உ
குருபாதம்
03 பாராட்டுரை
திருவண்ணாமலையாதீனம் குன்றக்குடி மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிகபரமாசாரிய சுவாமிகள் (தவத்திரு குன்றக்குடி அடிகளார்) அவர்கள்
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருமுறைகளுள்ளும் மூன்றாந்திருமுறை உச்சிமேல் கொள்ளத்கக்கது. "ஞாலம் நின்புகழே மிகவேண்டும்" என்ற விண்ணப்பத் திருப்பதிகம் இத் திரு முறையிலேயே உள்ளது. ஆம்; தமிழகத்தின் தனி நெறியான சிவநெறியே ஞாலநெறி, பலருக்கும்பொதுநெறி. இம்மையோடன்றி மறுமையும் எழுமையும் இன்பந்தரும் திருநெறி. இந்நெறிநின்று உலகுயிர்கள் வாழ்தல் வேண்டும். யாண்டும் எங்கும் எல்லோரும் சைவமாம் சமயம் சார்ந்து நல்வாழ்வு பெறுதல் வேண்டும் என்று விண்ணப்பிக்கும் திருப்பதிகம் சாலவும் முதன்மையுடைத்து.
பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய சேக்கிழார் பெருமான் வியந்து வாழ்த்தும் திருப்பாசுரத் திருப்பதிகமும் இத் திருமுறையிலேயே உள்ளது.
சைவத் திருநெறியின் பெருமையைக் காப்பாற்றிய பதிகம் திருப்பாசுரம், தமிழகத்தின் தண்ணீரும் சைவத் தமிழ் நுகர்ந்து அநுபவிக்கும் தகுதி உடையனவென்பது.
இருள் நீக்கி இன்பப் பெருவாழ்வுதரும் திருவைந்தெழுத்துத் திருப்பதிகம் இத் திருமுறையின் கண்ணேயே உளது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதி உயர்வடைதற்குப் பயன்பெறும் முறையில் இத்திருமுறை ஆன்மாக்களை நோக்கி வருகிறது.
பண்டித, அ. கந்தசாமிப் பிள்ளை அவர்களின் நுண்பொருட் குறிப்புரை மிகவும் பயனுடையதாயிருக்கிறது. பழம் புலவர் வரிசையைச்சேர்ந்த முதுபெரும் புலவர், திரு. பிள்ளை அவர்கள் ஆங்காங்கு விதந்து கூறிய உரைகளும்
எடுத்துக்காட்டியுள்ள மேற்கோள்களும் திருமுறைப் பாடல்களைப் பலரும் எளிதில் படித்து அநுபவிக்கத் தூண்டுகிறது.
புத்தக முகப்பில் அமைந்துள்ள பெரும் பொருட் கட்டுரைகள் நூலுக்குள் நம்மை ஆற்றுப்படுத்துகின்றன.
சைவசித்தாந்தத் தத்துவ உணர்ச்சியோடு எழுதப்பெற்றுள்ள அடியார் பெருமை சிறப்புற அமைந்துள்ளது.
சிங்காரவேலனாருடைய இயற்கைப் பொருளின்பக் கட்டுரை வியத்தகு முறையில் அமைந்து படிக்கும்தோறும் இன்பந்தருகிறது.
இத்தகு சீரிய முறையில் திருமுறையை அச்சிட்டு வழங்கி யுள்ளது திருத்தருமை ஆதீனம். திருத்தருமை ஆதீனத்தின் தொண்டு கள் பலப்பல. தருமையும் கமலையும் விரிதமிழ்க்கூடலும் திருநகராக அரசுவீற்றிருந்து மேன்மைகொள் சிவநெறியும் செந்தமிழும் புரந் தருளும்
ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் அவர்களின் திருவருளுக்கு நெஞ்சங் கலந்த நன்றி. சைவத் தமிழுலகு அருளாட்சியை வாழ்த்துகிறது. இவ் வையகம் வாழ்வதற்காக வாழ்த்துகிறது.