உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
03 முகவுரை
இது `திருநெறிய தமிழ்'. திரு என்பது `திருவே என் செல்வமே தேனே' என்பதில் சிவபிரானையும், `திருவொளி காணிய பேதுறுகின்ற திசைமுகன்' என்பதில் திருவருளையும், `சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்' என்பதில், பேரின்பத்தையும் குறிக்கின்றது. `திருவொடும் அகலாதே அருந்துணைவனாய் ஆண்டுகொண்டருளிய அற்புதம் அறியேனே' எனத் திருவருளையும், `என் உளம்புகுந்த திருவந்தவாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ' எனச் சிவ பிரானையும், `அடியோம் திருவைப் பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ' என அம்மூன்றையும் குறித்தல் ஆளுடைய அடிகள் திருவாசகத்தாலும் அறியலாம்.
`செப்பரிய அயனொடுமால் சிந்தித்தும் தெரிவரிய அப்பெரிய திரு' `சென்றடையாத திரு' என்றமையால், திருநெறி என்பது சிவநெறி, அருள்நெறி, பேரின்பநெறி என்ற பொருள் பயப்பதாகும். திருவடி, திருவருள், முதலியவற்றை இருபெயரொட்டாகக் கொள்வதே பொருத்தம். திருவாரூர், திருநள்ளாறு முதலியவற்றைப் போலக் கொள்ளல் பொருந்தாது.
துன்பம் அற, அழியாத இன்பம் உறச் செல்லும் வழியையும், அவ்வழியின் ஒழுகும் ஒழுக்கத்தையும், அவ்வொழுக்கத்தின் நீங்காத நீதியையும் நெறி என்பர். மார்க்கம், சமயம், மதம் என்ற பொருளிலே `நெறி' என்ற பெயர் ஆளப்படுகின்றது.
நெறி பல. அவற்றுள், வேதநெறியும் ஆகமநெறியுமே சிறந்த நெறி. அவ்விரண்டும் முறையே பொதுவும் சிறப்பும் ஆகும். பொதுநெறியாதலின் `வேதநெறி தழைத்தோங்க' என்றும், சிறப்புநெறியாதலின் `மிகு சைவத் துறை விளங்க' என்றும், அன்பே சிவமாதலின், `பூதபரம்பரை பொலிய' என்றும் அருளினார் சேக்கிழார் பெருமானார்.
திருநெறி சரியை கிரியை யோகம் மூன்றும் அநுட்டித்துவந்த நல்லோர்க்கு விளங்கும் ஞான நன்னெறி. முன்னெறி சரியை, செந்நெறி கிரியை, ஒளிநெறி யோகம், திருநெறி ஞானம் எனக் கொள்ளவும் திருமுறைச் சான்றுகள் இருக்கின்றன. `திருநெறி அருளே கண்ணாச் செல்நெறி'என்றருளினார் உமாபதிசிவாசாரியார்.
`திருநெறியதமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆம்'. இங்குத் `தமிழ்' திருப்பதிகத்தைக் குறிக்கும். இவ்வாறே ஏனைய வற்றிலும் உணர்க. `நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞான சம்பந்தன்' என்றால் தமிழ் எது?
திருஞானசம்பந்தர் அருளிய திருமுறைகளுள் முதலாவது, வித்துவான், திரு. ச. தண்டபாணி தேசிகர் எழுதிய குறிப்புரையுடன் ஆதீன வெளியீடாக முதலில் வந்தது. இரண்டாவது அடியேன் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்பு முதலியவற்றுடன் வெளிவந்தது.
இம் மூன்றாவது திருமுறை திரு. பண்டித அ. கந்தசாமிப் பிள்ளை எழுதிய குறிப்புரை யுடையதாயும், அவ்விரண்டையும் போலத் தலங்களின் வரலாற்றுக் குறிப்பு, கல்வெட்டுச் செய்திகள் முதலியவற்றைக் கொண்டதாயும் தமிழுலகிற்குக் கிடைக்கின்றது.
திருமுறைகளுக்கு உரை எழுதலாகாது என்று பாடிய காலம் போயிற்று. இக்காலச் சைவமக்களுணர்ச்சியின் நிலையை நோக்கி உரையுடன் விளங்க வேண்டும் என்ற பேரிரக்கம், இத் தருமை யாதீனத்து 25 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் திருவுள்ளத்தில் எழுந்தது. அப்பேரிரக்கத்தின் ஒரு சிறிதே இம் மூன்று திருமுறைகளின் உரைவடிவம் ஆகி, சைவ மக்களுக்கும் சமயவுணர்ச்சியிற் பொதுமை தவிராத ஏனைய மக்களுக்கும் மிக்க பயன் விளைக்கின்றது. விளைத்ததால் இவ்வுலகம் அவர்கள் திருவடிகளை மறவாமல் போற்றும் கடமைக்கு உரியதாகும்.
இனி, திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருமுறைகள் முதலியனவும் இம்முறையில் வெளிவரும் என்று ஆலவாய்ச் சொக்கலிங்கப்பெருமான் திருவருளையும் தருமைக் குருவருளையும் இடைவிடாமல் எண்ணிப் போற்றி வாழ்த்திவருகின்றேன்.
இவ் வெளியீட்டின் பாராட்டுரையை அருளியதற்கு, திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி மகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசலதேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் திருவடிமலர்கட்கு முப்பொறித்தூய்மையொடு கூடிய அடியேன் வணக்கம் உரியது.
இத் திருமுறையில் உள்ள குறிப்புரையை எழுதியவர் திருவாளர். பண்டித அ. கந்தசாமிப்பிள்ளை ஆவார். அவர் வழிவழி வந்த தமிழ்ப்புலவர். சைவப்பற்று மிக்கவர். சிவபூசை புரிபவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பண்டித பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர். அவரது புலமைத் திறத்தை இதிலுள்ள குறிப்புரைகளால் அறியலாம். அவர், ஓராண்டு, இத்திருத்தருமையில்
வாழ்ந்திருந்து இத்திருமுறைத் தொண்டு புரிந்தார். நம் ஷ்ரீலஷ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் திருவுளக் கருணைக்கு உரியவராயிருந்து, குறிப்புரை எழுதி உதவிய அவர்கட்கு ஆதீனத்தின் நன்றியும் குருவருள் வாழ்த்தும் உரியன ஆகும்.
தல வரலாறும், கல்வெட்டுச் செய்தியும் எழுதி உதவியவர் வித்துவான் திருவாரூர். வை. சுந்தரேச வாண்டையார் ஆவார். அவர் இவ்வாதீனத்திற்குத் தொண்டுபூண்ட புலவர் கூட்டத்துள் ஒருவர். அன்பு பொங்கி வழியும் இன்ப நெஞ்சினர். குருவருளால் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிய தருமைப் பல்கலைக் கல்லூரி ஆசிரியர்கள் வித்துவான் திரு. சொ. சிங்காரவேலு அவர்களுக்கும், வித்துவான் திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்களுக்கும், அச்சுப்பிழை திருத்தம் முதலியவற்றில் பெரிதும் உதவி புரிந்த தருமைப் பல்கலைக் கல்லூரி முதல்வர் திரு. கீ. இராமலிங்க முதலியார் எம்.ஏ., அவர்களுக்கும், வட மொழிப் பேராசிரியர் சிரோமணி பிரமஸ்ரீ கே. இராஜகோபால சாஸ்திரிகள் அவர்களுக்கும், தருமைத் தமிழ் உயர்பள்ளித் தமிழ் ஆசிரியர், வடமொழிச்சிரோமணி, தென்மொழி வித்துவான் திரு. வி. சபேசன் அவர்களுக்கும் ஸ்ரீ சொக்கலிங்கப்பெருமான் திருவருளும் தருமைக் குருவருளும் என்றும் இன்பம் பெருகத் துணை செய்க.
வாழ்க திருநெறிய தமிழ்!
தருமை ஆதீனம் , அடியார்க்கு அடியன், 11-6-1955.
முத்து. சு. மாணிக்கவாசகன்.