத்தின் 2,3 ஆம்பாடல் போல்வன 31-5, 37-6.
முதல் ஈரடிகளின் கருத்து - 9-1, 19-1, 22-5, முதலியன.
பின் ஈரடிகளின் கருத்து - 22-2, 44-2, 73-5, 82-5 முதலியன.
2. உவம உருபுகளாக வரும் சொற்கள்:
வரும் - பை அராவரும் அல்குல் 2-3
கொள் - வஞ்சிகொள்நுண்ணிடை 2-3
உலாவிய - கார் உலாவிய வார்குழலார் - 2-7
அமரும் - பந்து அமரும் விரல் மங்கை - 12-6
ஆர் - போதை ஆர் பொற்கிண்ணத்து அடிசில் - 24-2
தங்கிய - சகி தங்கிய சங்கவெண்தோடு - 57-1
மலி - இலையின்மலி வேல் நுனைய சூலம் - 72-2
கார்மலி நெறிபுரி சுரிகுழல் - 87-7
பொலி - விற்பொலி நுதற்கொடி - 76-1
தரும் - எரிதரும் உருவினர் - 84-7
படும் - துடிபடும் இடைஉடை மடவரல் - 86-4
உறு - மந்தரம் உறு திறல்மறவர் - 86-6
சூது உறு வனமுலை - 87-6
அமர் - அரும்பு அமர் கொங்கை - 100-1
3. இலக்கணக் குறிப்புக்கள் அ. ஆகுபெயர்கள்
கொவ்வை வாய்க் கொடியேர் இடையாள் - 2-9
கொவ்வை - முதலாகு பெயர்
போருலா எயில்சூழ்பொழில் - 2-7
போர்ப்பொறிகளைப் போர் என்றது காரிய ஆகுபெயர்
ஆத்தமாக ஏத்தினோமே - 40-8
ஆத்தம் - நண்பன் - பண்பாகு பெயர்
பாடல் பயிலும் பரமர் பழமை எனலாம் - 70-5
பழமை - பழமையாகிய பதி - பண்பாகுபெயர்
சீதம் அது அணிதரு முகிழ் இள வனமுலை - 87-2
சீதம் - சந்தனக்குழம்பு - பண்பாகுபெயர்
காமனைக் கவின் அழித்த - 90-4
உடம்பைக்கவின் என்றது தானியாகுபெயர்
கம்பின் ஆர் நெடுமதில் காழி - 93-11
கம்பு - சங்கு - சுட்ட சுண்ணாம்பிற்கானது கருவியாகுபெயர்
ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் - 95-11
ஏடு - இதழ். மலருக்கு ஆனமை சினையாகுபெயர்
உமை அறிபவர் நசை அறி நாவினர் தாமே - 98-7
நாவினர் - பேச்சை உடையவர். நா - கருவியாகுபெயர்
சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே - 100-1
செம்மை - செம்பொருள் - ஆகுபெயர். இப்பொருள் தருதலைச் `செம்பொருள் கண்டார்' என்ற திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரைத்த உரையான் அறிக.
துறைகெழு கேதகை மீது வாசம் சூழ்வான் மலிதென்றல் - 105-6
வாசம் - மகரந்தம் - காரியஆகுபெயர்.
உன்னிய சிந்தையின் நீங்க கில்லார்க்கு உயர்வாம்; பிணிபோமே - 106-3
உயர்வுஆம் - முத்தி எய்தும். உயர்வு - ஆகுபெயர்
ஆலை ஆருர் ஆதி ஆனைக்காவே - 109-3
ஆலை ஆரூர் - கருப்பங்கழிகளை உடைய திருவாரூர். ஆலை - தானியாகுபெயர்.
படையில் அம் கையில் நல் அம் என்பதே - 114-2
அம் - அழகு. அஃது அணிகலனுக்கு ஆகியது காரிய ஆகுபெயர்.
அம்கை விரலைக் குறித்தது முதலாகுபெயர்
யாமா மா - 117-3
மா - பெருமை வாய்ந்தவனே - பண்பு ஆகுபெயர்.
பரிமேலழகருடைய உரையில் தோய்ந்த புலமையால், தாம் ஆகுபெயர்ப்பொருள் குறிப்பிடும் இடங்களிலெல்லாம் ஆகுபெயர் களின் பலவகைகளையும் சுட்டிச் சொல்லுதல் இவருக்கு வழக்கம் என்பதனைக் காண்கிறோம்.
5. அணிகளைச் சுட்டுதல்
ஆங்காங்கு இத்திருப்பாடல்களில் காணப்படும் அணிகளைச் சுட்டிச் செல்வதும் இவருக்கு வழக்கம்.
எண்ணலங்காரம் - 71-6, 122-6
வீறுகோளணி - 70-4, 75-4
திரிபதிசய அணி - 75-3
மிகைஉயர்வுநவிற்சியணி - 83-8
தற்குறிப்பேற்ற அணி - 89-3
குறிப்பு உருவக அணி - 116-7
ஏகதேச உருவக அணி - 125-1
பலபொருளுவமை அணி - 2-4
முதலிய பல அணிவகைகள் இவ்வுரையில் இடம் பெற்றுள்ளன.
6. புராணங்களைச் சுட்டுதல்
பெரியபுராணம் 18-2, 24-11, 32-11, முதலிய இடங்களிலும்
கந்தபுராணம் 78-1, 100-8, 106-10 முதலிய இடங்களிலும்
பொதுவான சிவபுராணம் 7-2 முதலிய இடங்களிலும்
திருவானைக்காப்புராணம் 53-3, 100-8 முதலிய இடங்களிலும்
திருவாரூர்ப்புராணம் 54-9 முதலிய இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
7. திருவாசகம், திருக்கோவையார் - மேற்கோள்
இவ்வுரையாசிரியர் ஏனைய உரையாளர்கள் போலவே, சங்கஇலக்கியம், மணிமேகலை, சிந்தாமணி, திருக்குறள், நாலடியார், திருமுறைகள் இவற்றிலிருந்து பல மேற்கோள்கள் காட்டும் இயல்பினர். எனினும் திருவாசகம், திருக்கோவையார் என்ற தெய்வப்பனுவல் களிலிருந்து பலமேற்கோள்களை இவர் குறிப்பிடும் செயல் இவ்வுரையில் தொட்ட தொட்ட இடங்களிலெல்லாம் காணப்படுவதாகும்.
திருவாசகத்தொடர்கள் மேற்கோள் காட்டப்பட்ட இடங்களை மாத்திரம் சுட்டித் திருக்கோவையாரின் தொடர்களையும் அவை மேற்கோள் காட்டப்பட்ட இடங்களையும் நோக்குவோம்.
திருவாசக மேற்கோள்கள்:
4-4, 6-3, 16-1, 20-4, 21-5, 24-8, 26-5, 32-10, 38-5, 38-8, 43-2, 49-8, 54-1, 58-5, 59-7, 62-1, 62-5, 64-10, 72-3, 79-6, 86-8, 91-11, 94-6, 97-5, முதலிய பல திருப்பாடல்களின் உரையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
திருக்கோவையார் மேற்கோள்:
1. தேம்பல் நுண்ணிடையாள் - 2-11
தேம்பலஞ் சிற்றிடை ஈங்கிவள் - கோவை.
2. கொண்டிரைக் கொடியொடும் - 33-7
கொண்ட + இரை - பெயரெச்ச விகுதி விகாரத்தால் தொக்கது,
அறுகால் நிறைமலர் ஐம்பால் நிறை அணிந்தேன் - கோவை, போல.
3. போழ்ந்த திங்கள் - 42-8
போழ்ந்த - போழ்ந்தாலனைய
குணம்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாய் இக் கொடியிடை (கோவை) போல.
4. சந்தமால் அவர்மேவிய சாந்தமே - 44-1
சந்தம் - தன்மை.
அடிச்சந்தமாமலர் காட்டி (கோவை) போல.
5. வெடிதரு தலையினர்: 92-6
வெடிதரு - வெடித்தாற் போன்ற.
குணம் தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாய் இக்கொடியிடை (கோவை) போல.
6. உயர்ந்தும் பணிந்தும் செல்வற நீண்ட செல்வர் - 100-9
உயர்ந்தும் பணிந்தும் உணரா - கோவை - 287
7. ஏ இயல் வெஞ்சிலை அண்ணல் - 101 - 11
வெஞ்சிலை காய்சினவேல் (கோவை) போலக் கொள்க.
8. அடியார்மேல் நடலை வினைத்தொகை தீர்த்து உகந்தான் - 107-1
நீறணிந்த கோலம் நெஞ்சம் பிணிக்கும் எழில் உடைமையான் அக்கோலம் தொழுவார் உள்ளத்து நீங்காது நிற்றலான் ஆண்டுள்ள வினைநீறாம் - கோவை. 118 உரை.
9. கொக்கிறகும் குளிர்சென்னி மத்தம் குலாய மலர் சூடி - 107-6
கொக்கின் இறகு அது அணிந்து நின்று ஆடி - கோவை - 376
10. இணையிலி என்றும் இருந்த கோலம் - 10-6
இணையிலி தில்லைத்தொல்லோன் - கோவை
11. தொழுது எழு பூவணத்து உறை - 20-3
தொழுது எழுவார் வினைவளம் நீறெழ - கோவை என்பன போன்ற திருக்கோவையார் மேற்கோள்கள் இவ்வுரையில் பல உள.
8. சொற்பொருள் விளக்கம்:
மாதவி - இது ஒரு கொடி. மரம் என்பதும் ஆம்.
1. செருந்திபூ மாதவிப்பந்தர் வளர் செண்பகம் - 35-5
மாதவிக்கொடி பந்தல் போலப் படர்தலால் மாதவிப்பந்தல் என்றே கூறப்படும்.
மாதவி மரம் என்றலும் ஒன்று.
2. செடியார் மாதவி - செடிகளோடு கூடிய மாதவிமரம் - 55-2
மாதவி ஒருவகை மர விசேடம்.
3. மாதவி மணம் கமழ வண்டு பல பாடுபொழில் - 71-5
மாதவி - மாதவிக்கொடிகள்.
4. மாதவியின் மீது அணவு தென்றல் - 76-2
மாதவி மீது - மாதவி முதலிய மரங்கள் மீது.
இவற்றை நோக்க இவ்வுரையாளர் மாதவி என்பது ஒரு கொடி என்றோ, ஒரு மரம் என்றோ உறுதியாக முடிவு செய்யாமல் இருதிறக் கருத்துக்களையும் ஏற்கும் இயபினராதல் பெறப்படும். அசுணம் என்பதனை ஒரு விலங்கு என்றும் ஒரு பறவை என்றும் இருதிறத்துக் கருத்துக்கொள்வது போல்வது இது.
மூரி - எருது - மலையாளச்சொல் - 17-4
அண்ணா - தந்தையே - திசைச்சொல் - 55-5
பொக்கு - பொய் - திசைச்சொல் - 61-10
கனகமூக்கு - பொன்மூக்குமின் - 35-8
முகை - காய்அரும்பு 2-4
மொட்டு - முற்றிய அரும்பு - 2-4
பிஞ்ஞகன் - மயிற்பீலியை அணிந்தவனாகிய சிவபெருமான் - 5-6
கோட்டகம் - வயலின் புறத்தே நீர் தேங்கியருக்கும் இடம் - 6-2
கட்டங்கம் - யோகதண்டம் - 9-4
முரறுதல் - மூக்கினால் ஒலித்தல் - 14-4
தொகுத்தல் - பலவாய்க் கிடப்பவனவற்றை ஒருமுகப் படுத்திச் சேர்த்தல் - 23-6
சாலம் - ஆலமரம் - 32-4
கண்ணன் - கரிய நிறமுடையவன், திருமால் - 46-9
கிருஷ்ணன் என்பதன் சிதைவு - 108-7
சுத்தி - இப்பியால் ஆகிய பொக்கணம் 57-8
சங்காட்டம் - சங்குப்பூச்சிகள் திரையில் தவழ்வது போலத் தனியே உலாவும் மதிழ்ச்சி - 63-1
இப்பி - சங்குப்பூச்சி - 66-6
எழுதும்மொழி - எழுதக்கூடிய வேதமொழியாகிய தமிழ் - 67-12
வாய் - ஆற்று ஓரம். ஆற்றோரம் தண்ணீர் அறுக்காதபடி கட்டப்படும் அணையை வாகணை என்று வழங்குப - 70-9
பாசுபதவேடம் - சவம் தாங்கு மயானத்துச் சாம்பல் என்பு தலையோடு மயிர்கயிறு தரித்தான் தன்னை, பவம் தாங்கு பாசுபத வேடத்தானை - திருச்செங்காட்டாங்குடித் தாண்டகம் - 72-8
தலையல் - மழைபெய்தல் - 84-11
கங்காளம் - முழு எலும்புக்கூடு - 93-6
துயர் - உள்ளம் பற்றிய நோய் - 94-4
பிணி - உடலம் பற்றிய நோய் - 94-4
நைதல் - உருகுதலுக்கு முன் உறும் நிகழ்ச்சி - 97-5
முதலியன அருமையான சொற்பொருள் விளக்கங்களாம்.
9. இருவகையாகப் பொருள்கோடல்
2-3. பஞ்சினேரடி - பஞ்சின் ஏர் அடி, பஞ்சின் நேரடி.
இன் - ஐந்தன் உருபும் தவிர்வழி வந்த சாரியையும் ஆம்.
பஞ்சைப்போன்ற மெத்தென்ற அழகிய அடி, பஞ்சினை ஒத்த அடி - என இருவகையாகப் பொருள் செய்யலாம்.
3-1. அமர்ந்தவனே! நிறைமதி அருளினனே
அமர்ந்தவராகிய நீரே எனக்கு நிறைமதி அருளினீர் ஆவீர் - இடவழுவமைதி. இனி, அமர்ந்தவன் எவனோ அவனே எனக்கு நிறைமதி அருளினவனும் ஆவன் என்றும் பொருள் செய்யலாம்.
3-3. நின்மலன் - இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன். தன்னைச்சார்ந்த ஆன்மாக்களின் மலத்தை ஒழிப்பவன் என்பதும் ஆம்.
10-6. பனை இலங்கும் முடி.
முரசம் போன்ற தலை. பருத்து விளங்கும் முடி என்றும் கூறலாம்.
13-4. பாகு அமர் மொழி - வெல்லப்பாகு போன்ற இனிமை பொருந்திய சொல். பாகம் ஆர் மொழி என்று பாடம் ஓதின் இனிமை தங்கிய மொழி என்பது பொருள்.
66-11. உண்டு உடுப்பில் வானவர்
அமுத உண்டியை உண்டு தோயாப்பூந்துகில் உடுத்தலால் சிறந்ததேவர்.
இல் என்பதற்கு இல்லாத என்று பொருள்கூறி மானிடரைப் போல உண்டலும் உடுத்தலும் இல்லாத தேவர் என்றும் பொருள் செய்யலாம்.
78-2. துற்பரிய நஞ்சு
துற்று - உண்டி. துற்பு - உண்ணல். உண்ணுதற்கரிய நஞ்சு.
துன்னுதல் துன்பு - துற்பு எனக்கொண்டு அண்டுதற்கு அரியவிடம் என்றும் பொருள் கூறலாம்.
இவ்வாறு இருவகையாகச் சொற்றொடர்களுக்குப் பொருள் கொள்ளும் இடங்கள் இவ்வுரையில் பலப்பல உள்ளன.
10. உரையில் காணப்படும் நயமான இடங்களுள் சில.
1-1. பல்சடைப் பனிகால்கதிர் வெண்திங்கள் சூடினாய்
பல்சடை எனப் பன்மையும், புன்சடை எனக் குறுமையும் நீள்சடை என நெடுமையும் பொன்சடை என நிறமும் விரிசடை எனப் பரப்பும் நிமிர்சடை என உயர்ச்சியும் பிறவும் திருமுறையுள் காணப்படும்.
நறுங்கொன்றை நயந்தவனே மந்திரங்களுள் சிறந்ததாகிய பிரணவ மந்திரத்துக்கு உரிய தெய்வம் தாமே எனத்தெளியச்செய்யக் கொன்றை மாலை அணிந்தனர். அம்மலர் உருவிலும் பிரணவ வடிவமாயிருத்தலின் பிரணவ புட்பம் எனப்படும்.
1-6 உமை ஆகம் தோய்பகவா! பலியேற்றுழல் பண்டரங்கா
பகவா - பகவனே! ஐசுவரியம், வீரியம், ஞானம், புகழ், திரு, வைராக்கியம் என்னும் இவ்வாறு குணங்களும் உடையவன் பகவன். அது சிவபெருமானையன்றி மற்று எவரையும் குறிக்காது. திரிபுர தகனம் செய்த மகிழ்ச்சியால் தேரே நாடகமேடையாக நின்று சிவபெருமான் ஆடிய கூத்தினைப் பாண்டரங்கம் என்பர். அது `திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள் தேரே அரங்கமாக ஆடிய கூத்தே பாண்டரங்கமே' என்பதனால் அறிக.
1-8. தீயின் ஆர்கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய்
தீயின் ஆர்கணையால் - தீயாகிய அம்பினால். திரிபுரம் எரித்த அம்பின் நுனிப்பாகம் தீயாய் இருந்தமையால், தீயின் ஆர்கணை எனப்பட்டது. அம்பின் அடிப்பாகம் காற்று. நுனி தீ அம்பு திருமால் என்பவற்றை 1-11-6 ஆம் வீழிமிழலைப் பாசுரத்தில் காண்க.
5-5. நுந்தம் மேல்வினை ஓட வீடுசெய் எந்தை
மேல்காலப்பொருளில் முற்பிறப்புக்களில் ஈட்டி எஞ்சிய சஞ்சிதவினையையும், இடப்பொருளில் இனி ஈட்டும் வினையாகிய ஆகாமிய வினையையும் குறிக்கும்.
13-8. மாசின அரக்கனை வரையின் வாட்டிய காய்சின எயில்களைக் கறுத்த கண்டனார்
மாசு+இன்+அ அரக்கன் - பாவத்தை உடைய பாவியாகிய இராவணன். அடுத்த அடியில் காய்சினம் எனவருதலால் முதலடி யிலும் சினமே என்று பிரித்தல் சிறப்புடைத்தன்று.
27-6 பாங்கினான் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை வாங்கினார்
வெஞ்சிலை - விரும்பத்தக்க மேருமலை. தேர் ஆதற்கு இயைபில்லாத பூமியும், அம்பு ஆதற்கு இயைபு இல்லாத திருமாலும் குதிரை ஆதற்கு இயைபு இல்லாத வேதமும் முறையே தேரும் அம்பும் குதிரைகளும் ஆனாற்போல, வில் ஆதற்கு இயைபு இல்லாத மலை வில்லாயிற்று என்பது. கொடியவில் என்பதன்கண் பொருள் சிறவாது.
32-6. வெய்யவன் பிணிகெட
கொடிய கடிய பிணி நீங்க. துன்புறுத்தலால் வெய்யபிணி எனவும் எளிதில் நீங்கப்பெறாமையால் வன்பிணி எனவும் கூறப்பட்டது.
33-7. பண்டு இரைத்துத் தோத்திரம் சொல
இரைத்து - மகிழ்ச்சியால் ஆரவாரித்து. `மந்திரத்தைப் பிறர்காதில் படாதவாறு உச்சரிக்க. தோத்திரம் பிறரும் கேட்குமாறு ஓசையோடும் பாடுக' என்பது ஆகமவசனக்கருத்து என்ப.
46-2. கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர் அமுதர்
கம் - மணம், வெண்மை. முதம் - உவகை. அமுதம் மணமும் வெண்மையும் உவகை செய்தலும் உடையது. கமுதமுல்லை - மணமும் வெண்மையும் உவகை செய்தலும் முல்லைக்கும் உரியன.
59-1. அரவிரி கோடல்
பாம்பைப் போலத் தண்டோடு மலர் விரிந்த காந்தட்செடிகள்.
காந்தள்தண்டு பாம்பின் உருவிற்கும் அதன் பூ விரிதல் படத்திற்கும் உவமை.
59-4. வேங்கை உரி ஆர்த்து
இறைவனுக்குப் புலித்தோல் உடையும் கரித்தோல் போர்வை யும் சிங்கத்தோல் ஏகாசமுமாம் என்பர்.
88-2. இலகு இணை மரவடியினர்
மரவடி - மரத்தாலாகிய பாதுகை.
பிட்சாடன மூர்த்தியின் கோலத்தில் இதனைத் தரித்திருப் பவன் என்பதை `அடியில் தொடுத்த பாதுகையும்' என்ற காஞ்சிப் புராணப் பாடலான் அறிக.
92-11. அருந்தமிழ்மாலைகள் பாடியாடக் கெடும் அருவினையே
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முத்தமிழ் விரகர் ஆகையால் அவர் அருளிய பாடல்கள் இயற்றமிழ்ப்பாடல்களே அன்றிப் பாடுதற்குரிய இசைப்பாடல்களாகவும் ஆடுதற்குரிய பாடல் களாகவும் உள்ளன என்பது இங்குக் குறித்தவாறு.
98-5. பால் நிகர் உருவுடையீரே
சதாசிவ மூர்த்தியின் நிறம் வெண்மை என்பதால் பால் நிகர் உருவுடையீர் எனப்பட்டது.
102-3, 109-11, 112-5, 120-7 முதலியனவும் காண்க.
11. சாத்திரக் கருத்துக்கள்
2-10. முன்வினைப் பயனால் புறமதத்தில் பிறந்து அதன் பயனாகச் சிவபெருமானைப் பழித்துரைத்து மேலும் தீவினைக்கே முயல்கின்றனர். அவ்வாறு அவர்கள் செய்வது கர்மவசத்தினால் ஆவது எனினும் அதுவும் சிவன் செயலே என்று உணர்த்துவார். `ஆக்கினான்' என இறைவன் மேல்வைத்து ஓதினார்.
3-7. அடியவர்கள் இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் முறையே எய்திச் சிவப்பேறு அடைவர் என்க.
9-1. உலகத்திற்குச் சிருட்டிகருத்தரும் சங்கார கருத்தரும் ஆவர் எனவே இரட்சக கருத்தரும் சிவபெருமான் ஒருவரே என்க. `படைப்போற் படைக்கும் பழையோன், படைத்தவை காப்போற் காக்கும் கடவுள், காத்தவை கரப்போன்' எனவரும் சுருதி வாக்கியங்க ளான் அறிக. (திருவாசகம்)
21-6. உலகமாகிய காரியத்துக்கு இறைவன் நிமித்த காரணமாம் தன்மையை அறிந்து ஏத்தும் இக்கருத்தை `கோலத்தாய்! அருளாய்! உன்காரணம் கூறுதுமே அன்பர்க்கு' என்னும் இத்திருமுறை முதற்பதிகத்தும் காண்க.
22-9. இப்பதிகம், இருவரும் காணாதசேவடி என்று மட்டும் குறிக்கிறது. திருமாலால் காணமுடியாத அடி பிரமனாலும் காண முடியாது என்பதாம். அடியே காணாதார் முடி காணமாட்டாமையும் பெறப்பட வைத்தமை அறிக.
25-11. திருநீறு ஒன்றையே பொருளாகக்கொண்டு முத்தி அடைந்தவர் ஏனாதிநாதனார். சடைமுடி ஒன்றே காரணமாக எரியில் புகுந்து உயிர்நீத்து முத்தியுற்றவர் புகழ்ச்சோழ நாயனார். திருநீறு முதலிய அனைத்தும் கூடிய வேடத்தைப் பொருளென்று கொண்டு முத்திபெற்றவர் மெய்ப்பொருள் நாயனார்.
26-1. திரவிய சுத்தியின்பொருட்டு அஸ்திரமந்திரத்தால் நீர் தெளித்து அத்திரவியங்களை அபிடேக கலயத்தில் வார்த்துக்கொண்டு நின்று ஆட்படுவர். கிரியை எல்லாம் அறிவோடு கூடிய வழியே பெரும்பயன் விளைப்பதால் அவ்வொப்புமைபற்றி ஞானம் கிட்டு தற்கு நிமித்தமாகிய கிரியையை ஞானம் என்றார்.
28-11. தேவாரத்திருமுறைகளையும் சித்தாந்த நூல்களையும் ஓதுங்கால் இயன்ற அளவு உடற்சுத்தியோடு விபூதி உருத்திராக்கம் அணிந்து ஓதவேண்டும் என்பது முறை ஆதலின் கோலத்தால் பாடுவார் என்றார்.
31-9. யோகு அணைந்தவன் - யோகம் செய்பவன். `யோகியாயிருந்து முத்தி உதவுதல் அதுவும் ஓரார்' என்பது சிவஞான சித்தியார்.
35-4. உள்நிலாவிய ஆவியாய் - உயிருக்குள் விளங்கும் உயிராய் ஓங்கும் தன்மை. சிவஞானசித்தியாரில் `உயிர்க்கு உயிராம் ஒருவனையும்' எனவருதல் காண்க.
37-9. தண்டொடு அக்குவன் சூலமும் தழல் மாமழுப்படை தன்கையில் கொண்டு ஒடுக்கிய மைந்தன் கூத்தனே.
தண்டொடு அக்கு - யோகதண்டத்துடன் செபமாலை. இவை யோகரூபம் குறித்தவை. ஒடுக்கிய மைந்தன் - உமாதேவியாரை இடப் பாகத்தே சேர்த்த வலியவன். இது போகரூபம் குறித்தது. கூத்தன் - செயற்பாடு குறித்தது. ஆக இறைவனுடைய மூன்று உருவமும் இதனுள் அமைந்தமை காண்க.
54-2. இவ்வடிவே அன்றி, பிருதிவி முதலான பூதங்களும், ஆன்மகோடிகளும், பல்கோடிப்பண்டங்களும் பிற அனைத்தும் தன்வடிவாக நிற்பவன் என்றவாறு - சிவஞான சித்தியார்
61-7. ஐம்புலன் வென்றவன் - ஞானிகளுக்கு ஐம்புலன் களையும் வெல்லுவித்தவன். `பொறிவாயில் ஐந்து அவித்தான்' என்ற திருக்குறளுக்கும் இப்பொருள் நேரிது.
இவைபோலவே 62-6, 8, 70-1, 81-11, 86-7, 88-4, 100-1, 102-3,4, 112-6, 119-6, 121-6, முதலியனவும் குறிப்பிடும் அருஞ்செய்திகளைக்காண்க.
12. அடக்கம்
77-1. உதவிமாணிகுழி என்று அடைமொழியோடு இணைத்தே கூறப்படுகின்ற காரணம் விசாரித்து அறியத்தக்கது.
46-3. இதில் உள்ளதொரு வரலாறு விளங்கவில்லை.
114-6. நான்காவது அடியின் பொருள் விளங்கவில்லை.
என்பன போன்ற தொடர்கள் இவருடைய நேர்மையான புலமைக்கு எடுத்துக்காட்டாகும்.
இத்தகைய நலன்கள் சான்ற குறிப்புரையை மூன்றாம் திருமுறைக்கு வரைந்து நமக்கு உதவியுள்ள இப்பெருமகனாரின் நினைவு நன்மக்கள் உள்ளத்தில் என்றும் நிலைபெற்றிருக்கும் என்பது உறுதி.
இவ்வரிய குறிப்புரையைக் கற்பார் நலன் கருதிப் பொழிப்பு உரையோடும் வெளியிட்டருளும் நம் குருமகா சந்நிதானத்தின் நிர்ஹேதுக கிருபைக்குத் தலையாய கைம்மாறு இலேம் யாம்.