03 ஆராய்ச்சிக் கட்டுரை
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருமுறைகளின் சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 1 அடியார் பெருமை
தருமை ஆதீன வித்துவான்
முத்து. சு. மாணிக்கவாசக முதலியார்
திருவடியை உணராமல் அடியவர் என்னும் பெயர்ப் பொருளை உணர்வது அரிதினும் அரிதாகும். உடம்புடைய உயிர் கட்குப் பெரும்பாலும் அவ்வுடம்பின் அடிப்பகுதியை அடி என்பது வெளிப்படை. உருவம், அருவம், அருவுருவம் மூன்றும் இல்லாத கடவுளுக்கு அடி உண்டு என்றால், உருவத்தில் கொள்ளும் அடி அல்லாத வேறு அடியே அங்குக் கொள்ளற்பாலது.
உருவத்தில் உள்ள அடி அருவுருவத்திலும் அருவத்திலும் இருத்தல் கூடாது. இருப்பின், அருவம் என்றும் அருவுருவம் என்றும் சொல்லப்பெறுமோ? உருவம் என்றே கொள்ளப்படும். அம் மூவகை வடிவங்களையும் கடந்த பெருநிலையில், உணர்ந்து வழிபடப் பெறும் அடி உண்டு. அத் திருவடியை அடையும் பொருட்டே, உருவத் திரு வடியைக் கொள்ளல் வேண்டும். திருக்கோயில்களில் திருவுருவத்தில் திருவடியை வழிபடும்போதும் முடிவான திருவடியை நினைந்து போற்றுவதே வீடுபேற்றிற்குத் தலைசிறந்ததொன்றாகும். அத் திருவடியைச் சேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்திப் பேரின்பக் கரையை எய்தார்.
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடி சேரா தார்"
என்பது பொய்யா மொழி. அத்திருவடிச் சேர்வும் அதனால் எய்தும் பேரின்ப வாழ்வும் திருக்கோயில் முதலியவற்றில் உருவத் திருமேனி களில், வைத்து வழிபடப்பெறும் திருவடியை மறவாது போற்று வார்க்கே கிடைக்கும். ஏனையோர் எத்தனை பிறவியெடுக்கினும் போற்றார் ஆயின் வீடு பெறல் அரிதே.
தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கே மனக் கவலை மாற்றல் எளிது. மற்றையோர்க்கு அரிது. அத்தாள் சேர்ந்தாரே நிலமிசை (பேரின்ப வீட்டில்) நீடுவாழ்வார். மும்மலமும் நீங்கிய உயிரின் அறிவில் தங்கி நின்று உணர்த்தும் முதன்மை யுடையவனை நம்மைப்போல ஒரு வடிவுடையனென்று மட்டும் கொண்டு, அவனது உணர்வுருவை மறந்தால் நமக்கு உய்யும் வழியே இல்லையாம். அதுவே (சத்திரூபம்) அருளுருவம். அதுதான் மலம்நீங்கிய உயிர்கட்கு நிறையுணர்வு (வியாபக ஞானம்) விளைப்பது. அத்தகைய நிறையுணர்வு தான் உயிர்கள் அடையும் பேரின்பத்துக்கு உருவம். அப்பேரின்ப நுகர்ச்சியே `சிவாநந்தாநுபூதி' எனப்படும். அச் சிவாநந்தாநுபூதியைத் திருவடி என்பது சைவ மரபு. "முதல்வன் திருவடியாகிய சிவாநந்தாநுபூதியைத் தலைப்படும்" என்பது சிவஞானபோதமாபாடியம் ( சூ. 11.) வசனம் "மலவாசனை நீங்கினால் அன்றி முதல்வனது திருவடியாகிய சிவாநந்தத்தை அநுபவித்தல் கூடாது" (௸ சூ.10. அதி 1.) `திருவருளான திருவடி' என்று அத்திருவருளுருவையும் கூறுதல் உண்டு. குண குணிகட்குப் பேதம் கொள்ளாத நிலையில் அது வழங்கும்.
`யான் எனது என்று அற, உயிரில் பரை (சிவசத்தி) நின்றது அடியாம்' என்பது உண்மை நெறிவிளக்கம். "என்னது யான் அற்றால் இறைவனடி தானாகும்" என்பது அநுபோக வெண்பா. அத்தகைய உண்மையில். `யான்' `எனது' என்னும் இருவகைப் பற்றும் அற்றுத் திருவருளாய்ச் சிவாநந்தத்தை நுகரும் அன்பரே அடியார் என்னும் திருப்பெயர்க்கு உரியவர். அதுபெறமுயலும் உண்மையாளர்க்கும் உபசாரத்தால் `அடியார்' என்னும் அருட்பெயர் உரித்தாயிற்று.
"அடியார் சிவஞானம் ஆனது பெற்றோர்
அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர்
அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்
அடியார் பவரே அடியார் ஆம்ஆல்".
"அடியார் பொன்னம்பலத்து ஆடல்கண் டாரே"
எனப்பெறும் திருமந்திரவசனத்தை உற்றுணர்ந்தால் அடியார் என்பதன் உண்மை வாய்மையாகும்.
"ஆரியனாம் ஆசான்வந்து அருளால் தோன்ற
அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்"
என்பது சிவஞான சித்தி வாக்கியம். அடிஞானம் ஆன்மாவில் தோன்றும். ஆயின், அந்த ஞானத்திற்கு முதலான ஞேயம் அந்த ஆன்மாவில் தோன்றாதேல், ஆன்மா, சிவத்தை அறிவது எவ்வாறு? ஞானமும் ஞேயமும் தோன்றும் இடம் ஆன்மாவே ஆகும். அப்பொழுது அடிஞானத்தால் நிறைந்த ஆன்மா முடியாகிய ஞேயமாய் நிற்கும் பேரின்பமாம்.
"முடியெனும் அதுவும் பொருளெனும் அதுவும் மொழிந்திடின் சுகம்"
"துன்னும் அவனே தானாக அடையின் முடியாம்"
"உரையிறந்த சுகமதுவே முடியாகும்"
"அடியெனும் அதுவும் அருளெனும் அதுவும் அறிந்திடின் நிர்க்குண நிறைவு"
சிவாநந்தாநுபூதி பெற்றவர்க்குச் சிவபிரானும், திருவடியும், திருமுகமும், திருமுடியும், பிறவும் ஆகிய எல்லாம் இன்பமேயாய்த் திகழும் இன்பம் அன்றி வேறு இல்லை.
`இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை' என்னும் உயர்வுக்கு உரிய பெரு நிலைத் தாண்டவம் அடியார்க்குத்தான் தெரியும்.
"ஆநந்த மேசெவி அம்புயத்
தாளிணை அங்கைகளும்
ஆநந்தமே திருக்கண்ணும் செவ்வாய்
அருள் மேனியெல்லாம்
ஆநந்தமே அருட்சிற்றம் பலவர்
அருட் பொருளும்
ஆநந்தமே அவன் தில்லையும்
காழியும் ஆநந்தமே"
- சிற்றம்பல நாடிகள்
அத்தகு முடிந்த முடிபாகிய அடிமுடிகளை அறிந்து அநுப வித்து வரும் பேரின்ப வாழ்க்கையரே அடியார் ஆவார்.
அடியார் வேறு ஆண்டவன் வேறு அல்லர். 1 மண், 2 நீர் , 3 தீ, 4 கால், 5 விண், 6 செங்கதிர், 7 வெண்கதிர், 8 வேள்வித் தலைவன் என்னும் எட்டும் ஆண்டவனுடைய வடிவங்கள் ஆகும். அவற்றுள், வேள்வித்தலைவன் சித்துருவன். ஏனை ஏழும் அசித்துருவம். அசித்துக்கும் சித்துக்கும் ஆண்டவன் வாழ்ச்சியாலும் வேறுபாடுண்டு. அவன் அசித்துக்களைத் தொழிற்படுத்தும் அளவாய் அவற்றிற் படுவன். அச் சித்துக்கோ அநந்நியமாகி அருளி வருவன். எல்லா உயிர்களும் சித்துக்களே ஆயினும், வேள்விக்கோன் ஆண்டவனை மறவாதவனாதலின், அவன் அம் முதல்வனுக்கு என்றும் நீங்காது வாழும் இடமாயினான்.
"தீவளி விசும்பு நிலன்நீர் ஐந்தும்
ஞாயிறும் திங்களும் அறனும்."
-பரிபாடல். 3, 4-5
என்பதற்கு, "அவை தீ, வளி, விசும்பு, நிலம், நீர் என்னும் பூதங்கள் ஐந்தும் ஞாயிறும் திங்களும் வேள்வி முதல்வனும் என இவை" என்றுள்ள உரையை இங்குக் கருதுக. வேள்வி முதல்வன் என்றது, அவரவர் சமயத்திற்குக் தக வேறுபடும். சைவ சமயத்திற்கு வேள்வி முதல்வன் சிவாபூஜா துரந்தரன், சிவஞானி ஆவன். அவனே நடமாடுங் கோயில், சிவனை வழிபடாத மாக்களை நடமாடுங் கோயில் என்பது நரகத்தை அடைவிக்கும் நாச வார்த்தையே ஆகும். அடியார்க்கே நடமாடக் கோயில்' என்னும் பெயர் உரியது. அதனை, நம் ஞானசம்பந்த பரமாசாரியர்,
"காதலால் நினைவார்தம் அகத்தன்" (தி.3 ப.373 பா.3)
"நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சுளானே" (தி.1 ப.119 பா.4)
"கைதொழுது ஏத்தும் அடியார்கள் ஆகம் அடிவைத்தபெருமான்" (தி.1 ப.2 பா.9)
"போகமும் இன்பமும் ஆகிப் போற்றி என்பாரவர் தங்கள் ஆகம் உறைவிடம் ஆக அமர்ந்தவர்.' (தி.2 ப.205 பா.5)
என்பவற்றால், அடியார் அகத்திலும் ஆகத்திலும் ஆண்டவன் பிரியாமல் உறையும் உண்மையை உணர்த்தியருளினார்.
"கலிக்காமூர் மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழி பட்டால் ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமான்" (தி.3 ப.105 பா.3). "பாவிகள் சொல்லைப் பயின்றறியாப் பழந் தொண்டர் உள்ளுருக ஆவியுள் நின்று அருள் செய்ய வல்ல அழகர்" (தி. 3 ப.103 பா.10). என்றவற்றை உற்று உற்று நோக்கி உணர்ந்தால் திருஞானசம்பந்த சுவாமிகள். நாம் உய்யும் வழியை வெளிப் படையாக உபதேசித்தருளும் உண்மை இதுவே என்று நமக்கே இனிது புலப்படும்.
`உச்சிமேல் உறைபவர்', `உளங்கொள்வார் உச்சியார்' `எங்கள் உச்சி உறையும் இறையார்' என்பவற்றால், அகத்தும் புறத்தும் நின்று அடியவர்க்கு அருளும் மெய்ம்மை விளங்கும். சீவன்முத்தி எய்திய அடியார்க்குப் பிராரத்த தேகம் விளங்கும் அளவும், அதில் அம்மையப்பர் வீற்றிருப்பர் என்பதை, `ஊன் அமரும் உடலுள் இருந்த உமை பங்கன்' (தி.3 ப.12 பா.4) `அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி, ஞானம் புகல் உடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர்' (தி.1 ப.132 பா.6) `உருகுவார் உள்ளத்து ஒண்சுடர் (தி.2 ப.109 பா.5) "எண் ஒன்றி நினைந்தவர் தம்பால் உள் நின்று மகிழ்ந்தவன்" (தி.1 ப.37 பா.2) "பாடி ஆடிப் பரவுவார் உள்ளத்து ஆடி" (தி.1ப.28 பா.7) என்பவற்றால் விளக்கியருளினார்.
அன்பு அகத்தில் அமர்ந்து பெருகுதல் வேண்டும். வேட்கை, வெகுளி, இவறுதல், மயக்கம், செருக்கு, பகை என்னும் ஆறும் அழிதல் வேண்டும். புலனடக்கம் வேண்டும். சிவஞானம் புகுதலும் அதை விரும்புதலும் வேண்டும். உருக்கம் வேண்டும். ஒன்றியிருந்து நினைதல் வேண்டும். பாடவும் ஆடவும் பரவவும் வேண்டும். அவ்வளவும் உடைய அடியார்க்கே அம்முழு முதல்வன், உள்ளிருந்து, சுடர்வீசி, மகிழ்ந்து ஆடிப் பேரின்பம் விளைப்பான் என்று பயன் விரித்தருளினார்.
அடியார் சிந்தையே திருக்கோயில் என்று திருமுறைகள் விளம்புவது பலர் அறிந்த உண்மை. திருஞானசம்பந்தப் பெருமானார்,
"இறைஞ்சுவார் சிந்தையுள்ளே கோயிலாகத் திகழ்வான்" (தி.2 ப.64 பா.4)
"நினைப்பவர் மனத்துளான்" (தி.1ப.76 பா.7)
என்றருளினார்.
"நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் (தி.5 ப.2 பா.1)
என்பது அப்பர் அருள்மொழி.
அம்மனம் மூச்சுடன் வெளிச்சென்று உலகில் அலைந்து இடர்ப்படாதவாறு, அடக்கி, இறைவனது திருவடிக்கே இடமாக்குவது அடியார் இயல்பு. ஏற்றான் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்கும் இயல்புடைய அடியார் எல்லாரும் அவனுக்கே நெஞ்சத்தை இடமாக்குவர் என்பது சிறிதும் ஐயம் விளைக்காத வாய்மை. அவர்க்கு மூச்சும் பேச்சும் பிறவும் சிவமாகவே விளையும். அதனால், அவர்க்குப் புலன் வழிச் சென்று உலகின்பம் நுகரும் பொறியுணர்வு இல்லை. அதனால், அவர் உளத்திலும் உணர்விலும் சிவபெருமான் வீற்றிருந்து ஞான நடம் புரிகின்றான். அதனை,
"சினமலிஅறு பகைமிகுபொறி
சிதைதருவகை வளிநிறுவிய
மனன்உணர்வொடு மலர்மிசைஎழு
தருபொருள்நிய தமும்உணர்பவர்
தனதெழில்உரு வதுகொடுஅடை
கனமருவிய சிவபுரம்நினை
பவர்கலைமகள் தரநிகழ்வரே" (தி.1 ப.21 பா. 5)
என்று, கனிச்சீர்நந்நான்கு கொண்ட நான்கடித் திருப்பாடலால் தெளியச்செய்தருளினார் சிரபுரக்கோமகனார். இதன் முற்பகுதியில், அறுபகையும், அப்பகையறாத பொறியின் இயல்பும் அவற்றின் சிதை வும், அச்சிதைவைத் தவிர்க்கும் மூச்சடக்கமும், அம்மூச்சடக்கத்தால் எய்தும் மனவடக்கமும், அம்மன வடக்கத்தால் வளரும் ஞானமும், அந்த ஞானத்திருவுருவொடு அவ்விதய கமலத்தில் இறைவன் எழுந் தருளலும், அங்ஙனம் எழுந்தருளும் செம்பொருளையே நியதமாக உணர்கின்ற உணர்வும், அவ்வுணர்வே அடிமைத்திறம் ஆதலும், அவ்வடிமைத்திறம் உடையவரே அடியவராதலும் சுருங்கச்சொல்லி விளங்கவைத்தருளிய உண்மை உணர்வார்க்குப் புலனாகாது ஒழியாது.
பிற்பகுதியில், "அடியாரிடத்தில் ஆண்டவனும் அவ்வடியார் திருக்கோலமாகவே நின்று, அவரை வழிபடுவார்க்குக் காட்சி கொடுத்தருள்வான். அருளினும், அவ்வடியார் திருவுள்ளத்தில் இருக்கும் சிவனுருவம் அருளாகிய எழிலுருவமே ஆகும். அதுதான் அவனது எழிலுரு. அதைக்கொண்டே அவ்வுள்ளத்தை அடைவான். அத்தகைய பராபரன் எழுந்தருளி விளங்கும் தலம் சிவபுரம். அதை நினைந்து போற்றுவார் சகலகலாவல்லியின் திருவருட்செல்வம் உலகு புகழ நிகழப் பெறுவர்" என்னும் வாய்மை உணர்த்தப்பெற்றுள்ளது.
சிவபெருமானே தாயினும் நல்ல தலைவன் என்று அம்முழு முதலடியைப் போற்றிசைப்பார்கள். அப்போற்றுக்களை இசைக்கும் வாயினும் அத்திருவடியை அடியார்கள் நினைந்து மறவாமலிருக்கும் மனத்தினும் அகலாமல் மருவியிருக்கும் மாண்பு அக்கடவுளுக்கு இயல்பாக உண்டு.
"தாயினும் நல்ல தலைவர் என்று அடியார்
தம்அடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின்று அகலா
மாண்பினர் காண்பல வேடர்" (தி.3 ப.123 பா.5)
இதில், அடியவரடிகளைப் போற்றிசைப்பாருடைய வாயிலும் மனத்திலும் ஆண்டவன் குடிகொண்டிருந்தருள்வான் என்ற கருத்தும் கொள்ளுமாறு தொடர் அமைந்திருப்பது உணரத்தக்கது.
அடியவர்கள் போற்றல் செய்யும்பொழுது, ஆண்டவன் அதுசெய்துவரும் வாயில் விளங்குகின்றான் என்பது அநுபவம் மிக்கவர்க்கே புலனாகும். அன்பால் உருகும் அடியவர்க்கு ஆண்டவன் அன்பனாகின்றான்.
"சொல்நவிலும் மாமறையான் தோத்திரம்செய் வாயின்உளான்" (தி.1 ப.62 பா.7)
"அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர்" (தி.2 ப.63 பா.5)
அடியார்க்கு இலக்கணம் பல உள்ளன. அவற்றுள் தூய வெண்ணீற்றை மெய்யெலாம் சண்ணித்தல், அத் திருநீறு ஒளி வீச, கூட்டமாகக் கலந்து, திருவுலாவுடையார் பின்னர்ச் செல்லுதல், இசை பாடிப் பரவுதல், சிவபூசை செய்தல், மாலை தொடுத்தல், மாலையாற் புனைதல், தோளும் கையும் குளிரத் தொழுதல், அக்கு மாலைகொண்டு அங்கையில் எண்ணுதல், மறையோதுதல், உள்ளுருகுதல், சீலம் உடைமை, பற்றறுத்தல், அன்புருவாதல், திருவடியே தொழுதல், திரு வடி நினைவன்றி வேறு நினைவுறாமை, சிவதலங்களை வழி படுதல், புலனடக்கம், அடியார்க்கு அடியாரை வழிபடுதல், அடியார்க்கு உணவளித்தல், திருவைந்தெழுத்தை ஓதுதல், காலை மாலைகளில் கோயிலை அடைந்து வழிபடுதல், நண்பகலிலும் மாலையிலும் கூட்டமாகச் சேர்ந்து சிவச்சார்பாகப் பொழுதுபோக்குதல், தேவாரம் (தேவாராதநம்) புரிதல் முதலிய பல, திருஞானசம்பந்தர் திருப்பாடல் களில் காணக்கிடைக்கின்றன.
பெரியபுராணத்துள் விரித்துணர்த்தப்பெறும் வரலாறுகட்கு உரியவரும் திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களுள்ளே கிளந்தோதப் பெற்றவரும் ஆகிய நாயன்மார் திருப்பெயர்களாவன:-
1. சண்டேசுர நாயனார்
2. கண்ணப்ப நாயனார்
3. குலச்சிறை நாயனார்
4. கோச்செங்கட் சோழ நாயனார்
5. சிறுத்தொண்ட நாயனார்
6. தண்டியடிகள் நாயனார்
7. திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார்
8. திருநீலநக்க நாயனார்
9. நம்பிநந்தியடிகள் நாயனார்
10. புகழ்த்துணை நாயனார்
11. மங்கையர்க்கரசியார்
12. முருக நாயனார்
13. அமர்நீதி நாயனார்
14. தில்லைவாழந்தணர் (கூட்டம்)
15. நின்றசீர்நெடுமாற நாயனார்
16. தண்டியடிகள் நாயனார்.
இவ்வடியவர்களை ஆங்காங்குப் பாடியுள்ள பகுதிகளையும் அவற்றின் கருத்துக்களையும் அறிதல் அடியார் அடிக்கு அன்பினை நம் உள்ளத்தில் விளைக்கும்.
1. சண்டேசுர நாயனார்
1. 1 "பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன் தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந்தான் றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமைவகுத் ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர்மே யவனே". (தி.1 ப.48 பா.7)
1. 2 "வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும்
சிந்தை செய்வோன்". (தி.1 ப.62 பா.4)
என்பனவற்றாலும் பிறவற்றாலும் சண்டேசுர நாயனாரைப் போற்றி யுள்ளார்.
2. கண்ணப்ப நாயனார்
2. 1 "கானலைக் கும்மவன் கண்இடந்தப்பநீள்
வானலைக் கும்தவத் தேவுவைத்தான்". (தி.3 ப.35 பா.7)
2. 2 " வாய்கலசம் ஆகவழி பாடுசெயும் வேடன்மல ராகும்நயனம்காய்கணையி னால்இடந்தீசனடி கூடுகா ளத்திமலையே" (தி.3 ப.35 பா.4)
2. 3 "கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலையெங்கள்
அண்ணலாரூர் ஆதி ஆனைக்காவே". (தி.3 ப.109 பா.7)
2. 4 "ஈண்டுதுயிலமரப்பினனே இருங்கண் இடந்து அடி
அப்பினனே' (தி.3 ப.113 பா.2)
எனக் கண்ணப்ப நாயனாரைப் போற்றிக் குடுமித்தேவரைக் கும்பிட்ட பயன் கண்டருளினார்.
3. குலச்சிறை நாயனார்
3ஆம் திருமுறை 120ஆம் திருப்பதிகத்தில், 2, 4, 6, 8, 10, 11 ஆகும் திருப்பாடல்களில், குலச்சிறை நாயனாரைப் புகழ்ந்திருத்தல் ஓதிக் களித்தல் சைவர் கடன்.
3. 1 "வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன்
வெள்ளை நீறணியும் கொற்றவன் றனக்கு மந்திரி ஆய
குலச்சிறை குலாவிநின் றேத்தும்
ஒற்றைவெள் விடையன்"
3. 2 "கணங்களாய் வரினும் தமியராய் வரினும்
அடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியும் குலச்சிறை குலாவும்
கோபுரம் சூழ்மணிக் கோயில்"
3. 3 "நலம்இலர் ஆக நலமதுண் டாக
நாடவர் நாடறி கின்ற
குலம்இலர் ஆகக் குலமதுண் டாகத்
தவம்பணி குலச்சிறை பரவும்
கலைமலி கரத்தன்"
3. 4 "நாவணங்கு இயல்பாம் அஞ்செழுத் தோதி
நல்லராய் நல்இயல் பாகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால்
தொழுதெழு குலச்சிறை போற்ற
ஆவணம் கொண்ட சடைமுடி யண்ணல்
ஆலவாய் ஆவதும் இதுவே".
3. 5 "தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறும்
தொழுதுதன் குணத்தினைக் குலாவக்
கண்டுநாள் தோறும் இன்புறு கின்ற
குலச்சிறை கருதி நின்றேத்த
அண்டநா யகன்தான் அமர்ந்துவீற் றிருந்த
ஆலவாய் ஆவதும் இதுவே".
3. 6 "பன்னலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை
எனும்இவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவாய் ஈசன்".
4. கோச்செங்கட்சோழ நாயனார்
4. 1 "சிலந்தி செங்கட் சோழ னாகச் செய்தான் ஊர்" (தி.2 ப.63 பா.7)
4. 2 "செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே"(தி.3 ப.18 பா.4)
4. 3 "செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே" (தி.3 ப.18 பா.2)
என்பவற்றிலும் பிறவற்றிலும் வளவர் கோமகனார் திருப்பெயரைக் கூறியருளி னார்.
5. சிறுத்தொண்ட நாயனார்
தி. 3 -63ஆம் திருப்பதிகத்தின் எல்லாத் திருப்பாடல்களிலும் சிறுத்தொண்ட நாயனார் புகழ் பாடப்பெற்றுள்ளது. அவற்றால், அவர் வரலாற்றுக் குறிப்புக்கள் சிலவற்றையும் அறியலாம்.
"திருச்செங்காட்டங்குடி - கணபதீச்சரம் - சிறுத்தொண்டர் - செருவடிதோட் (பொருவன்மை) - தேனமர்தார்க் கல்நவில் தோள், சீராளன் - சிறப்பு உலவான் - வெந்தநீறணி மார்பன். சீர் உலாம் சிட்டன். பணிசெய்யப் பெருமான் விளையாடும் உரிமை. சிறுத் தொண்டன் அவன் வேண்ட, காழியடிகளையே அடிபரவும் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோர்" என்னும் தொகுப்பு, நுண்ணுணர்விற்கு விருந்து.
"சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின்று இழக்கோஎம் பெருநலமே" (தி.3 ப.63 பா.9)
என்பதில், பலபதிப்புக்களில் கால்தான் போயிற்று. அதனால் ஆனது யாது? `சிறப்புலவன் என்பதன் பொருள் யாது? நாளடைவில் சிறப்புளவன் எனத் திருத்தி விடுவரே!
6. தண்டியடிகள் நாயனார்
"அண்டர்தொழு சண்டிபணிகண்டு அடிமை கொண்டஇறை"
என்று (தி.3 ப.68 பா.10) பின் வந்த பதிப்புகளில் இருக்கின்றது. அதனால், `தண்டி' என்பது தண்டியடிகள் நாயனாரைக் குறிப்பதாகக் கொண்டு உரைப்பர் அறிஞர். தண்டி என்பது சண்டேசுர நாயனாரையும் குறிக்கும்.
"அண்ணலந் தண்டிதன் அடிகள் போற்றுவாம்"
-தணிகைப்புராணம், கடவுள் வாழ்த்து
7. திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார்
7. 1
"தாணுஎனை ஆளுடையான் தன்அடியார்க் கன்புடைமை
பாணன்இசை பத்திமையால் பாடுதலும் பரிந்தளித்தான்" (தி.1 ப.62 பா.9)
எனத் திருக்கோளிலியிற் பாடிய திருப்பாடலில்வரும் `பாணன்' என்பது, திருநீலகண்டயாழ்ப்பாண நாயனாரைக் குறித்தது என்பர் பலர்.
7. 2
"தக்க பூமனைச் சுற்றக் கருளொடே தாரம்உய்த்தது பாணற் கருளொடே" (தி.3 ப.115 பா.6)
என்பவற்றால், தம் திருப்பாடல்களை யாழிலிசைத்து இன்புறுத்திய நாயனாரைப் பாடி, நன்றியறிந்தருளினார்.
8. திருநீலநக்க நாயனார்
8. 1
"கடிமணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை
அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே"(தி.3 ப.58 பா.6)
8. 2.
.. ... ... ... ... ... "மன்னும்
"நிறையினார் நீலநக்கன் நெடுமாநகர் என்று தொண்டர்
அறையும்ஊர் சாத்தமங்கை அயவந்தி"(தி.3 ப.58 பா.11)
என்று, திருநீலநக்க நாயனாரையும் அவர் வாழ்ந்தருளிய நெடு மாநகராகிய சாத்தமங்கையையும் அவ்வூர்த் திருக்கோயிலாகிய அயவந்தியையும், அதைத் தொண்டர் புகழ்வதையும் குறித்தருளிய வாறு உணர்க. "மன்னும் நிறையினார்" என்று நாயனாரைப் புகழ்ந்தது கருதற்பாலது.
9. நம்பிநந்தியடிகள் நாயனார்
நம்பிநந்தி என்பது நமிநந்தி என மருவிற்று, திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருப்பாடலில், "நாரூர் நறுமலர்நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி நீரால் திருவிளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே' (தி.4 ப.102 பா.2) என்று உள்ளது, அதனால், நமி என்பது நம்பி என்பதன் மரூஉ எனல் உறுதியாயிற்று.
அவரே, "அடித் தொண்டன் நந்தி என்பான் உளன் ஆரூர் அமுதினுக்கே' (தி.4ப.102 பா.4) என்றும், "ஊனம் இல்லா அடிகளும் ஆரூரகத்தினர் ஆயினும், அம்தவளப்பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படிலே' (தி.4 ப.102 பா.6) என்றும் அருளியவற்றால், `நந்தி' என்று வழங்கும் அதுபற்றிச் சிறிதும் ஐயம் இல்லை.
அதற்கு முன்மொழியான `நமி' என்பது யாவது? அதன் தொல்லுருவம் யாது? இவ்வினாக்கள் எழுமுன் இறுத்த விடையாக, அவர் திருவாயினின்றே `நம்பிநந்தி' என்று தோன்றியிருக்கின்றது. தொண்டர்க்கு ஆணியெனும்பேறு திருநாவுக்கரசு விளம்பப்பெற்ற பெருமையினார்' என்று குறித்தருளிய அருள்மொழித்தேவர், `நம்பிநந்தியடிகள்' என்னாது , `நமிநந்தி யடிகள்' என்றதன் காரணம் தொகையிலும் வகையிலும் `நமிநந்தி என்று இருப்பதற்குச் சிறிதும் வேறுபடாதவாறு பெயரைக் குறிப்பது தான், அறிவார்க்கு மயக்கம் விளைக்காது என்று திருவுளங் கொண்டதாகும்.
சேக்கிழார் சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், நம்பியாண்டார் நம்பி மூவரும் `நமிநந்தி' என்று குறித்தமையால், நம்பிநந்தி திருநாவுக்கரசர் குறித்தது வழுவாய்விடுமோ? அவரது திருப்பாடலில், `நமிநந்தி' என்று இருந்ததை எவரோ `நம்பிநந்தி' என்று திருத்தியிருக்கலாம் எனில், அஃது செய்யுளியலறியார் கூறுதலும், திருத்தியவர்க்குப் பேரறிவைத் தோற்றுதலும் ஆகும். `வேலைமெனக் கெட்டு' என்பது போல `நம்பி நமிநந்தி' எனத் திருத்தொண்டத் தொகையில் அமைந்திருப்பது வியக்கத்தக்கது.
(வினைக்கெட்டு - வெனைக்கெட்டு - வெனக்கெட்டு - மெனக்கெட்டு - வேலைமெனக் கெட்டு என மருவியவாறும் மரூஉ மொழிப்பொருள் தெரிய அப்பொருளுடையதொரு சொல் முன் நின்றவாறும் உணர்க. நமக்கு நம்பி என்ற அதன் தொல்லுருவமே முன்நின்றது. அரைஞாண்கயிறு எனப் பின் நிற்றலும் அறிக. வேலைமினுக்கிட்டு என்று ஒரு வெண்பாவில் உள்ளது. அது பட்டினத்தார் பாடியதென வழங்குகின்றது).
10. புகழ்த்துணை நாயனார்
"அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர்காசு எய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே". (தி.2 ப.63 பா.7)
என்று, புகழ்த்துணை நாயனார் வழிபாட்டினையும் திருவருட் பயனை யும் குறித்தருளினார். இதில், அலந்த அடியான்' என்பது நன்கு நோக்கி உணரத்தக்கது.
புகழ்த்துணை நாயனார், சிவபெருமானைத் தவத்தால் தத்துவத்தின் வழிபடும் நாளில், கறுப்பால் பசித்துன்பம் பெருக லுற்றது. உலகம் வருந்தியது. தாமும் பெரிதும் வருந்தினார். என் "அப்பனை என் கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ? `விடுவேன் அல்லேன்' என்று இராப்பகலும் மலர் புனல் கொண்டு அருச்சிப்பாராய், அப்பேராடலாற்கு நீராடல் புரியுங்கால், "சாலவுறு பசிப்பிணியால் வருந்தி, நிலைதளர்வு எய்தி, குடம் தாங்கமாட்டாமை ஆலமணி கண்டத்தார் முடிமீது வீழ்த்து அயர்வார்' ஆனார். கொடிய நஞ்சினைத் திருக்கழுத்தில் அடக்கியதினும், பொறுமை பெரிதும் உண்டோ? அருளால் ஒரு துயில் வந்தது. அங்கணன் கனவில் அருளினான்; கறுப்பொழியும் அளவும் நாள்தோறும் ஒரு காசு வைக்கப்பெறும் என்று. சிவபீடத்தில் காசு கிடைக்கப்பெற்று, சிற்றுணர்வு ஆகிய பசியும் இன்றி, முற்றுணர்வாகிய உணவும் கொண்டு முகமலர்ந்து அகம் உவந்தார். அங்கு அவ் வண்ணம் (அங்ஙனம்) கறுப்பொழியுங் காலம் வரையிலும் பெற்று, பசியின்றி மெய்யடிமைத் தொழில் செய்து புனிதரடி நிழல் சேர்ந்தார். இவ்வரலாற்றை எண்ணி, `அலந்த அடியான்' என்றும், `அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி' என்றும், `காலையும் மாலையும் போற்றி வழிபட்டார்' என்றும் உணர்த்தி அருளினார் திருஞானசம்பந்த சுவாமிகள். அச்சிவபாதம் வந்து அணையும் மனத்துணையாராகிய புகழ்த்துணை நாயனாரை "அலந்த அடியான்" என்றாரே அன்றிக் கிளந்து உரைத்தாரல்லர். அவர் வரலாற்றை நோக்கி உணர்வது மிக எளிது.
11. மங்கையர்க்கரசியார்
"மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை
வரிவளைக் கைம்மட மானி...
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாள்தொறும் பரவ" (தி.3 ப.120 பா.1)
என்பது முதலிய பாடல் சிவனைக் கூடல் விளைத்தலும் ஒல்லும்.
12. முருக நாயனார்
"தொண்டர் தண்கயம் மூழ்கித்
துணையலும் சாந்தமும் புகையும்
கொண்டு கொண்டடி பரவிக்
குறிப்பறி முருகன்செய் கோலம்
கண்டு கண்டுகண் குளிரக்
களிபரந்து ஒளிமல்கு கள்ளார்
வண்டு பண்செயும் புகலூர்
வர்த்த மானீச்சரத் தாரே". (தி.2 ப.92 பா.3)
"....................பூம்புகலூரில்
மூசு வண்டறை கொன்றை
முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்
வாச மாமலர் உடையார்
வர்த்த மானீச்சரத் தாரே". (தி.2 ப.92 பா.5)
என்றவற்றால், முருக நாயனார் திருப்புகலூர் உடையவரை ஆட்டல் சூட்டல் முதலிய வழிபாட்டினைச் செய்து முப்போதும் முடிசாய்த்துத் தொழுதுநின்ற ஆதிசைவர் என்றுணரலாம். "குறிப்பு அறி முருகன்' என்றதால், இறைவன் திருக்குறிப்பினை அறியும் ஆற்றலும் அன்பும் மிக்கவர் என்பது புலனாகும். திருநாவுக்கரசர்க்குத், தில்லைச்சிற்றம் பலத்து நட்டத்தைச் சென்று தொழுதகாலத்தில், எம்பெருமான் திருக்குறிப்பு `என்று வந்தாய்' என்று உசாவுவதாயிருந்தது. அவர், திருக்கச்சியேகம்பத்தில்.
"அரியயன் இந்திரன் சந்திரா தித்தர் அமரர்எல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை யார்உணங் காக்கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை யேகம்ப என்னோ திருக்குறிப்பே". (தி.4 ப.99 பா. 7)
என்று, ஒருமாநிழலுடையார் திருமாண்குறிப்பினை உசாவியரு ளினார். மாணிக்கவாசகப்பிரானும், 'சிவனே, தென்தில்லைக் கோனே உடையானே உன்றன் திருக்குறிப்புக் கூடுவார்நின் கழல்கூட, ஊனார் புழுக்கூடு இதுகாத்து இங்கு இருப்பதானேன்' (திருவா.59) என்றுணர்ந்து உணர்த்தியருளினார். அவரும், `தில்லைச் சிற்றம்பலத்துச் செல்வம், கவித்த கைம் மேலிட்டு நின்று ஆடும்' திருக்குறிப்பினை அப்பருக்கு முன்பே அறிந்திருப்பார் என்று அறியக்கிடக்கின்றது. "என்போல் வினை உடையார் பிறர் ஆர்? தினையின் பாகமும் அடிநாயேனைப் பிரிவது உடையான் திருக்குறிப்பு அன்று" (திருவா.41) என்று, உடையானது திருவுள்ளக் குறிப்பினை ஓதியருளியதொடு அமையாது, அம் முழுமுதல்வனது திருக்குறிப்பினையே குறிக்கொண்டும் கடைக் கொண்டும் இருக்கும்படி அடியரை ஏவுதலையும் கருதின், அடியார் கடமைகளுள் முதன்மையும் இன்றியமையாமையும் உடையது எது என்றும் அஃது இறைவன் திருக்குறிப்பே அறிந்து கொண்டிருத்தல் என்றும் புலப்படும். அதுதான் அடியார்க்குரிய குறிக்கோள் ஆகும். ஆண்டவனது திருவுள்ளத்தது "திருக்குறிப்பு" ஆகும். அடியவரது திருவுள்ளத்தது "குறிக்கோள்" ஆகும். அது `குறி' எனவும் படும். இறைவனது குறிப்புள்ளார் அடியாராவர்.
"பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள்இ லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே". (தி.4 ப.67 பா.9)
"........பிரமன்றன் சிரமொன்றைக் கரமொன் றினாற்
கொய்தானைக் கூத்தாட வல்லான் றன்னைக்
குறியிலாக் கொடியேனை அடியே னாகச்
செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே". (தி.6 ப.66 பா.8)
"செறிவிலேன் சிந்தை யுள்ளே சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன் கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லேன் நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன் ஆவடு துறை யுளானே". (தி.4 ப.57 பா.7)
"தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே". (திருவா. 607)
என்னும் திருவாசகத்துள் இரண்டும் அமைந்தவாறு அறியலாம்.
"அடியார் ஆனீர்! எல்லீரும்
அகல விடுமின் விளையாட்டைக்
கடிசேர் அடியே வந்தடைந்து
கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசேர் உடலைச் செலநீக்கிச்
சிவலோ கத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்றன்
பூவார் கழற்கே புகவிடுமே". (திருவா. 608)
எனப் புயங்க (பாம்பின்கால்) முனிவரால் வழிபடப்பெற்ற புயங்கன் திருவடிக்குப் புகவிடும் மணிவாசகர், அடியாரை ஏவுந்திறத்தால் ஆண்டவன் திருக்குறிப்பைப் புலப்படுத்தியது நன்கு விளங்குகின்றது.
13. அமர்நீதி நாயனார்
"கொடிறனார் யாதும் குறைவிலார் தாம்போய்க்
கோவணம் கொண்டு கூத் தாடும்
படிறனார்". (தி.3 ப.121.பா.1)
என்பதில், அமர்நீதி நாயனார் திருத்தொண்டு குறிக்கப்பெற்றுள்ளது என்பது சிலர் கருத்து.
14. தில்லைவாழந்தணர்
அந்தணர் பிரியாத சிற்றம்பலம், கற்றாங்கு எரி ஓம்பிக் கலியை வாராமே, செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம், சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம், எரி ஓம்பும் சிறப்பர். மறையோர் தில்லை நல்லவர், நீலத்தார்....சடையார்....சீலத்தார் (தி.1 ப.80; தி.3 ப.1)
15. நின்றசீர்நெடுமாற நாயனார்
தமிழ்ப்பாண்டியன், தென்னவன், பங்கம்இல் தென்னன். பஞ்சவன், பண்டிமன், பட்டிமன், பத்திமன், வெள்ளைநீறணியுங் கொற்றவன், தென்னவன் உற்ற தீப்பிணியாயின தீரச்சாற்றிய பாடல்கள் பத்தும். (தி.2 ப.66; தி.3 ப.51)
சிவபெருமானை வழிபட்டுப் பேறுஎய்திய பலர் இத்திரு முறைகளுள் குறிக்கப் பெற்றுளர்:- அநுமான், அயன், அரி, இந்திரன், இமையோர், இயக்கர், உருத்திரர், கின்னரர், சடாயு, சந்திரன், சம்பாதி, சரசுவதி, உபமன்யு, கொச்சைமுனி, கௌதமர், சண்பைமுனி, சூதமுனி, சனகாதியர், நீரின் மாமுனிவன், பராசர முனிவர், வியாக்கிரபாதர், பதஞ்சலிமுனிவர், சித்தர், சிபி, சுக்கிரீவன், சூரியன், திக்குப்பாலகர், நளன், பிருகஸ்பதி, பூரூரவா, மறவாளர், மார்க்கண்டேயர், முனிகணங்கள், யானை, இராகுகேது, இராமர், இலக்குவர், வருணன், வாலி, விஞ்சையர் முதலியோர் ஆவர். விரிவஞ்சி இவ்வளவில் நிறுத்தலாயிற்று.
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருமுறைகளின் சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 2 திருவைந்தெழுத்து
தருமை ஆதீன வித்துவான்
முத்து. சு. மாணிக்கவாசக முதலியார்
திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருமுறை மூன்றனுள்ளும், நாவினுக்கு அருங்கலமாகிய நமச்சிவாயத்தின் அரும்பேருண்மைகளைத் தெளித்துச் செல்லும் இடங்கள் பல உள்ளன.
அவற்றுள், இரண்டு திருப்பதிகங்கள், திருவைந்தெழுத்தின் சீர்த்தியை விளக்குவதற்கே அருளப் பெற்றிருக்கின்றன. அவை `பஞ்சாக்கரத் திருப்பதிகம்' `நமச்சிவாயத் திருப்பதிகம்' என்று குறிக்கப்பெறுவன.
அவ் இரண்டனுள் முன்னது, `துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்... அஞ்செழுத்துமே, என்னும் முதற்றிருப்பாடலைக் கொண்டது, ஐந்தெழுத்து என்று மட்டும் உணர்த்திற்று. அதனால், `பஞ்சாக்கரத் திருப்பதிகம்' என்னும் பெயர் எய்தலாயிற்று.
பின்னது, திருவைந்தெழுத்து வகையுள், தூலபஞ்சாக் கரமாகிய நமச்சிவாயத்தை வெளிப்படக் கூறியதால், `நமச்சிவாயத் திருப்பதிகம்' என்னும்
குறிகொள்ளலாயிற்று. அவற்றின் பொருள் களைத் தொகுத்து உணர்த்து முன்னர், சில உண்மைகளைக் குறிக்க விழைகின்றேன்.
1.
"நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற
பெம்மான்" (தி.2 ப.11 பா.2)
என்பதில், நம் குற்றங்களை மாற்றி என்று பொருள் கூறுவதே பொருந்தும் எனினும், அருட்பெரியார் ஒருவர் ந-ம என்னும் ஈரெழுத்தையும் மாற்றி வகாரம் (அருள்) ஆகிநின்ற பெருமான் (சிகாரம்) என்று உபதேசித்தருளியது யாவரும் அறியத்தக்கது. ந + ம + ஆன = நம்மான என்று பிரித்தார். `ப + அந்தம் = பாந்தம்' (நன்னூல் 145) என்றதைக்கொள்ளும் புலவர்க்கு இது பொருந்துவதே.
2.
"நக்கர்தம் நாமம் நமச்சிவாயவ் வென்பார் நல்லரே". (தி.3 ப.9 பா.9)
இவற்றால், தூலபஞ்சாக்கரம் உணர்த்தப்பெற்றதை அறிக.
3.
"நண்பாற் சிவாய எனா நாலூர்மயானத்தே
இன்பாயிருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே". (தி.2 ப.46 பா.10)
என்பதில், முத்திபஞ்சாக்கரம் உணர்த்தப் பெற்றுள்ளது.
4. 1
"வசிவல அவனது இடம்....கழுமல வளநகரே".(தி.1 ப.126.பா.2)
4. 2
"வசி ஆற்ற மாமதியும் ஆம்வலியாம்
மழபாடி.....நாதன் நற்பாதமே". (தி.3. ப.48 பா.2)
4. 3
"மாதர் மனைதோறும் இசைபாடி வசிபேசும்
அரனார் மகிழ்விடம்". (தி..3 ப.77 பா.2)
4. 4
"கலந்தருள் பெற்றது மாவசியே காழியரனடி மாவசியே". (தி.3 ப.113 பா.10)
என்பவற்றில், பிஞ்செழுத்தும் பேரெழுத்தும் ஆகிய திருவைந் தெழுத்து உணர்த்தப்பெற்றமை உபதேசம் உற்றார்க்கே உள்ளவாறு காணலாகும்.
இத்திருமுறைகளுள் ஆங்காங்குத் திருவைந்தெழுத்தின் சீரும் சிறப்பும் நயனும் பயனும் பலபடக் குறித்திருத்தலை, திருமுறைப் பாராயணத்தைப் பொருளுணர்ச்சியொடு புரிந்து வரும் மெய்யன்பர் பலரும் அறிவர். அவற்றைத் தொகுத்துக் காட்டும் வன்மை அடியே னுக்குச் சிறிதும் இல்லாமையால், ஒரு சிறிது, இக்கட்டுரையால் குறிப்பதற்கு அவாவி, என் சிற்றறிவின் பெற்றிமையைப் புலப்படுத்தி விட்டேன்.
உறக்கத்திலும் விழிப்பிலும் உள்ளம் உருகி நாள்தொறும் நினைந்து சிவபிரான் திருவடி மலர்களை வஞ்சமில்லாத நெஞ்சத்தால் வாழ்த்துவோரை, மாய்க்கவந்த கூற்று அஞ்சுமாறு உதைத்தன. (தி.3 ப.22 பா.1)
எமதூதர் கொல்லவேண்டிக் கொண்டுபோகும் இடத்திலும், உற்ற நற்றுணையாய் வந்து, அவ்வல்லல் அகற்றிக் காத்தருள்வன. (தி.3 ப.22 பா.4)
உடம்பில் மூச்சை ஒடுங்கச்செய்து, (உள்ளப் போக்கைத் தடுத்து) உணர்வொளிச் சுடர் விளக்கினை ஏற்றி, மெய்யறிவாகிய மற்றை வழியைத் திறந்து ஏத்துவோர்க்கு இடர்களைக் கெடுப்பன. (தி.3 ப.22 பா.3)
அழிவிற்கு அடியாகிய பிறவியை அறுத்து, அன்பு செலுத்தும் அடியவர் துயரங்களைக் கெடுப்பன. (தி.3 ப.22 பா.7)
எந்நாளும் செல்வம் கொடுப்பன. (தி.3 ப.22 பா.7)
நிலைத்த பெருங் கூத்து ஆடி உயர்வன. உவப்பன.(தி.3 ப.22 பா.7)
தம்மைக்கொண்டு துதித்துவரும் தொண்டர்க்கு அண்டம் அளித்துவருவன. (தி.3 ப.22 பா.8)
ஞான விபூதியை அணிவார்தம் வினையாகிய பகையைக் கொன்று வென்றியுறுதற்குப் பெரிய படைக்கருவியாவன. (௸ பா.10)
தும்மல், இருமல் தொடர்ந்தபோழ்திலும், கொடிய நரகம் குறுகியபோழ்திலும், இப்பிறவியில் பழவினைகள் வந்து வருத்தும் போழ்திலும், மறுபிறவியிலும் திருவைந்தெழுத்தே உயிர்த்துணை யாய் நின்று காக்கும். (தி.3 ப.22 பா.6)
நான்மறையும் மந்திரமும் ஆகி வானவர் சிந்தையுள் நிலைத்து அவரை ஆள்வன. (தி.3 ப.22 பா.2)
செந்தீயோம்பும் செய்ய வேதியர் சந்திதொறும் உருவேற்றும் திருமந்திரமாவன. (தி.3 ப.22 பா.2)
புத்தர் சமணர் முதலிய புறப்புறச்சமயத்தவர் பொய்களைப் பொருட்படுத்தாத சித்தத்தவர்கள் தெளிந்து தேறியன. (௸ பா.10)
இராவணனும் அவன் மனைவி மண்டோதரியும் பாடிப் பேணிப் பயன்பெற்று உய்யச் செய்தன. ( தி.3 ப.22 பா.8)
மாலும் நாலுமுகனும் காணவொண்ணாத சேவடிச் செவ்வி உணர்ந்து திருப்பெயர் வண்ணங்களைப் பேசியும் பிதற்றியும் திருவருட் பித்துக்கொளிகளாகிய மெய்யடியவர்களுக்கு உள்ளமும் உணர்வும் நிறையும் வண்ணம் ஆவன. (தி.3 ப.22 பா.9)
நல்லவர் தீயர் என்று பிரிவுசெய்யாமல், விரும்பி உருவேற்றி வரும் அன்பர் எல்லவர்க்கும், செல்லல் ஒழியச் சிவமுத்தியைக் காட்டுவன. (தி.3 ப.22 பா.4)
திருவைந்தெழுத்தே காமபாணம், பிருதிவியாதிபூதம், பாம்பின்படம், கைவிரல் முதலியவை ஐந்தைந்தாக அமைந்திருக்கும் (உலகத்) தோற்றத்திற்கு அடியாகும். (தி.3 ப.22 பா.5)
இத்திருவைந்தெழுத்துப் பதிகத்தை ஓதியுணர வல்லவர் உம்பர் ஆவர். (தி.3 ப.22 பா.11)
இத்தகைய சீரிய கருத்துச் செல்வங்களைப் பஞ்சாக்கரத் திருப்பதிகம் வாரி வழங்கி நிற்கின்றது. நாதன், நம்பன், நக்கன், நெற்றிநயனன், நல்லார், நந்தி, வரதன், நஞ்சுண்கண்டன் என்னும் திருப்பெயர்களையுடைய சிவபிரானது திருநாமம் நமச்சிவாய என்பது. (தி.3 ப.49) அதுவே, நான்மறை மெய்ப்பொருள் ஆவது. எல்லாவுலகிற்கும் அதுவே செம்பொற்றிலகம். `நமக்குண்டாகும் நலங்கொள் நாமம்'. அதனை ஓதும்போது உள்ளம் காதலாகிக் கசிதல் வேண்டும். கண்ணில் நீர்மல்கல் வேண்டும். நா நவிற்றல்வேண்டும். உள்ளம் நெக்குருகி நினைய ஆர்வம் மிகப் பெருகிவர, கையிற் கண்மணிமாலை கொண்டு உருவேற்றல்வேண்டும். ஓதுவதில் நயம் தானாக வரல்வேண்டும். நமச்சிவாயத் திருப்பதிகத்தையும் சிந்தை மகிழச் சிவபுராணமென்று உணர்ந்து ஏத்துதல்வேண்டும். நைந்த உளத்தொடு நாவில் ஓதும்போதெல்லாம் பூந்தேனைப் போலினிக்கும் திருவைந்தெழுத்து, தம்மை விதிப்படி ஓதுவார் எல்லாரையும் நன்னெறியிற் செலுத்தும்; தக்க வானவராகத் தகும் வகை செய்யும்; எல்லாத் தீங்கையும் நீக்கும்; வல்வினைகளையும் வாட்டும்; வாராத செல்வமும் வருவித்தளிக்கும்.
நாளும் ஓதுவோரிடம் புகுதர, இயமதூதரும் அஞ்சுவர். ஓது வார் பல நல்ல குணங்கள் இல்லாராயினும் ஆகுக; கொலை செய்வா ராயினும் ஆகுக. அவர் எல்லாத் தீங்கும் நீங்கி இன்புற்றிருப்பர்.(தி.3 ப.22 பா.5)
மந்தரகிரியை ஒக்க மிகப் பெரும் பாவங்களைச் செய்தவரும் திருவைந்தெழுத்தை ஓதுவாராயின், புண்ணிய சொரூபராய் மாறி விடுவர். ஏழு நரகமும் எட்டிப் பார்க்கும் இழிநராயினும் அவர் வாயில் ஒருமுறை திருவைந்தெழுத்து ஓத வாய்த்தால் உருத்திரகணத்துள்ளே ஒருவராக்கிவிடும். (தி.3 ப.22 பா. 6)
கயிலாயத்தைத் தூக்கிக் கலக்கமுற்ற காலத்தில் அக்கலக்கம் விலக்கி இராவணனைக் காத்தது திருவைந்தெழுத்தேயாகும்.(தி.3 ப.22 பா.8)
அயனும் அம்புயநயனனும் தேடி அலைந்தும் காணாமல் அலந்து ஓதி உய்ந்ததும் திருவைந்தெழுத்தே. அதுவே உயிர்களின் பந்த பாசம் அறுக்கவல்ல ஒப்புயர்வில்லாத திப்பியத் திருமந்திரம். (தி.3 ப.22 பா.9)
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருமுறைகளின் சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 3 இயற்கைப் பொருளின்பம்
தருமை ஆதீனப் பல்கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்,
வித்துவான் சொ. சிங்காரவேலனார்
இயற்கை நலம்
இயற்கை நலம் மனித உள்ளத்தை ஈர்க்கும் தகையது. இயைற்கையில் உள்ளம் தோயாத மனிதர் உலகிலேயே இல்லை. அந்த அளவுக்கு இயற்கையைச் சுவைக்கும் மனப்பாங்கு மனிதரிடத்தில் செறிந்திருக்கின்றது. பரந்து விரிந்த பனிக் கடலையும், பச்சைப் பசேரென்று வனப்பொடு விளங்கும் வயலையும், விண்ணை முட்டும் வியன் மலையையும், மொய்த்து நிற்கும் முல்லைக் காட்டையும், நீலவானத்தையும், கோல வெண்மதியையும், பால்மதி பக்கத்திலே விண்மீன்களோடு வானில் உலாவரும் ஒப்பற்ற மாண்பை யும் கண்டு நெஞ்சு பறிகொடுக்காதார் யாரே உள்ளனர்?
அவை உள்ளத்தைத் தம்வயமாக்கி உலகையே மறக்கச் செய்யும் மட்டிலா ஆற்றல் படைத்தவை. இயற்கையான சமஅறிவு படைத்த மனிதர்களே இவ்வாறு இயற்கை நலத்துக்கு முன்னர் ஆயின், அறிவு முதிர்ந்து, அருள் முறுகி, அன்பு பெருகி, உலகின் தட்ப வெப்ப உணர்ச்சிகளுக்குக் கலங்காத உரம் வளர்ந்து, உண்மையொளி வீசும் ஒப்பற்றோராகிய தெய்வக் கவிஞர்களுக்கும் இயற்கைக் காட்சி களுக்கும் உள்ள தொடர்பை உரைத்தலும் ஒல்லுமோ? அந்த இயற்கை நலம் ஆண்டவன் படைப்பு. அவனருளின் செழிப்பே இயற்கையின் செழிப்பு. அவனருளின் தழைப்பே இயற்கையின் தழைப்பு. அவன் அருளின் விரிவே வானத்தின் விரிவு. நீலக்கடலின் விரிவு. அவன் அருளின் உயர்ச்சியே மலையின் உயர்ச்சி. அவனருளின் ஆழமே ஆழ் கடலின் ஆழம். எனவே இயற்கை நலம் இறைவனின் நலம். இயற்கை அழகு இறைவனின் அழகு. இயற்கையினிடத்து இதயத்தைச் செலுத்து வோன் இறைவனிடத்து நெஞ்சு கொடுப்போன். இயற்கையின் துடிப்புக்குச் செவி சாய்ப்போன் இறைவன் பேச்சுக்குச் செவி கொடுப் போன். கைபுனைந்து இயற்றாத வனப்பு இயற்கைவனப்பு. அவ் வனப்பைச் செவ்விதின் உணர்ந்தவர்கள் நம் நாட்டு மெய்ஞ் ஞானியர்.
சங்க காலமும் திருமுறைக் காலமும்
சங்ககாலம் இயற்கையின் நாப்பண் இறைவனைக் கண்டு இன்புற்ற காலம். அக்காலத்து வாழ்ந்த மெய்ப்பொருளியற் புலவர் களான வள்ளுவர், நக்கீரர், கபிலர், பரணர் போன்றார் இயற்கையை உடலாகக் கொண்ட பேராஇயற்கைப் பெரியோனாம் இறைவன் புகழை எடுத்தேத்தினர். இதனை ஆங்கு அவர்தம் வாக்குகளில் பரக்கக் காணலாம். பிற்காலத்தே திருமுறை ஆசிரியர்கள் வாழ்ந்த காலத்தே இறைவனைத் தனித்தும், இயற்கைக் கண்ணும் கண்டு போற்றுகின்ற பண்புகளைக் காணுகின்றோம். இது அவர்தம் திருமொழிகளை இனிது நோக்குவார்க்கு எளிதில் புலனாம். நக்கீரர் திருமுருகாற்றுப் படையில், இழுமென இழிதரும் அருவியை எழுதிக் காட்டியுள்ளார். அவரது திருவுள்ளம் அருவியை வருணிப்பது மட்டுமன்று; அதனொடு ஆண்டவனது அயராத ஆரருள் வெள்ளத்தை - அதன் வேகத்தை உரைப்பதுமாகும். கபிலர் `புலனழுக்கற்ற அந்தணாளன்' எனப் பாராட்டப்பெற்றவர். மும்மலம் என்று மொழியப்படும் ஆணவம், கன்மம், மாயை என்பவை புலனைப்பற்றும் அழுக்குகள் அன்றோ? அந்த அழுக்குகள் இன்றிச் செந்தண்மை கொண்டொழுகும் அந்தணராக அப்பெரியார் வாழ்ந்தனர். அவர் தூய வாழ்வு வாழ்ந்து தூய்மை வளர்த்துச் சிவம் பெருக்கும் தவச் செயல் தலைப்பட்டமைக்கு இதனினும் வேறென்ன சான்று வேண்டும்? கபிலரது வாக்கில் இயற்கை வருணனை எழிலுற்று விளங்குகிறது. அவர் தம் `குறிஞ்சிப் பாட்டு' ஒன்றே அவர் இயற்கையைச் சுவைத்த எழிலை இனிது விளக்கும்.
அளக்கலாகா அளவும் பொருளும் துளக்கலாகா நிலையும் தோற்றமும் கொண்ட மலையும் சாரலும், அளந்தறிய இயலாத அளவு அரும்பொருளாகத் தோற்றக் கேடின்றி நித்தமாய்த் தன்னை ஒன்றும் கலத்தலின்மையின் தூய்தாய்த் தானெல்லாவற்றையும் கலந்து நிற்கும் முதற்பொருளை யன்றோ மனித மனத்துக்குக் காட்டுகின்றன! இதனைக் கருக்கொண்டு விரிந்து நிற்பது இக்குறிஞ்சிப் பாட்டு என்பது உற்றுணர்வார்க்குப் புலனாம். திருமுறை ஆசிரியர்கள் அவ்வத் தலங்கள் தோறும் கால்நடையாகச் சென்று பெருமானை உள்ளமுருகிப் பணிந்ததோடன்றி, ஆங்காங்குக் கண்ட இயற்கை வளங்களையும் பாராட்டிப் போந்தனர். கண்டது கண்டவாறே கவிதையில் அமைத்து வைத்துள்ள மாண்பு கருதுவார்க்குச் சுவை பயப்பதொரு விருந்தாம்.
சம்பந்தர் திருமொழி
திருமுறை ஆசிரியர்களுள் முதல்வராகத் திகழ்பவர் திரு ஞானசம்பந்தர். சம்பந்தர் திருமொழி மூன்று திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவற்றைத் தலமுறையாகவும், பண்முறை யாகவும் தமிழுலகம் அறிந்து வருகிறது. திருமுறை வெளியீட்டைத் தமிழகத்துக்கு நல்கிவரும் திருத்தருமை யாதீனத்து இருபத்தைந் தாவது குருமுதல்வர் ஷ்ரீலஷ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் தக்கதொரு நிலையான திருமுறைப் பணி ஆற்றி வருகிறார்கள். அந்தப்பணியின் முகிழ்ச்சியே இந்தச் சிற்றாராய்ச்சியும். சம்பந்தர் திருமுறையில்,இயற்கையைச் சுவைத்த பாங்கை எடுத்துக் காண்பது இக்கட்டுரையின் குறிக்கோள்.
இயற்கை வளமும் சம்பந்தரும்
சம்பந்தர் ஞானச்சிறு குழவி. திருநெறிய தமிழைப் பொழிய வந்த இளந்தமிழ் ஞாயிறு. இயற்கைக் காட்சிகளை வருணிப்பதில் இப்பெருந்தகையார் மற்றை யாவரினும் மேம்பட்டு விளங்குதல் அறிவாளர் பெரிதும் அறிந்த செய்தியாகும்.
சங்ககாலத்து, ஒரோவொரு திணையைச் சிறக்கப் பாடுவதில் ஓரொருவர் இருந்தனர். இதனைப் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்ற பெயராலும், மருதன் இளநாகனார் என்ற பெயராலும், இன்னும் பல புலவர்களின் அடைச் சிறப்புக்களாலும் அறியலாம். ஆனால் திருஞானசம்பந்தரோ குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணை ஒழுகலாற்றையும், திணைச்சிறப்பையும் பாடுவதில் வல்லவராகத் தோற்றுகிறார். ஒவ்வொரு திணையில் அமைந்த தலத்தையும் பாடுங்கால் அவ்வத்திணை மரபின் உச்சநிலையில் சென்று விடுகிறார் இப்பெருந்தகையார், எனவே இப்பெருந்தகை யாரின் திருமுறை காட்டும் இயற்கை வருணனையை ஆராய வேண்டு மென்றால், திணை வரிசையாக இவர்தம் திறத்தினைக் காண்டல் தக்கதாகும். குறிஞ்சி நிலத்தமைந்த தலங்களை வருணிக்கப் புகுங்கால் இவர்தம் வருணனைப் பகுதி குறிஞ்சி நிலத்தையே நம் கருத்தில் கொண்டு வந்து நிறுத்தும். மருதத்தைப் பற்றிய இவர்தம் கவிதை மருத நிலத்தையே மனத்தில் கொண்டுவந்து மகிழ்நடமாடவைக்கும். முல்லையைப் பற்றி மொழிய முற்பட்டனராயின் முல்லை நிலத்திலே நாம் உலவுதலை ஒத்த உணர்ச்சியில் ஈடுபடுவோம். நெய்தனிலத்தை நவிலலுற்றாராயின் கடற்காற்று நம்மேனியைத் தொட்டலைக்கும், அலைமுழக்கம் நம் செவிகளில் அலைமோதும். கண்ணுக்கு விருந்தளிக்கும் கருந்திரைகள், ஆம்; அத்துணை அரும்பாங்கு இவர்தம் வருணனையின் வனப்பு எனலாம். எனவே இவர்தம் வருணனைப் பகுதியை நான்கு நிலவகையாய்ப் பிரித்து ஆராய்தல் பெரிதும் பொருந்துவதாகலின் அவ்வாறே ஈண்டு ஆராயலாமென்று அமைகின்றனன்.
1. குறிஞ்சி
மழைத் துளி
உயர்ந்த மலை. விண்ணை முட்டும் சிகரங்கள். மேகங்கள் உச்சி மலையை முத்தமிட்டு நிற்கின்றன. காட்டு மரங்கள் மலைக்கு அணிசெய்வன போன்று நிமிர்ந்து, பூவும் கொத்துமாகப் பொலிவுற்று நிற்கின்றன. அதோ அந்த மரக்கிளைகளில் அந்தக் கடுவன் எவ்வளவு கடிதாக ஓடித் தாவுகிறது! அந்த மாமரத்தின்மேல் பரபர என்று ஏறுகிறது அது. உச்சிக்கிளைக்குச் சென்றுவிடுகிறது. உச்சிக்கிளை யிலிருந்து ஒரு உந்து உந்தி மற்றொரு கிளைக்குத் தாவுகிறது அந்த ஆண் குரங்கு! என்ன வேகம்! மாங்கிளையில் கனிந்திருந்த கனி ஒன்றும் அந்தக் கடுவன் கையில் சிக்கிக் கொள்கிறது. இழுத்துவிட்ட மாங்கொம்பு உச்சி மலையை நச்சி முத்தமிட்ட பச்சைமேகத்தை ஒரு அசைப்பு அசைக்கிறதாம். அதுவோ சூல்கொண்ட கருமுகில். உடன் மழைத் துளி பொல பொல வென்று பொற்றைக்கல் மேல் பொழிகிற தாம். காட்டுப் பெண் மான்கள் மழைத் துளிக்கு மனந் தடுமாறி மலைச் சோலைகளில் அங்கு மிங்கும் ஓடி அலைகின்றன. இத்துணை எழில் நலம் எங்கு காணுகிறோம்? திருவண்ணாமலை என்னும் திருத்தலத் தில்தான். காட்சி அழகாக உள்ளதன்றோ?
"தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகல்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணைஅணையும்பொழில்அண்ணாமலைஅண்ணல்." (தி.1 ப.10 பா.2)
வேழமும் பிடியும்
திருவண்ணாமலையிலேயே மற்றொரு காட்சி. இரண்டு யானைகள் இன்பமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒன்று இளம் பிடி. மற்றொன்று மாண்புடைய மாக்களிறு. ஒருநாள் காட்டு வழியில் அன்புப் பிடி காணாமற் போய்விடுகின்றது. களிற்றுக்கோ கவலை. கானகமெல்லாம் எதிரொலிக்கப் பெருங்குரலால் பிளிறிப் பிளிறி அழைத்துப் பார்க்கிறதாம். குரல் இல்லை. காட்டுவழியெல்லாம் திரிந்து திரிந்து திகைப்போடு உலாவிய அந்தக் களிறு மலைச்சாரல் ஒன்றில் நிற்கிறது. கண்கள் சுற்றுகின்றன. அப்படியே படுத்து உறங்கு கிறதாம். ஆம்; அவ்வளவு அலைச்சலும், அலைச்சலால் வந்த அயர்வுமே அதன் உறக்கத்துக்குக் காரணம் என்கின்றது பாடல். "பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமத வேழம்
அழைத்துத் திரிந்தங் குறங்கும் சாரல் அண்ணாமலையாரே." (தி.1 ப.69 பா.4)
குழலோசை
இன்னும் திருவண்ணாமலைச் சாரலிலேயே இன்னொரு காட்சியையும் எழுதிக் காட்டுகிறார்கள். ஓர் ஆயன் எருமைகளை ஓட்டிவந்து மலைச் சாரலில் மேய்க்கிறான். மாடுகள் மலைச்சாரலில் மேய்கின்றன. மாலை வருகிறது. இல்லத்துக்குத் திரும்பவேண்டிய நேரம். எண்ணுகிறான். எருமை ஒன்றைக் காணவில்லை. தன் வேய்ங் குழல்மேல் தளராத நம்பிக்கை உண்டுபோலும் அவனுக்கு. எடுத்து ஊதுகின்றான். வேய்ங்குழல் இசை மலையகமெல்லாம் பரவுகிறது. குழலோசையைக் கேட்ட அந்த எருமைகள் அனைத்தும் ஓடி வருகின்றன. ஆயன் அகமகிழ்கின்றான்.
எத்துணை அரிய அழகுள்ள செய்தி! இதனைச் சொல்வதன் வாயிலாகத் தமிழகத்துச் சிற்றூரிலும் இசை நலம் போற்றத்தக்க முறை யில் இலங்கும் மாண்பை யன்றோ சொல்கிறது ஞானசம்பந்தர் இதயம்!
"கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற் குழல்ஊத
அனைத்தும்சென்று திரளும் சாரல்". (௸ பா.6)
அளக்கும் சாரல்
இத்தகைய அண்ணாமலைச் சாரலில் வாழ்கின்ற குறவர் மாக்களின் நிலையைக் கொஞ்சம் சிந்தித்துத் தெளிவோம். மூங்கிற் காடுகள் செறிந்து உள்ளன. அவை முதிர்ந்து முத்துக்களைச் சொரி கின்றன. அவற்றை அம் மலைவாணர்திரட்டி எடுத்துச் சேகரிக் கிறார்கள். தம் இல்லங்கள் முன்பு அம்முத்துக்களைக் குவித்துவைக்கிறார்கள். ஆடியும் பாடியும் அவற்றை அளக்
கிறார்களாம். அம் மட்டுமோ? `சேரவாரும் செகத்தீரே' என்று எல்லோரொடும் கூடி நுகரவும் அழைக்கின்றார்களாம்.
என்னே அவர்களது பரந்த மனப் பாங்கு! காக்கை கரவாது கரைந்து உண்ணுதல்போல பெற்ற ஆக்கத்தைப் பிறர்க்கும் பங்கிட்டு நுகரக்கொடுக்கும் அவர்கள் பண்பு நலத்தை என்னென்பது! அது இயற்கை நலத்தோடியைந்த அன்னோர் மனநலத்தின் விளைவே அன்றோ?
"மூடிஓங்கி முதுவேய் உகுத்த முத்தம் பலகொண்டு
கூடிக் குறவர் மடவார் குவித்துக் கொள்ள வம்மினென்று
ஆடிப்பாடி அளக்கும் சாரல்" (தி.1 ப.69 பா.9)
`எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழவோயே' என்ற புறநானூற்றுப் பரந்த மனம் அந்த மலைவாணரிடத்தே குடிகொண்டி ருக்கும் மாண்பு தெய்வத் தமிழுள் இணைந்து இலங்குவது ஏற்றற் குரியது ஆகும்.
இனிநம் அருளாளரின் குறிஞ்சி வருணனையைத் தொடர வேண்டுமென்றால் திருக்குற்றால மலைக்குச் செல்லுதல் வேண்டும்.
கூதல் மாரி
"ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம், ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்" என்று குற்றாலக் காட்சியைக் குறவஞ்சி கூறும். சடசடசட எனப் பெருமுழக்கோடு சரிந்துவிழும் அருவியைக் காணலாம். விண்ணையளாவிய மலைச்சாரல். பக்கத்திலே குறும்பலா வீசர் திருக்கோயில். மரங்கள் தோறும் நடமிடும் மந்திகள். கூதிர் காலத்துக்கு முன்னால் சிறு மழைத் துளிகள் தூற அந்த அருவிக் கரையில் உலாவுவோமேயானால் நெஞ்சில் கவலை, இன்னல், பிணி, பெருகிய துன்பம் இவை ஏது? எங்கும் அமைதி! இயற்கை அன்னை யின் எழிலார்ந்த படைப்பு! குற்றாலநாதரின் குறுமுறுவலில் குவலயத் தையே மறந்துவிடுவோம். நம் பெருமான் பாடுகிறார்கள்; "கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம்." ஆம்; சம்பந்தப் பெருமான் அவ்வனப் பில் சிந்தையைப் பெரிதும் செலுத்தியிருப்பார்கள் போலும்.
அன்புக் காட்சி
கிளைகள் தோறும் மந்திகள் நெருங்கிப் பாய்கின்றன. அப்பெண் குரங்குகள் பலா மரத்தின் மீது ஏறிப் பழங்களை விண்டு உண்கின்றன. உண்ணும்போது பழங்களும் சுளைகளும் தவறிக் கீழே விழுந்துவிடுகின்றன. ஆண்குரங்குகள் அவற்றை மகிழ்வோடு எடுத்து நுகர்ந்து இன்புறுகின்றன. இந்த அரிய அன்புக் காட்சியைச் சம்பந்தப் பெருமான் கண்டு, சுவைத்துக் கவியுருவம் கொடுத்திருக்கும் அழகைக் கற்றறிந்தோர் என்றும் மறக்க இயலாது.
"கீட்பலவும் கீண்டு கிளைகிளையின்
மந்திபாய்ந்து உண்டு விண்ட
கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவன்
உண்டுகளும் குறும்பலாவே." (தி.2 ப.71 பா.2)
அருவி
குற்றாலத்து அருவி! மணியும் வயிரமும் கொழித்துப் பாய் கிறது! கோயிலுக்கு அருகில் நீர் ததும்பி ஓடிவருகிறது!
"மணிகொழித்து வயிரம் உந்திக்
குன்றத்தருவி அயலே புனல் ததும்பும்". (௸ பா.7)
வேழப் பூசை
மற்றொரு காட்சி. மலையிலிருந்து இறங்கி வருகிறதாம் ஒரு மழகளிறு. பக்கத்தில் தன் அன்புப்பிடி வருகிறது, மலை உச்சியிலிருந்து குறும்பலாவீசரைப் பணியும் குறிக்கோளோடு வருகின்றனவாம் அவை. சாத்த மலர் வேண்டுமே. வருகின்ற வழியிலே உள்ள வேங்கை மரத்துப் பூங்கொத்துக்களை ஒடித்து மத்தகத்திலே சூடிக் கொண்டு வருகின்றனவாம். வந்து குறும்பலாவீசர் குரைகழல் பணிகின்றனவாம் அக்கூந்தற் பிடியும் கொடுங்களிறும். விலங்குகளே இவ்வாறு பணியுமானால் மனிதர் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?
"பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து
மத்தகத்திற் பொலியவேந்திக்
கூந்தற் பிடியும் களிறும்
உடன்வணங்கும் குறும்பலாவே." (௸ பா.8)
செவ்வழி
வண்டுகள் அந்த மலைச் சாரலிலே வாழ்பவை. பெடைகளும் சுரும்புகளுமாக அங்குமிங்கும் அலைகின்றன. அவற்றுள் இரண்டு வண்டுகள் குருந்தமரத்தின்மேல் ஏறிநின்று செவ்வழிப் பண்ணைச் செவ்வையாக இசைக்கின்றனவாம்.
"பெருந்தண் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக்
குருந்தம் மேறிச் செவ்வழி பாடும் குற்றாலம்."(தி.1 ப.99 பா.10)
சம்பந்தப் பெருமான் அஃறிணைகளெல்லாம் ஆணும் பெண்ணுமாக வந்து அடிபணியுமாறே அருளுதல் ஆழ்ந்து இன்புறத்தக்க தொன் றாகும். இன்னும் `கொம்பார் சோலைக் கோல வண்டு யாழ்செய் குற்றாலம்' என்றும், `கோலமஞ்ஞை பேடையொ டாடும் குற்றாலம்' என்றும் பாடுகிறார்கள். இந்த அளவில் குற்றாலத்துக் குறிஞ்சி வளத்தை விட்டு இனி முதுகுன்றுக்குச் செல்ல முற்படுவோம்.
முதுகுன்றம்
திருமுதுகுன்று என்ற தீந்தமிழ்ப்பெயர் விருத்தாசலமாக மாறி வேதனைதரும் இக்காலத்து, அந்த முதுகுன்று என்னும் பெயரை மொழிந்தாலே மூண்டெழும் இன்ப உணர்வை என்னென்பேன்!
சில கற்பனைகள்
மணிமுத்தாறு மகிழ்ச்சி நடை போட்டுப் பாய்கின்றது. சந்தன மும் குங்குமமும் ஆற்றுவெள்ளத்திற் கலந்து மணம் வீசி வருகின்றன. சம்பந்தப் பெருமான் திருவுள்ளம் ஆற்றழகில் ஈடுபட்டுவிடுகிறது;
"கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமம் கொண்டு
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே." (தி.1 ப.12 பா.1)
அந்த மலையில் மூங்கில் மரங்கள் தோறும் இளமைமிக்க மந்திகள் இருக்கின்றன. அவை தம் மகவினொடும் அமர்ந்துள்ளன. மழை பொழியத் தொடங்குகிறது. அவை அஞ்சி ஓடி மலைக் குகையில் ஒளிகின்றன. மலைக்குகையிலிருந்தோ மால்யானை புறப்பட்டு மலைச்சாரலில் இரைதேடி அலைந்துகொண்டிருக்கிறது. (தி.1 ப.131 பா.5) அதுமட்டுமா? அம்மந்திகள் மலைமீது ஏறுகின்றன. கூட்டம் கூட்டமாக மலர்களை பறித்துக் கொள்கின்றன. முந்திச் சென்று முதுகுன்றமர்ந்த முதல்வனைத் தொழுது பணிசெய்கின்றன. (தி.2ப.200 பா.2) அதனுடன் நின்றுவிட வில்லையாம் அந்த மந்திகள். திருகல் வேய்கள் வளையும் வண்ணம் மூங்கில் நடமும் ஆடத் தொடங்கிவிடுகின்றனவாம் அச்சிறு மந்திகள். (தி.2 ப.200 பா.10) அழகான காட்சி. நகை விளைக்கும் காட்சி. முதுகுன்றத்தில் இயற்கைச் சூழலிலும் ஓர் ஈகைக் காட்சி. காந்தள் மலர்கள் கையேந்துகின்றன. குறைவில்லாத முதிய மூங்கில்கள் அவை நிறைய முத்துக்களை உதிர்க்கின்றனவாம், `காந்தள் மலர் நிறைய' என்றும், `குறைவில்லா முதுவேய்கள்' என்றும், பெருமானார் பேசியருள்வது அறிவுக்கொரு விருந்து அல்லவா? (தி.1 ப.12 பா.8).
காளத்திக் காட்சிகள்
திருக்காளத்தியை - அதன் இயற்கை நலத்தைப் பெருமானார் சொல்லும்போது நாம் மிக்க ஈடுபாடு கொள்ள வேண்டி யிருக்கிறது. கருமந்தியின் ஆட்டமும், கன்றினொடு விளையாடும் பெண்யானை யின், விளையாடலும் நம்மைப் பெரிதும் கவர்ந்து விடுவன அன்றோ?
"கல்லதிரநின்று கருமந்தி விளையாடு காளத்திமலையே." (தி.3 ப.69 பா.3)
"கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளையாடு காளத்திமலையே. " (௸ பா.3)
என்று நெஞ்சு நிரம்பப் பாடுகிறார்கள் செஞ்சொற் குழவியார்.
மந்தியும் ஊடலும்
திருச்சிராப்பள்ளிக் குன்றுடையானை ஞானப் பிள்ளையார் பாடுங்கால் சிராப்பள்ளிச் சிகரத்திலே ஈடுபட்டு விடுகிறார்கள்.அந்த மலையில் மந்திகள் நிகழ்ச்சிதான் முந்திவருகிறது. அவர்கள் தம் சிந்தையிலே. அந்தக் காட்சி சிந்தைக்கு விருந்தாக அமையத்தக்க தாகும்,
மந்திகள் மலைமேல் ஏறுகின்றன. அவற்றின் வயிற்றோடு ஒன்றி அவற்றுடன் செல்கின்றன இளங்குட்டிகள். மூங்கில் மரங்கள் மேல் பாய்ந்து பாய்ந்து மலை உச்சிக்குச் செல்கின்றவாம் மந்திகள். இந்த இடத்துத் தமிழ் மரபு ஒன்று சிந்திக்கத் தக்கது. வரைபாய்ந்து உயிர் நீத்தல் ஒரு வழக்கு, உயிர்நீப்போர் சிலர் மலை உச்சியிலேறி அங்கிருந்து வீழ்தல். மடல் ஏறுதல் என்று ஒன்றும் உண்டு. இவை புலனெறி வழக்காகப் பண்டுபயின்றவை. இப்படி ஏறும் மந்திகள் தாம் மணம் புணர்ந்த கடுவனொடு ஊடல் கொண்டவை என்று முடிவுகட்டுகிறார்கள் முத்தமிழ் விரகனார். கணவனொடு ஊடிக் கைக்குழவியோடு தற்கொலை புரியச் செல்ல முற்படும் தையலர் போலக் கைம்மகவேந்திக்
கடுவனொடு ஊடி வரைபாய்ந்து உயிர் துறக்க வந்தன அம்மந்திகள் என்று எண்ணிப் பாடுகிறார்கள்.
"கைம்மக வேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்
செம்முகமந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி. " (தி.1 ப.98 பா.2)
காதல் களிறு
உய்யக் கொண்டான் என வழங்கும் கற்குடி மலையில் சில காட்சிகள்; அங்கே வண்டுகள் பின்னணிப்பாடல் பாடுகின்றனவாம். அதற்கேற்ப அழகு மயில்கள் ஆடுகின்றனவாம். குறமகளிர் குழந்தை களை ஏந்தி வெளியில் உலாவுகிறார்கள். அவர்கள் கையில் ஏந்தியிருக் கும் மைந்தர்கள் அம்புலியை அண்ணாந்து பற்றுகிறார்களாம். மலை யின் உயரத்தை அப்படிச் சொல்லுகிறார்கள். இன்னுமொரு அன்புக் காட்சி. ஒரு பெண் யானை. நல்ல பசி. அதனுடைய களிறு தன் துதிக்கையால் மூங்கில் முளைகளை வாரிப் பெண் யானைக்கு ஊட்டு கிறதாம்! இதுவன்றோ காதல்! "பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறென வும் உரைத்தனரே!' என்ற சங்க இலக்கியம் நினைப்புக்கு வருகின்ற தன்றோ? பல்லாற்றானும் நலம் சிறந்த அக்காதல் காட்சியைப் படம்போல எழுதிக் காட்டுகிறார்கள் பைந்தமிழ்க் காவலனார்.
"மருங்களி யார்பிடிவாயில் வாழ்வெதிர் இன்முளை வாரிக்
கருங்களி யானை கொடுக்கும் கற்குடி மாமலை யாரே." (தி.1 ப.43 பா.4)
திருக்கயிலாயத்தைப் பற்றிய வருணனைப்