குருபாதம்

03 பதிப்புரை

"பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்

துறவியெனுந் தோற்றோணி கண்டீர் - நிறைஉலகிற்

பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்

தன்மாலை ஞானத் தமிழ்." -நம்பியாண்டார் நம்பி

வேதநெறி தழைத்தோங்கவும், சைவத்துறை விளக்கம் பெறவும் திருவவதாரம் செய்தருளியவர் திருஞானசம்பந்தர். அவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாகப் போற்றப் பெறுகின்றன.

`திசையனைத்தின் பெருமை எலாம் தென்திசையே வென் றேறவும், அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்லவும்` விளங்கும் அவர் அருளிய திருப்பதிகங்கள் தமிழ் மக்களின் மொழி, சமயம், தத்துவம், இலக்கியம், பண்பாடு, வரலாறு ஆகிவற்றை விளக்கி நிற்கும் ஞானப் பெருங்கடல் எனலாம்.

திருஞானசம்பந்தர் தமிழோடு இணைந்து நின்று திருப் பதிகங்கள் அருளியிருப்பதை அவர்தம் தேவாரத் திருப்பதிகங்களில் காணலாம். ஆளுடைய நம்பிகள் ஞானசம்பந்தரை `நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்` எனக் குறித்தருளுவார். ஞானசம்பந்தரே தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன், தமிழ் விரகன், தமிழாகரன், முத்தமிழ்விரகன் முதலிய பல பெயர்களால் குறிப்பிட்டுள்ளதை அவர்தம் திருப் பதிகங்களில் காணலாம்.

ஞானசம்பந்தரின் தேவாரத் திருப்பதிகங்களை `நல்ல சங்கத்து ஒன்றும் புலவர்கள் யாப்புக்குரியன' என்று அருளிச்செய்கின்றார் நம்பியாண்டார் நம்பிகள். ஞானசம்பந்தர் பல்வேறு சந்த யாப்புக்களில் திருப்பதிகங்கள் அருளியுள்ளார்.

அந்தாதித் தொடை, முடுகியல் சந்தமான திருவிராகம், ஈரடி, ஈரடிமேல்வைப்பு, ஏகபாதம், எழுகூற்றிருக்கை, கூடல் சதுக்கம், கோமூத்திரி, சக்கரமாற்று, மாலைமாற்று, மொழிமாற்று, இடைமடக் காக வரும் திருமுக்கால், யமகம், நாலடி மேல்வைப்பு, வழிமொழித் திருவிராகம், குற்றெழுத்தே வரும் பாடல், நெட்டெழுத்தே வரும் பாடல், கொம்பிலாப் பாடல் முதலிய பல்வேறு வகையான பாடல் களை அருளிச் செய்தவர் ஞானசம்பந்தர்.

சித்திரக் கவிகள் அனைத்தும் சீகாழிக்கு உரியனவாகவே அமைந்துள்ளன. எல்லாப் பண்களிலும், கட்டளைகளிலும் சீகாழித் திருப்பதிகங்கள் உள்ளன. இவை ஆளுடைய பிள்ளையார் தமக்கு சிவஞானம் அளித்தருளிய அத்தலப் பெருமான் மீது கொண்டிருந்த ஆராத காதலை வெளிப்படுத்துவனவாகும்.

திருமுறைகளைப் பண் வரிசையில் அமைத்த நம்பியாண்டார் நம்பிகளும் பண்வரிசையில் பெரும்பாலும் சீகாழிக்குரிய தலத்தை முன்வைத்தே அடைவு செய்துள்ளார்.

திருஞானசம்பந்தரின் மூன்றாம் திருமுறையில், காந்தார பஞ்சமம், கொல்லி, கொல்லிக் கௌவாணம், கௌசிகம், பஞ்சமம், சாதாரி, பழம்பஞ்சுரம், புறநீர்மை, அந்தாளிக் குறிஞ்சி என்னும் ஒன்பது பண்களுக்குரிய நூற்றிருபத்தைந்து திருப்பதிகங்கள் உள்ளன. புதிதாகக் கல்வெட்டில் கிடைத்த திருவிடைவாய்த் திருப்பதிகமும் பிற்சேர்க்கையாக 126ஆவது பதிகமாகச் சேர்க்கப் பெற்றுள்ளது.

திருஞானசம்பந்தர் தமக்கு உபநயனச் சடங்கு நிகழ்ந்தபோது `மறை நான்கும் தந்தோம்' என்று மந்திரங்கள் தந்த மறையவர்க்கு அறிவுறுத்திய பஞ்சாக்கரத் திருப்பதிகமும், தம் தந்தையார் செய்ய விரும்பிய வேள்விக்குப் பொன் வேண்டிப் பாடிய உலவாக்கிழித் திருப்பதிகமும், மதுரையில் அடியார்களுடன் தங்கியிருந்தபோது திருமடத்திற்குச் சமணர்கள் இட்ட தீயைப் `பையவே சென்று பாண்டியற்கு ஆகவே' எனப் பணித்துப் பாடிய `செய்யனே' என்னும் திருப்பதிகமும், சமணர்களோடு வாதுசெய்ய ஆலவாய்ப் பெருமான் திருவுளக் குறிப்பறியப் பாடிய `வேத வேள்வியை', `காட்டுமாவது' ஆகிய முதற்குறிப்புகளுடைய திருப்பதிகங்களும், அனல் வாதத்தில் இட்ட ஏடு வேவா வண்ணம் பாடிய `தளிரிள வளரொளி' என்ற திருப் பதிகமும், புனல்வாதத்தின்போது வைகையாற்றில் இட்ட திருப்பாசுர மும், திருக்கொள்ளம்பூதூரில் நாவலமே கோலாகக் கொண்டு ஓடம் உய்த்த திருப்பதிகமும், திருமணம் காண வந்தோர் அனைவரும் பிறவிப் பிணி தீர்ந்து முத்திப் பேறு பெற அருளிய நமச்சிவாயத் திருப்பதிகமும், பாதமெய் நீழல் மருவும் பருவம் ஈதென வேண்டி ஈறில் பெருஞ்சோதியில் புகும் நிலையில் பாடிய `கல்லூர்ப் பெரு மணம்' என்ற திருப்பதிகமும் இத்திருமுறையில் அமைந்துள்ள அற்புதத் திருப்பதிகங்கள் ஆகும்.

நம்பியாண்டார் நம்பிகள் பண் வரிசையில் திருமுறைகளை அடைவு செய்தனராயினும், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் திரு முறைகளில் முதல் திருப்பதிகத்தையும் நிறைவுத் திருப்பதிகத்தையும் பாடியவாறே வைத்து அடைவு செய்திருக்கும் முறையில் `தோடுடைய செவியன்' திருப்பதிகத்தை முதல்திருமுறையின் முதலாவது திருப் பதிகமாகவும், `கல்லூர்ப் பெருமணம்` திருப்பதிகத்தை மூன்றாம் திரு முறையின் நிறைவுத் திருப்பதிகமாகவும் அமைத்துள்ளார்.

இவ்வாறு ஞானப் பெருங்கடலாக விளங்கும் அவர்தம் தேவாரம் உரை விளக்கங்களோடு தருமை ஆதீன வெளியீடாக தவத்திரு கயிலைக்குருமணிகளின் அருளால் 1955 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

இதுபோது தருமை ஆதீனம் 26 ஆவது குருமகா சந்நிதானம் தவத்திரு சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் இத்திருமுறையில் பொழிப்புரையையும் குறிப்புரையோடு கூடுதலாக இணைக்கச் செய்து தவத்திரு கயிலைக் குருமணியின் குருபூசை வெள்ளிவிழா நினைவாக வெளியிட்டருளு கின்றார்கள்.

இத்திருமுறைக்கு தருமை ஆதீனத் தேவாரப் பாடசாலை தமிழாசிரியர் பண்டித திரு. அ. கந்தசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய விளக்கக் குறிப்புரையோடு, மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தத்துவத்துறைப் பேராசிரியர் டாக்டர். திருமதி. கோமதி சூரியமூர்த்தி அவர்கள் எழுதிய பொழிப்புரையும் சேர்க்கப் பெற்றுள்ளது.

இத்திருமுறைப் பதிப்புக்களைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.

அன்பர்கள் ஓதி உணர்ந்து இன்புறுவார்களாக.

தவத்திரு குருமகா சந்நிதானத்தின்

திருவுளப்பாங்கின் வண்ணம்

பொன்னம்பலத் தம்பிரான்

அருள்மிகு சட்டைநாத சுவாமி தேவஸ்தானம், சீகாழி. கட்டளை விசாரணை.